மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தலையங்கம் செப்டம்பர் 20, 2014

சிறகு நிருபர்

Sep 20, 2014

thalayangam1கூட்டநெருக்கமான பேருந்து பயணத்தில் சில கீழ்த்தரமான மனிதர்களைப் பார்த்திருப்பீர்கள். அருகில் நிற்கும் பெண்களின் மீது சாய்வார்கள், பின்னர் பெண்களின் முறைப்பில் அசடு வழியும் சிரிப்போடு பின்வாங்குவார்கள்.சில நிமிடங்களுக்குள்ளாகவே மீண்டும் அதே தவறை செய்து எதிர்ப்பு வந்தவுடன் பின்வாங்குவார்கள். ஐந்து நிமிடங்களுக்கு முன்னர் நடந்ததை கூட நினைவில் கொள்ள இயலாத மூளைத்திறன் கொண்டவர்களா அவர்கள் என்று பலமுறை சிந்தித்ததுண்டு. அதே போன்ற பழக்கத்தை இந்தி திணிப்பில் கொண்டதுதான் டில்லி அரசாங்கம். எத்தனை முறை தமிழ்நாட்டில் சூடுபட்டாலும் சில நாட்கள்அல்லது வாரங்களுக்குள்ளாகவே மீண்டும் வேறு வழியில் திணிக்க முயற்சி செய்வார்கள். டில்லியின் தற்போதைய முயற்சி பல்கலைகழக மானியக் குழுவேடமணிந்து வந்திருக்கின்றது. அனைத்து மாநில பல்கலைகழகங்களிலும் இளங்கலைபடிப்பில் இந்தியை முதன்மை பாடமாக கற்பிக்க வேண்டுமாம். அதிலும் சட்டம் மற்றும் வணிகவியல் படிப்புகளில் இந்தி கட்டாயமாம். நம் ஊர் கல்லூரிகளில் வணிக படிப்பை இந்தியில் நடத்தினால் யாருக்கு விளங்கும்? தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் அனைத்து அரசியல் கட்சிகளும் பல்கலைகழக மானியக்குழுவின் இச்செயலிற்கு கடும் கண்டனம் தெரிவித்தினர். உறுதியான முடிவுகளுக்கு பெயர்போன முதலமைச்சர் ஜெயலலிதா இவ்வுத்தரவு தமிழ்நாட்டு பல்கலைகழகங்களை கட்டுப்படுத்தாது என்று தெளிவாக பதிலறிக்கை வெளியிட்டார். வழக்கம் போலவே அசடு வழியும் சிரிப்போடு தவறாக அறிக்கை அனுப்பிவிட்டோம், நாங்கள் இந்தியை திணிக்க முயற்சி செய்யவில்லை என்று பல்கலைகழக மானியக்குழு பின்வாங்கி இருக்கின்றது.

thalayangam2டில்லியில் நடந்த இன்னொருசம்பவமும் தமிழ் நாட்டில் இரசிக்கப்படவில்லை. அணுஉலைக்கு எதிரான போராளி உதயகுமார் டில்லி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டிருகிறார். ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் கலந்து கொள்ள நேபாளம்செல்ல இருந்தவரை டில்லி அதிகாரிகள் தடுத்து நிறுத்தி இருக்கின்றனர். அதிகாரிகளின் தரப்பில் தடுப்பதற்குக் கூறப்பட்ட காரணம் தமிழக காவல்துறையினரால் வெளியிடப்பட்ட தேடப்படுபவர் பட்டியலில் உதயகுமார் பெயர் இருக்கின்றது என்பதே. தமிழ்நாட்டில் பொது இடங்களில் தினம் நடமாடுகிறார் உதயகுமார், அனைவரும் அறிய தேர்தலில் போட்டியிட்டார்  இன்னுமா தமிழக காவல்துறை அவரை தேடிக் கொண்டிருக்கின்றது?

thalayangam3இதுபோன்ற செய்திகளால் குறையும் டில்லியின் மதிப்பை ஓரளவிற்கு தடுத்து நிறுத்த சிலநல்ல மனிதர்களும் டில்லியில் இருக்கத்தான் செய்கின்றனர். நம் நாட்டில்அத்தி பூத்தது போன்று என்றாவது தான் நீதிமன்றத்தில் மக்கள் நலனுக்கான நீதிகிடைக்கும். அது போன்ற அருமையான உத்தரவு தான் உயர்நீதி மன்றம் குவாரி ஊழல்களை நேர்மைக்குப் பெயர்போன அதிகாரி சகாயத்தை நியமித்தது. தமிழகஅரசு அதற்கு தடைகோரி உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து மக்கள் மத்தியில் கெட்ட பெயரை சம்பாதித்தது. உடனடியாக இவ்வழக்கை கையில் எடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான நீதிபதிகள் தமிழக அரசின்மனுவை தள்ளுபடி செய்து நீதியை நிலை நிறுத்தி இருக்கின்றனர். எங்கிருந்தாலும் வாழ்க நல்லவர்கள்.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தலையங்கம் செப்டம்பர் 20, 2014”

அதிகம் படித்தது