மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பிள்ளையார் சதுர்த்தி – ஒரு பொருளாதார அறிஞன் வகுத்த பண்டிகை

சௌமியன் தர்மலிங்கம்

Aug 30, 2014

pillayar chaturthiவெகுவிமரிசையாக ஒவ்வொரு ஆண்டும் தமிழக மக்களால் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை தமிழர்களின் பண்டிகை அல்ல என்ற கருத்து ஏற்புடையதாக இருந்தாலும் வழக்கம்போல தம்முடைய சொந்த பண்பாட்டை விடுத்து அந்நிய பண்பாட்டை விரும்பி ஏற்கும் தமிழர்கள் பிள்ளையார் சதுர்த்தியையும் சிரத்தையுடன் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

என்ன இருப்பினும் இந்தப் பண்டிகை தமிழகத்தில் கொண்டாடப்படும் விதம் பாராட்டுக்குரிய ஒன்றாகும். ஒரு தேர்ந்த பொருளாதார அறிஞனின் அற்புதமான வடிவமைப்பே பிள்ளையார் சதுர்த்தி பண்டிகை. ஏழை மக்களின் கரங்களில் பணம் சென்றடைய அருமையாக சிந்தித்து இந்தப் பண்டிகையில் சடங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இந்தப் பண்டிகையின் சிறப்பு பற்றி அறிய முதலில் இதற்காக வாங்கப்படும் பொருட்கள் என்ன என்று பார்ப்போம்.

pillayar chaturthi2வயல்வெளிகளில் உள்ள களிமண்ணை எடுத்து மரஅச்சுகளில் பிள்ளையார் உருவத்தை வார்த்து, அந்த பிள்ளையார் உருவம் வழிபடப்படுகிறது. இதனை செய்வதற்கு தனித்திறமையோ, முதலீடோ தேவையில்லை. சிறிய அளவு உழைப்பில் மண்ணை சேகரித்து பிள்ளையார் உருவங்களை உருவாக்கிட முடியும்.

pillayar chaturthi3அப்படி செய்த பிள்ளையாருக்கு எருக்கம்பூவால் ஆன மாலை அணிவிக்கப்படுகிறது. இந்த எருக்கம்பூவானது தெருவோரங்களிலும், வயற்புறங்களிலும் எளிதாகக் கிடைக்கக்கூடியதாகும். இதனையும் சிறிதளவு உழைப்பின் மூலம் சேகரித்திட முடியும்.

pillayar chaturthi7அடுத்ததாக அருகம்புல்லால் ஆன மாலை பிள்ளையாருக்கு அணிவிக்கப்படுகிறது. அனைவரும் அறிந்தபடி அருகம்புல்லானது வயற்காடுகளில் திரும்பிய பக்கமெல்லாம் முளைத்துக்கிடக்கும். இதனை சேகரிப்பதும் சிரமமானதல்ல.

pillayar chaturthi10அன்றைய தினத்தில் வீடுகளில் மாவிலைத் தோரணம், தென்னங்கீற்றுத் தோரணம் கட்டப்படுகிறது. தமிழகத்தில் எல்லா கிராமங்களிலும் ஒரு சில கல்லாமணி மாமரங்களாவது காணப்படும். அதில் ஏறி மாவிலைகளை பறிப்பது மட்டுமே வேலையாகும். அதேபோல தென்னை மரத்தில் ஏறி இளம் தென்னங்கீற்றுகளை பறித்து தோரணம் செய்வதும் உழைத்து செய்யக்கூடியதே.

pillayar chaturthi9பிள்ளையாருக்கு விளாம்பழம், பிரப்பம்பழம், நாவற்பழம் போன்றவை பண்டிகையன்று படைக்கப்படும். ஏறக்குறைய பத்தாண்டுகளுக்கு முன்பு வரை இந்த பழங்கள் அனைத்தும் கிராமப்புறங்களில் இருக்கும் மரங்களில் சர்வசாதாரணமாகக் கிடைக்கும். இவற்றைத் தேடி சேகரித்தாலே போதுமானது.

pillayar chaturthi8அடுத்ததாக பொரி, சுண்டல், கொழுக்கட்டை போன்ற உணவுப்பொருட்கள் பிள்ளையாருக்குப் படைக்கப்படுகின்றன. இவற்றை நோக்கினாலும் வெகு எளிதாகத் தயாரிக்கக்கூடிய அல்லது கிராமப்பகுதிகளில் விளையக்கூடிய பொருட்களாகவே உள்ளது. கொழுக்கட்டைக்குள் வைக்கப்படும் பூரணம் எள், வெல்லம், தேங்காய் போன்ற பொருட்களால் செய்யப்படுகிறது. கொழுக்கட்டையானது பச்சரிசி மாவினால் தயாரிக்கப்படுகிறது. இவையனைத்தும் தமிழக கிராமங்களில் கிடைக்கும் விளைபொருட்களாகும்.

காலத்தை சற்று பின்னோக்கிப் பாருங்கள். ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக தமிழகத்தில் எந்தப் பெரிய வசதிகளும் கிடையாது. போக்குவரத்து கட்டமைப்புகள், மக்கள் மீது அக்கறை கொண்ட அரசாங்கம், போதிய நீர் பாசன அமைப்புகள், அறிவியல் தொழில் நுட்பம் தந்த வசதிகள் எதுவும் இல்லை. இன்று வழங்கப்படும் இலவச அரிசியோ, பொருட்களோ, மானியமோ அன்று இல்லை. கிராமப்புற ஏழை மக்கள் தங்களால் ஆன விவசாயத்தை செய்து கஞ்சியோ கூழோ குடித்து காலத்தை ஓட்டிவந்தனர்.

செல்வமும், பணமும் இன்று போலவே அன்றும் ஒரு சிலரிடமே குவிந்திருந்தது. இயல்பாகவே சிக்கனத்தைப் போற்றும் தமிழக மக்கள் செலவு செய்ய அஞ்சி பணத்தைப் பூட்டிவைப்பது வழக்கம். இப்படி ஒரு சூழ்நிலையில் ஏழைமக்களிடம் பணம் சென்றடைய எந்த வழியும் இல்லை. பூட்டிக்கிடக்கும் செல்வத்தை வெளியில் கொண்டுவர ஒரு அறிஞன் செய்த சிந்தனையே பிள்ளையார் சதுர்த்தி பண்டிகை.

எந்த ஒரு பெரிய முதலீடும் இல்லாமல், தனித்திறமை எதுவும் இல்லாமல் வெறும் உடல் உழைப்பைக் கொண்டு ஏழை மக்கள் ஓரளவு பணம் சேகரிக்க இந்தப் பண்டிகை உதவி செய்கிறது. களிமண்ணையும், புல்லையும் புதரில் வளரும் பூவையும் மாவிலைகளையும் யாரும் விலைக்கு வாங்க மாட்டார்கள். ஆனால் தெய்வத்தின் பெயரை சொல்லி இப்படி ஒரு பண்டிகை வடிவமைக்கப்பட்டதால் அன்று இவையனைத்தும் விலைபோகின்றன. முதல் நாள் உழைத்து மறுநாள் பணத்தை எந்த ஒரு ஏழையும் பெறமுடிகிறது. அது மட்டுமின்றி சிறு வியாபாரிகள் விற்கும் உணவுப்பொருட்கள் பெரிய அளவில் நுகரப்படுகிறது. சாதாரண நாட்களில் சுண்டலையும், பொரியையும் விலை கொடுத்து அனைவரும் சாப்பிடுவதை நீங்கள் காணமுடியாது.

அதே சமயத்தில் உழைப்பிற்கு உண்டான மரியாதை தரப்படுகிறது. களிமண், அருகம்புல், எருக்கம்பூ, தென்னங்கீற்று, மாவிலை போன்றவை பிள்ளையாராகவும், மாலையாகவும், தோரணமாகவும் மாற்றப்படவேண்டும் என்ற கட்டாயம் அங்கே புகுத்தப்பட்டுள்ளது.

இப்படி அருமையாக சிந்தித்து மக்களை சிறிதளவேனும் செல்வம் பெறச்செய்த அந்த அமைச்சனோ, அரசனோ அவன் யாராயினும் நாம் உளமாற பாராட்டத்தான் வேண்டும்.

வணிகமயமாக்கப்பட்ட இன்றைய உலகில் ஏழைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தப் பண்டிகையில் தேவையற்ற சடங்குகளும், மதம் சார்ந்த முரண்பாடுகளும் செலவுகளும், ஆடம்பரங்களும், பகட்டும் சேர்ந்துவிட்டன. பண்டிகைகளின் சடங்குகளையும் காலத்தின் தேவைக்கேற்ப மாற்றி அமைத்துக் கொண்டாடுவதே நல்ல ஒரு சமூகத்தின் அடையாளமாகும்.


சௌமியன் தர்மலிங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பிள்ளையார் சதுர்த்தி – ஒரு பொருளாதார அறிஞன் வகுத்த பண்டிகை”

அதிகம் படித்தது