மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பறை தயாரிப்பு முறையும் அதன் பயன்பாடும்

சித்திர சேனன்

Oct 4, 2014

P1050751பறை-விளக்கம்:

பறை என்ற பெயர்ச்சொல்லுக்கு கூறுதல்,அறிவித்தல்,தெரிவித்தல்,நவிழல்,செப்புதல்,சொல்லுதல்,பறை சாற்றுதல் எனப் பல அர்த்தங்கள் உண்டு. முன்பு நம் மண்ணில் வாழ்ந்த அரச காலத்தில் அரசு எடுக்கும் முக்கியச் செய்திகளை மக்களுக்குச் சொல்வதற்கு முன் “பறை”அல்லது “முரசு”வாசித்த பின்னே அச்செய்தியை அறிவிப்பார்கள். இதை அக்காலத்தில் “பறை சாற்றுதல்”என்ற பெயரில் அழைத்தார்கள்.

பறை- தோற்றம்:

சரி இந்தப்பறை எவ்வாறு தோன்றியது என வரலாற்றைச் சற்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது,ஆதியில் மலைகளில் வசித்த தமிழ்குடிகள் மலைகளில் விளைந்த தேன், கிழங்கு, பழங்களை உட்கொண்டு வந்ததோடு, மான், முயல், ஆடு, மாடு என அசைவ உணவுகளையும் உண்டு வாழ்ந்து வந்தனர்.

மாட்டை அடித்துக் கொன்று அதன் மாமிசத்தை சாப்பிட்டுவிட்டு எஞ்சியிருந்த மாட்டுத்தோலை மரம், செடி, கொடிகளின் மீது வீசி எரிந்து விட்டுச் சென்றனர். இவற்றின் மேல் கிடந்த பச்சைத் தோலானது வெயிலின் தாக்கத்தால் காய்ந்து இறுகியது. இந்தக் காய்ந்த மாட்டுத் தோலின் மேல் காய்ந்த மரச்சுள்ளிகள் ஒடிந்து விழும்போது “டம் டம்” என்ற பெருத்த ஓசையுடன் கூடிய பெரும் சத்தம் எழவே, இச்சத்தம் கேட்டு அருகில் இருந்த பறவை, விலங்கினங்கள் அதிர்ந்து ஓடின.

இந்நிகழ்வைக் கண்ட ஆதி தமிழ்குடிமக்கள், விலங்கிடம் இருந்து தம்மையும், தம் மக்களையும் பாதுகாத்துக் கொள்ள இந்தக் காய்ந்த தோலை எடுத்து,சிறு குச்சியால் தட்டியவாறு தங்களது வாழ்க்கையை பாதுகாப்புடன் வாழத்தொடங்கினர்.

காலப்போக்கில் நாகரீக வளர்ச்சி அடைந்த பின்,அரசகாலத்தில் இதை முரசு, பறை வடிவில் வடிவமைத்து வாசிக்கப் பழகினர். இவ்வாறு இசை வாத்தியங்களை இசைத்து வாழ்பவர்கள் விறலி, விறலியர், பாணன், பாணத்தி என்ற பெயரில் அழைத்தனர். தோல் கருவியில் ஆரம்பித்த தமிழர் இசை பின்பு காற்றுக் கருவி (குழல்,நாயனம்), கம்பிக் கருவி (யாழ்,வீணை, கிடார், வயலின்) எனப் பல்வேறு வடிவில் வளர்ச்சி பெறலாயிற்று.

பறை தயாரிப்பு முறை:

parai2பறை என்ற இசைக்கருவியைத் தயாரிக்க நன்கு முதிர்ந்த எருமை மாட்டுத் தோலே உகந்தது. எருமையைக் கொன்று அதன் எலும்பு,சதைகளை நன்கு நீக்கிய பின் மீதி இருக்கும் காயாத எருமைத் தோலை எடுத்து,தோலைச் சுற்றி இழுத்து இழுத்து ஆணியால் அடிப்பர். ஒரு சதை இல்லாத மாட்டின் தோல் தரையில் கிடப்பது போல் இருக்கும் இதன் தோற்றம். இவ்வாறு ஆணியால் மாட்டுத்தோலின் விளிம்புகளில் அடித்த பின் 2 நாட்கள் சுடும் வெயிலில் காய வைப்பர்.

பின்பு காய்ந்த இந்தத் தோளில் இருக்கும் மாட்டு ரோமங்களை கூறான கத்தி,பிளேடு போன்ற கருவிகளால் நன்கு சுரண்டி மழித்து எடுப்பர். ரோமங்களை நீக்கிய பின் 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட அண்டாவிற்குள் இருக்கும் நீரினுள் 24 மணி நேரம் நன்கு ஊற வைப்பர். ஒரு நாள் நன்கு ஊற வைத்த பின் வெளியே எடுக்கும் போது சற்று நாற்றம் அடித்த நிலையில் இத்தோள் தொள தொளவென்று இருக்கும்.

நன்கு தளர்ந்த நிலையில் இருக்கும் இத்தோலை ஒரு பறை வட்ட வடிவில் எந்த அளவு உள்ளதோ அந்த அளவை கணக்கில் கொண்டு பறை அளவு, வட்ட வட்டமாக அறுத்து எடுப்பர். ஒரு பறை குறைந்தது 15 செ.மீ வட்ட அளவிலும், கூடியது 25செ.மீ வட்ட அளவிலும் இருக்கும். 15 செ.மீ உள்ள பறையை “சாதா கட்டை”எனவும் 25 செ.மீ வட்ட அளவு உள்ள பறை “பாரிக் கட்டை”எனவும் அழைப்பர்.

இவ்வாறு ஒவ்வொரு அளவிலும் உள்ள பறைக்குத் தகுந்தவாறு வட்டவடிவில் மாட்டுத்தோலை அறுப்பர். ஒரு மாட்டுத் தோலில் சாதா கட்டை 4 பறையும்,பாரிக் கட்டை 3 பறையும் செய்ய முடியும். எருமை மாட்டுத் தோல் இல்லாத பட்சத்தில் எருமைக் கன்றுத் தோலையும் பறை செய்யப் பயன்படுத்துவர்.

முதலில் 15 செ.மீ அல்லது 25 செ.மீ அளவுள்ள பறையின் சுற்றுக் கட்டையை நன்கு செதுக்கிய நிலையில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சுற்று வட்டக் கட்டையானது வேம்பு,புளியமரத்து வேர் இவற்றில் செய்த கட்டையாக இருக்க வேண்டும். மற்ற மரத்தில் இந்த சுற்று வட்டக் கட்டையைச் செய்தால் கட்டை நன்கு காய்ந்த பிறகு வெடிப்பு ஏற்பட்டு விடும்.

பின்பு மேற்கூறிய செ.மீ அளவுள்ள கட்டைகளை எருமைத் தோலின் மீது வைத்து,வைக்கப்பட்ட இடத்திலிருந்து 5 செ.மீ அளவு விட்டு எருமைத் தோலை வட்டவடிவில் அறுத்து எடுக்க வேண்டும். இந்த 5 செ.மீ இதர தோலானது பறைக்கட்டையின் விளிம்பில் போர்த்த பயன்படும். பின்பு புளியங்கொட்டையை ஒரு நாள் முழுக்க நீரில் ஊறவைத்து எடுத்த பின் நன்கு ஆட்டுக்கல்லில் நீர் விட்டு கொலகொலவென்று ஆட்ட வேண்டும். இவ்வாறு ஆட்டும் போது அது சிவப்பு நிறத்தில பசை போன்று இருக்கும். இந்த புளியங்கொட்டை பசையை ஒரு புறம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது வழுவழுப்பான தரையில் அறுக்கப்பட்ட மாட்டுத்தோலை வட்ட வடிமாக விரிக்க வேண்டும். பின் ஏற்கனவே அறுத்து வைக்கப்பட்டுள்ள பறையின் சுற்று வட்டக் கட்டையின் உட்புறம் தவிர்த்து வெளிப்புறம் அனைத்திலும் இந்த புளியம்பழக்கொட்டை பசையை நன்கு தடவ வேண்டும். இவ்வாறு தடவிய பின் விரித்து வைக்கப்பட்ட தோலின் மையப் பகுதியில் இந்த பசை தடவிய வட்டக் கட்டையை வைக்க வேண்டும்.

அவ்வாறு வைத்தபின் 4 செ.மீ வட்ட அளவுள்ள இரும்புக் கம்பியை இந்த வட்ட பலகையின் நடுவில் வைக்க வேண்டும். பின் மூட்டை தைக்கும் கோனூசியினுள் ஒரு விரல் தடிமன் அளவுள்ள நூல் கயிற்றை விட்டு விளிம்பில் உள்ள தோலில் ஒரு குத்து குத்தி நடுவில் வைக்கப்பட்ட வட்ட அளவுள்ள இரும்புக் கம்பியின் அடியில் விட்டு மேல்புறத்தில் இழுக்க வேண்டும். இந்த நிலையில் வட்டமாக இருக்கும் தோலின் எல்லா விளிம்பு பக்கத்திலும் குத்தி எடுத்து நடுவில் உள்ள வட்ட அளவுள்ள கம்பியினுள் விட்டு எடுத்த பின்,இந்த கம்பியின் வெளியே உள்ள நூல் கயிற்றை எல்லாம் மொத்தமாக ஒருவர் கையில் பிடித்து இழுக்க,மற்றொருவர் தோலை விளிம்பு நிலையில் நன்கு அமுக்கி விட வேண்டும்.

இப்போது வட்டக் கட்டையுடன்,தோல் நன்கு ஒட்டிக் கொள்ளும். பின்பு பறையில் உள் வட்டத்தில் இழுத்த நிலையில் மீதம் இருக்கும் தோலை அறுத்த பின் காயாத நிலையில் பறை தயார் ஆகிவிடும். இப்பச்சை நிலையில் உள்ள பறையை சுடும் வெயிலில் 2 நாட்கள் நன்கு காயவைத்த பின் நாம் வாசிப்பதற்கு பறை தயாராகி விடும். நாம் வாசிப்பதற்கு முன் 15 நிமிடம் தீயில் பறையை நன்கு வாட்டிய பின் உடனே அடிக்க கூடாது. 5 நிமிடம் அந்த தோல் சூடு கொஞ்சம் ஆறிய பிறகு வாசித்தால் காற்று மண்டலம் அதிரும்.

இவ்வாறு பறையை தீயில் வாட்டும் போது முதலில் பறையின் சுற்று வட்டக்கட்டை நன்கு சூடேறும் அளவிற்கு தீயில் வாட்ட வேண்டும். அவ்வாறு வாட்டியபின் வாசித்தால் 2 மணி நேரத்திற்கு நன்கு ஒலி எழுப்பும். இப்பறையை வாசிக்க இடது கையில் சிம்புக்குச்சியும்,வலது கையில் அடிக்குச்சியும் பயன்படுத்த வேண்டும். சிம்புக்குச்சி என்பது மூங்கில் மரத்தின் மூலம் செய்யப்பட்டது. அடிக்குச்சி என்பது வேலிகாத்தான் மரம், புளியமரம், மஞ்சள் நெத்திமரம் மூலம் செய்யப்பட்டது.

பறை பயன்பாடு:

parai1அன்று பறை என்ற பெயரில் அழைத்த இந்த இசைக்கருவியை தற்போது ‘தப்பு’என்ற பெயரிலும் அழைக்கின்றனர். அதாவது பறையை வாசிக்கும் பொழுது எழும் ஒலி தப் தப் என கேட்க, இந்த ஒலியின் பேராலையே இதனை தப்பு என அழைக்கின்றனர்.

சென்னையில் இதற்கு “சாவு மோளம்”என்று பெயர் வைத்துள்ளனர். சென்னை மற்றும் தமிழகமெங்கும் இவ்விசையை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே பெரும்பாலும் வாசிக்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் அவர்கள் மட்டுமல்லாது மற்ற அனைத்துப் பிரிவினரும் இந்த பறையை வாசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆரோக்கியமான கலை வளர்ச்சியின் தொடக்கமாக உள்ளது.

இப்பறையை கோவில் திருவிழாக்கள், அரசு விழாக்கள், திருமணம், காதணி விழா, பூப்புனித நன்நீராட்டு விழா,புதுமனை புகுவிழா, மார்க்க கல்யாணம், இறப்பு என அனைத்து நிகழ்வுகளுக்கு வாசித்து வருகின்றனர். இதில் திருவிழாவிற்கு என்று பறையில் தனி வாசிப்பு உண்டு, மற்ற சுபயோக விழாக்களுக்கு தனி வாசிப்பு உண்டு, இறப்பிற்கு என தனி வாசிப்பு உண்டு. இருந்தாலும் தற்போது எல்லா வாசிப்பையும் கலந்து கட்;டி அடித்து வருகின்றனர் தற்போதைய தலைமுறையினர்.

இந்தப் பறையில் மொத்தம் 42 தாள வகைகளும்,ஆடல் வகைகளும் உண்டு. ஜஞ்சனா ஜஜன்னா, தகிட தகிட போன்ற தாள வகையில் இங்கே வாசிக்கப்படுகிறது. பறையை வாசிப்பது ஒரு தியானம் போல. தாள வகைகளை உள்வாங்கி சிந்தையை ஒரு முகப்படுத்தினால் மட்டுமே கையில் வாசிக்க முடியும். இயற்கையில் இசை மீது ஆர்வம் உள்ளவர்கள் குறுகிய நாளில் இதைக் கற்றுக் கொள்ள முடியும். இதைக் கற்றலின் கால அளவு என்பது ஆர்வத்தைப் பொறுத்தேயன்றி, நாட்களைப் பொறுத்ததல்ல.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பறை தயாரிப்பு முறையும் அதன் பயன்பாடும்”

அதிகம் படித்தது