மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அறிவியல் ஆய்வறிக்கை: பொருளாதார வளர்ச்சியே உலக மொழிகளை அழிவுப் பாதையில் இட்டுச் செல்கிறது.

தேமொழி

Sep 6, 2014

mozhigal2உலகமொழிகளில் 25 விழுக்காட்டு மொழிகள் அழியும் நிலையில் உள்ளன என்று இந்த செப்டம்பர் 2014 இல் வெளியான “புரோசீடிங்க்ஸ் ஆஃப் தி ராயல் சொசைட்டி பி: பயாலாஜிகால் சயின்சஸ்” சஞ்சிகையில் (Proceedings of the Royal Society B: Biological Sciences, September 2014) வெளியான ஒரு புதிய ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. மேலும், மொழிகளை அழிவை நோக்கி செலுத்துவது ‘பொருளாதார வளர்ச்சி’ என்றும் குறிப்பிடுகிறது. இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டவர் ‘டாட்சுயா அமனோ’ என்ற இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் (Tatsuya Amano, The University of Cambridge in England).

இன்றைய உலகில் பேச்சு வழக்கில் இருப்பவை சற்றேறக் குறைய 7,000 மொழிகளாகும். ஐக்கிய நாடுகளின் அவையும், உலகில் இன்று பேசப்பட்டு வரும் மொழிகளில் பாதி மொழிகள் இந்த நூற்றாண்டின் முடிவில் அழிந்து விடும் என்று கவலை தெரிவித்திருக்கிறது. ஏதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் இம்மொழிகளின் அழிவு தவிர்க்க முடியாதது. குறிப்பாக ஜப்பானில் பேசப்படும் ‘அய்னு’ (Ainu) என்னும் மொழி மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ள மொழிகளுள் ஒன்று. இதனைப் பேசத் தெரிந்தவர்கள் வெறும் 10 பேர் மட்டுமே.

mozhigal4உலகக்கலாச்சாரத்தின் பன்முகத் தன்மைக்குக் (diversity) காரணம் உலகில் வழங்கி வரும் பன்மொழிகளுமாகும். ஒரு கலாச்சாரத்தின் அடிப்படை அதன் மொழி என்பதால் மொழியைக் காப்பது இன்றியமையாததாகிறது என்கிறார் ஆய்வறிஞர் அமனோ. இவர் உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் உயிரியல் அறிவியலார். அழியவிருக்கும் உயிரினங்களுக்கும், அழியவிருக்கும் மனித மொழியினங்களுக்கும் உள்ள ஒற்றுமையால் கவரப்பபட்டு, மொழிகளை அழிவில் இருந்து காப்பது ஒரு இனத்தைக் காப்பதைப் போன்றது என்றக் கருத்தால் தற்பொழுது இந்த ஆய்வில் கவனம் செலுத்தி வருகிறார்.

‘லைவ் சயின்ஸ்’ (Live Science) என்ற பத்திரிக்கைக்கு அவர் கொடுத்தப் பேட்டி ஒன்றில், ‘மொழிகளின் பரவலுக்கும் உயிரினங்களின் பரவலுக்கும் வேறுபாடில்லை. உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் முயற்சியில் நான் அறிந்தவற்றை மனித மொழிக்களைச் சார்ந்திருக்கும் மானுடக் கலாச்சாரங்களை அழிவிலிருந்து மீட்கும் பணியிலும் பயன்படுத்த விரும்புகிறேன்,’ என்று சொல்லியிருக்கிறார் அமனோ.

மொழிகளின் அழிவிற்கான காரணத்தை ஆராய்ந்த இவரும், இவருடன் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த பிற ஆய்வறிஞர்களும் உயிரினங்களின் பரவலைப் போலவே மனித இனங்களின் மொழிகளில் பரவல் அமைந்த காரணத்தால் அதே ஆய்வுக் கொள்கைகளைக் கொண்டு இந்த ஆய்வையும் வரையறுத்தனர். இந்த ஆய்வு முறையில் முதலில் எந்த மொழிகள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன, அவை உலகின் எப்பகுதிகளில் பேசப்படுகின்றன என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ஒரு மொழி ஆபத்தான அழியும் நிலையில் இருப்பதற்கு அவை 1. வெகுக் குறைவாக சில இடங்களில் மட்டுமே பேசப்படுவதும், 2. குறைவான எண்ணிக்கையில் உள்ளோர் மட்டுமே பேசும் மொழியாக அது இருப்பதுவும், 3. அவ்வாறு பேசுபவர்களின் எண்ணிக்கையும் வெகு வேகமாக் குறைவதும் காரணமாகும்.

இந்த வரைமுறையின்படி 25% உலக மொழிகள் கவலைக்குரிய நிலையில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. இவ்வாறு அழியும் நிலையில் உள்ள மொழிகளைக் கண்டறிந்த பின்னர் அம்மொழி பேசப்படும் இடங்களின் சுற்றுப்புறச் சூழ்நிலை, சமூக அமைப்பு, பொருளாதார நிலை ஆகியவற்றில் ஏதேனும் ஒற்றுமைகள் உள்ளனவா என்றும் தொடர்ந்து ஆராயப்பட்டது. அதாவது அம்மொழிமக்கள் வாழும் நிலப்பரப்பானது வசதியான வாழ்க்கைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளதா, அப்பகுதியில் மக்கட்தொகையின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கிறதா என்ற கோணங்களில் ஒரு மொழியினைப் பேசும் மக்களின் வாழ்நிலைச் சூழலின் பிற தன்மைகள் ஆராயப்பட்டன.

இந்த ஆராய்ச்சியின் முடிவாக, உலகளாவிய முறையில் ஒரு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை குறைவதற்கு அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியே காரணமாக இருப்பது தெரிய வந்திருக்கிறது. நல்ல பொருளாதார வளமிக்க பகுதிகளில் உள்ள மொழிகளின் நிலையில் காணப்படும் மாற்றம், அங்கு பரவலாக உள்ள பல மொழிகளைப் பேசுவோரின் எண்ணிக்கையில் சரிவினை ஏற்படுத்துகிறது. வாழ்க்கை வசதிக்கான மொழியினை மட்டும் பேசும் நிலைக்கு மக்கள் மாறுவதே இதற்குக் காரணமாகும்.

இந்தப் புதிய ஆய்வு தரும் மிக முக்கியமானத் தகவலின்படி புவியின் வெப்ப மண்டலப்பகுதியில் உள்ள மொழிகளும், குறிப்பாக இமயமலைச்சாரலில் புழக்கத்தில் உள்ள மொழிகளும் வெகு விரைவில் அழிவை நோக்கிச் செல்கின்றன எனத் தெரிய வருகிறது. இப்பகுதியில் பலப் பழங்குடிகளின் மொழிகள் வெகு குறைவான எண்ணிக்கையில் பேசுவோர்களைக் கொண்டதாக இருப்பதுடன், அப்பகுதியில் பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்து வருகிறது. இவையிரண்டும் அம்மொழிகளை அழியும் மொழிகளின் நிலைக்குத் தள்ளுகின்றன.

முன்னர் வந்த ஆய்வறிக்கைகளும் சிறிய வட்டாரங்களின் மொழிகளின் நிலையை ஆராய்ந்ததில், மொழியின் நிலைகளில் இவ்வாறு மாறுபாடுகள் ஏற்படுவதற்குக் காரணம் உலகமயமாதலும் பொருளாதார வளர்ச்சியுமே என்று அவைகளும் குறிப்பிடிருந்தன. மொழிகளின் வளர்ச்சிக்கு இடையூறான இந்த நிலைமை இப்பொழுது உலகம் முழுவதும் பல இடங்களிளும் பரவலாகக் காணப்படுகிறது. மொழிகளின் நிலை மாறுதலுக்குக் காரணம் பொருளாதார வளர்ச்சியின் தாக்கத்தின் விளைவு என்பதே அவர் செய்த ஆராய்ச்சி தரும் முக்கியத் தகவல் என்றுக் குறிப்பிடும் அமனோ, அதனால் நன்கு பொருளாதார வளர்ச்சியும், பன்மொழிகளையும் பேசும் மக்கள் கொண்ட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் தங்கள் நாடுகளில் வழங்கிவரும் பன்மொழிகளையும் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் உடனே இறங்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

mozhigal5பொருளாதார வளர்ச்சி மொழிகளின் அழிவிற்கு வழிகோலுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக அழியும் நிலையில் உள்ள மொழிகளைப் பேசுபவர்கள் அந்த வட்டாரத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழியைத்தான் தங்ளை பொருளாதார வகையில் வளர்ச்சியடைய உதவும் மொழியாகப் பார்ப்பார்கள். அப்பகுதியில் வாழும் பெரும்பான்மையரோடு ஒருங்கிணைந்து வாழ உதவும் ஒரு மொழியாகவும் அப்பகுதியின் ஆதிக்க மொழியைக் கருதுவார்கள். இதன் காரணமாகத் தங்கள் தாய்மொழியைக் கைவிடுவார்கள்.

பொருளாதார வளர்ச்சி தவிர மற்ற பிற முக்கிய காரணிகளும் ஒரு மொழியின் வளர்ச்சியை நிர்ணயிக்கும். குறிப்பாக அப்பகுதியின் மொழிக் கொள்கை மொழியின் முன்னேற்றதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.   ஒரு மொழியை எவ்வாறு பள்ளியில் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளார்கள் என்பதும், மொழியை எந்த முறையில் கற்பிக்கப் பயன்படுத்துகிறார்கள் என்பதும் பலவகையில் வேறுபட்டுள்ளது. இது போன்ற மொழிக்கொள்கை நாடுகளுக்கு இடையிலும், ஒவ்வொரு நாட்டிலுமே வேறுபட்டு இருக்கக்கூடும். இந்தக் காரணிகள் மொழிகளின் அழிவுறுதலின் தன்மையைப் பற்றி விரிவாக விளக்கவும் கூடும். இதனை ஆராயத் தேவையான தரவுகளை உலகளாவிய அளவில் சேகரிப்பது மிகவும் கடினமான செயல். ஆனால் அவரது ஆய்வின் அடுத்தக் கட்ட செயல்பாடு இத்தகைய தரவுகளை சேகரிப்பதுதான் என்கிறார் அமனோ.

மேலும் அவர், ‘உலக மொழிகளின் பன்மயத்தன்மை எதிர்நோக்கியிருக்கும் ஆபத்துகளை கணிக்க வழியுண்டு. எதிர் வருவதைக் கணிக்க உதவும் சுற்றுப்புறச்சூழல், பொருளாதார வளர்ச்சி, தட்பவெட்ப நிலைகள் போன்ற காரணிகளைப் பற்றிய ஏராளமான தரவுகள் நம்வசமுள்ளன. அத்தரவுகளை இந்த ஆராய்ச்சியின் தரவுகளுடன் பொருத்தி மேலும் ஆராய்ந்து உலக மொழிகளின் எதிர்கால நிலையையும், எந்த மொழிக்கு என்ன நேரும், குறிப்பாக எந்த மொழியின் எதிர்காலம் அழிந்துவிடும் என்பதை நாம் கணிக்க வேண்டும். அடுத்தபடியாக, கற்பதற்குக் கடினமான இலக்கண அமைப்பு போன்ற ஒரு மொழியினுடையப் பண்புகளே ஒரு மொழியின் அழிவிற்குக் காரணமாக அமைகிறதா என்றும் ஆராய வேண்டும்,” என்று கூறுகிறார்.

குறிப்பு: இக்கட்டுரை, ‘லைவ் சயின்ஸ்’ இதழில் வெளியான ‘சார்லஸ் கியூ. சோய்’ (Charles Q. Choi) அவர்கள் எழுதிய கட்டுரையின் மொழி பெயர்ப்பு.

Source:

Global distribution and drivers of language extinction risk

Tatsuya Amano, Brody Sandel, Heidi Eager, Edouard Bulteau, Jens-Christian Svenning, Bo Dalsgaard, Carsten Rahbek, Richard G. Davies and William J. Sutherland

Proc. R. Soc. B 2014 281, 20141574, published 3 September 2014

Online Access: http://rspb.royalsocietypublishing.org/content/281/1793/20141574.full.pdf

Note: Data accessibility. All data are uploaded as the electronic supplementary material

http://rspb.royalsocietypublishing.org/content/281/1793/20141574/suppl/DC1

&

http://www.livescience.com/47657-25-percent-of-global-languages-are-threatened.html?cmpid=558280


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அறிவியல் ஆய்வறிக்கை: பொருளாதார வளர்ச்சியே உலக மொழிகளை அழிவுப் பாதையில் இட்டுச் செல்கிறது.”

அதிகம் படித்தது