மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 32

கி.ஆறுமுகம்

Oct 25, 2014

subash1போசு தனது சுதந்திர இந்திய மையத்திற்குத் தேவையான ஆட்களை திரட்டும் பணியில் தீவிரமாக செயல்பட்டார். பின் மீண்டும் ஓர் அறிக்கையை ஜெர்மானிய அரசுக்கு அனுப்பினார். அதில் தான் முதல் அறிக்கையில் தெரிவித்த கருத்துக்களை மீண்டும் ஒரு முறை தெளிவாக, மிக அழுத்தமாக தெரிவித்திருந்தார். போசின் வேலைகள் தீவிரமாக செயல்பட்டபோதும் ஜெர்மன் அரசு போசின் வேகத்திற்கு ஈடுகொடுக்காமல் ஆமை வேகத்தில் செயல்பட்டது. இந்த செயல்பாடுகளைக் கண்டு போசு சற்று எரிச்சலும் அடைந்தார். ஆனால் போசின் அலுவலகத்திற்கும், சுதந்திர இந்திய மையத்திற்கும் தேவையான பணம் ஜெர்மனியிடம் இருந்து வந்து கொண்டிருந்தது. போசு கேட்டுக்கொண்டது போன்று கடனாக பணம் வந்தது. போசு ஜெர்மன் அயல்துறை அமைச்சர் ரிப்பன் டிராப்பைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க விரும்பினார். அதன்படி அவரை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதனை போசு தனக்கு இதுவரை ஜெர்மன் அரசு செய்துள்ள உதவிக்கு நன்றி தெரிவிக்க பயன்படுத்திக் கொண்டு, பின் போரில் ஜெர்மனின் நிலை என்ன என்பதையும் பிறகு இந்தியாவின் சுதந்திரம் என்பதை ஜெர்மன் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று வான் ரிப்பன் டிராப்பிடம் வலியுறுத்தினார்.

subash2இதுதவிர பிரிட்டிசு ஆதிக்கத்தை எதிர்த்துக் கிளர்ந்தெழும் இந்தியாவின் அனைத்து முயற்சிகளும் தோல்வியைத்தான் தழுவும் என்றும், பிரிட்டனைக் காட்டிலும் இராணுவ ரீதியில்பலம் வாய்ந்த இன்னொரு நாடு, பிரிட்டனைத் தோற்கடிக்கும் போதுதான் இந்தியா சுதந்திரம் பெறுவது சாத்தியம் என்றும், அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் பலம் வாய்ந்த ஒரு நாட்டை (இங்கிலாந்தை) இவ்விரண்டு துறைகளிலும் மிகவும் பலவீனமாக இருக்கின்ற ஒரு நாடு இந்தியா, மிஞ்சவோ தோற்கடிக்கவோ முடியாது என்றும் ஹிட்லர் தன்னுடைய ‘மெயின் கேம்ப்’ என்ற நூலில் எழுதியிருக்கும் பகுதியை நீக்கிவிட வேண்டும் என்று ஹிட்லரிடம் கூறும்படியும் ரிப்பன் டிராப்பிடம் தெரிவித்தார் போசு. இந்த சந்திப்பிற்குப் பிறகு ஜெர்மன் அயல்துறை அமைச்சகத்தில் இருந்தும், ஜெர்மன் இராணுவத்தலைமையகத்திலிருந்தும் ஓர் உறுதிமொழி அளிக்கப்பட்டது. அது அவர் திட்டங்களுக்குத் தேவையான வேலை ஆட்கள் மற்றும் தொழில் நுட்ப உதவியும் இந்த இரு அமைப்புகளில் இருந்து கிடைக்கும் என்று இதன் மூலம் இந்திய செயற்குழுவிற்கு உதவ இன்னொரு அலுவலகமும் உருவாக்கப்பட்டது.

சுதந்திர இந்திய மையத்திற்கு அயல்நாட்டுத் தூதரக தகுதி வழங்கப்பட்டது. அதற்காக அயல்நாட்டுத் தூதரகங்கள் இருந்த இடத்தில் பெரிய மாளிகையும் வழங்கப்பட்டது. அதன் ஊழியர்கள் அனைவரும் ஓர் அயல்நாட்டுத் தூதரக அதிகாரிகளுக்கு ஒப்பாக மதிக்கப்பட்டனர். போசுக்கும் ஒரு பெரிய மாளிகையை வழங்கியது. அதிலிருந்து போசு தனது அடுத்தகட்ட திட்டங்களையும், சுதந்திர இந்திய மையம் செயல்பட வேண்டிய வேலைகளையும் அதன் ஊழியர்கள் ஓர் தூதரக அதிகாரிகள் போன்று செயல்பட அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பயிற்சியை அளிக்கவும் உரிய அமைச்சரகங்களைக் கேட்டுக்கொண்டார். இவ்வாறு இதில் பயிற்சி பெற்ற இந்தியர்கள் அனைவரும் பிற்காலத்தில் போசு அமைத்த தற்காலிக சுதந்திர இந்திய அரசில் பெரிதும் போசுக்கு உதவியாக இருந்தார்கள்.

subash3போசு ஜெர்மனியை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்தாலும் அதன் அருகில் உள்ள நாடுகளில் சுற்றுப் பயணமும் நடத்தி, தீவிரமாக செயல்பட்டார். அங்கு சென்று அங்கிருந்த இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி இந்திய விடுதலை உணர்வு அவர்களுக்கு வரும் விதத்தில் உரையாற்றி இந்திய இராணுவத்திற்கும், சுதந்திர இந்திய மையத்தின் வேலைகளுக்கு ஆட்கள் திரட்டுவதிலும் பெரும் முயற்சி கொண்டார். ஐரோப்பாவில் பல இடங்களில் இருந்த போர் கைதிகளான இந்தியர்களையும் இந்திய இராணுவத்தில் சேர்ந்திட பெறும் முயற்சி செய்தார். இவ்வாறு இந்திய வீரர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து இந்திய இராணுவ முகாம் ஒன்றை பிராண்டன்பர்க் என்ற இடத்தில் உருவாக்கி அங்கு அடிக்கடி சென்று இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரர்களைக் கண்டு அவர்களுக்கு ஓர் தீவிரமான மன உற்சாகத்தையும் வழங்கினார் போசு. இந்த செயல்பாடுகள் அனைத்தும் சுதந்திர இந்திய மையத்தின் மூலமாக செயல்பட்டு வந்தது. இந்த சுதந்திர இந்திய மையத்தின் மூலம் ‘ஆஸாத் ஹிந்த்’ என்ற வானொலி நிலையம் அமைக்கப்பட்டது. பின் பல அலைவரிசைகளின் வானொலி அதிகரிக்கப்பட்டது. இந்தியாவின் தூதரகங்கள் மற்றும் தூதரக அதிகாரிகளும் பிரான்ஸ், பெல்ஜியம், ஹாலந்து, ஹங்கேரி போன்ற நாடுகளிலும் அமைக்கப்பட்டது. ‘ஆஸாத் ஹிந்த்’ என்ற பத்திரிகை ஒன்றை தொடங்கி அதில் இந்திய விடுதலையைப் பற்றியும் விரிவான பல கட்டுரைகள் வெளிவந்தன. பெர்லினில் இருந்த சுதந்திர இந்திய மையம், இந்தியநாடு விடுதலையடைந்த பின்னர் செய்யப்பட வேண்டிய சமூக பொருளாதாரப் பிரச்சனைகளிலும் கவனம் செலுத்தி வந்தது. மற்றும் ஜெர்மனில் நடைபெற்று வந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச நிகழ்ச்சிகள் மற்றும் நாடுகளிலும் சுதந்தர இந்திய மையம் பங்கு கொண்டது. ஆஸாத் ஹிந்த் அமைப்புக்கு தனி கொடி, சின்னம், தேசிய கீதம் அனைத்தும் உருவாக்கப்பட்டது.

subash4இந்த ஆசாத் ஹிந்த் தேசிய கொடியானது, காங்கிரசின் மூவண்ணங்களையும் நடுவில் பாயும் புலியும் கொண்டு அமைந்தது. இந்த புலி சின்னத்தை போசு தேர்ந்தெடுத்ததிற்குக் காரணம் வெள்ளையனை புறமுதுகிட்டு ஓட விரட்டிய மைசூர் மாவீரன் திப்பு சுல்தான். திப்பு சுல்தான் வெள்ளையர்களுடன் பல போர்களில் வெற்றிபெற்றார். அவரின் இராணுவத்தின் கொடியில் இருந்தது புலி சின்னம். 1799ல் திப்பு சுல்தான், பிரிட்டனின் இராணுவத்திற்கு இணையாக தனது இராணுவம் பலம் பெறுவதற்கு பல வெளிநாடுகளில் தன் இராணுவ தூதுவர்களை அனுப்பி தான் தொடங்கும் மிகப்பெரிய இராணுவத் தொழிற்சாலைக்குத் தேவையான தொழில் நுட்ப உதவியை பெற பல இராணுவத்திட்டத்தினை செயல்படுத்தியவர். இன்று நமக்கு அறிந்த ராக்கெட் ராஞ்ச்சர் என்றதையும் உலகில் முதன் முதலில் உருவாக்கி தனது இராணுவத்தில் செயல்படுத்தி வெள்ளையர்களின் இராணுவத்தினை சிதறச் செய்தவர் திப்பு சுல்தான். இவரின் இந்த ராக்கெட் ராஞ்ச்சர் கண்டுபிடிப்பை சிறப்பிக்கும் விதத்தில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் திப்பு சுல்தான் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் கூட திப்பு சுல்தானின் வீரம் மறைக்கப்பட்டுள்ளது. விடுதலை பெற்று ஆட்சி செலுத்திய காங்கிரசு மற்றும் அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவர்களும் ஓர் இந்தியனின் வரலாற்றை நமக்கு சரியாக தெரியப்படுத்த தவறியவர்கள். நமது அரசியல்வாதிகள் இது போன்று மாவீரனை நினைவுறுத்தும் விதத்தில்தான் போசு தனது கொடிக்கு புலி சின்னத்தை தேர்ந்தெடுத்தார். இன்று நாம் அனைவரும் போற்றும் நமது தேசிய கீதம் ரவீந்திரநாத் தாகூரின் ‘ஜனகண மன’ பாடலை முதன் முதலில் தேர்வு செய்து அறிவித்தது போசுதான். இதன் பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்தது. நேருவின் சுதந்திர அரசும் இந்த பாடலையே நாட்டின் தேசிய கீதமாக அறிவித்தது.

subash5போசு இராணுவத்திற்குத் தேவையான ஆட்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் பெற்றுக் கொண்டிருந்தார். அவர் சேர்த்த ஆட்களுக்கு இராணுவ சீருடை வழங்கப்பட்டது. அதில் பாயும் புலி சின்னம் இடம் பெற்றிருந்தது. அவர்களுக்கு சிறந்த இராணுவ பயிற்சி வழங்கப்பட்டது. ஆஸாத் ஹிந்த் மற்றும் ஆஸாத் ஹிந்த் வானொலி போன்றவற்றில் சேர்ந்தவர்கள் ஐரோப்பாவில் கல்வி கற்பிப்பதற்காக இந்தியாவிலிருந்து சென்ற பல இளைஞர்கள் இதில் சேர்ந்து தம் தாயகத்தின் விடுதலைக்காகப் போராட போசுடன் இணைந்தனர். போசின் இந்த செயல்திட்டங்கள் அனைத்தும் போசு தொடங்கும் முன், பல ஆண்டுகளுக்கு முன் போசு நினைத்த இராணுவப் போராட்டத்தினை செயல்படுத்த நினைத்து அதற்குத் தேவையான பல முன் ஏற்பாடுகளை தயார்நிலையில் வைத்து செயல்படுத்தியிருந்தவர் ஒரு தமிழன். இந்தத் தமிழன் செயல் திட்டத்தினையே போசு பிற்காலத்தில் வழிநடத்தினார். அவர்தான் “ஜெய்ஹிந்த்” செண்பகராமன். முதன்முதலில் “ஜெய்ஹிந்த்” என்ற வார்த்தையை செண்பகராமன்தான் உருவாக்கினார். “ஜெய்ஹிந்த்” என்ற வார்த்தையை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் போசு. செண்பகராமன் முதல் உலகப்போரின் போது அந்த போர் சூழலை பயன்படுத்தி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை ஒன்று இணைத்து இராணுவத்தை அமைத்து பிரிட்டனை எதிர்த்து போராடி விடுதலை பெற எண்ணியவர். இந்தியாவில் வெள்ளையர்களின் அடக்குமுறையை எதிர்த்து வெள்ளை அதிகாரியை சுட்டுக்கொன்று, அதன் மூலம் தண்டனை பெற்று பின் ஐரோப்பாவிற்கு தப்பிச் சென்று, அங்கு இருந்த பல இந்தியர்களுக்கு விடுதலை உணர்வை பெறச் செய்து இராணுவத்தையும் உருவாக்கினார். முதல் உலகப் போரின் பிரிட்டன் இராணுவத்தில் பணி புரிந்த இந்தியர்கள் பலர் ஜெர்மன் மற்றும் பல நாடுகளில் கைதிகளாக இருந்தனர். அவர்களை ஜெர்மன் அதிபரான கெய்சரின் நம்பிக்கைக்குரியவராகி அவர்கள் விடுதலைப் பெற உதவி, அவர்களைக் கொண்டு இராணுவத்தையும் அமைத்து பல நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து இந்திய விடுதலைக்கு பிரச்சாரம் செய்தவர். பின் ‘புரோ இந்தியா’ என்ற பெயரில் பத்திரிகை ஒன்றையும் ஆங்கிலம் அல்லாது பிற மொழிகளிலும் பத்திரிகை நடத்தியவர். போசின் சிந்தனைக்கு முன்னோடி ஒரு தமிழன் செண்பகராமன். தமிழன் பாதையில் பல தமிழரின் உழைப்பின் அடையாளம் போசு.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 32”

அதிகம் படித்தது