மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தானியங்கி விமானங்கள் பாகம்-1

விவேக் கணேசன்

Nov 22, 2014

The new Microdrones 4-200 aerial surveillance drone, Liverpool, Britain - 22 May 2007மனிதர்களால் ஓட்டப்படாத இயந்திரங்களாலேயே செலுத்தப்படும் விமானங்கள் தானியங்கி விமானங்கள் எனப்படுகின்றன. விமான ஓட்டிகள் இயக்காத தானியங்கி விமானங்கள் தற்பொழுது பெருமளவில் இராணுவத்தில் பயன்படுத்தப்படுகின்றன. தானியங்கி விமானங்கள் என்னும் வடிவம் புதிதல்ல, கடந்த நூறாண்டுகளாகவே யோசிக்கப்பட்டு வந்த ஒன்றாகும். எழுபதுகளில் தான் இவை பயன்படுத்தப்படத் தொடங்கியது. ஆனால் தொலைவிலிருந்து விமானங்களை இயக்கும் தொழில்நுட்பம் மேம்படவில்லை.

தானியங்கி விமானங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி:

aalillaa vimaanam1தானியங்கி விமானங்களை உருவாக்குவதற்கான தூண்டுதல் இரண்டாம் உலகப்போரின் போது அதிகமானது. அப்போரில் ஏற்பட்ட விமானங்கள் மற்றும் விமான ஓட்டிகளின் இழப்பு இதற்குக் காரணம் எனலாம். வியட்நாம் போரின் போது அமெரிக்கா இயந்திரங்களைப் பயன்படுத்தி தாக்குதல் இலக்குகளை தீர்மானிக்கத் தொடங்கியது. தானியங்கி விமானங்கள் இத்தகைய உளவுப் பணிக்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டன. அத்தகைய விமானங்கள் விரிவான படங்களையும் தகவல்களையும் அனுப்பின, மிகவும் அபாயகரமான விமான உளவுப்பணிகளை அவை செய்தன. இத்தகைய பணிகளை விமானிகளால் ஓட்டப்படும் விமானங்களைக் கொண்டு செய்வது அவர்களின் தற்கொலைக்கு ஒப்பானதாகும்.

எழுபதுகளுக்குப் பிறகு ஏற்பட்ட கணினித் தொழில்நுட்பம், எண்ம சமிக்ஞை தொழில்நுட்பம் போன்றவை தானியங்கி விமானங்களின் வளர்ச்சியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. உளவுக் கண்காணிப்பு, தகவல் சேகரிப்பு போன்ற தானியங்கி விமானங்களின் தவிர்க்க முடியாத சாதனமாக மாறியது. இப்பணிகளை செய்யும் தானியங்கி விமானங்கள் கணினிகளுடனும் வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு சாதனங்களுடனும் அமைக்கப்பட்டது. எண்பதுகளில் ஏற்பட்ட போர்களற்ற அமைதி சூழ்நிலை தானியங்கி விமானங்களின் ஆராய்ச்சியையும் அவற்றுக்கான மூலதனத்தையும் தடுத்தன. 1993ல் முன்னாள் யூகோஸ்லேவியாவில் ஏற்பட்ட பிரச்சனை ஒன்றில் அமெரிக்கா ஈடுபட்ட பொழுது சூழ்நிலை மாறியது. போசுனியா நாட்டைப் பற்றி செயற்கைக் கோள் வழியாகப் பெறப்பட்ட உளவுத் தகவல்கள் போதுமானதாக இல்லை. ஆதலால் தானியங்கி விமானங்களைக் கொண்டு கண்காணிப்புப் பணிகளை செய்ய யோசனை பிறந்தது. ஆனால் அப்போது பயன்படுத்தப்பட்ட விமானங்கள் மிக அதிக தூரத்திற்கு இயக்கப்பட முடியாததாக இருந்தது. தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் இத்தகைய விமானங்கள் செயற்கைகோள்களுடன் தகவல் பரிமாற வழிவகை செய்தது. அதனால் தற்போதைய தானியங்கி விமானங்கள் எத்தகைய தூரத்திற்கும் பயணிக்க வல்லவை. மேலும் இவை எந்த ஒரு வானிலையிலும் பயணிக்கக் கூடியவை மற்றும் அவைகளைக் கண்டறிவது கடினம்.

ஆயுதம் தாங்கிய தானியங்கி விமானங்கள்:

aalillaa vimaanam6செப்டம்பர் 11, 2001 வரை உளவுத் தகவல்களையும் கண்காணிப்புகளையும் செய்வதற்கு மட்டுமே பயன்பட்டு வந்த தானியங்கி விமானங்கள் அதையும் தாண்டிய ஒரு எல்லைக்கு பயணித்தன. அமெரிக்க உளவுத்துறை தீவிரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபடவேண்டிய தேவை உருவானது. அப்போது ஒரு பிரச்சனை கவனத்தை ஈர்த்தது, என்னவென்றால் தானியங்கி விமானங்களின் மூலம், நிர்ணயிக்கப்பட்ட இலக்கின் மீது கப்பல்களிலிருந்து ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தும்பொழுது அத்தகைய இலக்குகள் சமயங்களில் தாக்குதலிலிருந்து தப்பிவிடுகின்றன என்பதுவேயாகும். இதனால் தானியங்கி விமானங்களை ஆயுதம் தாங்கிய விமானங்களாக மாற்றும் யோசனை பிறந்தது. தானியங்கி விமானங்கள் அதிநவீன இலக்கு நிர்ணயித்தல் மற்றும் ஏவுகணை தாக்குதல் பணிகளை செய்யும் திறன் பெற்றன.

ஆயுதம் தாங்கிய தானியங்கி விமானங்கள் தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டன. 2005 ம் ஆண்டு வாக்கில் அமெரிக்க விமானப்படை, தானியங்கி விமானங்களுக்காகவே என்று ஒரு தனி விமானதளத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவிலிருந்து ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு தானியங்கி விமானங்கள் பறந்தன. அவை தாக்குதல் மற்றும் உளவு கண்காணிப்புப் பணிகளை செய்தன. சக்தி வாய்ந்த பல இலக்குகளை அவை தாக்கி வெற்றிகளை கொணர்ந்தன.

தானியங்கி விமானங்களினால் ஏற்படும் சேதங்கள்:

aalillaa vimaanam8இவ்வகை விமானங்களை அதிகப்படியாக பயன்படுத்தியது பல பிரச்சனைகளையும் கொண்டு வந்து சேர்த்தது. அதிகப்படியான பொதுமக்கள் தானியங்கி விமானங்களால் கொல்லப்பட்டனர். 10 ஆண்டுகளில் 492 அமெரிக்க தானியங்கி விமானத் தாக்குதல்களினால் 4000 மக்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஆயிரம் பேர் பொதுமக்கள் என்றும் மேலும் 220 பேர் குழந்தைகள் என்றும் கண்டறியப்பட்டது (http://www.thebureauinvestigates.com/category/projects/drones/drones-graphs/). அதிகப்படியான பொதுமக்களின் மரணமும் சொத்துக்களின் சேதமும் தானியங்கி விமானங்களை பயன்படுத்துவதின் சேதங்கள் குறித்த கேள்வியை எழுப்பின.

தானியங்கி விமானங்களின் எதிர்காலம்:

aalillaa vimaanam5இருந்தபோதிலும் அமெரிக்க இராணுவம் தானியங்கி விமானங்களில் அதிகப்படியான முதலீடுகளை செய்துவருகிறது. 3ல் 1 பங்கு தானியங்கி விமானங்கள் அமெரிக்க விமானப்படையினால் பயன்படுத்தப்படுவதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. அமெரிக்க இராணுவத்தின் மற்றப் பிரிவுகளும் இத்தகைய விமானங்களை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. அமெரிக்க கடற்படையும் விமானம்தாங்கிய கப்பல்களிலிருந்து சென்று தாக்கக்கூடிய தானியங்கி விமானங்களை தயாரிப்பதாக செய்திகள் வருகின்றன. எதிர்காலத்தில் பெரிய விமானங்களுடன் இத்தகைய சிறிய தானியங்கி விமானம் தாக்குதலில் அதிகம் பயன்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது. அவை தரைப்படைகளிலும் பெரிதளவு பயன்படுத்தப்படலாம். தேடுதல் பணிகளிலும் மீட்புப் பணிகளிலும் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக தானியங்கி விமானங்கள் மாறிவருகின்றன. 21ம் நூற்றாண்டில் முக்கியமான ஒரு போர்ச்சாதனமாக தானியங்கி விமானங்கள் விளங்கும் என்பதில் ஐயமில்லை.

-தொடரும்


விவேக் கணேசன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தானியங்கி விமானங்கள் பாகம்-1”

அதிகம் படித்தது