மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வுல்ஃப் ஹால் – ஹிலாரி மான்டெல் மற்றும் சரித்திர நாவல்கள்

ஷைன்சன்

Sep 27, 2014

sariththira naavalgal2கல்கியிலிருந்து தான் நான் எனது தமிழ் வாசிப்பை ஆரம்பித்தேன் என்று சொல்ல வேண்டும். அதற்கு முன் சில சந்தர்ப்பங்களில் சில நாவல்களை வாசித்திருந்தாலும், அவ்வாசிப்புகள் முழுமையானவையாக அமையவில்லை. சரியான வயதில் கிடைத்த சரியான வாசிப்பனுபவம் கல்கியின் பொன்னியின் செல்வன் தான். இவ்விடத்தில் நாவல் என்னும் வார்த்தையைப் பற்றி தெளிவுபடுத்த வேண்டியதாகிறது. சமகாலத் தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவரான ஜெயமோகன் தனது நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் என்னும் விமர்சன நூலில் இலக்கியத்தரத்தை எட்டாத நாவல்களை நீள்கதைகள் என்றே அழைக்கிறார். ஆனால் இப்போது மேற்கத்திய விமர்சகர்களும், எழுத்தாளர்களும் நாவல் என்பதற்கான வரையறையைக் கறாராகப் பின்பற்றுவதில்லை. அங்கே வெளியாகும் நீள்கதைகள் அனைத்துமே நாவல் என்றே அழைக்கப்படுகின்றன. இலக்கியத்தரம் கொண்ட கற்பனைப் படைப்புகள் மேற்குலகில் இலக்கியப் புனைவு (Literary fiction) என்னும் வரையறையின்கீழ் வருகின்றன. எனவே நாமும் நீள்கதைகள் என்று அழைப்பதற்குப் பதில் நாவல் என்ற வார்த்தையை உபயோகிக்கலாம் என்பதே எனது தனிப்பட்ட கருத்து.

கல்கியின் சரித்திர நாவல்கள், அவரை அடியொற்றி எழுந்த சாண்டில்யனின் சரித்திர நாவல்கள் அனைத்துமே சாகசக் கதைகள், இலக்கியத்துக்குத் தேவையான நுட்பமும் ஆழமும் அற்றவை. இந்நாவல்களில் கதாபாத்திர உருவாக்கம் மேலோட்டமாகவே அமைந்திருக்கும்; அகவய, புறவய சித்தரிப்புகள் அற்றவை. இந்த சரித்திர நாவல்களுக்குள்ளே ஒரு நவீனக்கதைதான் மறைந்திருக்கும் என்று சுஜாதா குறிப்பிடுகிறார். ஆனாலும் இந்நாவல்கள் அவற்றின் பொழுதுபோக்குத் தன்மைக்காக, வெகுசனதத்தன்மைக்காக அதிகமான ஆரம்பகால வாசகர்களால் விரும்பப்படுகின்றன. பெரும்பாலான சரித்திர நாவல்கள் அரண்மனைகளோடும், அரசர்களின் அந்தப்புரங்களோடும் நின்றுவிடுகின்றன. சரித்திரம் அரசர்களையும், அவர்களின் வாழ்க்கையையும் மட்டும்பற்றியது என்கிற கண்ணோட்டம் மாறிப் போன சூழ்நிலையில் இந்நாவல்களின் இருத்தலே கேள்விக்குறியாகிறது.

தமிழில் வெளியான சரித்திர நாவல்களில் இலக்கியத்தன்மையை அடைய முயன்ற ஆரம்பகால நாவலாக அரு.ராமநாதனின் வீரபாண்டியன் மனைவியைச் சொல்லலாம். ஓரளவுக்குத் தெளிவான கதாபாத்திர உருவாக்கம், அகவய, புறவய சித்தரிப்புகள் என ஓரளவு முழுமைபெற முயன்றது அது.

தமிழில் இலக்கியத்தரம் வாய்ந்த சரித்திர நாவல்களை நான் படித்ததில்லை என்பதை வருத்தத்துடனே ஒப்புக்கொள்கிறேன். தமிழில் இலக்கியத்தரம் வாய்ந்த சரித்திர நாவல்கள் இல்லை என்பது இதன் பொருள் அல்ல. எனது தமிழ் இலக்கிய வாசிப்பு கொஞ்சங்காலமாக அருகி விட்டதே இதன் காரணம். எனவே தமிழின் இலக்கியத்தரம் வாய்ந்த சரித்திர நாவல்களைப் பற்றி என்னால் விவாதிக்க முடியவில்லை.

பொதுவாக, சரித்திர நாவல்கள் எழுதுவதில் இலக்கிய எழுத்தாளர்களுக்குத் தயக்கம் அதிகம். வணிக எழுத்தாளர்கள் தாராளமாக ஏதேனும் ஒரு சரித்திர வாக்கியத்தை வைத்து ஒரு பொழுதுபோக்குக் கதையைப் புனைந்து விட்டுப் போய்விடலாம். ஆனால் இலக்கிய எழுத்தாளர்களால் அது முடியாத விஷயம். இலக்கியத்தன்மையுடன் ஒரு சரித்திர நாவலை எழுத வேண்டுமானால் அதற்கு அதிகமான ஆராய்ச்சி தேவைப்படும். மொழிநடை மூலமாகவும், அக, புற சித்தரிப்புகள் மூலமாகவும் சரித்திரப் பிரக்ஞையை ஏற்படுத்த வேண்டும். இது போன்ற காரணங்கள் தீவிரத்தன்மையுடன் கூடிய சரித்திர நாவல்கள் அதிகமான அளவில் எழுதப்படுவதைத் தடுக்கின்றன. மட்டுமல்லாமல் இத்தகைய இலக்கியத்தன்மையைக் கொண்ட சரித்திர நாவல்களுக்கு வாசகர்கள் கொஞ்சம் குறைவு தான்.

sariththira naavalgal1ஹிலாரி மான்டெலின் உல்ஃப் ஹால் நாவல் தாமஸ் கிராம்வெல்லைக் கதாநாயகனாகக் கொண்டது. (குறிப்பு: பிரிட்டிஷ் சரித்திரத்தில் ஓரளவு பரிச்சயம் உள்ளவர்களுக்கு ஆலிவர் கிராம்வெலின் பெயர் நிச்சயம் தெரிந்திருக்கும். ஆலிவர் கிராம்வெல், தாமஸ் கிராம்வெலின் நேரடி வம்சாவழியினன் அல்ல. தாமஸ் கிராம்வெலின் சகோதரியின் வழி வந்தவன்) கொல்லனின் மகனாய்ப் பிறந்த தாமஸ் கிராம்வெல் பிரிட்டிஷ் அரசில் எப்படி சக்திக்குரியவனாக மாறுகிறான் என்பதை இந்நாவல் பதிவு செய்கிறது. அது வரைக்கும் பிரிட்டிஷ் சரித்திர ஆசிரியர்களாலும், புனைவு எழுத்தாளர்களாலும் வில்லனாகச் சித்தரிக்கப்பட்டு வந்த தாமஸ், இதில் கதாநாயகனாக மாறுகிறான்.

நாவலின் மொழிநடை நிகழ்கால நடையாக உள்ளது. பழைய ஆங்கிலச் சொற்களை ஆசிரியர் உபயோகிக்கவில்லையென்றாலும், மொழிநடை நகரும் விதம் சரித்திரப் பிரக்ஞையை ஏற்படுத்துகிறது. மட்டுமல்லாமல், தாமஸின் சிந்தனையோட்டங்கள் தெளிவாக வர்ணிக்கப்பட்டுள்ளன. அக்காலத்திய வாழ்வியல் சித்தரிப்பு நன்றாக அமைந்துள்ளது. போப்பின் திருச்சபைக்கும், சீர்திருத்தவாதிகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் நாவலில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகின்றன. மதத்துரோகிகளாகக் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள், அக்கால மதப் பழக்க வழக்கங்கள், அரசியல் சூழ்ச்சிகள் என அனைத்தையும் பதிவு செய்கிறது வுல்ஃப் ஹால்.

பிரிட்டிஷ் சரித்திரத்தின் மிகக் கிளர்ச்சிகரமான காலகட்டம் அது, ஏன், ஐரோப்பிய சரித்திரத்திலேயே மிகக் கிளர்ச்சிகரமான காலகட்டம் அது. அதுநாள்வரைக்கும் புனிதமானதும் பிழையற்றதுமாய்க் கருதப்பட்டிருந்த போப்பின் அதிகாரம் சீர்திருத்தவாதிகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டிருந்தது. ஐரோப்பாவின் மாபெரும் அரசியல் சக்தியாய், பொருளாதார சக்தியாய் இருந்த திருச்சபை தனது அரசியல் வலுவை இழக்கத் தொடங்கியது. அரசர்கள் போப்பை மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கினர்.

ஸ்பெயின் இளவரசியான காதரினுடனான தனது திருமணம் செல்லாது என்ற தனது அறிவிப்பை போப் ஏற்க மறுத்ததால் எட்டாம் ஹென்றி கத்தோலிக்க சபையிலிருந்து இங்கிலாந்து பிரிந்து போவதாக அறிவித்தான். கத்தோலிக்க திருச்சபையின் பல சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டன. இத்தகைய கொந்தளிப்பான அரசியல் காலகட்டத்தில் தான் தாமஸின் எழுச்சி நிகழ்ந்தது. போப்பின் இங்கிலாந்துப் பிரதிநிதியான கார்டினல் வோல்ஸியின் பணியாளனும் வழக்கறிஞனுமான தாமஸ், வோல்ஸியின் வீழ்ச்சிக்குப் பிறகு அரசனைச் சார்ந்து படிப்படியாக மேலுயர்ந்து அரசனுக்கு அடுத்த இடத்தை அடைகிறான்.

தாமஸின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை, அரசனின் அந்ததப்புர வாழ்க்கை, பொதுமக்களின் வாழ்க்கை முறை பற்றிய வருணனைகள் எல்லாம் சேர்ந்து நாவலைச் செழுமைப்படுத்துகின்றன. அரசனின் அந்தரங்க வாழ்க்கையைப் பற்றிய விமர்சனம் கூர்மையான சொற்களால் முன்வைக்கப்படுகிறது. அரசனின் தயவைப் பெற, பதவிப் படிநிலையில் உயர என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கும் பிரபுக்களின் வாழ்க்கையும் சித்தரிக்கப்படுகிறது. எளிய பின்புலத்தைக் கொண்ட தாமஸ் பிரபுக்களின் நடுவே நடமாடுவதே ஆரம்பத்தில் சவாலாக இருக்கிறது. இருந்தாலும் தனது திறத்தால் அவர்களை அமைதிப்படுத்தி மேலும் உயர்ந்து கொண்டிருக்கிறான் அவன். சீர்திருத்தத்தின் தீவிர ஆதரவாளனாக அவன் சித்தரிக்கப்படுகிறான். சீர்திருத்தத்துக்கு எதிரிகளாய், போப்பின் ஆதரவாளர்களர் இருக்கும் முக்கியமான மதகுருமார்கள் இருவரை அரசனுக்கு ஆதரவாக மாற்ற அவன் முயற்சியுற்றுத் தோல்வியுறுகிறான். அவவர்களிருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதோடு, தாமஸைப் பற்றிய முதல் நாவல் முடிவுறுகிறது.

பின் குறிப்புகள் : மூன்று பாகங்கள் கொண்டது இந்நாவல் தொடர். முதல் பாகமான வுல்ஃப் ஹாலும் (Wolf Hall), இரண்டாம் பாகமான பிரிங் அப் தி பாடீஸும் (Bring up the bodies) புக்கர் பரிசு பெற்றன. மூன்றாவது பாகம் இன்னும் வெளியாகவில்லை.


ஷைன்சன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வுல்ஃப் ஹால் – ஹிலாரி மான்டெல் மற்றும் சரித்திர நாவல்கள்”

அதிகம் படித்தது