மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கண்ணதாசனின் சூழ்நிலைப் பாடல்கள்

தேமொழி

Aug 23, 2014

kannadasan1கவியரசர் கண்ணதாசனுக்குப் பற்பல முகங்கள் உண்டு. அவர் கவிஞராக, இலக்கிய எழுத்தாளராக, பத்திரிக்கையாளராக, திரைவசனகர்த்தாவாக, தயாரிப்பாளராக, நடிகராக, திரைப்படப் பாடலாசிரியராக, அரசியல்வாதியாக எனப் பல வகைகளிலும் தமிழர்களுக்கு அறிமுகமானவர்.

இவ்வாறு பலதுறைகளில் அவர் ஆற்றிய பணியை நாம் அறிந்தாலும் அன்றிலிருந்து இன்றுவரை தினசரி வாழ்க்கையில் நாம் அவரை எதிர்கொள்வது பெரும்பாலும் அவரது திரையிசைப் பாடல்களின் மூலம்தான். பெரும்பாலும் அவரை முதன் முதலில் நாம் அறிமுகப்படுத்திக் கொண்டதும் திரையிசைப் பாடலாசிரியராகத்தான். இளைய தலைமுறையினரும், இன்று சற்றொப்ப தங்களது முப்பது வயதுகளில் இருப்பவர்களும், அவர்களுக்கும் இளையவர்களுக்கும் (அதாவது அவரது மறைவிற்குப் பிறகு 1980களிலும் அதற்குப் பிறகு பிறந்து வளர்ந்தவர்களுக்கும்) முதன் முதலில் கண்ணதாசன் அறிமுகமாகி இருப்பது திரையிசைப்பாடல்களின் மூலம்தான். பிறகுதான் அவர் ஆற்றிய பிறதுறைப் பங்களிப்புகளைப் பற்றி மெல்ல மெல்ல அறிந்து கொள்வார்கள். இந்த இளைய தலைமுறையினரின் பெற்றோர்களின் தலைமுறையும் அவ்வாறுதான் கவியரசரை அறிந்தார்கள். எனவே தமிழர் பலர் அவரைத் திரையிசைப் பாடலாசிரியராகத்தான் அறிந்திருக்கிறார்கள் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

இவ்வாறு பல தலைமுறையினரையும் அவர் தன்பால் ஈர்த்தது அவரது கவித்திறமைக்கு நல்லதொரு சான்றாகும். அவ்வாறு அப்படி என்னதான் அவர் எழுதினார் என்று காரணம் கண்டறிவது சுலபம். மிக எளிய தமிழில், சந்த நயத்துடன் அவர் வடித்த பாடல்களில் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையைக் கண்டார்கள். அதிலும் குறிப்பாக அவரது தத்துவப் பாடல்கள் பலவற்றில் தங்களது வாழ்க்கையைக் கண்டார்கள். சில பொருத்தமான தருணங்களில் விரக்தியுடன் தாங்களும் அப்பாடல்களைப் பாடிப் புலம்பியிருப்பார்கள். உறவுகள் மோசம் செய்த பொழுது, நண்பர்கள் துரோகம் செய்த பொழுது, காதல் பொய்த்துப் போன பொழுது, தனது திறமை சரிவர அங்கீகரிக்கப் படவில்லையே என்ற ஏமாற்றம் மனதை வருத்திய பொழுது எனப் பல வகைகளிலும் தங்களை அந்த சூழ்நிலையில் வைத்துத் தானும் அவர் கொடுத்த வரிகளைப் பாடுவார்கள். விரக்தியும் தத்துவமும் கைகோர்த்துப் போகும் பண்புடையது. வாழ்வில் தாழ்வை சந்திக்காத மனிதர்களும் இல்லை. அந்த சூழ்நிலைகளின் பாடல்கள் அவர்களுக்கும் பொருந்தும் பொழுது கண்ணதாசனின் பாடல் வரிகள் ஆறுதல் அளிக்கக் கை கொடுக்க முன் வருகிறது.

சூழ்நிலைப்பாடல்கள் எழுதுவதில் கண்ணதாசனை தமிழ்த் திரையுலகில் விஞ்சியவர் இதுவரை யாருமே இல்லை. அவர் பாடல்கள் காலம் கடந்து நிலைப்பதற்குக் காரணமும் அதுவே. சங்க இலக்கியங்களில் அகப் பாடல்களோ புறப்பாடல்களோ பெரும்பான்மையும் சூழ்நிலைக்காக எழுதப்பட்டவையே. “அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்” என்று தங்கள் தந்தையுடன் இருந்த செல்வ வாழ்க்கையையும் பிறகு வந்த நாளில் தங்கள் துயர நிலையையும் குறித்து பாரிமகளிர் பாடிய கழிவிரக்கம் மிக்க புறநானூற்றுப் பாடல் சூழ்நிலைக் கவிதையே.

“யாயும் ஞாயும் யாரா கியரோ எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்” என்ற குறுந்தொகைப்பாடலிலும் வாழ்வில் எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து சற்றும் அறிமுகம் இல்லாத காதலனும் காதலியும் ஒன்று கலந்த தங்கள் அன்புடை நெஞ்சங்கள் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். இங்கும் ஒரு சூழ்நிலை காண்பிக்கப்படுகிறது. இப்பாடல்கள் ஒரு கதைப் பின்னணியுடன் நம் நெஞ்சை விட்டு அகலாத நிலைபெற்ற தன்மையை அடைகிறது.

இதுபோன்று கொடுக்கப்பட்ட திரைக்கதையினை உள்வாங்கி பொருத்தமாகக் கவிதை வடித்துத் தனது பாடல்களை நிலைத்து நிற்க செய்துவிட்டார் கவியரசர். இதற்கு எடுத்துக்காட்டு கொடுத்து மாளாது என்ற அளவிற்கு கணக்கிலடங்காப் பாடல்கள் உள்ளன. ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு ஒரு பாடலைக் கொடுக்கலாம். ஆனால் இங்கு அவர் திறமையை உருப்பெருக்கிக் காட்டும் இரண்டு பாடல்களை மட்டும் அவரது சூழ்நிலைப் பாடல் இயற்றும் திறனுக்கு சான்றாகக் காண்போம்.

kannadasan3நெஞ்சில் ஓர் ஆலயம்(1962) படத்தில் தவிர்க்க முடியாத காரணத்தினால் காதலனைக் கைவிட்டு, அவனிடம் சொல்லாமல் விலகி மற்றொருவனை மணக்கிறாள் காதலி. அவளது கணவனுக்கு வந்த உயிரைக் குடிக்கும் ஒரு நோயின் காரணமாக அவனை மருத்துவரிடம் அழைத்து செல்லும் பொழுது அந்த மருத்துவரே அவளது அந்நாள் காதலன் என்பது தெரிய வருகிறது. இருவருக்கும் அதிர்ச்சி. மனம் நொந்த காதலன் இரவின் தனிமையில் துயருடன் தான் இழந்த காதலை எண்ணிப் பாடுகிறான்…

“வருவாய் என நான் தனிமையில் நின்றேன்

வந்ததும் வந்தாய் துணையுடன் வந்தாய்

துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்

தூயவளே நீ வாழ்க… வாழ்க…வாழ்க…”

இந்த நான்கே வரிகளில் படத்தின் கதையை உள்ளடக்கிவிட்டார் கவியரசர்.

மறு ஆண்டே இப்படம் “தில் ஏக் மந்திர்” என்ற தலைப்பில் இந்தி மொழியில் எடுக்கப்பட்ட பொழுது “யாது ந ஜாயே” என்ற பாடலை முஹம்மத் ரஃபி பாடுவதற்காக ஷைலேந்திரா பாடல் வரிகளை எழுத நேர்ந்தது. அப்பொழுது கண்ணதாசனைப் போல பாடலில் கதையின் வரிகளைக் கொண்டுவர திணறினாராம் அப்பாடல் ஆசிரியர். இத்தகவல் தொலைக்கட்சியில் “திரும்பிப் பார்க்கிறேன்” நிகழ்ச்சியில் தமிழ்ப்படத் தயாரிப்பில் பங்கு பெற்ற ஒருவர் நினைவு கூர்ந்தது.

kannadasan4இவ்வாறு சூழ்நிலைக் கவிதை எழுதவே மக்கள் திணறும் பொழுது கண்ணதாசன் இன்னமும் ஒருபடி மேலே சென்றுவிடுவார். வெறும் கதையைப் பாடலில் பொதிந்து தருவதுடன் திருப்தியடையாதவர் கவியரசர். அதற்கு எடுத்துக்காட்டாக ஜெனரல் சக்ரவர்த்தி (1978) படத்தில் இருந்து ஒரு பாடல். கண்டிப்பு நிறைந்த ஜெனெரலாகவும், அன்பு மிக்க கணவனாகவும், கல்லூரியில் படிக்கும் பெண்ணின் மீது அன்பைப் பொழியும் பாசம் மிக்கத் தந்தையாக சக்ரவர்த்தி என்ற ஓர் இராணுவ வீரர் பணி நிமித்தமாக வெளி நாட்டிற்கு அனுப்பப்படுகிறார். அந்த வேளையில் அவரது மகள் காதலில் விழுந்து வழிதடுமாறி பிள்ளை ஒன்றைப் பெற்றெடுக்கிறாள். அவளது காதலனுடன் மணமுடித்து வைக்க முடியாத நிலையில் அவனும் உயிரிழந்து விடுவதாகத் தெரிகிறது. கண்டிப்பு நிறைந்த தனது கணவனிடம் இருந்து மகளையும் பேரக் குழந்தையையும் காப்பாற்ற தாய் அது தனது குழந்தை என நாடகமாடி அனைவரையும் நம்ப வைத்து ஏமாற்றுகிறாள். திரும்பி வந்த ஜெனெரல் சக்ரவர்த்தியும் அக்குழந்தையைத் தனது மகன் என்றே நம்பி வருகிறார். ஆனால் விரைவில் தனது மனைவியும் மகளும் ஆடிய நாடகம் புரிந்து விடுகிறது. உண்மையை வெளிக்கொணர முயற்சிக்கிறார். அக்குழந்தையிடம் பாடுவது போல தனது மனநிலையை விவரிக்கிறார். அந்த சூழ்நிலைக்காக ஒரு பாடல், அந்த சூழ்நிலையை பாரதக் கண்ணன் கோகுலத்தில் வேறு ஒரு தந்தையிடம் வளர்வதையும், குயிலின் குஞ்சு காக்கையின் கூட்டில் வளர்வதையும் “நீ என்ன கண்ணனா? நான் என்ன கம்சனா?” என்ற பாடலில் உவமையாக்குகிறார் கண்ணதாசன்.

“தந்தை பெயர் கண்ணனுக்கு வாசு தேவனோ இல்லை

தாரணியார் அறிந்தது போல நந்தகோபனோ

இரண்டு வீட்டுப் பிள்ளையாக கண்ணன் வளர்ந்தான்

நீ எங்கள் வீட்டுக் கண்ணனாக வாழப் பிறந்தாய்”

“குயில் இட்ட முட்டை என்று காக்கைக்குத் தெரியும்

அது கூவும் போதும் தாவும் போதும் யாருக்கும் புரியும்

காட்டுக்கதை வீட்டில் கூட நடக்குது கண்ணா

கடவுள் கண்ணை தீபப் புகை மறைக்குது கண்ணா”

என்ற வரிகளின் மூலம் அது தனது மகன் அல்ல என்று தான் அறிந்து கொண்டதாக கதாநாயகன் பாடி மறைமுகமாக உணர்த்துவது போல அமைத்திருந்தார் கவியரசர். இங்கு சூழ்நிலை மட்டுமல்ல அதற்கு உவமைகள் வேறு துணை நிற்கிறது. இந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதிய குமுதம் வாரஇதழ் இந்தப் பாடலை வியந்து பாராட்டி இது போன்ற உவமைகள் வந்து விழுமாறு எழுதுவது கண்ணதாசனால் மட்டும்தான் முடியுமோ என்று குறிப்பிட்டது (வார்த்தைக்கு வார்த்தை அப்படியே விமர்சன வரிகள் நினைவில் இல்லாவிட்டாலும் இதுவே அப்பாராட்டின் கருத்து). இது போன்ற பல எடுத்துக்காட்டுகளையும் பலருக்கு இப்பாடல் வரிகள் நினைவிற்கு கொண்டு வரும்.

kannadasan2சூழ்நிலைப் பாடல்கள் எழுதுவதில் தன்னிகரில்லாது விளங்கிய கண்ணதாசன் திரையில் தோன்றும் கதாபாத்திரங்களுக்கு மட்டும் எழுதவில்லை, திரையுலகிற்கு வெளியேயும் சந்தர்ப்ப சூழ்நிலைக்குப் பாடல்கள் எழுதியுள்ளார். தனது வாழ்க்கையோடு ஒட்டிச் சென்ற நிகழ்வுகளுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். தனது வாழ்க்கையில் மட்டுமல்ல பிறரது வாழ்க்கை நிகழ்ச்சிக்கும் எழுதினர். இந்திய அரசியல் தலைவர்களுக்கும் எழுதியுள்ளார். அயல்நாட்டு அரசியல் நிகழ்வுகள் குறித்துப் பாடல்களும் எழுதியுள்ளார். இவற்றைக் குறித்தும் பல பாடல்கள் பலருக்கு நினைவு வரலாம். சொந்த வாழ்க்கையில் மது வாங்க பணம் தர மறுத்த தனது அண்ணன் மேல் வருத்தமாக இருந்த பொழுது “அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே” என்றும் பாடியவர் கவியரசர். தனது வாழ்க்கையையே “ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” என்ற தன் வரலாற்றுப் பாடலாக எழுதினர். இந்தப் பாடலைவிட அந்தக்காவியத் தாயின் இளைய மகனின் வாழ்க்கையை வேறு யாராலும் அழகாகப் பாடிவிட முடியாது.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கண்ணதாசனின் சூழ்நிலைப் பாடல்கள்”

அதிகம் படித்தது