மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 29

கி.ஆறுமுகம்

Oct 4, 2014

subashu1போசின் உண்ணாவிரதப் போராட்டத்தினைக் கண்டு ஆங்கிலேய அரசு அவரை விடுதலை செய்தது. போசு விடுதலையாகி வீடு திரும்பிய பிறகு இந்தியாவின் விடுதலையைப் பற்றி சிந்திக்க ஆரம்பித்தார். அடுத்தகட்டப் போராட்டத்தினை எப்படி ஆரம்பிப்பது, இந்தியாவின் சுதந்திரம் எளிதாக கிடைத்துவிடாது, காந்தியோ தனது அகிம்சை கொள்கையை பிடித்துக் கொண்டிருக்கிறார். இந்த அகிம்சையின் மூலம் எதையும் சாதிக்க முடியாது. மிகப்பெரிய போராட்டத்தினைத் தொடங்க வேண்டுமெனில் இந்தியாவில் காந்தியையும், காந்தியவாதிகளையும் புறக்கணித்து மக்களை ஒன்று திரட்டும் ஆயுதப் போராட்டம், அன்னிய நாடுகளின் உதவி போன்றவற்றை செயல்படுத்துவது கடினமான காரியம். எனவே இந்தியாவை விட்டு வெளியே செல்லுவதற்கு இதுதான் சரியான நேரம் என்று சிந்தித்துக் கொண்டு இருந்தார். போசு முன்பு ஒரு சமயம் உடல்நலக் குறைவுடன் 1933- வியன்னாவில் இருந்த போது வித்தல்பாய் பட்டேலோடு தங்கி சிகிச்சை பெற்று வந்தார் அங்கு நடந்த ஒரு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜெர்மனியிலிருந்து ஜெர்மன் சுதந்திர லீக் சங்கத்தின் தலைவருமான இந்திய புரட்சி தமிழ்வீரனை சந்தித்தார் போசு. அவர்தான் செண்பகராமன். இந்த சந்திப்பின்போது போசிடம் இந்திய விடுதலையை எளிதாக அடையமுடியாது, இந்தியாவிற்காக அந்நிய நாடுகளின் உதவியைப் பெற்றே ஆக வேண்டும். இந்தியாவிற்கு வெளியே உள்ள இந்தியர்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, ஒரு இந்திய ராணுவத்தை அமைக்க வேண்டும். அதற்கு பொருள் உதவியும், பண உதவியும், ஆயுத உதவியையும் பெற அந்நிய நாடுகளின் உதவிபெற்று பிரிட்டனை போரின் முனையில் வெற்றி பெற்று இந்தியா விடுதலை அடைய வேண்டும் என்று உணர்வுபூர்வமாக கூறினார். ஆம் தமிழன் எப்போதும் எவரையும் அடிமைப்படுத்தியதில்லை, எதிரியையும் போரில் சந்தித்துத்தான் வீரமரணம் அடைய வேண்டும் என்று நினைத்தவன் தமிழன் என்னும் தன்மானத்தை இழக்காதவன் தமிழன். அதனால் செண்பகராமனின் வார்த்தையில் உணர்ச்சி இருப்பதில் வியப்பேதும் கொள்ள வேண்டியதே இல்லை. இது தான் தமிழன். செண்பகராமன் முதல் உலகப்போரில் ஜெர்மனியின் எம்டன் என்ற போர்கப்பலில் அதிகாரியாக இருந்து சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் மீது குண்டுமழை பொழிந்தது மற்றும் உயர்நீதிமன்றத்தின் மீது எம்டன் 1914 செப்டம்பர் 22-ம் தேதி குண்டு வீசியது. இது முடிந்து 100 ஆண்டுகள் ஆகிறது. இதனை இன்று உயர்நீதிமன்றம் சென்றாலும் அங்குள்ள கல்வெட்டின் மூலம் நாம் அறியலாம். போசு ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் இதனை எல்லாம் நினைவுகூர்ந்து பின் இதுதான் சரியான நேரம். இரண்டாம் உலகப்போர் நடைபெறும் இந்த சூழ்நிலையை சரியாகப் பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற சரியான சந்தர்ப்பம் முதல் உலகப்போரில் கிடைத்தது, அதை தட்டிக் கழித்தவர் காந்தி. இப்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற சூழ்நிலை வந்திருக்கிறது. இதனை தவறவிட்டால் மீண்டும் எப்போது இதுபோன்ற ஒரு அருமையான தருணம் இந்திய விடுதலை பெற அமையும் என்பது தெரியாது. எனவே இதுவே சரியான நேரம் என்று சிந்தித்தார்.

bosu19-2போசு 1933ல் வியன்னாவில் இருந்த போது மற்றொரு சம்பவமும் நடந்தது. அது, வல்லபாய் பட்டேலின் சகோதரர் வித்தல்பாய் பட்டேல் போசின் விடுதலை உணர்வைக் கண்டு தனது ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து முழுவதும் போசுக்கு உயில் எழுதிவைத்தார். இதனை வல்லபாய் பட்டேல் அறிந்ததும், போசின் மீது கோபம் ஏற்பட்டது. பின் சொத்தை மீட்பதற்கு ஒரு கட்டபஞ்சாயத்தும் நடந்தது. அந்த கட்டப்பஞ்சாயத்துத் தலைவர் யாராக இருந்திருப்பார் என்று உங்களால் கண்டிப்பாக சரியாக சிந்திக்கமுடியும் என்று எண்ணுகிறேன். வேறுயார் அது காந்திதான். இதிலிருந்தே தெளிவாக தெரியவில்லை, காங்கிரசில் எப்படிப்பட்ட தலைவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று. ஊருக்குத்தான் உபதேசம். தனக்கும், தனது குடும்பத்துக்கும், குடும்ப நபர்களுக்கும் அது இல்லை. அடுத்தவன் சொத்தை விடுதலை போராட்டத்திற்குக் கொடுக்க வேண்டும். தனது சொத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தவர்கள் தான் காங்கிரசுக்காரர்கள். காங்கிரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஜமீன்தார் முறை ஒழிப்பு, சொத்துவரம்பு என்ற சட்டத்தினை எல்லாம் செய்தார்களே. நேரு குடும்பத்தின் சொத்து என்ன ஆனது, அதற்கு வரம்பு ஏற்பட்டதா, அவரும் பெரிய ஜமீன்தாரிய ராஜபரம்பரை என்றால் அவர் குடும்பத்திற்கு இந்த சட்டங்களும் திட்டங்களும் எங்கு போனது. இதனை எல்லாம் நாம் சிந்தித்து இருக்கிறோமா? இதனை சரியாகப் புரிந்து செயல்படுத்திய ஒரே நபர் தற்போதைய தி.மு.க. தலைவர் மட்டுமே. அதனால் தான் 1974ல் கச்சத்தீவை விட்டு கொடுத்ததிலிருந்து இன்று வரை காங்கிரசுடன் கொண்டான்-கொடுத்தான் என்று இனம் கண்டு நட்பு கொண்டுள்ளது. சரி அதிகம் வரலாற்றை விட்டு செல்ல வேண்டாம். போசுக்கு வருவோம்.

போசு தப்பி செல்ல திட்டம் தீட்டத் தொடங்கியதும் போசின் நண்பர் சத்யரஞ்சன் பட்சி என்பவர் போசு சற்றும் எதிர்பாராத ஒரு பெரிய உதவியை அவருக்குச் செய்தார். அது, போசைப் பற்றி ஆங்கிலேயர்கள் சேகரித்து வைத்த அத்தனை ஆவணங்களையும் சிறு சிறு ஆவணங்களாக போசிடம் கொண்டு வந்து கொடுத்தார். அதில் சில ஆவணங்களை படிக்கும் போது போசு தன்னையும் அறியாமல் சிரிப்பார், சிலவற்றைப் படிக்கும் போது கோபத்தின் உச்சிக்குப் போய்விடுவார். அனைத்தையும் படித்த பின் போசுக்கு தெளிவாகப் புரிந்து விட்டது. வெள்ளையர்கள் தன்னை எவ்வாறு கண்காணிக்கிறார்கள், எங்கு எப்படி மாறுவேடத்தில் பின் தொடர்கிறார்கள், தன்னை யார் காட்டி கொடுக்கிறார்கள், தன்னுடன் நெருங்கி பழகிக்கொண்டே யாரெல்லாம் தன்னை காட்டி கொடுக்கிறார்கள் என்று அனைத்தையும் அவர் தெரிந்து கொண்டார். ஆவணங்களைப் படித்து முடிப்பதற்கு 7 நாள்கள் ஆனது. போசு வீட்டில் தனியாக தியானம் செய்யப் போவதாகவும், தம்மை எவரும் தொந்தரவு தரவேண்டாம், திரை ஏற்படுத்தி திரை மறைவில் உணவு தண்ணீர் வைக்கவும், தான் உண்டபின்பு அதே இடத்தில் பாத்திரங்களை வைத்தவுடன் திரும்பி எடுத்து செல்ல வேண்டும். நான் திரை மறைவில் என்ன செய்கிறேன் என்று எவரும் பார்க்க வேண்டாம் என்று வீட்டாரிடம் சொல்லியபிறகு தியானத்தில் இருப்பதாக ஏற்பாடு செய்யப்பட்டது.

subashu2இதுபோன்றே வெளியே பொதுமக்களுக்கும் குடும்பத்தினர் மூலம் தெரியவந்தது. ஆனால் போசின் தப்பிச் செல்லும் திட்டம் முழுவதுமாக அவரது சகோதரர் சரத்சந்திரபோசு மற்றும் அவரது மகன் சிசிர் போசுக்கு நன்றாகத் தெரியும். போசின் திட்டம் கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக சரியாக சிந்தித்து வெளியே எவரும் அறியாதவகையில் பாதுகாக்கப்பட்டது. போசு சனவரி 26 1941 கல்கத்தா நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற காரணத்தினால் சனவரி 25, 1941 அன்று போசு காணாமல் போய்விட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் வெளியேறும் முன்பே தான் எந்த வழியில் வெளியேற வேண்டும் என்று திட்டம் தீட்டி அத்திட்டத்தில் எவரெல்லாம் சரியாக தனக்கு உதவ முடியும் என்று அவர்களை தேர்ந்தெடுத்து அவர்களிடம் முன்பே எந்த நேரத்தில் எந்த இடத்தில் நான் எந்த தோற்றத்தில் இருப்பேன் இதுவரை என்னை எவரும் அறியாவண்ணம் தப்பிக்க உதவ வேண்டும் என்ற திட்டத்தினை செயல்படுத்தி இருந்தார்.

போசு அவரின் உபயோகப் பொருட்கள் எல்லாம் சிறிதுசிறிதாக ஒன்று இரண்டு பொருட்களாக இடம் மாற்றப்பட்டது. அவருக்குத் தேவையான மாறுவேடத் துணிகள், பொருள்கள் சேகரிக்கப்பட்டது. தான் பெஷாவர் நகரம் வந்ததும் பெஷாவர் பகுதி பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் மியான் அக்பர்ஷாவந்து அழைத்துச் செல்வதென்று ஏற்பாடுகள் 1940 டிசம்பரிலும், 1941 சனவரி முதல் வாரத்திலும் மியான் அக்பர்ஷாபோசை சந்திக்கும் போதே தெரிவித்திருந்தார் போசு. கல்கத்தாவில் எல்ஜின்ரோடு 38ம் எண்ணில் உள்ள தம் வீட்டின் பின்புறம் சனவரி 17, 1941 இரவு ஒன்பது மணிக்கு சிசிர் காரோடு வந்தார். வாண்டரர் என்று பெயரிடப்பட்ட ஜெர்மானிய கார் அது. போசு ஒரு பதான் முஸ்லீமைப் போல உடை அணிந்து வெளியேவந்தார். கார் புறப்பட்டது வழக்கமாக செல்லும் பாதையைத் தவிர்த்து மாற்றுப் பாதையில் கார் சென்றது போசு எவருடனும் பேசுவதும் தொடர்பும் இன்றி வீட்டில் தனியாக தியானத்தில் உள்ளார் என்று வெளியே தெரிந்தாலும் வெள்ளையர்கள் அவரின் வீட்டினை கண்காணித்துக் கொண்டுதான் இருந்தனர். எனவேதான் மாற்றுப்பாதையில் கார் வேகமாகச் சென்றது.

கிராண்ட் டிரங்க் சாலையில் அசன்சோல் என்னும் பகுதியில் காரின் எரிபொருள் நிரப்பப்பட்டு காலையில் பராரி என்ற ஊரை அடைந்தது. அங்கு போசின் சகோதரர் சரத்சந்திரபோசு இவரின் மூத்த மகன் அசோக்நாத் போசு இருந்தார். தன் பெயர் ஜியாவுதீன், ஒரு காப்பீட்டுத் தொழில் செய்பவர் என்று அங்கு வீட்டில் இருந்தவர்கள் மற்றும் அசோக்நாத் போசு உறவினர்களிடம் தெரியப்படுத்திக்கொண்டு பகல் முழுவதும் அங்கு இருந்தார் போசு. பின் இரவு தொடங்கியதும் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வெளியே சென்று குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்தார். பின் சிசர் போசு, அசோக்நாத் போசு காரில் வந்து போசை அழைத்துக் கொண்டு கோமோ என்ற இரயில் நிலையத்தை நோக்கி பயணம் தொடங்கினர். கோமோவை அடைந்து அங்கிருந்து டெல்லிக்கு இரயில் பயணம் தொடங்கியது. கோமோவில் இருந்து போசு தனியாக பயணம் தொடங்கினார். டெல்லியில் பெஷாவர் செல்லும் இரயிலைப் பிடித்து சனவரி 19ல் பெஷாவர் அடைந்து அங்கிருந்து தனியாக நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவர் அருகில் ஒரு உருவம் வந்தது வாருங்கள் செல்லலாம் என்றது. அது, பெஷாவர் பகுதி பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் அக்பர்ஷா.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 29”

அதிகம் படித்தது