மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஒரு சிலர் மட்டும் அதிகநாட்கள் உயிர் வாழக் காரணம் என்ன ?

தேமொழி

Nov 15, 2014

athiga naatkal7ஒரு சிலரால் மட்டும் எவ்வாறு அதிகநாட்கள் உயிர்வாழ முடிகிறது என்பது பற்றி அறிந்து கொள்ள பலருக்கும் ஆர்வமுண்டு. சரிவிகித உணவும், சராசரி உடற்பயிற்சியும் ஆயுளை நீட்டிக்கும் என்பது பெரும்பாலும் மருத்துவ அடிப்படையில் உண்மை என்றாலும், அவற்றைக் கடைபிடிக்காத ஒரு சிலரும் நீண்டநாட்கள் வாழ்வது கண்கூடு. இதற்கான காரணத்தைக் கண்டறிய விருப்பம் கொண்ட அறிவியல் ஆய்வாளர்களும் பல்லாண்டுகளாக உயிர் வாழ்வோரின் மரபணுவை சோதனை செய்தவண்ணமே இருந்து வருகிறார்கள். ஒரு சில குறிப்பிட்ட மரபணு ஆய்வுகளும், புதிய ஆய்வொன்றின் முடிவுகளும் அதிகநாள் வாழ்வதன் காரணம் பற்றி என்ன தகவல்கள் தருகின்றன என்று பார்ப்போம்.

athiga naatkal2பெரும்பாலும் ஆண்களைவிட பெண்கள் அதிக காலம் உயிருடன் வாழ்வதற்கு, ஆண்கள் அவர்களின் நாளமில்லாச் சுரப்புகள் காரணமாக ஆபத்தான செயல்களில் இறங்குகிறார்கள் என்றும், ஆண்களின் வாழ்க்கைமுறை, தொழில் ஆகியவையும் அவர்களை ஆபத்தினை எதிர் கொள்ள வைக்கிறது அதனால் உயிரிழப்புகள் நேர்கின்றன என்ற கோணத்தில் பற்பல காரணங்கள் முதலில் முன்வைக்கப்பட்டன. ஆனால் இந்த வேறுபாடு மனித குலத்தின் நாகரிக வாழ்க்கைமுறையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பிற உயிரினங்களிலும் இருப்பதால், பெண் இனத்தின் நீண்ட ஆயுளுக்கு வேறு காரணம் இருக்கக்கூடும் என்ற நோக்கில் தொடர்ந்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.

athiga naatkal1மனித செல்களில் மரபுச் செய்திகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் மரபணுக்களில் உள்ள டி. என். ஏ. என்பது செல்லின் உட்கருவான நியூக்ளியசில் மட்டும் இருப்பதில்லை. செல்லின் சக்தி தரும் உறுப்பான மைட்டோகாண்டிரியாவிலும் டி. என். ஏ. இருக்கிறது. இனச்சேர்க்கையின் பொழுது ஆணின் விந்துவில் நீந்துவதற்கு உதவும் வாலின் பகுதியாக அமைந்துவிடும் மைட்டோகாண்டிரியா, பெண்முட்டையை அடைந்து அதனைக் கருவுறச் செய்யும் பொழுது கருமுட்டையில் இணையாமல் அழிந்துவிடுகிறது. இதன் காரணமாக பெண் இனத்தின் மைட்டோகாண்டிரியாவில் உள்ள டி. என். ஏ. மட்டுமே அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அத்துடன் வாழ்வதற்கு ஏற்ற தகுந்த மாற்றங்களை பதிந்து கொண்ட மைட்டோகாண்டிரியா டி. என். ஏ. வில் உள்ள பண்புகளும் அடுத்த தலைமுறை பெண்களுக்கு தொடர்ந்து கிடைக்கிறது. இந்த வகையில் இயற்கை ஆண்களுக்கு எதிராகச் சதி செய்கிறது, நீண்டநாட்கள் வாழும் மரபணுமாற்றங்களை பெண்கள் மட்டுமே பெற வழியுள்ளது, அதுவே பெண்களின் நீண்ட ஆயுளுக்குக் காரணம் என்றும் கூறப்பட்டது[1].

நியூக்கிளியசில் உள்ள மரபணு டி. என். ஏ. க்களை மரபணுக் குறியீடுகள் (genetic markers) கொண்டு வகைப்படுத்தி மற்றொரு கோணத்திலும் ஆய்வுமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தக் குறியீட்டு முறையுடனும், கிடைத்த தகவல்களைக் கொண்டு கணினியில் உருவாக்கப்பட்ட மாதிரியின் உதவியாலும் 77% யார் யார் அதிக காலம் வாழக்கூடும் என்று மரபணு தகவல்களை மட்டும் வைத்துக் கொண்டே ஆய்வாளர்களால் ஓரளவு கணிக்கவும் முடிந்தது. எனினும் நீண்ட காலம் வாழ உதவும் என்று மரபணுகுறியீட்டினைக் கொண்டிராத ஒரு சிலரும் அதிக காலம் வாழ்வது ஆய்வாளர்களை மேலும் தக்க காரணத்தைத் தேடி ஆய்வைத் தொடரச் செய்தது. இவ்வாறு நீண்ட ஆயுளுக்குரிய மரபணுக்கள் இல்லாமலும் அதிக காலம் வாழ்பவர்களுக்கு, அவர்கள் கடைபிடிக்கும் ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள் காரணமாக இருக்கக்கூடும் என்றும் விளக்கம் கூறப்பட்டது. மேலும் நீண்ட ஆயுளுக்கு உதவக் கூடும், இதுவரை கண்டறியா பிற மரபணுக்கள் பல கூட்டாகச் செயல்பட்டு நோய்களை உருவாக்கக் கூடிய தீய மரபணுக்களை கட்டுப்படுத்தக் கூடும் என்ற கோணங்களிளும் ஆய்வாளர்கள் கருதினார்கள் [2].

உடல்நலமுள்ள நீண்ட வாழ்க்கையின் ரகசியத்தைக் கண்டறிந்தால் அதற்கேற்ற மருந்துகளையும், உயிர்ச்சத்துகளையும் தயாரித்தது அனைவரையம் நீண்ட நாட்கள் வாழ வைக்கலாம் என்ற திட்டமே ‘ஸ்டான்ஃபோர்ட்’ பல்கலைக் கழகத்தின் உயிரியல் வளர்ச்சி, மரபியல் மற்றும் மருத்துவ ஆய்வாளரான பேராசிரியர் ‘ஸ்டூவர்ட் கிம்’ (Stuart Kim) அவர்களின் மரபணு ஆய்வுகளின் அடிப்படை நோக்கம்.

athiga naatkal6ஸ்டூவர்ட் கிம் குழுவினர், 110 முதல் 116 வயதுடைய பதினேழு முதியவர்களின் மரபணுக்களை சேகரித்து ஆய்வு நடத்தினர் [3]. இவர்களில் ஒரே ஒரு ஆணைத்தவிர இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் பெண்கள். இவர்கள் யாவரும் நல்ல உடல்நலத்துடனும் நல்ல செயல்திறனுடன் சுறுசுறுப்பாகவும், சிந்திக்கும் திறன் பாதிக்கப்படாமலும் இருப்பவர்கள். ஒருவர் 103 வயது வரை மருத்துவராகத் தொழில் செய்துள்ளார். மற்றொருவர் 107 வயது வரை ஊர்தியை ஓட்டுபவராகவும் இருந்துள்ளார். பல முதியவர்களின் உடல்நலக் குறைவிற்குக் காரணமாக இருக்கும் நீரிழிவு நோயோ, இதய நோயோ இவர்களில் யாருக்கும்இல்லை, ஒரே ஒருவர் மட்டுமே புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அறிவியல் ஆய்வாளர்கள் இந்த ஆய்வில்,   மரபணு மாற்றம் ஏதேனும் நீண்ட நாட்கள் இவர்கள் வாழ உதவியிருக்குமோ என்ற கோணத்தில் ஆராய்ந்தது பயனளிக்கவில்லை. இந்த முதல் சுற்று ஆய்வின் முடிவாக நீண்ட ஆயுளுக்கான மரபணு சான்றுகளை அவர்களால் உறுதியாகக் காட்ட இயலவில்லை.

athiga naatkal3எனவே பரிசோதனையில் பங்கு பெற்ற அனைவரின் மரபணு தகவல் தரவுகளையும் பிறரும் ஆய்வு செய்ய உதவுமாறு பகிர்ந்து கொள்ள அறிவியல் ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளார்கள். நீண்ட நாட்கள் வாழ்வதற்கு எந்த மரபணு உதவியது என்ற அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வுகள் இன்றைய அளவில் எதையும் குறிப்பாகக் கண்டறிய தவறிவிட்டிருக்கின்றன. முன்னர் கண்டறிந்தாக எண்ணிய சில மரபணு காரணிகளும் பொதுவாகவே பலருக்கும் இருப்பதால் எதையும் உறுதியாகச் சொல்ல இயலாத நிலையும் இருந்து வருகிறது. அத்துடன் இந்த ஆய்வில் கண்ட மிகச் சொற்ப வேறுபாடுகளும் ஆய்வில் பங்கு பெற்றோரின் எண்ணிக்கைக் குறைவின் காரணத்தினால் இந்தஇந்த மரபணுதான் நீண்ட ஆயுளுக்குக் காரணம் என்று குறிப்பிட்டு உறுதியாகக் கூற இயலாத நிலையில்தான் அமைந்துள்ளன.

எனவே தற்பொழுது சேகரித்த மரபணு தகவல்களை அனைத்து ஆய்வாளர்களுடனும் பகிர்ந்து கொள்வதுடன், தொடர்ந்து தரவுகளை பகிர்ந்து கொள்ளும் முறையைப் மேற்கொள்வோமானால், மரபணு பற்றியத் தரவுகள் அதிகமாகும் பொழுது சரியான காரணத்தை கண்டுபிடித்துவிடலாம் என்பது அறிவியல் ஆய்வாளர்களின் நம்பிக்கை. அதுவரை நீண்டநாள் வாழ்வதன் காரணம் ரகசியமாகவே இருந்து வரவேண்டியதுதான்.

படம்: https://med.stanford.edu/profiles/stuart-kim

மேலும் தகவலுக்கு:

[1]

Mom’s Genes May Explain Why Women Outlive Men, by Stephanie Pappas, August 02, 2012

http://www.livescience.com/22062-genes-gender-gap-life-span.html

[2]

Longevity Genes Predict Whether You’ll Live Past 100, by Rachael Rettner, July 01, 2010

http://www.livescience.com/6665-longevity-genes-predict-ll-live-100.html

[3]

World’s Oldest Living People Have Their Genomes Sequenced, by Rachael Rettner, November 12, 2014

http://www.livescience.com/48731-genome-sequence-oldest-people.html


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஒரு சிலர் மட்டும் அதிகநாட்கள் உயிர் வாழக் காரணம் என்ன ?”

அதிகம் படித்தது