மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 25

கி.ஆறுமுகம்

Sep 6, 2014

bosu2போசு தனது பார்வர்டு பிளாக் கட்சியை நாட்டின் எல்லா இடத்திற்கும் எடுத்துச் செல்லத் துவங்கிய சுற்றுப் பயணத்தில் அவர் எதிர்பார்த்ததை விட, மக்கள் கூட்டம் அதிகமாக அவரது பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு, பார்வர்டு பிளாக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்கள். போசு பம்பாய் நகரின் பல பகுதிகளில் பொதுக்கூட்டத்தில் பேசினார். தளபதி பி.எம்.பாபட் என்பவர் போசிற்கு பூனா நகரில் பிரம்மாண்டமான வரவேற்பு அளித்தார். பூனா நகர் எப்பொழுதுமே காந்திக்கு எதிர்ப்பாக செயல்படும் இடம் என்பதால் போசுக்கு மிகச் சிறப்பான வரவேற்பை மக்கள் அளித்தனர். பின் கர்நாடகத்திற்குப் புறப்பட்டுச் சென்ற போசை, கர்நாடக காங்கிரசு கமிட்டித் தலைவர் எஸ்.கே.ஹோஸ் மணி என்ற சட்டமன்ற உறுப்பினரே வரவேற்று பார்வர்டு பிளாக்கில் சேருவதாக அறிவித்தார். இதனால் போசு சற்றும் எதிர்பாராத அளவுக்கு ஏராளமான காங்கிரசு தொண்டர்கள் பார்வர்டு பிளாக்கில் சேர்ந்தனர். சுங்காதர ராவ் தேஷ் பாண்டே என்ற கர்நாடக வலதுசாரி காங்கிரசு செய்த, பொய்ப் பிரச்சாரங்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. போசு கர்நாடகாவில் உள்ள தார்வார், பீஜப்பூர், பெல்காம் போன்ற இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தினார்.

subash11939 செப்டம்பர் 3ல் சென்னை வந்த போசுக்கு, “யாரும் தங்க இடம் கொடுக்கக் கூடாது, வரவேற்கவோ அவரது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவோ காங்கிரசுகாரர்கள் யாரும் போகக் கூடாது” என்று அப்போது தமிழ்நாடு காங்கிரசு தலைவராக இருந்த சத்திய மூர்த்தி அறிக்கை விட்டார். ஆனால் காந்திக்கு மிக நெருக்கமானவர் என்று கருதப்பட்ட சுதந்திரச் சங்கு பத்திரிகை ஆசிரியர் சங்கு கணேசன் தான் தம் வீட்டில் போசு தங்குவதற்கு இடம் கொடுத்தார். சென்னை கடற்கரையில் எஸ்.சீனிவாச ஐயங்கார் தலைமையில் நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் போசு தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கிளையை தொடங்கிவைத்துப் பேசினார். அந்தக் கூட்டத்தில் போசு பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஒருவர் மேடையேறி போசிடம் ஓர் செய்தியை தெரிவித்தார், அதை கேட்டவுடன் போசு மிகவும் மகிழ்ச்சியுடன் நாம் எதிர்பார்த்து கொண்டிருந்த தருணம் வந்துவிட்டது என்று அந்த செய்தியை மக்களுக்கு தெரிவித்தார். அது “இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன், ஜெர்மனியின் மீது போர் தொடுத்த செய்தி மேடையில் போசு பேசியது: நாம் வெகு நாட்களாகவே எதிர்பார்த்து வந்த சந்தர்ப்பம் வந்துவிட்டது, பிரிட்டனுக்கு துன்பகாலம் நமக்கு நல்லகாலம். பிரிட்டன் ஜெர்மனியின் மீது யுத்தம் தொடுத்து நேரடியாக களத்தில் குதித்திருக்கும் இந்த நேரத்தில், இந்தியா இறுதிப் போராட்டத்தைத் தொடங்கினால் வெற்றி பெறுவது நிச்சயம் என்றுதான் ஏற்கனவே பல மாதமாக வற்புறுத்தி வந்ததை அக்கூட்டத்திலும் போசு எடுத்துரைத்தார்”.

தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு சென்னையில் இருந்த போசுக்கு, திடீர் அழைப்பு ஒன்று காங்கிரசிடமிருந்து வந்தது. அது பிரிட்டிசு அரசு, இந்திய மக்களிடம் மற்றும் காங்கிரசு தலைவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தனியாக பிரிட்டன் இந்தியா இரண்டாம் உலகப்போரில் ஈடுபடும் என்ற அறிவிப்பை எதிர்த்தனர். மேலும் பிரிட்டனின் வாக்குறுதிகளையும் அவர்கள் நம்பவில்லை. பிரிட்டன் இதுபோன்று பல வாக்குறுதிகளை இதற்கு முன் பலநேரத்தில் கொடுத்து எதையும் நிறைவேற்றவில்லை, அதுபோன்று இந்த முறையும் இருக்கும். எனவே இந்திய மக்கள் அனைவரும் பிரிட்டனுடன் எந்த ஒத்துழைப்பையும் கொடுக்கக் கூடாது என்று காங்கிரசு கேட்டுக்கொள்கிறது. காங்கிரசு மற்றும் அதன் தலைவர்கள், உறுப்பினர்கள் யாரும் பிரிட்டனுடன் எந்தவித ஒத்துழைப்பும் தரமாட்டார்கள் என்ற அறிவிப்பை காங்கிரசு வெளியிட்டது.

bosu4பின் போர்காலம் என்பதினால் இந்த சூழ்நிலையில் எப்படி செயல்பட வேண்டும் என்று தீர்மானிக்க காங்கிரசு காரிய கமிட்டி ஒரு பொதுக்குழு கூட்டத்தினை நடத்த இருப்பதாகவும், அதில் போசு கட்டாயம் கலந்து கொள்ளுமாறும் அவருக்கு அழைப்பு வந்தது. காங்கிரசிடமிருந்து காங்கிரசில் ஒரு உறுப்பினராகக் கூட இல்லாத போசு, அழைப்பிதழில் காங்கிரசு அறிவிப்பைக் கண்டு “இனியாவது காங்கிரசு மிதவாதிகள் டெல்லிக்கு புனிதப் பயணம் செய்வதில் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்து, இதற்கு முன் காங்கிரசு எடுத்த பல தீர்மானங்களை கிடப்பில் போட்டது போன்று இல்லாமல் இந்தத் தீர்மானத்தையாவது காங்கிரசு சரியாக கடைபிடிக்க வேண்டும்” என்று அறிந்து சென்னையில் இருந்து செல்ல தயாரான பொழுது, முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் போசை “நீங்கள் தென்னகம் வரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். போசு உடனே தேவருடன் தென்னகம் வந்தார். ஏனெனில் தேவரை தென்னகத்தின் போசு என்று அழைக்கக்கூடிய அளவிற்கு தேவருக்கும் போசிற்கும் இடையே நெருக்கம் இருந்தது.

subash2எனவே தேவரின் அழைப்பின் பேரில் 1939ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி போசு மதுரை வந்தார். மதுரை வெளி வீதிகளில் தேவர் மிகப்பெரிய ஊர்வலம் நடத்தினார். ஊர்வலத்தின் முடிவில் பீப்பிள்ஸ் (தற்போதைய தமுக்கம்) மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஸ்ரீமீனாட்சி மில் அதிபர் கருமுத்து தியாகராச செட்டியார் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் தேவரும், போசும் உரையாற்றினார்கள். அந்த உரையில் வீரமும் விவேகமும் இருந்தது. அலைகடலென எழுந்த மக்கள் கூட்டம் தென்தமிழகத்தில் பார்வர்டு பிளாக் இயக்கத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது இந்தப் பொதுக்கூட்டம். தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமைந்தது. நீதிக்கட்சி, காங்கிரசு கட்சி என்று மட்டுமே பேசப்பட்ட தென்னிந்தியாவில் பார்வர்டு பிளாக் இயக்கமும் பேசப்பட்டது. தென்னிந்தியாவில் பார்வர்டு பிளாக் இயக்கமும் முக்கிய அங்கம் வகிக்கத் துவங்கியது. கூட்டம் முடிந்த அன்றிரவே தேவரும், போசும் காங்கிரசு காரியக்கமிட்டியில் கலந்து கொள்ள வார்தாவுக்கு புறப்பட்டுச் சென்றனர். தேவரும் போசும் ஒரு காரில் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் பொழுது அவர்களது காரை ஒரு ஜீப் பின் தொடர்ந்து வந்தது. அதை கவனித்த போசு தேவரிடம் “நம் காரை ஒரு ஜீப் பின் தொடர்கிறது” என்றார். அதற்கு தேவர் “அது நமது ஜீப்தான்”, நாம் அவசர வேலையாக செல்வதினால் வழியில் கார் பழுதடைந்தால் சிரமப்படுவோமே என்று எண்ணி ஒரு பாதுகாப்பிற்காக நாம் சென்று அடையும் இடம் வரை பின் தொடர சொன்னேன் என்றார். தேவரின் அறிவுத்திறனை பார்த்து போசு மலைத்துவிட்டார். இந்த காலகட்டத்தில் தேவர், சென்னை மாகாண சட்டசபையில் காங்கிரசு உறுப்பினராகவும் எம்.எல்.ஏ (M.L.A) ஆகவும், அகில இந்திய பார்வர்டு பிளாக் செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு பார்வர்டு பிளாக் பொதுச் செயலாளராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

1937ல் நடந்த சட்டசபை தேர்தலில் நீதிக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட இராமநாதபுரம் ராசாவுக்கு எதிராகப் போட்டியிட யாருமே முன்வராத போது அகில இந்திய காங்கிரசு தேர்தல் கமிட்டியின் தலைவர் பட்டேல், ராசாவை எதிர்த்து முத்துராமலிங்கத் தேவர்தான் போட்டியிட வேண்டும் என்று தீர்மானித்து ஒரு சிறப்புப் பிரதிநிதியை மேலிடத்திலிருந்து அனுப்பி டிபாசிட் தொகையைக் கூட கட்சியின் சார்பிலேயே செலுத்தி மிகவும் வற்புறுத்தியதால்தான் தேவர் போட்டியிட்டார். இராமநாதபுரம் ராசாவை, தேவர் தோற்கடித்து வெற்றி வாகை சூடியது காங்கிரசு மகாசபையின் கவுரவத்தைப் பெரிதும் காப்பாற்றியது. 215 சட்டசபை இடங்களில் 159 இடங்களை காங்கிரசு கைப்பற்றியது. அந்தத் தேர்தலில்தான் நேருவின் மாகாணத்தில் கூட 228-சட்டசபை தொகுதிகளில்தான் காங்கிரசு வெற்றி பெற முடிந்தது. வங்காளத்தில் 250 இடங்களில் 60 இடங்கள் மட்டுமே காங்கிரசுக்கு கிடைத்தன. இதிலிருந்து சென்னை மாகாணத்தில் காங்கிரசு பெற்ற வெற்றியின் அளவும் அதில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கும் தெளிவாகத் தெரிகிறதல்லவா.

hindhi11939-செப்டம்பர் 8ல் அகில இந்திய காங்கிரசு காரியக்கமிட்டி வார்தாவில் கூடியது. இதில் அனைத்து தலைவர்களும் கலந்துகொள்ளுமாறு காங்கிரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் ஜின்னா கலந்து கொள்ளவில்லை. காரியகமிட்டி கூட்டத்தில் போசு சிறப்பு அழைப்பாளராகவும், முத்துராமலிங்கத் தேவர் பார்வையாளராகவும் கலந்து கொண்டனர். கல்கத்தா காங்கிரசுக்குப் பின்னர் காரியக்கமிட்டியில் அங்கம் வகிக்காமல் இருந்து வந்த நேருவும், சிறப்பு அழைப்பாளராக கமிட்டியில் கலந்து கொண்டனர். காந்தியும் அவ்வாறே கலந்து கொண்டார். இந்தக் கூட்டம் கூடுவதற்கு சில தினங்களுக்கு முன் காந்தி வெளியிட்ட அறிவிப்பை விவாதித்தனர் கூட்டத்தில். அதாவது போர் அறிவித்தவுடன் காந்தியை, வைசிராய் லார்டு வின்லித்கோ தந்தி அனுப்பி சிம்லாவில் தம்மைச் சந்திக்கும்படி வேண்டிக்கொண்டார். காந்தி, வைசிராயை சந்திக்க புறப்பட்டபொழுது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் காந்தி வைசிராயை சந்தித்து பின், தான் வைசிராயுடன் மக்கள் சார்பாக எந்த உடன்பாட்டையும் செய்யவில்லை, அவ்வாறு செய்ய பிரிட்டிசு விரும்பினால் அதை காங்கிரசு தலைவருடன் செய்யுமாறு தெரிவித்தேன் என்றார். பிரிட்டன் மற்றும் பிரான்சின் போர் நிலைமையை எண்ணி தான் கண்ணீர் வடிப்பதாகவும், தனி மனிதாக அதற்கு ஆதரவளிப்பதாகவும், அகிம்சையின் மீது நம்பிக்கைகொண்டு தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாகவும், தற்பொழுது போர் சூழ்நிலையில் இந்தியாவின் சுதந்திரத்தினை தன்னால் எண்ணிப்பார்க்கக் கூட முடியாது என்றும் இந்தியாவின் சுதந்திரம் தானே கிடைக்கும் என்றும் பிரிட்டனுக்காக தாம் வருந்துவதாகவும் அகிம்சையில் நம்பிக்கை உள்ளவர்கள் பிரிட்டனுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் அறிவித்தார்.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 25”

அதிகம் படித்தது