மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 28

கி.ஆறுமுகம்

Sep 27, 2014

bosu1இந்தியாவில், ஆங்கிலேய அரசாங்கம் பல நினைவுச் சின்னங்களை அமைத்திருந்தது. அதனை அகற்றும் போராட்டம் நடந்தது. அதில் குறிப்பிடத்தக்க போராட்டம் என்றால் சென்னையில் இருந்த ஜெனரல் நீல் சிலை அகற்றும் போராட்டம் மற்றும் கல்கத்தாவிலிருந்த ஹால்வெல் சிலை அகற்றும் போராட்டம். 1857ம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் கலகத்தில் சென்னையின் ஆங்கிலேய ராணுவத் தலைவன்தான் ஜெனரல் நீல் என்பவன். இவர் அந்த கலகத்தினை மிகக் கொடுமையான முறையில் அடக்கினான், இவனை நினைவுறுத்தும் வகையில் சென்னையில் மௌண்ட் ரோட்டில் ஆங்கிலேயர்கள் சிலை வைத்தார்கள். அதனை அகற்ற சென்னையில் பெரும் போராட்டம் நடைபெற்று, அதனை அகற்றினார்கள். வங்காளத்தில் 1757 சூன் 23ம் தேதி வங்காளத்தின் கடைசி சுதந்திர மன்னர் சிராஜ் உத்தௌலாவுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் பிளாஸி (plassey) என்ற இடத்தில் போர் நடைபெற்றது. இதில் மன்னர் 146 ஆங்கிலேயர்களை சிறைபிடித்து அவர்களை ஒரு சிறு இருட்டு அறையில் அடைத்து, பின் மறுநாள் அறையைத் திறக்கும் பொழுது 123 பேர் இறந்தனர், மீதி 23 பேர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர். ஆங்கிலேயர்களினால் இச்சம்பவம் இருட்டறை துயரச் சம்பவம் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள 23 பேரில் ஒருவன் தான் ஹால்வெல், அவனை நினைவுறுத்தும் வகையில் லார்டு கர்சன், கல்கத்தா டல்ஹொசியில் ஒரு சிலைவைத்தார். இதனை அகற்றும் போராட்டத்தினை முன்நின்று நடத்தினார் போசு. போராட்டம் தொடங்கும் முன் போசு, தடுப்புச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டார்.

போசு கைதுக்குப் பின் போராட்டம் நிற்கவில்லை. மக்கள் போராட்டம் அதிகமாக நடைபெற்றது. இறுதியில் ஆங்கிலேய அரசே ஹால்வெல் சிலையை அகற்றியது. போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்தவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது. ஆனால் போசை மட்டும் விடுதலை செய்யவில்லை. ஹால்வெல் சிலை அகற்றும் போராட்டத்தின் மூலம் தடுப்புச் சட்டத்தினால் போசு கைது செய்யப்பட்டார் என்றது அரசு. பின் அவரை விடுதலை செய்யவில்லை என்றதும் பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் போசு கைது செய்யப்பட்டுள்ளார் என்று முரண்பாடாக பதிலை தெரிவித்தது. பின் போசின் கைது குறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதினால் ஆங்கிலேய அரசு போசை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் பொதுக்கூட்டத்தில் பேசியது மற்றும் ஆங்கிலேய அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தினைத் தூண்டும் விதம் அவரது பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியதாகவும் தெரிவித்து, இதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார் என்று அறிவித்தது.

bosu3இந்த சூழ்நிலையில் டெல்லியில் காங்கிரசு காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் காந்தியின் அகிம்சை கோரிக்கைகளை காரிய கமிட்டி நிராகரித்தது. பின் ராஜாஜியின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. அந்தத் தீர்மானம் இந்தியாவுக்குப் பூரண சுதந்திரம் பெற உரிமை உண்டு என்பதை பிரிட்டன் ஒப்புக் கொள்ள வேண்டும். அதற்கு இந்தியாவில் ஒரு தற்காலிக தேசிய மந்திரிசபையை அமைக்க வேண்டும். இந்த நிபந்தனையை பிரிட்டன் ஏற்றுக்கொண்டால் பிரிட்டனோடு ஒத்துழைக்க முழு மனத்துடன் காங்கிரசு சம்மதிக்கும் என்றார். இத்தீர்மானத்தை காந்தி கடுமையாக எதிர்த்தார். கான் அப்துல் கபார்கான்னும் எதிர்த்தார், பின் காரிய கமிட்டியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். இவர் ஒருவருக்கு மட்டுமே காந்தியின் தீர்மானத்தில் நம்பிக்கை இருந்தது. பட்டேல் ராஜாஜியின் தீர்மானத்தை ஆதரித்தார். காந்தியும் ராஜாஜியும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி விமர்சித்துக் கொண்டனர்.

பின் நேருவும், பொறுமையாகவே நாம் வெகுகாலம் காத்திருந்து விட்டோம் இனியும் காத்திருப்பது இயலாது. நிலைமையை இப்படியே நீடிக்க விடுவதும் தவறு, எதிர்காலம் எப்படி இருக்கும் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் இந்தியாவின் சுதந்திரம்போராடாமல், துயரமில்லாமல் வராது என்றுதான் தோன்றுகிறது. சுதந்திரத்திற்கு நாம் ஒரு விலையைக் கொடுத்துத்தான் பெற்றாக வெண்டும், சும்மா கிடைத்து விடாது. அப்படி நினைத்தால் ஏமாற நேரிடும். காங்கிரசு தீர்மானத்தை பிரிட்டிஷ்அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நாம் அத்தீர்மானத்தை வாபஸ் வாங்கிட வேண்டும் என்று கூறினார். இதைத்தான் வங்க சிங்கம் போசு, 1938ல் ஹரிபுரா காங்கிரசிலிருந்து வற்புறுத்தி வந்தார்.

போசின் விடுதலைக்கு அவரது சகோதரர் பல நடவடிக்கைகளை எடுத்தார். அவர் அச்சமயத்தில் சட்டசபையில் காங்கிரசு கட்சி தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். ஆனால் காங்கிரசு தலைவராக இருந்த மௌலானா அபுல்கலாம் ஆசாத், சரத்பாபுவை காங்கிரசில் இருந்து வெளியேற்ற நினைத்து காங்கிரசு கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வற்புறுத்தினார். இதைக் கண்ட போசு காங்கிரசு செயல்பாடுகளைக் கண்டித்தார். பின் தன்னை நியாயமற்ற முறையில், வேண்டுமென்றே சூழ்ச்சி செய்து ஆங்கிலேய அரசு சிறையில் வைத்திருக்கிறது, விடுதலை செய்ய மறுக்கிறது. இதற்கு முடிவுகட்ட என்னை மத்திய சட்டசபைக்கு போட்டியிட வேண்டும் என்று சில நண்பர்கள் அறிவுறுத்தினார்கள். எனவே நான் மத்திய சட்டசபைக்கு போட்டியிடுவேன் என்று அறிவித்தார், பின் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் போசு, நான் மத்திய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்தாவது காங்கிரசு உரிய பாடம் கற்றிருக்கும் என்று நம்புகிறேன். காங்கிரசின் அரசியல் பற்றி நினைக்கும் போதெல்லாம், எதிர்காலத்தில் காங்கிரசை இன்னும் கடுமையாக எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். சுதந்திரம் கிடைக்கும் பொழுது, முழு அதிகாரமும் எதிர்கால இந்தியாவை எப்படி உருவாக்க வேண்டும் என்ற எந்த சிந்தனையும் இல்லாத இந்த காங்கிரசுக்காரர்களிடம் கிடைத்தால் நமது இந்தியா என்னவாகும்? இவர்களை எதிர்த்து இப்போதே போராட வேண்டும் என்றார் போசு.

bosu19-2ஆங்கிலேய அரசையும், வங்காள அரசையும் கடுமையாக விமர்சித்தார் போசு. தன்னை சிறையிலேயே அடைத்திருப்பது மிகவும் நியாயமற்ற செயல்தான். ஒரு மத்திய சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை சட்டசபையில் கலந்து கொள்வதற்குக் கூட அனுமதிக்காமல் இவ்வாறு சிறையில் வைத்திருப்பது தவறானது, விடுதலை செய்யவேண்டும் என்றும் கூறினார். பின் நான் என் எதிர்ப்புகளை எல்லா விதத்திலும் தெரியப்படுத்திவிட்டேன் என்னை அரசு விடுதலை செய்வதாக தெரியவில்லை, எனவே எனது இரண்டு தீர்மானம் கொண்ட இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஒன்று அரசாங்கம் இக்கடிதத்தை படித்து பின் குப்பைத் தொட்டியில் போடாமல் அரசாங்கத்தின் கருவூலத்தில் பத்திரமாக வைத்து, பின்வரும் சந்ததியினர் தலைமுறையினர் படிப்பதற்கு பத்திரப்படுத்த வேண்டும். அரசு என்னைக் கண்டு அஞ்சியே தவறான பல குற்றங்களை என்மீது சுமத்தி என்னை விடுதலை செய்யாமல் சிறையில் வைத்துள்ளது இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும். இந்த கேள்வி கடந்த இரண்டு மாத காலமாக என் மனதில் இருந்தது. நான் சூழ்நிலைக்கு அடங்கி நடப்பது அல்லது அநியாயமானதும் அக்கிரமமானதும் சட்ட விரோதமானதுமான இந்த அரசாங்கத்தின் போக்கைக் கண்டிப்பதா?, எதிர்ப்பது என்று துணிந்துவிட்டேன். அஞ்சி நடப்பது மகாபாதகம். என் எதிர்ப்பை பல வழியில் செய்துவிட்டேன் கடைசியாக ஒரே ஆயுதம்தான் உள்ளது அது உண்ணாவிரதம். உண்ணாவிரதம் மேற்கொள்கிறேன், விடுதலை கிடைக்கும் வரை உண்ணாவிரதம். இதைக் குறைத்து மதிப்பிட மாட்டார்கள்; என்று நினைக்கிறேன். இதற்கு உடனடியாக பலன் கிடைக்காது, ஆனால் தியாகம் வீண் போகாது. தியாகத்தாலும் துன்பத்தாலும் ஒரு லட்சியம் புனிதமடையும். இவ்வுலகில் அனைத்தும் அழிவுத் தன்மை கொண்டிருக்கின்றது. ஆனால் மனித லட்சியமும், கனவுகளும் அழியா அமரத்தன்மை கொண்டவை. ஒரு லட்சியத்துக்காக ஒருவன் மடியலாம். அவன் மாண்டபின் அந்த லட்சியம் பலரை பற்றும், நாடு வாழ தனி மனிதர்கள் சாகத்தான் வேண்டும். இன்று இந்தியா வாழ சுதந்திரத்தையும் புகழையும் பெற நான் சாகத்தான் வேண்டும். ஒரு மனிதன் வாழ்ந்தான் ஒரு லட்சியத்துக்காக உயிரை விட்டான் என்பதை விட வேறென்ன பெருமை வேண்டும். தனது ஆத்மா பல ஆயிரம் பேர்களுக்கு உற்சாகத்தைக் கொடுக்கும் என்று எவன் எண்ணுகிறானோ அவனே பாக்கியசாலி, அதுவே பேரின்பம். என் தாய்நாட்டு மக்களுக்கு ஒருவார்த்தை “அடிமையாக வாழ்வதை விட சாபக்கேடு வேறொன்றும் இல்லை, அநீதியையும் அக்கிரமத்தையும் கண்டு பணிவது மகாபாவம்” இதை ஒருபோதும் மறவாதீர்கள். இறவா உயிரைப் பெற விரும்பினால் உள்ள உயிரைத் தியாகம் செய்யுங்கள், அதுதான் இயற்கையின் நிரந்தரச் சட்டம் இதை ஒரு போதும் மறவாதீர்கள். எனது இரண்டு கோரிக்கை இதுதான். நான் அமைதியாக இறப்பதை நீங்கள் தடுக்க முடியாது. எனக்கு வலுக்கட்டாயமாக உணவு அளித்தால் அதனை நானும் என்பலம் உள்ளவரை கட்டாயமாக எதிர்ப்பேன். இந்தக் கடிதத்தைக் கண்டதும் ஆங்கில அரசும், வங்காள அரசும் மிகவும் களங்கியது. ஏனெனில் போசு என்ன சொன்னாரோ அதை செய்வதில் திடமான மனஉறுதி கொண்டவர் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும் பின் அவ்வாறு அவர் உண்ணாவிரதம் இருந்து இறந்து போனால் நாட்டில் மிகப்பெரிய போராட்டம் மக்கள் மத்தியில் ஏற்படும். அதனை அடக்குவது என்பது அவ்வளவு எளிமையான காரியமாகாது எனவே அரசு ஒரு முடிவுக்கு வந்தது. போசை ஜாமீனில் விடுதலை செய்வது என்றும் ஆனால் கல்கத்தா நீதிமன்றத்தில் 1941 ஜனவரி 27ல் அவர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 28”

அதிகம் படித்தது