மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உடல் பருமனைப் போக்க வழிமுறைகள்

சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

Aug 23, 2014

udal paruman1சிறகு இணைய இதழ் வாசகர்களுக்கு என்னுடைய அன்பான வணக்கங்கள். நாம் மூட்டுவலியைப் பற்றி அதிகம் பேசியிருந்தோம். மூட்டுவலி எதனால் வருகிறது என்பதைப் பற்றி நாம் சொல்லியிருந்தோம். இன்றைக்கு உலகளாவிய அளவில் இருக்கக்கூடிய ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால் உடல்பருமன். வளர்ந்த நாடாக இருந்தாலும் சரி, வளரக்கூடிய நாடாக இருந்தாலும் சரி, வறுமையிலே உழலக்கூடிய நாடாக இருந்தாலும் சரி உடல்பருமனால் அவதிப்படக்கூடிய மக்கள் எண்ணிக்கை உலகம் முழவதும் மிக அதிக அளவில் இருக்கிறது. அதற்கான முதல் காரணம் உடல் உழைப்பு இன்மை. இதைத்தான் நாம் முதன்மையாக கூறவேண்டும். மிக அதிகமாக உடல் உழைப்பு இருக்கக்கூடிய இடங்களில் ஓரளவு சீரான உடல்வாகை நம் இந்தியாவிலும் பார்க்க முடியும், தமிழ்நாட்டிலேயும் பார்க்க முடியும். ஆனால் உடல் உழைப்பு இருந்தால் கூட உடல் எடைகூடக்கூடிய சூழல் இன்று உருவாகியிருக்கிறது. அது எதனால்? என்று நாம் அலசி ஆய்வு செய்து பார்த்தோம் என்றால் முழுக்க முழுக்க நம்முடைய உணவுகள் மாறிப்போனதைத்தான் நாம் காரணமாகக் கூற முடியும். ஒரு காலகட்டத்தில் கிராமங்களில் ஆடி, தீபாவளி, தைப்பொங்கல் இந்த மூன்று நாட்களில் மட்டும்தான் இட்லி, தோசைய போன்றவற்றை பார்க்க முடியும். ஆனால் இன்றைக்கு அனைத்து வீடுகளிலும் மிக்சி,கிரைண்டர் போன்ற மின் உபகரணப் பொருட்கள் அதிகமாக வந்ததால் உடல் சார்ந்த உழைப்புகள் வீட்டுக்குள்ளேயே இல்லை என்ற ஒரு சூழல் உண்டாக ஆரம்பித்துவிட்டது.

udal paruman3கிராமங்களில் இன்றைக்கு தோட்ட வேலைக்குப் செல்லக்கூடியவர்கள் கூட இட்லி, தோசை இவற்றை சாப்பிடக்கூடிய சூழல் மற்றும் இந்த இட்லி, தோசையை மதிய உணவிற்கு எடுத்துக்கொண்டுப்போகக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது. உடல்பருமன் கிராமங்களையும் ஆட்டிவைக்கிறது என்று சொன்னால் கண்டிப்பாக இதை யாராலும் மறுக்கமுடியாத சூழலில் நாம் இருக்கிறோம். உணவை முழுமையாக உட்கிரகிக்கக்கூடிய தன்மையை நம் உடம்பு இன்று இழக்கக்கூடிய சூழலில் உடல்வாகுகள் மாறிப்போயிற்று இதை ஒரு காரணமாக நாம் சொல்லியாகவேண்டும்.

udal paruman4ஒரு காலகட்டத்தில் ஒவ்வொரு நாளுமே வரகு சோறு, குதிரைவாலி சோறு, அல்லது ராகியை களியாகக் கிண்டி அந்த ராகிக்களிக்கு பனவெல்லம் பாகு எடுத்து சாப்பிடுவது. இப்படி ஒரு காலகட்டம், ஒரு குடும்பச் சூழல் அந்த மாதிரி இருந்தது. அந்த மாதிரி திடஉணவுகளாக, நார்ச்சத்துள்ள உணவுகளாக அவர்கள் எடுத்தபொழுது கிராமங்களிலும் உடல்பருமன் மிகக்குறைவாக இருந்தது. இன்று பார்த்தீர்கள் என்றால் நகரத்தை விட கிராமத்தில் உடல்பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் உடல் பருமன் என்பது ஒரே சீராக, சமச்சீராக நாடு முழுக்க இருக்கிறது என்பதை ஆணித்தரமாக சொல்லமுடியும். இந்த உடல் பருமன் எதனால் வருகிறது என்றால் ஒன்று உணவு, இரண்டாவது உடல் உழைப்பு இல்லாத தன்மை, மூன்றாவதாக எதை சொல்லலாம் என்றால் கலோரி திறனை மேம்பாடு செய்யாத ஒரு தன்மையையும் நாம் சொல்லலாம். எந்த உணவு சுவையாக இருக்கிறதோ அதை நாம் அதிகமாக சாப்பிடுகிறோம். எந்த உணவு சுவை குறைவாகவும், கசப்பாகவும் இருக்கிறதோ அதை நாம் குறைவாக சாப்பிடுகிறோம் அது ஒரு முக்கியமான உண்மை. அடுத்து உடல்பருமனுக்கு இன்னொரு காரணம் என்னவென்றால் பசித்துப்புசி என்று சொல்லுவோம் யார் ஒருவர் நன்றாக பசி எடுத்து அந்த பசிக்கு ஏற்ப சத்தான உணவுகளை யார் ஒருவர் ஒழுங்காக சாப்பிட்டு அதனடிப்படையில் நல்ல வேலையை செய்யக்கூடிய சூழலை உண்டாக்குகிறாரோ அங்குதான் உடல்பருமன் வராத சூழல் இருக்கும்.

udal paruman5இன்று இருக்கக்கூடிய பெரும்பாலான உணவின் தன்மை என்னவென்றால் வயிறார அந்த உணவை சாப்பிட்டோம் என்றால் உடனே கண்ணைச் சுற்றி ஒரு தளர்வு, ஒரு சோர்வு, உடனே படுத்துத்தூங்கவேண்டும் என்ற உணர்வு வரக்கூடிய சூழலில்தான் இன்றைய உணவுப்பொருட்கள் இருக்கிறது. நீங்கள் அதை உணவுவிடுதியில் சாப்பிட்டாலும் சரி, வீட்டில் சாப்பிட்டாலும் சரி சோர்வை நீக்குவதற்குத்தான் உணவே ஒழிய உணவின் மூலம் வரக்கூடிய சோர்வு என்பது கண்டிப்பாக உடல் பருமனைத் தரும் என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

சாதரணமாக மதிய வேளையில் வீட்டில் நாம் சாப்பிடுகிறோம் அல்லது அலுவலகத்தில் சாப்பிடுகிறோம் அதாவது ஒரு வாகனத்திற்கு பெட்ரோல் தீர்ந்துபோய்விட்டது என்றால் அந்த வாகனம் நின்றுவிடும். அந்த வாகனம் தூக்கத்திற்குச் சென்றுவிடும். அதற்கு பெட்ரோல் மறுபடியும் போட்டபிறகு மறுபடியும் செயல்படத் துவங்கிவிடும். ஆனால் மனிதன் தலைகீழாக இருக்கிறான். நமக்கு எரிதிறன் பெட்ரோல் குறைந்துவிடுகிறது அதற்கு உணவை மூலப்பொருளாக, எரிபொருளாக எடுத்துக்கொள்கிறோம். ஆனால் எரிபொருள் உள்ளே சென்றவுடன் தானாக தூக்கம் வரஆரம்பித்துவிடுகிறது. அதற்கான காரணம் என்னவென்றால் இன்று நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் நம்மை போசிப்பதில்லை மாறாக நம்மை தளர்வுபடுத்தக்கூடிய சூழலில் இருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்றால் உணவை ருசியின் அடிப்படையில் நாம் தேர்வுசெய்கிறோம். ருசியின் அடிப்படையில் தேர்வுசெய்யும் அனைத்து உணவுகளும் பார்த்தீர்கள் என்றால் அதில் காரம், உப்பு, எண்ணெய் எல்லாமே சற்று தூக்கலாக இருக்கும். இதுதான் துரிதஉணவு. எந்த இடத்தில் எந்த உணவில் புளி, எண்ணெய், உப்பு, காரம் இதெல்லாம் அதிகமாக சேர்க்கிறார்களோ அங்குதான் சுவை அதிகமாக இருக்கும். நம் நாக்கில் இருக்கக்கூடிய சுவை நரம்புகள் சிறிதுசிறிதாக மழுங்கடிக்கப்படும் நேரத்தில் ருசிக்காகவே சாப்பிடிக்கூடிய ஒரு சூழல் உருவாக ஆரம்பித்துவிடுகிறது அப்பொழுதும் உடல் பருமன் வருவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது.

udal paruman6இதில் பெண்களுக்கு பார்த்தோம் என்றால் ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் கோளாறு. மாதாமாதம் வரும் மாதவிடாய் ஒழுங்காக முறையாக வராமல் இருப்பது, இரண்டு மாதத்திற்கு ஒருமுறை, மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்று சொல்லக்கூடிய பெண்கள் நிறைய உண்டு. முறையற்ற மாதவிடாய் சுழற்சி இருக்கக்கூடிய பெண்களுக்கு கண்டிப்பாக உடல்பருமன் உண்டாகும். அதே போல் சில பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை வரும். அயோடின் பற்றாக்குறையினால் ஒரு சில பெண்களுக்கு ஹைபோதைராய்டிசம், ஹைபர் தைராய்டிசம் அதாவது அயோடின் அதிகமாக இருந்து தைராய்டு நோய் வரும், அயோடின் குறைந்து தைராய்டு நோய் வரும். இந்த குறைபாட்டினாலும் உடல்பருமன் சிறிதுசிறிதாக ஊதக்கூடிய ஒரு சூழல் உண்டு.

இது இல்லாமல் எடுத்ததற்கெல்லாம் (Pain Killers) வலிநிவாரணிகள் போடக்கூடிய ஆண்கள், பெண்கள் உண்டு. தூக்கம் என்பது இயற்கையான செயல், இயல்பான ஒரு செயல். இரவில் கண்ணை மூடி படுக்கையில் படுத்தோம் என்றால் கண்டிப்பாக தூக்கம் வரவேண்டும். நினைவலைகள் எல்லாமே மறக்கச்செய்து ஒரு நிசப்தமான ஒரு சூழல் உண்டாகி அந்த இடத்தில் தூக்கம் வரவேண்டும் ஆனால் தூங்குவதற்குக்கூட ஒரு சிலர் மாத்திரைகளை போட்டு பழக்கிவைத்துள்ளனர். தூக்கம் வரவில்லை என்றால் அதற்கு மாத்திரை கொடுக்கக்கூடிய மருத்துவர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். தூக்கமாத்திரையை கொடுக்கிற எந்த மருத்துவரும் அந்த மாத்திரையை அவர்கள் எடுத்துக்கொள்வதில்லை ஏனென்றால் அதில் நிறைய பக்கவிளைவுகள் உண்டு என்பது அவர்களுக்குத் தெரியும். எனவே பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான் தவிர மருத்துவர்கள் அல்ல.

சிறிய பிரச்சனைக்காக, கணவன் மனைவி பிரச்சனைக்காக (psychological disorder) உளவியல் கோளாறு வரும். நாற்பது வயதிற்கு மேல் ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் நிற்கும் நேரத்தில் மனப்பிரழ்வுகள் சாதாரணமாக வரக்கூடிய சூழல் இருக்கும். அந்த மனப்பிரழ்வுகள் வரும் நேரத்தில், மாதவிடாய் தொடர்ந்து வரும்பொழுது சீராக உடல் எடை இருக்கும் அடுத்து இந்த மனப்பிரள்வுகள் வரவர தன்னுடைய வீட்டிலேயே சில பிரச்சனைகள் வரும், உணர்ச்சிவசப்படுவார்கள், பதற்றம் அடைவார்கள், குழந்தைகளை கட்டுப்படுத்துவது, திட்டுவது, தன்னுடைய கணவனை புரிந்துகொள்ளாமல் நடந்துகொள்வது, சந்தேகப்படுவது இப்படி ஒரு சூழல் பெண்ணுக்கு உண்டாகும். இந்த மாதிரி நேரங்களில் ஒரு மருத்துவரைப் போய் பார்ப்பது மனநல சிகிச்சை மேற்கொள்வது அந்த நேரத்தில் மருத்துவர் கொடுக்கக்கூடிய மாத்திரையை விடாமல் தொடர்ந்து இரவு நேரத்தில் சாப்பிடுவது. இந்த மாதிரி சாப்பிடுவதாலும் உடல் பருமன் உண்டாகும்.

(psychological disorder)உளவியல் கோளாறுக்கு எடுக்கக்கூடிய எல்லா மருந்துகளுமே கண்டிப்பாக உடல்பருமனை அதிகப்படுத்தும். ஒருவேளை உங்களது மனம் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும் ஆனால் ஒரு கட்டத்தில் மற்றசில விசயங்களுக்காக addictionஆக மாறக்கூடிய சூழல் உண்டு.

udal paruman7இன்னும் சில நேரங்களில் மனம் சார்ந்த பிரச்சனைகளுக்குக் கொடுக்கக்கூடிய மருந்துகள் பசி உணர்வை அதிகப்படுத்தி என்ன சாப்பிடுகிறோம் என்று தெரியாமலேயே சாப்பிடக்கூடிய சூழலை அந்த மருந்துகள் உண்டாக்குவதால் நிறைய சாப்பிட்டு சாப்பிட்டு Over eating syndrome என்று சொல்லுவோம். நிறைய சாப்பிடுவது, தூங்கிக்கொண்டே இருப்பார்கள், திடீரென்று பசிக்கும் அந்த மாதிரி பசி எடுக்கும்பொழுது ஏதாவது சாப்பிடவேண்டும். சாப்பாடாக இருக்கலாம், இட்லி-தோசையாக இருக்கலாம், இல்லையென்றால் சிற்றுண்டி என்று ஏதாவது சாப்பிட்டால்தான் அவர்களுக்குத் தூக்கம் வரும். இக்காரணத்தினாலும் உடல்பருமன் அதிகரிக்கிறது.

ஆண்களுக்கு உடல்பருமன் அதிகரிப்பதற்கான காரணம் (psychological disorder) உளவியல் கோளாறினாலும் உடல்பருமன் அதிகரிக்கலாம். நிறைய சாப்பிடுவது, மது, புகை, போதை இவற்றை அதிக அளவில் எடுத்துக்கொள்வதாலும் உடல்பருமன் அதிகமாகலாம். ஒரு ஆணும், பெண்ணும் நினைத்தால் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வதற்கு நிறைய இயற்கை தந்த வழிமுறைகள் இருக்கிறது.       அதில் ஒன்றே ஒன்று என்னவென்றால் உணவு சீர்திருத்தம். ஆயிரம் மருந்துகள் சந்தைகளில் விற்பனைக்கு வரலாம், வணிக புழக்கம் உண்டாகலாம். சில பன்னாட்டு நிறுவனங்கள் உடல்பருமனா? நாங்கள் சரிசெய்கிறோம் என்று சொல்லி மருந்துகள் விற்பனை செய்கிறார்கள். கிட்டத்தட்ட 130 கோடி மக்கள்தொகை இருக்கிறோம் என்றால் இங்கு மிகப்பெரிய வணிகச்சந்தை இருக்கிறது. இந்தியாவில் சமச்சீரான உணவு கிடையாது, அதேபோல் இந்தியாவில் இருக்கக்கூடிய உணவுப்பொருட்களில் கிட்டத்தட்ட பன்னாட்டு நிறுவனங்கள் அதில் இன்னும் விசத்தை மட்டும்தான் கலக்கவில்லையே ஒழிய விசத்தன்மையுள்ள நிறைய Preservative ஐ உள்ளே கலந்துள்ளனர். நமது உணவு கலாச்சாரம் முழுமையாக கெடுக்கப்பட்டு அதனடிப்படையில் நோய்கள் உற்பத்தியாக ஆரம்பமாகிவிட்டது.

உணவு ரீதியான விசயங்கள் நிறைய மாற்றிவிட்டதனால் மறுபடியும் நாம் உணவு சீர்திருத்தத்திற்கு மாறியாகவேண்டும். மதுரையில் மூட்டுவலிக்கு அக்குபஞ்சர் சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவர் இருக்கிறார். எப்பேற்பட்ட உடம்புவலியாக இருந்தாலும் சரி அதையும் சரிசெய்கிறார், எவ்வளவு உடல்எடை அதிகமாக இருந்தாலும் 30 நாட்கள் அவருடைய மருத்துவமனையிலேயே தங்கவைத்து மூன்று வேளையும் வரகரிசி சோறுதான் கொடுப்பார். வரகரிசியை கஞ்சியாக காய்ச்சி கொடுத்து குறைக்கக்கூடிய தன்மை உண்டு. நாம் நிறைய உணவு ரீதியாக பழகிப்போனதால் நாம் சொல்லக்கூடிய உணவுக்கட்டுப்பாட்டுக்கு பயந்தே ஏதாவது ஒரு காரணத்தைக்கூறிக்கொண்டு தப்பிக்கக்கூடிய ஒரு சூழல்தான் ஒரு நோயாளிக்கு வருகிறது. சாதாரணமாக ஒரு வேளைக்கு கஞ்சி, ஒரு வேளைக்கு பழ உணவு, ஒரு வேளைக்கு மிதமான ஆகாரம், தினசரி உணவில் கீரை இந்த மாதிரி எடுக்கக்கூடிய ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கண்டிப்பாக உடல் எடை குறையும்.

udal paruman8நிறைய நபர்கள் பயன்படுத்தக்கூடிய மிக எளிமையான வைத்தியமுறை என்ன சொல்வார்கள் என்றால் சூடான வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேனையும் ஒரு எலுமிச்சம்பழத்தையும் பிழிந்து குடித்தால் உடல் இழைத்துவிடுமா மருத்துவரே? என்று கேட்பார்கள். ஏனென்றால் அதை மட்டுந்தான் அவர்களால் செய்யமுடியும். ஏனென்றால் தேன் நல்ல இனிப்பானது, எலுமிச்சம்பழம் அற்புதமான புளிப்பானது நல்ல சுவையாக இருப்பதால் இதை மட்டும் சாப்பிட்டால் எடை குறைந்துவிடுமா? என்று கேட்பார்கள். எடை குறையவேண்டும் என்றால் அதற்கு சரியான உணவு வேண்டும், தரமான உணவு வேண்டும், அதை விட முறையான பயிற்சி வேண்டும். முறையான பயிற்சி என்பது என்னவென்றால் உடல்பருமனை எந்த வித உடற்பயிற்சி இல்லாமல்கூட குறைக்கமுடியும்.

-தொடரும்

மேலும் தொடர்புக்கு:

சித்த மருத்துவர் அருண் சின்னையா

எண்: 155, 94  வது தெரு,

15 வது செக்டார், கே.கே.நகர்,

சென்னை – 78

அலை பேசி: 98840 76667


சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உடல் பருமனைப் போக்க வழிமுறைகள்”

அதிகம் படித்தது