மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தித் திணிப்பு எதிர்ப்பு 3 – அன்றைய காங்கிரசு தலைவர்கள் பங்கு

சதுக்க பூதம்

Aug 23, 2014

சென்ற கட்டுரையில் இந்தியாவில் இந்தித் திணிப்பின் வரலாறு பற்றியும்  தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் தலைமையில் எண்ணற்ற தமிழ் இளைஞர்களின் போராட்டத்தால் எவ்வாறு இந்தித் திணிப்பு என்னும்  ஆபத்து தவிர்க்கப்பட்டது என்றும் பார்த்தோம்.

hindi thinippu1என்னதான் மக்கள் ரத்தம் சிந்தி போராடினாலும் பாசிசவாதிகள் கையில் முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தால் ,மக்கள் குரலுக்கு மதிப்பு ஏதும் இருக்க போவதில்லை. இந்தித் திணிப்பை வெற்றிகரமாக எதிர்த்ததிலும், காங்கிரசு மற்றும் அரசின் அதிகார மையங்களின் முடிவை மாற்றியதிலும் பல்வேறு காங்கிரசுக்காரர்களின் பங்கும்  குறிப்பிடத்தக்கது. இன்றைய சரித்திரத்தில் மறைந்து போன காங்கிரசு தலைவர்களின் மதிநுட்ப செயல்பாடுகளை இன்றைய மற்றும் வருங்கால சந்ததியினர் மறந்து விடக் கூடாது.

இந்தித் திணிப்பின் வேகத்தை கட்டுப்படுத்தியது அல்லது இந்தி திணிப்பை தடுத்த வரலாற்றில் மைல் கல்லாக கீழ் காணும் மூன்று நிகழ்வுகளை கருதலாம்.

1. சுதந்திரம் அடைந்த உடன் இந்தியாவின் தேசிய மொழி மற்றும் அலுவல் மொழி பற்றிய முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட இந்திய அரசியல் நிர்ணய சபையின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தியது.
2.நேருவின் உறுதிமொழி (சிறுபான்மையினர் விரும்பும் வரை ஆங்கிலத்தை அலுவல் மொழியாக தொடர்வது பற்றியது) .
3.1968ல் நீண்ட போராட்டத்துக்கு பின் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் மொராஜி தேசாய் போன்ற இந்தி வெறியர்களையும் மீறி நேருவின் உறுதிமொழியை சட்டமாக்கியது.

இந்த மூன்று நிகழ்வுகளின் பின்னனியிலும் இருந்த ஒரு சில காங்கிரசுக்காரர்கள் பற்றி காண்போம்.

1.இந்திய அரசியல் நிர்ணய சபையின் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

hindhi1இந்தி மட்டுமே தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று காந்தி அடிகள் 1917ம் ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே திட்டவட்டமாக அறிவித்தார். பொதுவாக காந்தியடிகள் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை மாற்ற முடியாது. மக்கள் விருப்பம் வேறானாலும் உண்ணாவிரதம் (உதாரணம் – அம்பேத்காரை உண்ணாவிரதம் கொண்டு பணிய வைத்து தாழ்த்தப்பட்டோர் மட்டும் ஓட்டளித்து தங்களது பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதைத் தடுத்த பூனே ஒப்பந்தம்), ஆதரவாளர்களின் ஒட்டு மொத்த ராஜினாமா (சுபாசு சந்திர போசுக்கு எதிராக பட்டாபி சீத்தாராமையா தேர்வு 1939)  எனப் பல வழிவகைகளில் தன் விருப்பத்தை நிறைவேற்றி விடுவார். அப்போது காங்கிரசு கட்சியின் பொது குழுக்களில் ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அது தேசிய சட்டமாக ஆவதற்கு அதிக வாய்ப்பு இருந்தது. சுதந்திரம் அடையும் நேரத்தில் தேவநாகிரி எழுத்து வடிவுடன் கூடிய இந்தி மொழியை தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ளும் தீர்மானத்தை காங்கிரசு ஒரு கூட்டத்தில் எடுத்தது.  தென்னிந்தியா மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த காங்கிரசு உறுப்பினர்கள் அந்த முடிவை கடுமையாக எதிர்த்தனர்.  கட்சியில் கடுமையாக பிளவு ஏற்படும் நிலை தோன்றியது. நேரு அந்தப் பிரச்சனையைப் புரிந்து கொண்டு மொழிப் பிரச்சினையை ஒத்தி வைத்தார். அதன் விளைவாக அரசியல் நிர்ணய சபையின் கடைசி கட்டங்களில் தான் மொழி பிரச்சனை பரிசீலிக்கப்பட்டது. அப்போது காங்கிரசு கட்சியில் பல கூட்டங்கள்  இருந்தனர்.

1. இந்திய அரசியல் சாசனம் ஆட்சிமொழி ஒன்றை ஏற்படுத்துவதை விரும்பாத ஒரு சிறிய கூட்டம்.
2. இந்துஸ்தானியை ஏற்க வேண்டும் என்று வற்புறுத்திய மிகச்சிறிய ஆனால் சக்தி வாய்ந்த கூட்டம்.
3.பதினைந்து ஆண்டுகள் வரையில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும், அது வரையில் இந்தி மொழி பிரச்சனையை கிடப்பில் போடவேண்டும் என்றும் விரும்பிய தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒருகூட்டம்.
4.இந்தியை உடனடியாக தேசிய மொழியாக ஏற்க வேண்டும் என்று புருஷோத்தம் தாஸ் தாண்டன் தலைமையில் வற்புறுத்திய தீவிர இந்தி ஆதரவாளர் கூட்டம்.
5.நாட்டின் ஆட்சி மொழியாக இறுதியில் இந்தி மொழியே ஆகவேண்டும் என்ற திட்டத்துடன் இந்தி மொழி பேசும் மக்கள் அதிகம் வாழும் மக்களும் ஒப்புக்கொள்ளக்கூடிய சமரச திட்டத்தை வற்புறுத்திய பெரிய கூட்டம்.

டி. கிருஷ்ணமாச்சாரி, துர்காபாய், என். ஜி. ரங்கா, கோபலசாமி அய்யங்கார் போன்ற தென்னிந்திய தலைவர்கள் இந்தி திணிப்பை எதிர்த்து சாதூர்யமாக காய் நகர்த்தினர். அந்த நேரத்தில் சமற்கிருதம் கலந்த இந்தியா?  (உருது பேசும் மக்களுக்கு புரியும்) இந்துஸ்தானி இந்தியா?என்ற மோதல் அதிர்ஷ்டவசமாக வந்ததால் பலமான வட இந்தியர்கள் கோஷ்டியில் விரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் மேற்கு வங்க உறுப்பினர்களும் இந்தி எதிர்ப்பு குழுவினருக்கு ஆதரவு அளித்தனர். பிரச்சனை முடிவின்றி இழுத்துக் கொண்டே சென்றது. இறுதியாக இந்திக் குழுவின் பிரதிநிதி கே. எம் முன்ஷியும், தென்னிந்தியக் குழுவின் பிரதிநிதி  கோபாலசாமி அய்யங்காரும், பேச்சுவார்த்தை நடத்தி இரு பிரிவினரும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு சமரச உடன்பாட்டை உருவாக்கினர். இது முன்ஷி அய்யங்கார் வாய்ப்பாடு என்று வழங்கப்பட்டது. இதன் பயனாக

1.இந்தி தேசிய மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற இந்தி வெறியர்களின் விருப்பம் நிராகரிக்கப்பட்டு இந்தி அலுவல் மொழியாக மட்டும் அறிவிக்கப்பட்டது.
2.ஆங்கிலத்தை  உடனடியாக அலுவல் மொழியிலிருந்து வெளியேற்றி இந்தியை உடனடியாகவோ அல்லது மிக குறுகிய காலத்துக்குள்ளாகவோ அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கபட்டு இந்தியை அலுவல் மொழியாக்க மிக நீண்ட கால இடைவெளி கொடுக்கப்பட்டது.
3.ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாற்றம் ஏற்படுத்தும் காலம் வரையிலும் இந்தி மட்டுமே முழுமையாக அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்றும் ஆங்கிலம் தேவையென்றால் பயன்படுத்தலாம் என்றும் அழுத்தத்தை கொடுத்தனர் இந்தி கோஷ்டியினர். ஆனால் ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மாற்றம் ஏற்படுத்தும் காலம் வரையில் ஆங்கிலம் மட்டும் முழுவதுமாக அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்றும், தேவையெனில் இந்தியை பயன்படுத்தலாம் என்றும் இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

மேற்கூறிய முடிவுகளில் இருந்து கோபால்சுவாமி அய்யங்கார் தலைமையிலான உறுப்பினர்களின் சாதூர்யமான முயற்சி மற்றும் கடின உழைப்பையும் காணலாம். அன்று மட்டும் அந்த உறுப்பினர்கள் போராடவில்லை என்றால் இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது முளையிலேயே கிள்ளி எறியப்பட்டு மொழிவாரி சிறுபான்மையினரின் நலன்கள் சமாதி ஆக்கப்பட்டிருக்கும்.

2.நேருவின் உறுதிமொழி:

hindi thinippu3அடுத்ததாக இந்தித் திணிப்பு எதிர்ப்பு வரலாற்றின் மைல்கல் நேருவின் உறுதி மொழி. நேருவின் உறுதி மொழியின் பின்னால் நடந்த அரசியலை இனி பார்ப்போம். இதற்கு பின்னணியில் இருந்த முக்கிய தலைவர் சி. சுப்ரமணியம் ஆவார். இத்தனைக்கும்  சி.சுப்ரமணியம் ஒரு தேசியவாதி ஆவார். அவர் இந்தி பிரச்சார சபையின் தலைவராக கூட செயல்பட்டுள்ளார். இருந்தாலும் இந்தி திணிப்பு எதிர்ப்பில் அவரது பங்கு முக்கியமானது. சிறுபான்மையினர் விரும்பும் வரை ஆங்கிலத்தை அலுவல் மொழியாகத் தொடர்வது பற்றிய நேருவின் உறுதிமொழி வந்ததின் பின்னணியை கீழ் காணுமாறு அவரது சுய சரிதையான திருப்புமுனை என்ற புத்தகத்தில் விவரிக்கிறார். அவரது எழுத்துக்களையே கீழே கொடுத்து உள்ளேன். இந்த சரித்திர உண்மையை அனைவரும் படிப்பது அவசியம் ஆகும்.

திரு சி.சுப்ரமணியம் அவர்களின் சுய சரிதையிலிருந்து…

மொழிப்பிரச்சனை:

1958 ஆம் ஆண்டில் அசாம் மாநிலத்தில் குவகாத்தி நகரில் அகில இந்தியக் காங்கிரசு கமிட்டி கூட்டத்தில் மிக முக்கியமன ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அரசு ஆட்சி பணிகளுக்கு இந்தியைப் படிப்படியாகப் பயன்படுத்தவும்,மத்திய அரசின் எலலா ஆட்சிப் பணிகளுக்கோ அல்லது எதாவது சில ஆட்சிப்பணிகளுக்கோ ஆங்கிலத்தின் உபயோகத்தை குறைக்கவும் குடியரசு தலைவருக்கு பரிந்துரைகளைக் கூறுவதற்காக ,அரசியல் சட்டத்தின் 344 வது விதியின் கீழ், “மொழி கமிஷன்” ஒன்றை நியமனம் செய்ய வழி செய்யப்பட்டிருக்கிறது. இந்த விதியின் கீழ்தான் முதலாவது மொழி கமிஷன் 1954 ஆம் ஆண்டில் நியமிக்கபட்டது. நிர்வாகத்தின் சில துறைகளில் இந்தியை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என்று அந்த மொழி கமிஷன் பரிந்துரை செய்திருந்தது.

குவகாத்தி அ.இ.கா.க. கூட்டத்தில் மொழி கமிஷனின் இந்த பரிந்துரை விவாதத்திற்கு எடுத்துகொள்ளப்பட்டது. இது சம்மந்தமாக ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மத்திய அரசின் சில துறைகளில் ஆங்கிலத்தின் உபயோகத்தை நீக்கிவிடவும், அதற்கு பதிலாக ஹிந்தியை உபயோகிக்கவும் மொழி கமிஷன் செய்திருந்த பரிந்துரையை அ.இ.கா.க. தீர்மானம் ஏற்றுக்கொள்ளுவதாக இருந்தது.

இந்தி மொழி பேசாத மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களுக்கு குறிப்பாகத் தமிழ் நாட்டிற்கு இந்த விஷயம் மிகவும் கவலையளித்தது. அப்போது தமிழ்நாட்டில் மிகவும் பலமான இந்தி எதிர்ப்பு இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிக்கு ராஜாஜியே தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குவகாத்தி அ.இ.கா.க கூட்டத்தில் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் கோவிந்த வல்லப பந்த் இந்தத் தீமானத்தை கொண்டு வந்தார்.

தெற்கு மாநிலங்களின் எதிர்ப்பு:

தெற்கு மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் அனைவரும் கூடி இந்த முக்கியமான பிரச்சினையைப் பற்றிப் பேசினோம். இந்த தீர்மானம் தென் மாநிலங்களில் காங்கிரசுக்கு விரோதமான சூழ்நிலையை உருவாக்கும் என்பதால் இந்தத் தீர்மானத்தை எதிர்ப்பது என்று காமராஜர், சஞ்சீவ ரெட்டி, நிஜலிங்கப்பா, ஹனுமந்தையா ஆகியோரும் மற்றும் சிலரும் முடிவு செய்தார்கள்.

இந்த தீர்மானத்தின்மீது நான் பேசவேண்டும் என்றும், தென் மாநிலங்களின் கருத்துக்களை எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டேன்.

ஆனால் அ.இ.கா.க கூட்டத்தில் இந்த தீர்மானம் முன் மொழியப்பட்டதும், ஹனுமந்தையா விருட்டென்று எழுந்து மேடைக்குச் சென்று தீர்மானத்தை மிகக் கடுமையாக தாக்கிப் பேசி விட்டார். மத்திய அரசின் சில துறைகளில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை மட்டும் பயன்படுத்துவது என்ற திட்டம் குறித்து மிக கடுமையான சொற்களை ஹனுமந்தையா  பயன்படுத்தினார்.

இதைக் கேட்டு நேரு மிகவும் வருத்தமும், கோபமும் அடைந்தார். தீமானத்திற்கான முழு பொறுப்பையும் தாம் ஏற்பதாகவும், தீர்மான வாசகங்களின் ஒவ்வொரு சொல்லையும் தாம் ஒப்புக் கொள்ளுவதாகவும் நேரு உரத்த குரலில் கூறினார்.

ஹனுமந்தையாவின் உரையுடன் அன்றையக் கூட்டம் முடிந்தது. நேரு இவ்வளவு உறுதியான நிலையை மேற்கொண்ட சூழ்நிலையில் இந்தச் சிக்கலான விஷயத்திற்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதே பிரச்சனை. இந்த விஷயத்தை அந்த அளவில் விட்டுவிட்டுப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பலரும் கருதினார்கள். ஆனால் அ.இ.கா.க. கூட்டத்தில் ஒரு விஷயம் முடிவு செய்யப்பட்டு விட்டால் அதை பிறகு மாற்றுவது சிரமமாக இருக்கும் என்று நான் கருதினேன். எனவே தெற்கு மாநிலங்களின் கருத்துக்களை அ.இ.கா.க.யில் எடுத்துக் கூற நான் முன்வந்தேன்.

எனது திட்டம்:

அ.இ.கா.க. கூட்டத்தில் அடுத்த நாளன்று, சிலர் பேசிய பிறகு நான் மேடைக்குச் சென்றேன் இந்த தீர்மானம் குறித்துத் தென் மாநிலங்கள் ஏன் மிகவும் கவலை கொண்டுள்ளன என்பதை ஒவ்வோர் அம்சமாக எடுத்து விளக்கினேன். இந்தத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டால், தெற்கு மாநிலங்களில், குறிப்பாகத் தமிழ்நாட்டில், மிக மோசமன நிலைமை உருவாகும் என்றும் நான் கூறினேன்.

ஆட்சிப் பணிகள் அனைத்திற்கும் ஆங்கிலம் ஆட்சி மொழியாகத் தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்ற திட்டத்தை வெளியிட்டேன். இந்தி மொழியைத் தீவிரமாக ஆதரிக்கும் மொராஜி தேசாய் அப்போது மேடை மீது அமர்ந்திருந்தார். “திரு. சுப்ரமனியம் அவர்களே! எவ்வளவு காலத்துக்கு ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீட்டிக்க வேண்டும்?” என்று அவர் குறுக்கிட்டு கேட்டார்.

“எல்லா பணிகளுக்கும் ஆட்சி மொழியாக ஆங்கிலம், அவசியமான காலம் வரையில் தொடர்ந்து நீட்டிக்க வேண்டும். எவ்வளவு காலம் அது அவசியமாக இருக்கும் என்பதை இந்தி மொழி பேசாத மக்களைப் பெரும்பான்மையினராக கொண்ட மாநிலங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நான் பதலளித்தேன்.

இது ஒரு காரசாரமான கருத்து மோதல். அப்போது பத்திரிக்கைகளில் மிக விரிவான அளவு பிரசுரிக்க பட்டிருந்தது.நான் பேசி முடிந்ததும் மேடையிலிருந்து கீழே இறங்க முற்பட்டேன். அப்போது நேரு என்னை ஒரு புறமாக அழைத்து சென்றார்.நான் கூறிய கருத்துகள் மொழி பிரச்சினை பற்றிய தீர்மானத்தில் இடம் பெற என்னன்ன திருத்தங்கள் அவசியமாக இருக்கும் என்று நேரு என்னிடம் கேட்டார். திருத்தங்கள் பற்றிய குறிப்பினை நானே எழுதி அவரிடம் கொடுக்கலாம் என்றும் இதர தலைவர்களிடம் இது குறித்து தான் பேசுவதாகவும் நேரு சொன்னார்.

நேருவின் பெருந்தன்மை:

hindhi2தீர்மானத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் ஏற்று கொண்டு ஆதரிப்பதாக மிகவும் உறுதியாக கூறியபிறகு, நேரு தனது மனதை மாற்றிகொண்டு உரிய திருத்தங்களை கேட்டார் என்பது, அவரது மகத்தான பெருந்தன்மையை காட்டுகிறது. அவர் கூறியவண்ணம் திருத்தங்கள் எழுதபட்டன.

தேச ஒற்றுமை என்ற விரிவான நலனைகருதி இந்தத்திருத்தங்களை ஏற்று கொள்ளுமாறு கூறி இதர தலைவர்களின் இசைவையும் நேரு பெற்றார்.இந்த விவகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் இறுதியாக பரிசீலனை செய்ய வேண்டி இருந்தது. நான் தில்லிக்கு அழைக்கப்பட்டேன்.மொழி கமிஷனின் பரிந்துரைகளின் மீது இறுதி முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக, அவசியமான போதெல்லாம் என்னை அழைத்து மொழி பிரச்சனை குறித்து விவாதிக்குமாறு உள்துறை அமைச்சர் கோவிந்த வல்லப பந்த் அவர்களிடம் நாங்கள் மூவரும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் நேருஜி கூறினார்.

கோவிந்த் வல்லப பந்தும் நானும் ஒரு பிரச்சனையில் உடன்பாடு கண்டுவிட்டால் அந்த விஷயம் பற்றி நேருவுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆனால் எதாவது ஒரு பிரச்சனையில் எனக்கும் பந்துக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டால், தன்னுடைய கவனத்துக்கு அதனை கொண்டு வரலாம் என்றும் உள்துறை அமைச்சரிடம் நேரு சொன்னார்.

அதிர்ஷ்டவசமாக எனக்கும் உள்துறை அமைச்சருக்கும் இடையே எந்த விஷயம் குறித்தும் கருத்து வேற்றுமை ஏற்படவில்லை. நான் குறிப்பிட்ட எல்லா அம்சங்களையும் உள்துறை அமைச்சர் மிகுந்த அன்புடன் ஒப்புகொண்டார்.”இந்தி  பேசாத மக்களைப் பெரும்பான்மையினராக கொண்ட மாநிலங்கள் எவ்வளவு காலத்திற்கு விரும்புகின்றனவோ, அவ்வளவு காலத்திற்கு ஆங்கிலம் எல்லா பணிகளுக்கும் ஆட்சி மொழியாகத்தொடர்ந்து நீடிக்கும்” என்று நானும் பந்த் அவர்களும் தீர விவாதித்து எடுத்த முடிவின் அடிப்படையில் தான் நாடாளுமன்றத்தில் ஒரு பிரகடனத்தை நேரு வெளியிட்டார்.

பல்வேறு மத, மொழி,இன,வேறுபாடுகளை கொண்ட இந்த பாரத நட்டின் ஒற்றுமையைக்கட்டி காப்பதற்கு தேசியத்தலைமை இத்தகைய பண்பாடுகளைப் பெற்றிருத்தல் அத்தியாவசியம் என்பதைக்கூறத் தேவை இல்லை. பல்வேறு கருத்தோட்டங்களின் அடிப்படை கூறுகளை உணர்ந்துகொள்ள தவறினால் நாட்டின் ஒற்றுமை அபாயத்திற்கு உள்ளாகிவிடும்.” — சி.சுப்ரமணியம் சுயசரிதையிலிருந்து.

இதிலிருந்து நேருவின் உறுதிமொழிக்கு பின் இருந்த சி.சுப்ரமணியமின் முயற்சி தெளிவாகும். நேரு காலத்தில் ஒரு கொள்கை முடிவு எடுக்கும் போது அனைத்து தரப்பினரின் கருந்துக்களுக்கும் எவ்வாறு முக்கியத்துவம் அளிக்கபட்டது என்பது குறிப்பிட தக்கது.

1968 சட்ட திருத்தம்:

நேரு இறந்தபின் குறுகிய மனப்பான்மை கொண்ட தலைவர்களின் கைக்கு அதிகாரம் சென்றது. இந்தித் திணிப்பு சட்டமாக்கப்பட்டு , திணிப்பின் வேகமும் அதிகமான உடன் தமிழகத்தில் போராட்டம் வெடித்தெழுந்தது. டெல்லி தலைமையின் அழுத்தத்துக்கு அடி பணிந்த  அன்றைய தமிழக முதல்வர் பக்தவத்சலத்தின் வெறியாட்டத்தின் விளைவாக தமிழகத்தில் ரத்த ஆறு ஓடியது.அந்த சூழ்நிலையிலும் டெல்லியிலிருந்த ஒரு சில  தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்தனர்.1965ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி காமராசர், நிஜலிங்கப்பா,ஆதுல்யா கோஷ் மற்றும் சஞ்சீவ ரெட்டி ஆகியோர் இந்தி திணிப்பை கைவிடவேண்டும் என்று மத்திய அரசிடம் பலமான கோரிக்கையை வைத்தனர்.ஒரு கட்டத்தில் காமராசர் தமிழகத்தில் இந்தியில் மட்டும் வரும் அரசாணைகளை கிழித்து எறிய வேண்டும் என்று கூட கூறியதாக செய்திகள் உள்ளன.

பிப்ரவரி மாதம் நடந்த கேபினட் கூட்டத்தில் சி.சுப்ரமணியம் ஆங்கிலத்தை அலுவல் மொழியாக தொடர சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்தித் திணிப்பை தொடர முடிவெடுக்கபட்டது. இதை கண்டு கடும் கோபமடைந்த சி.சுப்ரமணியம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரோடு  தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ஒ.வி.அளகேசனும் தனது பதவியை ராஜினாமா செய்தனர். இந்தித் திணிப்பை தீவிரமாக்கிய அப்போதைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி சி.சுப்ரமணியத்தின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ள ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தார்.

இதை கண்டு கோபமடைந்த அப்போதைய ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இந்தியாவிலிருந்து  தமிழ்நாடு பிரிந்து போகவேண்டாம் என்றால் அமைச்சர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதை திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் (“Do you want to lose Tamil Nadu from India?. If not, kindly take back your recommendation”) என்று கோபமாக கூறி அவருக்கு நல்ல அறிவுரைகளை  கூறினார். இதை அடுத்து தான் சாஸ்திரி ஆல் இந்திய ரேடியோவில் நேருவின் உறுதி மொழி கடைபிடிக்கப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது தான் மத்திய சிவில் சர்விஸ் தேர்வுகள் ஆங்கிலத்திலும் நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தார். மத்திய சிவில் சர்விஸ் தேர்வுகள் அப்போது  இந்தியில் மட்டும் நடைபெற்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று நீங்களே யூகித்து கொள்ளுங்கள். அன்றைய ஜனாதிபதிகள் நாட்டு நலனை பேணிக் காக்க முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்கள் .அது மட்டுமன்றி அவர்களது முடிவுகளை பிரதமரும் ஏற்று கொண்டிருக்கிறார்.

லால்பகதூர் சாஸ்திரி இறந்த பின் பிரதமர் பதவி பெற இந்தி வெறியரான மொராஜி தேசாய் முயற்சி செய்த போது காமராசர் முயற்சியால் இந்தி வெறியில்லாத இந்திரா காந்தி பிரதமாரனதும் குறிப்பிடத்தக்கது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பிலும் ,ஆங்கிலத்தை அரசியல் சட்டரீதியாக ஏற்று கொள்ள செய்ததிலும் இவ்வாறாக பல காங்கிரசாரின் பங்கும் உள்ளது. அந்த காலத்தில் தேசிய ரீதியான பிரச்சனைகளில் முடிவெடுக்கவும், எடுக்கும் முடிவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தவும் தமிழகத்தை சேர்ந்த காங்கிரசு தலைவர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளார்கள். அந்த நிலை தொடர்ந்திருந்தால் இன்று ஈழத்தின் வரலாறு கூட மாறி இருக்க வாய்ப்புகள் உள்ளது.


சதுக்க பூதம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தித் திணிப்பு எதிர்ப்பு 3 – அன்றைய காங்கிரசு தலைவர்கள் பங்கு”

அதிகம் படித்தது