மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்– நேர்காணல்

சிறகு சிறப்பு நிருபர்

Nov 29, 2014

sundarrajanகேள்வி: தங்களைப் பற்றிக் கூறுங்கள்?

பதில்: என் பெயர் சுந்தர்ராஜன், என் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகில் உள்ள முள்ளிக்குளம் என்னும் கிராமம், விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். என் மனைவி பெயர் தீபா, இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள், நான் நிறைய அண்ணன், தம்பி, சகோதரிகளோடு சேர்ந்து வாழ்ந்த, விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட ஒரு கூட்டுக்குடும்பத்திலிருந்து வந்திருக்கிறேன். நான் ஒரு பொறியாளர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1995ம்வருடத்தில் B.E Electronics  Instrumentation முடித்தேன். இரண்டு வருடங்கள் சிறிய சிறிய நிறுவனங்களில் வேலை பார்த்துவிட்டு Hard n Soft Technologies Pvt. Ltd., என்ற நிறுவனத்தை 1997-98 ல் தொடங்கி நானும், என்னுடன் படித்த வகுப்புத் தோழர்களான சிவராமன், பிரேமானந்த் மற்றும் வெங்கடாசலம் ஆகிய நண்பர்களும் சேர்ந்து ஆரம்பித்தோம். தற்பொழுது நானும் சிவராமனும் இந்நிறுவனத்தை கவனித்துக் கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட 15 வருடங்கள் இந்த நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நிறுவனம்தான் என்னுடைய அடிப்படை தேவைகளுக்கான பொருளியல் ஆதாரத்தை அளிக்கிறது.

2004ல் பூவுலகின் நண்பர்கள் அமைப்பை ஆரம்பித்த தோழர் நெடுஞ்செழியன் அவர்கள் காலமானபிறகு, 2006ல் அசுரன் அவர்களும் காலமானார். நெடுஞ்செழியனுடன் சேர்ந்து ஒன்றாகப் பணியாற்றியவர் அசுரன். 2008ல் நானும், மருத்துவர் சிவராமன், வள்ளியப்பன், சீனிவாசன், வழக்கறிஞர் சுந்தர்ராஜன், வெற்றிச்செல்வன் அனைவரும் சேர்ந்து இந்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பை மறுபடியும் ஆரம்பிக்கலாம் என்று முடிவுசெய்து, ஆரம்பித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. மூத்தவள் பெயர் ஓவியா, இளையவள் பெயர் நித்திலா. மூத்தவள் நான்காம் வகுப்பு படிக்கிறாள். இளையமகள் எல்.கே.ஜி படிக்கிறாள். என்னுடைய மனைவியும் ஒரு பொறியியல் பட்டதாரி, சிபி என்ற நிறுவனத்தில் வேலைபார்த்துவிட்டு தற்பொழுது குழந்தைகள் பிறந்தபிறகு வீட்டில் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். என்னுடைய பெற்றோர்கள் 2007ல் ஒரே வார இடைவெளியில் இரண்டு பேரும் தவறிவிட்டார்கள். என்னை வளர்த்து ஆளாக்கியது என்னுடைய காந்திமதி அம்மாவும் ஆதிநாராயணன் அப்பாவும்தான் (பெரியம்மாவும், பெரியப்பாவும்). இவர்கள்தான் என்னை மூன்று வயதிலிருந்தே எடுத்து வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்திருக்கிறார்கள். தற்பொழுது ஆதிநாராயணன் அப்பா இல்லை, காந்திமதி அம்மாதான் இருக்கிறார். அவர்தான் குடும்பத்தை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார். என்னுடைய தாத்தா ராமசாமி, பிரபலமான வழக்கறிஞர். அவர் நிறைய சமூகப் பணிகள் செய்திருக்கிறார்.

கேள்வி: பூவுலகின் நண்பர்கள் இயக்கம் தொடங்கியதன் நோக்கம் என்ன? அதன் செயல்பாடுகள் என்ன?

poovulagu1பதில்: பூவலகின் நண்பர்கள் இயக்கம் கிட்டத்தட்ட 1980ன் இறுதியிலிருந்து, 1990ன் தொடக்கத்திலிருந்து மிகவும் தீவிரமான பணியை தமிழ்ச் சூழலியல் பார்வையில், மனித நேயப் பார்வையில் மிகப்பெரிய பங்காற்றி வந்திருக்கிறது. அதைத் தொடங்கி வைத்தவர் தோழர் நெடுஞ்செழியன் அவர்கள். பூவுலகின் நண்பர்கள் என்பது வரையறுக்கப்பட்ட நிறுவனம் மாதிரியோ அல்லது வரையறுக்கப்பட்ட தொண்டு நிறுவனம் மாதிரியோ அல்லது அமைப்பு மாதிரியோ கிடையாது. இயற்கையோடு இசைந்து, வாழுகின்ற வாழ்க்கைக்குத் தேவையான விசயம் செய்வதற்காக யார்வேண்டுமானாலும் பூவுலகு நண்பர்கள் இயக்கத்தில் இணைந்து பணியாற்றலாம்.

தமிழ்ச்சூழலில் சுற்றுச்சூழல் குறித்த பார்வையே இல்லை ஒரு காலகட்டத்தில். இதன் நோக்கம் முக்கியமாக, சுற்றுச்சூழல் குறித்த ஒரு பொதுவான பார்வையை தமிழக மக்களிடத்தில் ஏற்படுத்துவது ஒன்று, இரண்டாவதாக சுற்றுச்சூழல் சார்ந்த புத்தகங்கள் வெளியிடுவது போன்ற வேலைகளை செய்துவந்தது. இன்று பூவுலகின் நண்பர்களுடைய  புத்தக வெளியீடுதான் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்லலாம். எனக்கே பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தில் வெளியிட்ட ஒரு புத்தகத்தைப் படித்த பிறகுதான் இது சார்ந்த விசயங்களில் ஈடுபாடு அதிகமாக வர ஆரம்பித்தது. உதாரணமாக ஒற்றைவைக்கோல் புரட்சி (one straw revolution)  என்ற புத்தகம், 1990ல் மசானபுஃபுகோகா என்ற உலகத்தின் தலைசிறந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி எழுதிய ஆங்கில புத்தகத்தை முதன் முதலில் மொழிபெயர்த்து தமிழில் கொண்டுவந்தவர்கள் பூவுலகின் நண்பர்கள்தான்.

இதேபோல் பசுமைப் புரட்சியின் வன்முறை, கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான புத்தகங்கள், வெளியீடுகள், உயிரியல் புரட்சி கொடுக்கும் முறை, பசித்த வயிறும் பட்டினி டப்பாவும் போன்ற பல்வேறு நூல்கள் பூவுலகின் நண்பர்களால் 1980களின் இறுதியில் 1990களின் தொடக்கத்தில் கொண்டுவரப்பட்டது. தமிழ்ச் சூழலில், சூழ்நிலை சார்ந்த வார்த்தைகளான புவிவெப்பமாதல், பருவநிலை மாற்றம், காலநிலை மாற்றம் போன்ற வார்த்தைகளை முதன்முதலில் தொகுத்து கொண்டுவந்தவர்கள் பூவுலகின் நண்பர்கள்தான். அதற்கு சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்ததும் பூவுலகின் நண்பர்கள் அமைப்புதான். இன்றைக்கு தமிழகத்தில் சூழல் சார்ந்து வேலை செய்யக்கூடிய அத்தனை நபர்களுக்கும், பூவுலகின் நண்பர்களின் அமைப்பு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25 வருடங்களில் தமிழக சூழலில் சூழலியல் சார்ந்தும், மனிதநேயம் சார்ந்தும் வேலை செய்பவர்களிடத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் முக்கிய நோக்கம், முக்கிய செயல்பாடு என்னவென்றால் மக்களிடத்தில் சூழலியல் குறித்த அக்கறையை, சூழ்நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான்.

கேள்வி: சுயநலம் மிகுந்த இந்த சமுதாயத்தில் உங்களைப் போன்றவர் இருப்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. பொறியாளரான உங்களுக்கு எப்படி சுற்றுப்புறத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது?

sundarrajan1பதில்: உங்களது நம்பிக்கையை பூர்த்தி செய்யமுடியுமா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நிச்சயமாக என்னால் இயன்ற பணிகளை செய்துகொண்டிருக்கிறேன். அடிப்படையில் நான் விவசாயகுடும்பத்தை சார்ந்தவன். சிறுவயது முதலிலேயே நிலமும் நீரும் எங்களுடன் கூடப்பிறந்தவை. எங்களது வீட்டில் நிலமும் நீரும் எப்பொழுதும் ஒன்றாகவே இருக்கும். பருத்தி, சோளம் மற்றும் சில தானியங்கள் அனைத்தும் எங்களது வீட்டில் இருக்கும். விதைகளுக்கான பொருட்களை சேகரிப்போம், மாடு வைத்திருந்தோம். அந்த மாட்டின் சாணத்தை நிலத்தில் விவசாயத்திற்குப் பயன்படுத்துவோம். இம்மாதிரி அடிப்படையிலே என் குடும்பம் விவசாயம் சார்ந்த குடும்பம் என்பதால் ஒரு சூழலியல் சார்ந்த ஒரு இயற்கையோடு இசைந்து வாழ்ந்த வாழ்க்கையைத்தான் கிராமங்களில் வாழ்ந்தேன். இன்றும் விடுமுறை காலங்களில் ஊருக்குச் சென்றால் குளங்களில் சென்று குளிப்பது, கிணறுகளில் குளிப்பது, சொந்தங்களான மாமா, மாப்பிள்ளை, மச்சான், தாத்தா, சித்தப்பா, அண்ணன், நண்பர்கள் போன்ற அனைவருடனும் குளங்களில் சென்று குளிப்பது, அங்கிருக்கும் நாவல்பழம், கொய்யாப்பழம் சாப்பிடுவது இதுபோன்ற பல்வேறு விசயங்கள் சிறுவயது முதலே நாங்கள் செய்துகொண்டிருந்ததால் அடிப்படையில் ஒரு மண், நிலம், நீர் சார்ந்ததுமான ஒரு அன்பும் அக்கறையும் என்னிடம் இருந்தது.

எந்த விசயமானாலும் மண்சார்ந்துதான் பார்ப்பேன், அதற்குக் காரணம் என் குடும்பத்தின் சூழ்நிலையில் இருந்து வந்ததுதான். ஆனால் நான் 1991ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த பொழுது அங்கிருந்த தேசிய நாட்டு நலத்திட்டத்தில் (NSS) சேர்ந்து வேலைசெய்தேன். 1991 முதல் 1995 வரை பயின்றபொழுது, படிப்பின் கடைசி வருடம் அந்த பல்கலைக்கழகத்தின் நாட்டு நலத்திட்டத்திற்கான (NSS) ஒருங்கிணைப்பாளராக இருந்தேன். வேலை செய்யும் பொழுது பிச்சாவரம் காடுக்கு செல்லக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பிச்சாவரம் காட்டைப் பற்றியும், சதுப்பு நிலக்காடுகள் மற்றும் அலையாற்றிக் காடுகள் பற்றியும் எனக்கு அப்பொழுதுதான் தெரியவந்தது. அது எனக்கு ஒரு பெரிய விசயமாக இருந்தது. அந்த சமயத்தில் சிதம்பரத்தில் நகைக்கடை வைத்திருந்த ஒருவர் என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அந்தப் புத்தகத்தின் பெயர் ஒற்றை வைக்கோல் புரட்சி, அது பூவுலகின் நண்பர்களின் வெளியீடு. அதைப்படித்த பிறகுதான் சூழலியல் சார்ந்த ஒரு பார்வை எனக்குக் கிடைத்தது. ஆனால் அப்போதும் கிடைத்த பார்வை மண் சார்ந்த, விவசாயம் சார்ந்த பார்வை. அதில் ஏதோ ஒரு பொருள் இருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.

poovulagu3அன்றே கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக கையெழுத்து இயக்கம்  நடத்தியிருக்கிறோம். கிழக்கு கடற்கரை சாலை அப்பொழுதுதான் போட ஆரம்பித்தார்கள், கிழக்குக் கடற்கரை சாலை வந்தால் தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையில் உள்ள சதுப்பு நிலக்காடுகளுக்கு (Mangroves) மிகப்பெரிய ஆபத்து ஏற்படும், அது முழுவதும் அழிவை நோக்கிப் போகும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நாங்கள் ஒரு பெரிய கையெழுத்து இயக்கம் நடத்தினோம். இந்த கையெழுத்து இயக்கத்திற்கு அப்பொழுது இருந்த மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் அமைச்சர்களை வரவழைத்திருந்தோம். அப்பொழுதே சின்ன சின்ன செயல்பாடுகள் செய்துகொண்டிருந்தோம். ஒரு சராசரியான கல்லூரி முடித்த மாணவன் வேலைக்குப் போக நினைப்பான். ஆனால் நான் அதை செய்யாமல் நாம் சொந்தமாக தொழில் தொடங்கவேண்டும் என்று எண்ணி ஒரு நிறுவனத்தை 1997-98ல் ஆரம்பித்தேன். முதல் சில வருடங்கள் அந்த நிறுவனத்தில் கவனம் செலுத்தி அந்த நிறுவனத்தை ஓரளவிற்குக் கொண்டு வந்து அடுத்தகட்டத்திற்கு வரவழைத்துவிட்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் இணைந்தேன்.

2008ல் பூவுலகின் நண்பர்களின் அமைப்பு நெடுஞ்செழியன் மறைவிற்குப் பிறகு மீண்டும் செயல்பட ஆரம்பித்தது. அதில் என்னை இணைத்துக்கொண்டு, முடிந்த அளவிற்கு நெடுஞ்செழியன் எந்த நோக்கத்திற்காக இந்த இயக்கத்தைத் தொடங்கினாரோ அந்த நோக்கத்திலிருந்து சிறிதளவும் தடம் மாறாமல், அதே நேரத்தில் இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான விரிவுபடுத்தலை செய்துவந்தோம். கடந்த 6 வருடங்களில் இந்த அமைப்பின் மூலம் தமிழக அளவில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடிந்தது. இதில் முக்கியமாக நம்முடைய பாரம்பரிய உணவான  சிறுதானியங்களான திணை, சாமை, குதிரைவாலி போன்ற பயிர் ரகங்கள் மீது  தமிழக மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வுக்குக் காரணம் பூவுலகின் நண்பர்கள் என்று நான் உறுதியாகச் சொல்ல முடியும். 2011ம் ஆண்டு லயோலா கல்லூரியில் ஒரு சிறுதானிய உணவுத் திருவிழாவுடன் ஆரம்பித்த இந்தப் பயணம், அதன் பிறகு எங்கள் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் சிவராமன் ஆனந்த விகடனில் தொடர்ந்து எழுதிய ஆறாம் திணை, 2012, 2013, 2014 வருடங்களில் நாங்கள் நடத்திய சிறுதானிய உணவுத் திருவிழாக்களும் மக்களுக்கு ஒரு பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இவற்றை மக்களிடத்தில் சென்று சேர்த்து தமிழகம் முழுவதும் சிறுதானியத்தை நோக்கி இயற்கை விவசாயம் சார்ந்து ஒரு பார்வையைத் திருப்பியிருக்கிறார்கள் என்றால் நிச்சயமாக பூவுலகின் நண்பர்களின் பங்கு மிகப்பெரிய பங்காகப் பார்க்கிறோம். எங்களால் முடிந்த செயல்களை எங்களுடைய நிறுவனம் சார்ந்த வேலைகளையும் செய்துகொண்டு இதையும் செய்துகொண்டிருக்கிறோம். இது போதாது என்று எங்களுக்குத் தெரியும் இருந்தாலும் நிச்சயமாக எங்களுடைய செயல்பாடுகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறதே தவிர ஒருபோதும் அவை குறைவதில்லை.

கேள்வி: சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதில் உங்கள் அமைப்பின் பணியை விளக்க முடியுமா?

poovulagu10பதில்:2011ம் ஆண்டுக்கு முன்பாக  தமிழகத்திலும் சரி, இந்தியாவிலும் சரி அணுஉலை குறித்த ஒரு விவாதமே நடந்தது கிடையாது. வேண்டும், வேண்டாம் என்பது இரண்டாம் பட்சம், ஆனால் வேண்டாமா என்ற விவாதமே நடந்தது கிடையாது. ஆனால் கடந்த 3 வருட காலமாக இந்த தேசத்தின் மனசாட்சியைக் கேள்வி கேட்ட ஒரு போராட்டம் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம். அந்தப் போராட்டம் இந்தியாவின் வளர்ச்சிப் பாதையைக் குறித்தது. தந்தை பெரியார் அவர்களைப் பற்றி முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், “தந்தை பெரியார் அவர்கள்தான் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெறிமுறைகளைக் கேள்வி கேட்டவர்” (“he is the one who questioned accepted values of the society”) என்று கூறியிருக்கிறார். அன்றைய காலகட்டத்தில் சாதிய வேற்றுமை, தீண்டாமை, கடவுள் நம்பிக்கை, பெண்ணடிமைத்தனம் போன்ற பல்வேறு தீமைகளை சமூகம் ஏற்றுக்கொண்டது. ஆனால் அவற்றை எதிர்த்து கேள்வி கேட்டவர் தந்தை பெரியார் அவர்கள். அதே போல் இடிந்தகரை மக்கள் மின்சாரம், அன்னிய முதலீடு போன்ற பல்வேறு செயல்களை இந்த தேசத்தின் வளர்ச்சியாக இவ்வளவு நாளும் இந்த தேசமும் மக்களும் கொண்டிருந்தார்களோ, அவற்றை கேள்வி கேட்டிருப்பது இந்த கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம். அந்த ஒரு போராட்டத்தில் எங்களை இணைத்துக்கொண்டு மிகப்பெரிய முன்னெடுப்பை எடுத்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேசிய பசுமை தீர்ப்பாயம் போன்ற வழக்காடு மன்றங்களில் வழக்குகள் போட்டு அரசின் கவனக்குறைவை, அலட்சியத்தை, மெத்தனப்போக்கை வெளிக்கொண்டு வந்திருக்கிறோம். நாங்கள் வழக்கு போடும்வரை கூடங்குளம் அணுஉலையில் உற்பத்தியாகும் கழிவுகளை என்ன செய்யப்போகிறார்கள் என்று அவர்கள் சொல்லவே இல்லை. இந்த வழக்கிற்குப் பிறகும் அவர் சொல்லவே இல்லை. இதைப்போன்று பல்வேறு விசயங்கள் வெளிவந்ததற்கு முக்கியமான காரணம் நாங்கள் போட்ட வழக்குதான்.

poovulagu5இதைத்தவிர நான் ஏற்கனவே சொன்ன மாதிரி தமிழகம் முழுவதும், சிறுதானிய உணவான பாரம்பரிய உணவிற்கு மிகப்பெரிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தொற்றா நோய்க்கூட்டங்கள் அதாவது உதாரணமாக புற்றுநோய், இதயநோய், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற தொற்றா நோய்க்கூட்டங்களின் தலைநகரமாக தமிழ்நாடு மாறிக்கொண்டிருக்கிறது. ஆறு வயது முதல் அறுபது வயது வரை, சிறியவர் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்கள் வருகிறது. காரணமும் காரணிகளும் முக்கியமாக உணவில் இருக்கின்றன என்று மக்களிடத்தில் மிகப்பெரிய பரப்புரைகள் செய்து துண்டறிக்கை மற்றும் புத்தகங்கள் கொடுத்து கையெழுத்து இயக்கம் நடத்தி, உணவுத் திருவிழாக்கள் நடத்தி மருத்துவர் சிவராமன் அவர்களின் தொடர்முயற்சியால் இன்று தமிழகம் சிறுதானியம் நோக்கி திருப்பியிருக்கிறது என்று சொல்லலாம். அடுத்ததாக அந்த சிறுதானியத்தை விவசாயிகள் விளைவித்து அவர்களுக்கு உரிய விலையை அரசிடமிருந்து வாங்கித் தருவதற்கான பணியை நாங்கள் செய்ய இருக்கிறோம். மூன்றாவதாக தண்ணீர் குறித்த மிகப்பெரிய புரிதலை, விவாதத்தை, செயல்பாட்டை தமிழகத்தில் தொடங்கியுள்ளோம். தண்ணீர் என்பது பொது சொத்து, அதற்கான செயல்பாட்டை மிகப்பெரிய அளவில் எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

poovulagu12அதற்கடுத்ததாக கனிமவளக்கொள்ளை, கிரானைட் கொள்ளை, தாது மணல் கொள்ளை, ஆற்றுமணல் கொள்ளை போன்றவற்றிற்கு எதிராக உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ள சகாயம் ஆய்வுக்குழுவிற்குத் தேவையான உதவிகளை செய்வதற்காக சகாயம் ஆதரவுக்குழு என்ற குழுவில் எங்களை இணைத்துக்கொண்டு தமிழகத்தில் இதுவரை நடந்த மிகப்பெரிய கனிமவள முறைகேடுகளை வெளிக்கொண்டுவதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளோம். இதை;தவிர பல்லுயிரியம் சார்ந்த பல்வேறு விசயங்களின் செயல்பாடுகளில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஒரு பெரிய பிரச்சாரத் தொடர் களப்பணி என்ற வகையில் நாங்கள் நீதிமன்றங்கள், பத்திரிக்கைகள் வழி இம்மாதிரியான செயல்களை செய்துகொண்டிருக்கிறோம். இரண்டு இதழ் கொண்டு வந்திருக்கிறோம். ஓன்று பூவுலகு என்ற இதழ். இதில் முழுவதுமான சுற்றுச்சூழல் அரசியலைப் பேசக்கூடிய இதழ். அடுத்ததாக மின்மினி என்ற இதழ் அது மாணவர்களுக்கான இதழ். இது சுற்றுச்சூழலை அறிமுகப்படுத்தும் இதழ். இந்த இரு இதழ்களும் தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இதைத் தவிர 100 புத்தகங்கள் பூவுலகின் நண்பர்களில் கொண்டுவந்திருக்கிறோம்.  தமிழகத்தில் உள்ள பல்வேறு இயற்கை சார்ந்த சிக்கல்கள், கூடங்குளம், நியூட்ரினோ, மீத்தேன், எரிபொருள் குழாய்கள் போன்ற பல்வேறு சிக்கல்களுக்கு புத்தகங்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம். தொடர்ச்சியாக வழக்குகள், பத்திரிகைகள், புத்தகங்கள் மூலமாகவும் தொடர்ந்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம். இவற்றை பூவுலகின் முக்கியப் பணியாக நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம்.

கேள்வி: குறுகிய மனப்பான்மையுடனும் பணமுதலைகளுக்கு பணத்தை அள்ளிக்கொடுத்து தமிழகத்தை சுடுகாடாக்கும் முயற்சியில் மீத்தேன், நியூட்ரினோ, அணுஉலைகள், எரிபொருள் குழாய்கள் அமைக்கும் போன்ற மண்ணைக் கெடுக்கும் செயல்களில் மத்திய மாநில அரசுகள் இறங்கியுள்ளன. அந்தந்த பகுதி மக்கள் மட்டும் போராடி வரும் நிலையில் ஒட்டுமொத்த தமிழகத்தையும் எழுச்சியடையச்செய்ய என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

poovulagu8பதில்: கடந்த மூன்று வருட காலமாக கூடங்குளம் அணுஉலை தொடர்பான போராட்டத்தில் பங்கு பெற்றதன் மூலம் தமிழகத்தின் சுற்றுசூழல் மற்றும் இயற்கை வளம் சார்ந்த மிகப்பெரிய பார்வையை போராட்டமும், பூவுலகின் நண்பர்கள் அமைப்பும் சேர்ந்து கொண்டுவந்துள்ளது. இன்று நடக்கின்ற மீத்தேனுக்கு எதிரான போராட்டம், கெயிலுக்கு எதிரான போராட்டம், நியூட்ரினோவுக்கு எதிரான போராட்டம், தாதுமணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம் மற்ற இயற்கை வளம் சுரண்டுவதற்கு எதிரான போராட்டங்கள் இவையனைத்துக்கும் அடிப்படை ஊக்கத்தைக் கொடுத்தது கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம். இந்த அரசுகளை கேள்வி கேட்கமுடியும், அரசை மக்கள் கேள்வி கேட்டால் ஓரளவிற்காவது இறங்கி வந்து பதில் சொல்வார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது இந்தப் போராட்டம். இந்தப் போராட்டம் மூலமாக மற்றப் பகுதிகளில் நீங்கள் சொல்வது போல் தமிழகத்தின் மிகப்பெரிய சாபக்கேடு மீத்தேன் என்றால் அது தஞ்சாவூர்- திருவாரூர்- நாகப்பட்டினம் போராட்டம், கூடங்குளம் அணுஉலை என்றால் திருநெல்வேலி மாவட்டப் போராட்டம், கல்பாக்கம் என்றால் அது காஞ்சிபுர மாவட்டப் போராட்டம், முல்லைப்பெரியாறு என்றால் அது தேனி மாவட்டப் போராட்டம், காவேரி என்றால் தஞ்சாவூர் மாவட்டப் போராட்டம், கெயில் என்றால் ஈரோடு –கோயம்புத்தூர் பகுதிக்கான போராட்டம் என்று இப்படி பகுதி பகுதியாகப் பிரிந்து பகுதிபகுதியாக தனித்து நின்று போராடும் இயக்கங்கள், அமைப்புகள், குழுக்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன.

பூவுலகின் நண்பர்கள் சார்பில் இவையனைத்தையும் ஒருங்கிணைப்பதற்கான ஒரு செயலை மேற்கொண்டுள்ளோம். இந்த அனைத்துப் போராட்ட குழுக்களும் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு ஆலோசனைக் கூட்டம், ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை மதுரையில் நடத்தினோம் இரண்டு மாதங்களுக்கு முன்பாக. அப்போது தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு போராட்டங்களிலிருந்தும் ஒரு ஒருங்கிணைப்புக் குழு அமைத்துள்ளோம். அந்த ஒருங்கிணைப்புக் குழு, தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்திக்கொண்டிருக்கும் கல்பாக்கம், கூடங்குளம், மீத்தேன், நியூட்ரினோ, கெய்ல், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், நெசவாளர் அமைப்புகள், அமராவதி ஆற்றை காப்பாற்றுகின்ற தோழர்கள், மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தும் தோழர்கள் போன்ற பல்வேறு அமைப்புகளுடனும் இணைந்து மிகப்பெரிய ஒருங்கிணைப்பு முயற்சியை செய்துகொண்டிருக்கிறோம்.

நிச்சயமாக அதற்கு ஒரு விடிவு பிறக்கும் என்று நம்புகிறோம். அப்படி ஒருங்கிணைப்பு செய்தால்தான் கூடங்குளத்தைப் பற்றி கோயம்புத்தூரிலும், கெயிலைப் பற்றி கன்னியாகுமரியிலும், நியூட்ரினோவைப் பற்றி நாகப்பட்டினத்திலும், மீத்தேனைப் பற்றி சென்னையிலும் பேசுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். எந்தப் பிரச்சனையானாலும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் நாங்கள் உடனே ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து அதில் சம்பந்தப்பட்ட நபர்களை பேசவைத்து சென்னைமக்களுக்கு முக்கியமாக பத்திரிகை நண்பர்களுக்கு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். தொடர்ந்து பல்வேறு பத்திரிகைகள், நாளிதழ்கள், வாரப்பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மூலமாக இந்தப் பிரச்சனைகளை மக்களிடம் கொண்டு சேர்த்துக்கொண்டிருக்கிறோம். நிச்சயமாக தமிழகத்தில் மிகப்பெரிய ஒருங்கிணைப்பு தேவை. அதை பூவுலகின் நண்பர்கள் செய்துகொண்டிருக்கிறோம். நிச்சயமாக ஒரு நல்ல முடிவு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

கேள்வி: உயிர்களை மதிக்காத அரசுகளுக்கு மனித நேயத்தை உணரவைக்க அறப்போராட்டம் மட்டும் போதுமா? மனித உணர்வுகளை மதிக்காத அரசுகள் மீது மக்கள் வன்முறையைக் கையாளும் ஆபத்து உள்ளதா? இந்த அரசுகளை அடிபணிய வைக்க என்ன செய்வது?

poovulagu9பதில்: வன்முறை சார்ந்த போராட்டங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது கிடையாது. நிச்சயமாக அறப்போராட்டத்தின் மூலமாகத்தான் எந்த விசயத்தையும் அடையமுடியும் என்பதை நமக்கு உலகத்தில் நடந்த பல்வேறு போராட்டங்கள் நிரூபித்துக் காட்டியுள்ளன. உதாரணமாக கேரளாவில் பிலாச்சிமாடாவில் ஏற்படுத்தப்பட்ட கொக்கோ கோலாவின் தொழிற்சாலையை எதிர்த்து பிளாச்சிமாடா மக்கள் தொடர்ந்து மிகப்பெரிய அறப்போராட்டத்தை நடத்தி உலகத்திலேயே முதன்முறையாக கொக்கோ கோலா நிறுவனத்தை மூடவைத்த ஒரு ஊர் என்ற பெருமையை பிலாச்சிமாடா மக்கள் தேடிக்கொண்டார்கள். ஆனால் கொஞ்சமும் கூச்சமில்லாமல் கொஞ்சமும் துளிகூட இயற்கை சார்ந்த உணர்வு இல்லாமல் நாம், தமிழக மக்கள் அதை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள கங்கைகொண்டாவில் அந்த நிறுவனத்தைத் தொடங்க அனுமதித்துள்ளோம்.

எந்த நிறுவனத்தை அங்கே மூடினார்களோ அதே நிறுவனத்தை கங்கை கொண்டாவில் தொடங்கினார்கள். தமிழகம் மட்டுமல்ல உலகெங்கிலும் இயற்கை வாழ்வாதாரங்களை பாதுகாப்பதற்காக நடந்த போராட்டங்கள் எல்லாமே அறப்போராட்டங்கள்தான். அறப்போராட்டங்கள்தான் வென்றிருக்கின்றன. அதை முழுமையாக நம்புகிறோம். முதலில் உங்களை ஏளனப்படுத்துவார்கள், ஒதுக்கி வைப்பார்கள் பிறகு உங்களோடு சண்டையிடுவார்கள், அடிப்பார்கள் பிறகு நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வார்கள் என்ற கோட்பாடு எனக்குத் தெரியும். அந்தவகையில் எங்களுக்கு மிகப்பெரிய உதாரணமே கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம்தான். துளி வன்முறைக்குக் கூட இடம் கொடுக்காமல் மக்கள் தங்களைத் தாங்களே மண்ணில் புதைத்துக்கொண்டு, தங்களைத் தாங்களே கடலில் இறங்கி மூழ்கி, உணவு உண்ணாமல் மரணப்போராட்டம் நடத்தி படகுகள் மூலமாக அணுஉலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி, உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி எந்தெந்த வகையில் எல்லாம் அறப்போராட்டம் நடத்தமுடியுமோ அவற்றையெல்லாம் பிரவேசித்து இன்று ஒரு பெரிய அறப்போராட்டத்தை நடத்தி காட்டியிருக்கிறார்கள். இனி இந்தியாவில் கூடங்குளம் அணுஉலை 1,2 முழுவதுமாக நிறுத்த முடியும் என்று நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம். ஏனென்றால் ஒரு செயலற்றுப்போன அணுஉலையில் தடம் புரண்ட உதிரி பாகங்கள் இருக்கின்றன.

அதை நாங்கள் உச்சநீதி மன்றத்திலும் எடுத்துவைத்துள்ளோம், போர்தளத்திலும் எடுத்துவைத்துள்ளோம். இனி இந்தியாவில் அணுஉலைகளை ஒரு புதிய இடத்தில் தொடங்குவது என்பது நிச்சயமாக ஒரு சவாலான செயல்தான். அதற்கு முக்கியமான காரணம் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம்தான். இந்தப் போராட்டம் அறவழியில் நடக்கும் போராட்டம்தான். எனக்கு இன்னமும் இந்திய மக்களாட்சியின் மீது நம்பிக்கை இருக்கிறது. நிச்சயமாக அறவழிப்போராட்டம் வெல்லும் என்ற நம்பிக்கையில்தான் நாங்கள் செயலாற்றிக்கொண்டிருக்கிறோம். நிச்சயமாக வன்முறையிலோ அல்லது வேறு வழியிலோ இந்தப் போராட்டம் நடந்தால் அரசுகள் ஒடுக்குவதற்கான அத்தனை காரணங்களையும் இயல்பாக சுலபமாக அடைந்துவிடும். அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை அரசுகளுக்குத் தராமல் ஒரு மிகப்பெரிய அறப்போராட்டம் மூலமாக நாம் வெல்லமுடியும் என்பதை கூடங்குளம் மட்டுமல்ல மீத்தேன், கெய்ல் பொன்ற பல்வேறு போராட்டங்கள் நிரூபித்துக்கொண்டிருக்கின்றன. உண்மையில் மக்கள் தம் வாழ்வாதாரங்களை இழப்போம் என்று சொன்னால் அந்தப்போராட்டம் அறப்போராட்டமாக நீடித்து நிலைத்தால் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியைத் தரும். இந்த தேசத்தின் மனசாட்சியை உலுக்கும், போராடுகின்ற மக்களை மாநில அரசும் சரி, மத்திய அரசும் சரி என்றைக்குமே ஏளனப்படுத்தும், அயல்நாட்டிடம் இருந்து பணம் வரும் என்று சொல்லும், நீங்கள் கிறித்துவர்கள் என்று சொல்லுவார்கள், நீங்கள் மீனவர்கள் என்று சொல்லுவார்கள், நீங்கள் தேச துரோகிகள் என்று சொல்லுவார்கள் ஆனால் அது எதைப்பற்றியும் கவலைப்படாமல் கொண்ட கொள்கையில், கொண்ட நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால் நிச்சயமாக அறப்போராட்டம் வெல்லும். இன்றில்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் மாநில அரசும் மத்திய அரசும் அடிபணிந்து மக்களுக்கான பதிலை சொல்லவேண்டிய ஒரு காலகட்டத்திற்கு நிச்சமாக வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கேள்வி: தமிழக நீர்நிலைகள் மற்றும் காடுகளின் நிலை பரிதாபமாக உள்ளது. நீர்நிலைகளை மீண்டும் மீட்டெடுத்து வளமான தமிழகத்தை அமைக்க என்ன வழிகள் உள்ளன?

poovulagu11பதில்: தமிழகம் ஒரு வான் சார்ந்த பூமி. வானத்தை நம்பியிருக்கிற ஒரு மண். அதனால்தான் நம்முடைய முன்னோர்கள், அரசர்கள், அதிகாரிகள், முன்னாள் இருந்த குடிமக்கள் எல்லோருமாக சேர்ந்து தமிழகத்தில் கிட்டத்தட்ட 39,700 நீர்நிலைகளை அமைத்திருந்தார்கள். இந்த அனைத்து நீர்நிலைகளும் குளம், குட்டை, கண்மாய், ஊரணி போன்ற பல்வேறு பெயர்களில் அறியப்பட்டு மிக மிக முக்கியமான பணியை செய்துகொண்டிருந்தன. ஒவ்வொரு நீர்நிலையும் மற்றொன்றுடன் இணைப்பதற்காக ஓடைகள் அமைக்கப்பட்டது. நீர் நிலை நிறைந்தால் அதை ஓடை எடுத்துக் கொண்டு அடுத்த நீர் நிலைக்கு செல்லும் இப்படியாக தமிழகம் முழுவதும் 2 லட்சம் ஓடைகள் இருந்தன. 35 நதிகள் தமிழகத்தில் இருந்தது. இதுதான் தமிழ்நாட்டின் பாசன குடிநீர் பரப்பு. மழை பெய்யும் பொழுது நீர்நிலைகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு கால்வாய் வழியாக வயலுக்குச் சென்று விவசாயம் நடக்கும். நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் நிலத்தடி நீர் நன்றாக இருக்கும். கிணறுகளில் நீர் நன்றாக இருக்கும். அதை எடுத்து விவசாயம் செய்வார்கள்.

இப்படித்தான் தமிழகத்தில் இயற்கையோடு இணைந்து நடந்துகொண்டிருந்தது. கடந்த 45 வருடங்களாக தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய ஒரு சூழல் சீர்கேடு நீர்நிலைகள் ஆக்கிரமிப்புதான். ஒரு பேருந்து நிலையத்தை குளத்து பஸ்ஸ்டாண்டு என்றே சொல்கிறார்கள், குளம் எப்படி பஸ்ஸ்டாண்டாக முடியும் என்று தெரியவில்லை. சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றம் என்ற இரு நீதிமன்றங்களும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து எந்த கட்டிடமும் கட்டக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறார்கள். ஒரு சில வழக்கில் தீர்ப்பும் வழங்கியிருக்கிறார்கள். ஆனால் மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளை இருப்பது ஒரு நீர்நிலைதான். மதுரையில் உள்ள மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ஒரு நீர்நிலைதான். நெல்லையில் இருக்கிற பேருந்துநிலையம் ஒரு நீர்நிலைதான். சென்னை முகப்பேரில் ஏரி ஸ்கீம் என்றே போட்டிருக்கிறார்கள். ஏரி எப்படி ஸ்கீம் ஆக முடியும் என்று தெரியவில்லை. இதை விட பெரிய அவமானமான விசயம் என்னவென்றால் நீரின்றி அமையாது உலகு என்று சொன்ன வள்ளுவனுக்கே ஒரு நீர்நிலையை அழித்துத்தான் வள்ளுவர் கோட்டம் கட்டியிருக்கிறோம் சென்னை நுங்கம்பாக்கத்தில்.

இப்படி எந்த விதமான முன்னெச்சரிக்கையும் இல்லாமல், ஒரு சிறு துளி கூட இயற்கை சார்ந்த அறிவு இல்லாமல், ஒரு உணர்வு இல்லாமல் தமிழகத்தில் உள்ள எல்லா நீர் நிலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு இன்றைக்கு 15,000 நீர்நிலைகள்தான் என்பது மிகப்பெரிய ஒன்றாக உள்ளது. அத்தனை ஓடைகளும் அழிக்கப்பட்டுவிட்டன, ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன. பெய்கின்ற மழையை தேக்கிவைத்து நமக்குத் தேவையான நீரை பயன்படுத்தி தேவையான விசயங்களை செய்வதற்குத்தான் நீர்நிலைகள் இருந்தன. ஆறுகளில் தண்ணீர் போகும் ஆற்றின் கீழ் இருக்கும் மணல் அந்த நீரை உறிஞ்சி நிலத்தடி நீரை சேகரித்து அதன் மூலம் பக்கத்திலுள்ள குளங்களில் நீர் கிடைக்கும். கடைசியில் கடலில் போய் கலந்து அது அந்தப் பகுதியில் என்னசெய்யவேண்டுமோ அந்தப்பணியை ஆற்றும். அதாவது ஆறு உற்பத்தியாகி ஓடி அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு நீரைக் கொடுத்து கடலில் சென்று கலக்கவேண்டும். கலந்துதான் ஆகவேண்டும் இதுதான் இயற்கை செய்திருக்கிற ஒரு விடயம். நாம் ஆற்றிலிருக்கும் எல்லாவற்றையும் மணல் சுரங்கங்களாகக் கருதி மணல் முழுக்க எடுத்துவிட்டோம். நிலத்தடி சேகரிப்பு ஆவது நடக்கமுடியவில்லை.

poovulagu13இப்படி நீர் குறித்த பார்வையே இல்லாமல் மிகவும் அலட்சியமாக போனதின் விளைவு சமீபத்தில் சென்னையில் பெய்த மழை 35 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. ஆனால் சென்னை குளங்களில் உள்ள நீரின் அளவு சென்ற ஆண்டை விட ஐந்து மடங்குதான் அதிகரித்துள்ளது. மீதம் எல்லாநீரும் விரயமாகிவிட்டது, என்ன ஆனதென்றே தெரியவில்லை. கடலில் போய் வீணாக கலப்பது என்ற வார்த்தைக்கு எதிரானவன். அப்படி ஒரு வார்த்தையே கிடையாது என்றுதான் சொல்வேன். கடலில் போய் நீர் சேர்ந்தால்தான் அதற்குரிய சூழலியல் செயல்பாடுகள் நடக்கும். ஆற்று மணலிலிருந்து தண்ணீரை மெதுமெதுவாக அனுப்பி குளங்களில் தேக்கிவைக்கப்பட்ட பழக்கங்கள் எல்லாம் அழிந்து போய் இன்றைக்கு ஒட்டுமொத்த நீரும் கிடைக்காமல் போய்விட்டது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் எங்களுக்கு சில நம்பிக்கை தரக்கூடிய செயல்கள் சேலம் பகுதியில் சில நண்பர்கள், சென்னையில் அருண் போன்றவர்கள், மதுரையில் சில நண்பர்கள், பெரம்பலூர் ரமேஷ்கருப்பையா போன்றவர்கள், இராமநாதபுரத்தில் சிலர், திருச்சியில் வினோத் போன்றவர்கள் இப்படி தனி நபர்களாக சிறு சிறு அமைப்புகளாக நீர்நிலை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள்.

அவர்களுடன் சேர்ந்து பூவுலகின் நண்பர்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நீர் நிலைகளைப் பாதுகாப்பதற்கான அவசியத்தை வலியுறுத்திக்கொண்டிருக்கிறோம். மக்களிடத்தில் மிகப்பெரிய பிரச்சாரத்தைக் கொண்டு சென்றிருக்கிறோம். நீர்நிலைகளை பேணிப்பாதுகாப்பது, நீர்நிலைகளை மீட்டெடுப்பது குறித்து மிகப்பெரிய இயக்கம் வரும் சனவரி மாதம் அறிவிக்கலாம் என்று முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். தண்ணீர் ஒரு பொது சொத்து. தண்ணீர் விற்பனை பண்டம் அல்ல. Water is the resource, it’s not a  commodity என்ற பார்வையில் தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு இயக்கத்தை வரும் சனவரி மாதம் முதல் தொடங்கி தண்ணீர் இல்லை என்றால் இந்த உலகத்தில் வாழமுடியாது என்ற அடிப்படை விசயத்தை உணர்த்தி மிகப்பெரிய பிரச்சாரத்தை இயக்கி செயல்படுத்தப்போகிறோம். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டிருந்த மக்களையும், சாதாரண மக்களையும் நிச்சயமாக தண்ணீர் என்கிற ஒரு பிரச்சனையில் ஒருங்கிணைக்கும் என்று நம்புகிறோம், நிச்சயமாக செயல்படுத்துவோம்.

கேள்வி: தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நாங்கள் உணருகிறோம். இனி தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது?

sundarrajan8பதில்: தமிழகத்தின் அரசியல் சூழலில் அதாவது ஓட்டெடுப்பு அரசியலில் நாங்கள் பேசுவது சூழலியல் அரசியல்தான். எல்லாமே அரசியல்தான், ஒரு கல்லூரியில் ஆசிரியருக்கும் துணைத்தலைவருக்கும் உள்ளது அரசியல்தான். நாங்கள் பேசுவது ஓட்டரசியல். ஓட்டரசியல் விசயத்தில் வெற்றிடம் இருப்பதாக இந்த மண்ணில் கால் ஊன்றத் துடித்துக்கொண்டிருக்கும் மதவாத சக்திகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அதற்குக் காரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள். ஊழல் வழக்கில் சிறைதண்டனை பெற்று சிறையில் இருப்பது தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஊழல் செய்யத்துடிக்கும், தமிழ்நாட்டில் காலூன்றத்துடிக்கும் பா.ஜ.க போன்ற கட்சிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆமாம் நிச்சயமாக ஒரு வெற்றிடம் உள்ளது, அதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை. ஜெயலலிதா செய்த குற்றத்திற்கு நிச்சயமாக தண்டனை பெற்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார் அதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

ஆனால் இதை பயன்படுத்தி பெரியார் பிறந்த மண்ணில் நிச்சயமாக மதவாத சக்தியான பாரதிய ஜனதா காலூன்ற முடியாது. ஆனால் இந்த நேரத்தில் மாற்று அரசியலைப் பேசக்கூடிய கட்சிகள், மாற்றுப் பொருளாதாரத்தை பேசக்கூடிய கட்சிகள், மாற்று வளர்ச்சியைப் பேசக்கூடிய கட்சிகள், மாற்று சிந்தனையைப் பேசக்கூடிய கட்சிகள் இவையெல்லாம் ஒன்றிணைந்து அந்த வெற்றிடத்தை நிரப்பவேண்டும் என்பதுதான் எங்களுடைய விருப்பம். ஈழப்பிரச்சனையாகட்டும், இடஒதுக்கீடு பிரச்சனையாகட்டும், சாதீய பிரச்சனையாகட்டும், சூழலியல் சார்ந்த பிரச்சனைகளாகட்டும், காவேரி – முல்லைப் பெரியாறு போன்ற வாழ்வாதார பிரச்சனையாகட்டும், அணுஉலை நியூட்ரினோ மீத்தேன் போன்ற பிரச்சனைகளாகட்டும் இவை எல்லாவற்றிலும் ஒற்றைக் கருத்துடைய அரசியல் இயக்கங்கள், சமூக அமைப்புகள் எல்லாம் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. இந்தத் தருணத்தை விட்டுவிட்டோமானால் தமிழகத்தில் வளர்ச்சி இல்லை.

திராவிடக்கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு மிகப்பெரிய மோசடி செய்துவிட்டார்கள் என்று பிரச்சாரம் செய்து ஊடகங்களை துணைக்கு அழைத்துக்கொண்டு தமிழகத்தில் காலூன்றுவதற்கு மதவாதகட்சியான பாரதியஜனதா தயாராக உள்ளது. அந்த முயற்சியை முறியடிக்கவேண்டும் என்றால் காங்கிரசு, பா.ஜ.க இல்லாத அ.தி.மு.க, தி.மு.க. இல்லாத திராவிடம் பேசுகின்ற சாதியமறுப்பு கொள்கையுடைய, சமூக நீதியைக் காப்பாற்றுகின்ற, சூழலியல் பார்வை கொண்ட அரசியல் அமைப்புகள், சமூக அமைப்புகள் எல்லாம் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்தித்து மக்களிடத்தில் இதனைக் கொண்டு சென்றால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். நிச்சயமாக ஒரு மாற்று தேவைப்படுகிறது.

மாற்று என்பது நன்மைக்காகமட்டுமே ஒழிய தமிழகத்தை இன்னும் ஐம்பதாண்டுகள் பின்னோக்கி இட்டு செல்வதாக இருக்கக்கூடாது. முக்கியமாக என் அச்சமே தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஊழல் கட்சிகள் என்று செய்யப்படும் பிரச்சாரம் அதில் மாற்றுக்கருத்து கிடையாது, பா.ஜ.க-வும் காங்கிரசும் இதில் எந்த விதத்திலும் குறைந்த கட்சிகள் இல்லை. ஊழல் செய்வதிலோ மதச்சார்பற்ற விசயங்களிலோ பா.ஜ.க.விற்கும் காங்கிரசுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஆனால் இன்றைக்கு தமிழகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல் தேசிய கட்சிகளை நிச்சயமாக தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இருக்கின்ற மாநில கட்சிகள் மீது மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இந்த இரண்டையும் வைத்துப் பார்க்கும் போது நிச்சயமாக உண்மையான வளர்ச்சியை மக்களுக்குத் தர இருக்கின்ற மாற்று அரசியல் கட்சிகளுக்கு மிகப்பெரிய தேவை இருக்கின்றது. பூவுலகின் நண்பர்களின் அமைப்பு ஒரு ஓட்டரசியல் சாராத அமைப்பு. ஆனால் தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் சமூக அமைப்புகள், சூழலியல் குறித்த விசயங்களில் நாங்கள் ஒன்றாக இணைந்து வேலைபார்த்துக் கொண்டிருக்கிறோம். உதாரணமாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, STPI, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து நாங்கள் வேலைபார்த்துக் கொண்டிருக்கின்றோம். சூழல் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்றோடொன்று கைகோர்த்து நின்று கொண்டிருக்கிறோம். எங்களுடைய விருப்பம் எல்லாம் இன்றைக்கு மாற்று அரசியலைப் பேசிக்கொண்டிருக்கின்ற அனைத்து கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் அதற்கான முயற்சியை எந்தக் கட்சி மேற்கொண்டாலும் நிச்சயமாக நாங்கள் துணை இருப்போம்.

கேள்வி: தமிழீழ சிக்கலில் தமிழகத்தில் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு நிலை எடுத்து குழப்பி வருகின்றன. ஒரே நிலையில் போராட இதற்கு என்ன வழி?

tamileelam1பதில்: தமிழீழ சிக்கலில் தேசிய கட்சிகளைத் தவிர அநேகமாக தி.மு.க.வும் சரி, அ.தி.மு.கவும் சரி பேரளவில் என்றாலும் கூட “ஈழ மக்கள் தங்களுடைய எதிர்காலத்தை தங்களுடைய வாழ்க்கையை ஒரு சர்வதேச வாக்களிப்பின் மூலம் தீர்மானிக்க வேண்டும் அதுதான் சரியான முறையாக இருக்கமுடியும்” என்ற முடிவிற்கு அனேகமாக தேசியகட்சிகளான பா.ஜ.க., காங்கிரசைத் தவிர தமிழகத்தில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் வந்துவிட்டதாக நாங்கள் கருதுகிறோம். உதாரணமாக ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, STPI போன்ற பல்வேறு கட்சிகள் ஒற்றுநிலைப்பாடாக தமிழீழ மக்களின் தீர்வு ஈழம்தான் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள்.

அ.தி.மு.க-வும் பெயரளவில் நின்றாலும் கூட சட்டமன்றத்தைக் கூட்டி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இலங்கை அதிபர் ராஜபக்சே மீது இனப்படுகொலை குற்றச்சாட்டை சுமத்தி சர்வதேச விசாரணை தேவை என்று தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியிருக்கிறார்கள். தி.மு.கவும் அவ்வப்போது ஈழம்தான் தீர்வு என்றும், மக்களுக்கு தேவை வாக்கெடுப்பு என்றும் சொல்லிவருகிறார்கள். இவை எல்லாமே ஒற்றைப்புள்ளியில் நிற்கின்றன. அந்த மக்களின் எதிர்காலத்தை வாழ்வாதாரத்தை அவர்கள் தீர்மானிக்க வேண்டும், சர்வதேச வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். வெவ்வேறு குரல்களில் பேசுவதற்குக் காரணம் அவர்களை சார்ந்து இருக்கின்ற அரசியல் கூட்டணிகள்தான். பா.ஜ.க வந்தால் வேறு மாதிரி பேசுவது, காங்கிரசு வந்தால் வேறு மாதிரி பேசுவது போன்ற ஓட்டெடுப்பு அரசியலில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சில எம்.எல்.ஏக்களின் பதவிகளையும் எம்.பிகளின் பதவிகளையும் பிடிக்கவேண்டும் என்பதற்காகத்தான் அவர்களின் குரலில் மாற்றம் இருக்கலாமே ஒழிய நிச்சயமாக அவர்கள் ஒற்றைப் புள்ளியில் இணைவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

maaveerar dhinam4இதற்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் எப்பவுமே சொல்வார்கள் ஓட்டெடுப்பு அரசியலுக்கு போய்விட்டால் நீ இறங்கி வரவேண்டியிருக்கும் நீ ஓட்டெடுப்பு அரசியலுக்கு போகாதே என்று சொல்லுவார். நாங்கள் அதை முழுமையாக நம்புகிறோம். நீங்கள் ஓட்டெடுப்பு அரசியலுக்கு உள்ளே போய்விட்டீர்கள் என்றால் உண்மையான விடுதலையை வெல்ல முடியாது. பெரியார் அவர்கள் கேட்டது விடுதலை. முதலமைச்சர் பதவியோ, பிரதமர் பதவியோ, நகராட்சி பதவியோ வேண்டும் என்று அல்ல. பெரியார் புகைப்படத்தைப் போட்டுக்கொண்டு இன்றைக்கு முதலமைச்சர் பதவியை பிடிப்பதற்காகத்தான் மக்கள் அலைகிறார்களே ஒழிய உண்மையில் அவர் கேட்ட விடுதலையை தமிழக மக்களுக்கும் தமிழீழ மக்களுக்கும் வாங்கித் தருவதற்கான முன்முயற்சியில் எந்த கட்சியும் ஈடுபடவில்லை என்பதுதான் எங்களது மிகப்பெரிய மனக்குறை. வரும் காலங்களில் அதற்கான தேவைகள் நிச்சயமாக இருக்கின்றன. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் சூழல், சமூக பொருளாதார சூழலியல், சிக்கல்கள் நிச்சயமாக ஒரு மாற்று அரசியலை முன்னெடுப்பதற்கான ஒரு சூழலை உருவாக்கும். தமிழகத்தில் அது சார்ந்து வேலை செய்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த ஒரு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு தமிழக மக்களின் உண்மையான நியாயங்கள் குறித்து ஈழப்பிரச்சனைகள் குறித்து நிச்சயமாக ஒரு நல்ல தெளிவான முடிவிற்கு வருவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

கேள்வி: தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் என்னென்ன முன்னேற்றங்கள், பெருமைக்குரிய செயல்கள் நடைபெற்று வருகின்றன. அது குறித்து தங்கள் கருத்து என்ன?

sundarrajan5பதில்: தமிழகத்தில் முக்கியமாக மேற்கு மாவட்டங்கள் ஏழு மாவட்டங்கள் உள்ளன. ஈரோடு, சேலம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி போன்ற ஏழு மாவட்டங்களின் வழியாக கெய்ல் நிறுவனம் மிகப்பெரிய இயற்கை எரிவாய்வு குழாய்களை பதித்து கேரளாவிலிருந்து பெங்களூருக்கு எடுத்து செல்லவேண்டும் என்ற திட்டத்தைத் தீட்டியது. அது விவசாய நிலங்களை மிகப்பெரிய அளவில் பாதிக்கும் என்று மக்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். அந்த குழாய்கள் பிடுங்கி எறியப்பட்டன. மாநில அரசும், மத்திய அரசும் மிகப்பெரிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது மக்களின் மீது. மக்களின் தொடர் போராட்டங்களால், மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வால் மிகப்பெரிய நிலைப்பாடு எடுத்து வழக்கு போட்டு அந்தத் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார்கள். அது மக்களிடத்தில் சூழலியல் செயல்பாடுகளுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம். மீத்தேன் திட்டம் தற்காலிகமாக ஆனாலும் கூட அதுவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுற்றுச்சூழல் குறித்த போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம். கூடங்குளம் அணுஉலை போராட்டமாக இருந்தாலும் சரி, கல்பாக்கம் அணுஉலை போராட்டமானாலும் சரி தமிழக மக்களிடத்தில் மிகப்பெரிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. அணுஉலை சார்ந்த ஒரு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகமக்களுக்கு அணுஉலை இல்லாமல் மின்சாரம் வழங்கக்கூடிய வழிவகைகளை இன்று ஒவ்வொரு நாளிதழும், ஒவ்வொரு வார இதழும், ஒவ்வொரு தொலைக்காட்சியும் ஆய்வு செய்துகொண்டிருக்கின்றன. அதற்கெல்லாம் முக்கியமான காரணம் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம்தான்.

sundarrajan10இதைத் தவிர இயற்கை உணவு சார்ந்து சிறுதானியம் சார்ந்து தமிழகமக்களிடையே ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய விழிப்புணர்வு, நீர் நிலைகள் பாதுகாப்பு. மற்றும்இன்றைக்கு துரித உணவு என்று சொல்லப்படுகின்ற நூடுல்ஸ், பிட்சா, டோனட்ஸ் போன்றவைக்கு எதிராக தமிழக மக்களிடத்தில் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதில் முக்கியமாக கே.எப்.சி. சிக்கன்ஸ், பெப்சி, கோக் போன்ற அயல்நாட்டு சர்வதேச துரித உணவு குளிர்பானங்களுக்கு எதிராக மக்களிடத்தில் மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது அனைத்துமே தனிநபர் சார்ந்ததே தவிர அத்தனையும் கூட்டு முயற்சியாக வந்து அரசியலுக்கு எதிரான போராட்டவடிவமாக நடைபெறவில்லை. அதற்கான புறச்சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது என்று நம்புகிறோம். நிச்சயமாக கூடிய விரைவில் தண்ணீர் பிரச்சனையை வைத்து ஒட்டு மொத்த தமிழகமும் சூழலியல் சார்ந்த பார்வைக்கு மாறும்படி மிகப்பெரிய அறப்போராட்டத்திற்குத் தமிழகம் தயாராக வேண்டும். அப்படிப்பட்ட புறச்சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது. நிச்சயமாக நாங்களும் அதற்கான வேலைகளில், மக்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம், ஈடுபடுவோம். அதற்கான விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம் என்று நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

கேள்வி: மரபணு காய்கறிகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற தாங்கள் கூறும் அறிவுரை என்ன?

sundarrajan6பதில்: மரபணு காய்கறிகள் இந்தியாவில் அதிகப்படுத்தப்படுகின்றன என்ற செய்தி வந்த 2008-09 ஆண்டுகளில் நாங்கள் உடனடியாக தமிழகத்தில் உள்ள முக்கியமான அரசியல் கட்சிகள், முக்கியமான விவசாயிகளை சந்தித்து அதன் தீங்குகள் குறித்துப் பேசி மக்களிடத்திலே ஒருமித்த கருத்தை உருவாக்கி அப்பொழுது தமிழக முதல்வராக இருந்திருந்த மதிப்பிற்குரிய கலைஞர் கருணாநிதி அவர்களை எங்கள் அமைப்பைச் சேர்ந்த மருத்துவர் சிவராமன் அவர்கள் நேரில் சந்தித்து அதில் ஏற்படக்கூடிய தீமைகள் குறித்து விரிவாகப் பேசி, அவர்களும் அப்பொழுது சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ்அவர்களிடத்தில் எடுத்துச் சொல்லி அந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது இது 2009 ம் ஆண்டுகளில் நடந்தது. அதன் பிறகு பல்வேறு பிரச்சாரங்கள் முன்னெடுத்துச் சென்று இன்றைக்கு மரபணு குறித்த முக்கியமான பார்வை தமிழகத்தில் இருந்து வந்ததற்கான முக்கியமான காரணம் தமிழகத்தின் விவசாய சங்கம், தமிழகத்தின் இயற்கை விவசாய சங்கம், பூவுலகின் நண்பர்களிலிருந்து மருத்துவர் சிவராமன், செல்வம், பல்வேறு திரையுலக பிரமுகர்கள், கலைஞர்கள் அனைவருமே இணைந்து இந்த மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு எதிராக குரல்கொடுத்திருக்கிறார்கள். அதில் ஒரளவிற்கு வெற்றியும் கண்டிருக்கிறோம். தமிழக அரசு, மத்தியஅரசே மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதித்தாலும் தமிழகத்தில் அதற்குண்டான களப்பரிசோதனையோ, அதற்குண்டான வணிகரீதியான உற்பத்தியோ செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக நாங்கள் பார்க்கிறோம்.

sundarrajan17ஆனால் அதே நேரத்தில் தமிழக விவசாயிகளும், தமிழக அரசும் விவசாய அமைப்பும் சேர்ந்து முன்னெடுக்க வேண்டிய முக்கியமான பணி தமிழகத்தில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் இல்லாமல் நமக்குத் தேவையான காய்கறிகளை, உணவுவகைகளை, சிறுதானியங்களை நாமே விளைவித்து நமக்குத் தேவையான அளவில் பயிரிட்டு விற்பனை செய்து விவசாயத்திற்கும் சரியான விலை கிடைத்து அதை ஒருங்கிணைக்கக்கூடிய ஒரு வகையில் செய்தால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். தமிழகத்திற்குத் தேவையான உணவு தமிழகத்திலேயே தயாரிக்கப்படவேண்டும், அந்தந்த நகரங்களுக்குத் தேவையான உணவு அந்தந்த நகரங்களுக்கு அருகிலே தயாரிக்கப்பட வேண்டும், அந்தந்த கிராமங்களுக்குத் தேவையான உணவு அந்தந்த கிராமங்களுக்கு அருகிலேயே தயாரிக்கப்பட வேண்டும். நம்மாழ்வார் ஐயா சொன்னது போல் food should be produced, distributed, and consumed locally என்பது மெய்பட வேண்டும். நமக்குத் தேவையான உணவை இயற்கை முறையில் சுகாதாரத்தைக் கெடுக்காமல் எந்த விதமான பூச்சிக்கொல்லிகளோ உரங்களோ பயன்படுத்தாமல் சிறுதானிய உணவாக இருந்தால் தமிழகம் ஒரு ஆரோக்கியமான மக்கள் கொண்ட தமிழகமாக மாறும். அதற்கு உண்டான முயற்சிகளில் நாங்கள் இறங்கிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து செய்துகொண்டிருப்போம்.

கேள்வி: சமூக பிரச்சனைகளுக்காக தாங்கள் போராடும் பொழுது களத்தில் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்தித்துள்ளீர்கள்?

sundarrajan9பதில்: சொல்வதற்கு நிறைய அவமானங்கள்தான் மிஞ்சியிருக்கிறது என்று சொல்லலாம். நிறைய அவமானப்பட்டிருக்கிறோம், தேசத் துரோகிகள் என்று சொல்வார்கள், அயல்நாட்டிலிருந்து பணம் வரும் என்று சொல்வார்கள், நாங்கள் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் சார்பாக ஐம்பது கேள்விகள் அரசிடம் கேட்டோம். அந்தக் கேள்விகளைப் படித்துவிட்டு அவர்கள் சொன்ன பதில் கேள்விக்கு பதில் அல்ல, இந்தக் கேள்விகளை அமெரிக்காவிலிருந்து யாரோ எழுதிக்கொடுத்திருக்கிறார்கள் என்று சொன்னார்கள். கூடங்குளம் அணுஉலை கழிவுகளை நீங்கள் எங்கு கொண்டு வைப்பீர்கள் என்று கேட்டோம். அதற்கு நீங்கள் கிறித்துவர்கள் என்றார்கள். கூடங்குளம் அணுஉலை விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு ஏற்பார்கள் என்று கேட்டோம் அதற்கு நீங்கள் அந்நிய நாட்டிலிருந்து பணம் வாங்கிக்கொண்டு போராடுகிறீர்கள் என்று பதில் சொன்னார்கள். கூடங்குளம் அணுஉலையில் ஒரு நாளைக்கு நான்காயிரம் கோடி லிட்டர் பயன்படுத்திய நீர் கடலில் கலக்கப்போகிறதே அது எப்படி அங்கு எதுவும் முளைக்காதே அதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் என்று கேட்டோம், அதற்கு நீங்கள் மீனவர்கள் உங்களுக்கெல்லாம் அறிவு கிடையாது என்று சொன்னார்கள். நாங்கள் கேட்கின்ற கேள்விகள் வேறு, அதற்கு அவர்கள் சொல்கின்ற பதில்கள் வேறு.

அரசியலுக்கும் பெருமுதலாளிகளுக்கும் எப்பொழுதுமே மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை என்றால் அவர்களது சுலபமான வழி, இவர்கள் நக்சலைட்டுகள், இவர்கள் அந்நிய கைக்கூலிகள், அந்நிய நாட்டிலிருந்து பணம் வாங்கிக் கொண்டு போராடுகிறார்கள் என்று சுலபமாக ஒரு முத்திரையை மக்கள் மீது திணிப்பதற்கு ஊடகங்களும் அதற்குத் துணைபுரிவதற்குத் தயாராக நிற்கின்றன. கடந்த 3,4 வருடங்களாக நாங்கள் சந்தித்த அவமானங்கள், சந்தித்த பிரச்சனைகள் சொல்வதென்றால் ஒரு நாள் போதாது. எனக்குத் தனிப்பட்ட முறையில் நிறைய அவமானங்கள் நேர்ந்திருக்கின்றன. 2012ல் மதுரையில் ஒரு கூட்டத்தில், கூடம்குளம் அணுஉலை சார்பாக பேசிக்கொண்டிருக்கும் பொழுது இத்தனைக்கும் அங்கிருந்த அனைவருமே படித்தவர்கள், ஓரளவிற்கு வசதி வாய்ப்புள்ளவர்கள் தான் இருந்தார்கள். நான் கூடம்குளம் அணுஉலைத் தொடர்பான பிரச்சனைகளை பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஒருவர் எழுந்து யார் செத்தால் எனக்கென்ன? எனக்கு மின்சாரம் வேண்டும் என்று சொன்னார். அது எனக்கு மிகபெரிய அதிர்ச்சியாக இருந்தது. யார் செத்தாலும் பரவாயில்லை, எனக்கு மின்சாரம் தேவை என்று சொல்லக்கூடிய ஒரு கூட்டத்தில் நான் பேச விரும்பவில்லை என்று சொல்லி இறங்கி வந்துவிட்டேன்.

இதைப்போன்று நான் சாலையில் செல்லும் போது கைநீட்டி பேசுவார்கள், அந்நிய நாட்டிலிருந்து பணம் வாங்குகிறார் என்று சொல்லுவார்கள். எவ்வளவு சிரமங்களுக்கு இடையிலும் பூவுலகு இதழ் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் பொழுதும் இவர்களுக்கு என்ன கடலில் பேப்பர் போடுகிறார்கள், அமெரிக்காவில் பணம் வந்துவிட்டது என்று சொல்வார்கள். இதைப்போன்ற அவமானங்கள், இதைப்போன்ற சொல்லாடல்கள், முகநூல்களில் மிகவும் மோசமாக கேவலமாக திட்டி எழுதுவார்கள், அதற்குத் துணைபோவதற்கே சில பத்திரிகைகள் இருக்கிறது அதில் எழுதுவார்கள், ஆனால் உண்மையில் மக்களின் உறுதிதான் இந்தப் போராட்டத்தில் நிற்கவைக்கிறது. அமெரிக்காவிலிருந்து பணம் வாங்கியதாக ஒரு வழக்குக் கூட கிடையாது. நாங்கள் அதுதான் கேட்கிறோம் உண்மையிலேயே அமெரிக்காவிலிருந்து பணம் வந்தது என்றால் யார் கொடுத்தது என்ன என்று வழக்கு போடுங்கள், யார் தவறு செய்தார்களோ அவர்களை தண்டியுங்கள், யார் வேண்டாம் என்று சொன்னார்கள், சும்மா வந்து பணம் வந்துவிட்டது பணம் வந்துவிட்டது என்று சொன்னால் பணம் வந்த முறையைக் காட்டுங்கள், உங்களுக்குத்தான் AB இருக்கிறது,CBI இருக்கிறது, RAW இருக்கிறது உங்களிடத்தில்தான் ஆங்கிலத்தில் உள்ள அனைத்து எழுத்துக்களிலும் ஏஜென்சி வைத்திருக்கிறீர்கள், தமிழில் இருக்கும் எல்லா உயிரெழுத்துகளிலும் நிறுவனம் வைத்திருக்கிறீர்கள் அதைக் கண்டுபிடியுங்கள், கைது செய்யுங்கள், தயவுசெய்து கைதுசெய்யுங்கள், எந்த அந்நிய நாட்டிலிருந்து யாருக்கு பணம் வந்தாலும் கைதுசெய்யுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.

இதைப்போன்ற பிரச்சாரங்களை மக்களிடத்தில் சொல்லாமல் மக்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு உண்மையான பதில்களை நீங்கள் சொல்லவேண்டும். ஆனால் நாங்கள் கற்றுக்கொண்ட பாடம் என்றைக்கு உண்மைக்கு பக்கபலமாக இருக்கிறீர்களோ, என்றைக்கு மக்களுக்கு பக்கபலமாக இருக்கிறீர்களோ அன்றைக்கு உங்களது அரசுகளும் பெரும் முதலாளிகளும் நிச்சயமாக எதிரியாகத்தான் பார்ப்பார்கள், உலகத்தின் மிகப்பெரிய பயங்கரவாதம், எந்த பயங்கரவாதமும் அல்ல அரச பயங்கரவாதம் மட்டுமே. அதை நாங்கள் உணர்ந்துகொண்டோம். தொடர்ந்து நாங்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் மீது, எங்களின் மீது மக்களை சந்தேகப்படவைப்பது, போராட்டத்தின்போது மக்களைப் பிரிப்பது, எவ்வளவோ செய்துபார்த்தார்கள், என்னென்னவோ செய்துபார்த்தார்கள், ஆனால் அந்தப் போராட்டத்தில் உண்மை இருந்ததால் இன்றைக்கும் இந்த அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இன்றைக்கும் அந்நிய உளவாளி அந்நிய சிக்கல் இவைகளை நம்புவதற்கு மக்கள் தயாராக இல்லை. எவ்வளவு அவமானப்பட்டாலும் நாங்கள் சொல்வதில் உண்மை இருப்பதால் நாங்கள் அதைப்பற்றி கவலைப்படுவதுமில்லை.

கேள்வி: இறுதியாக தமிழக மக்களுக்கு தாங்கள் கூறும் கருத்து யாது?

sundarrajan12பதில்: தமிழர்களைப்போல் இயற்கையை நேசித்த சமூகம் உலகத்தில் இல்லை என்றே சொல்லலாம். மரம் சார் மருந்தும் கொள்ளார் என்று சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் வருகிறது. மரத்தில் கிடைக்கின்ற பழங்களை வைத்து நோயை குணப்படுத்தமுடியுமென்றால் குணப்படுத்து, இந்த மரத்தில் இருக்கிற இலைகளைப் பறித்து கசாயம் காய்ச்சி நோய்களை குணப்படுத்த முடியுமென்றால் குணப்படுத்து ஆனால் மரத்தை வெட்டித்தான் நான் வாழவேண்டும் என்றால் என்னை சாகவிடு மரத்தை வாழவிடு என்று சொன்ன ஒரு சமூகம் தமிழ்ச்சமூகம். இன்றைக்குத்தான் உலகத்தில் உள்ள நாளிதழ்கள் எல்லாம் மனிதநேயம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஈராயிரம் வருடத்திற்கு முன்பே தமிழர்கள் உயிர் நேயம் பற்றி பேசியிருக்கிறார்கள். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை என்று சொன்னது ஒரு தமிழன்தான். எந்த ஒரு சேக்ஸ்பியரும் இல்லை, எந்த ஒரு Words Worth-தும் இல்லை. நிலத்தோடு நீர் என்று சொன்னது புறநானூற்று விளக்கம்.

நீரும் நிலமும் சேர்ந்ததுதான் உணவு என்று உணவிற்கு விளக்கம் கொடுத்தது புறநானூறு. இதேபோன்று இயற்கையை நேசித்த ஒரு சமூகம் இன்று மிகப்பெரிய அவலநிலையில் சிக்கியிருக்கிறது. இயற்கையை நேசித்த சமூகங்களை உலக வரலாற்றில் விட்டுவைத்ததாக வரலாறே கிடையாது. தென்அமெரிக்காவை சேர்ந்த மாயன் இனத்தவரானாலும் சரி, வடஅமெரிக்காவை சேர்ந்த சிவப்பு இந்தியனானாலும் சரி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அபாரிசனாலும் சரி உலக வரலாற்றில் எப்பவுமே இயற்கையை நேசித்த இனங்களை விட்டு வைத்ததாக சரித்திரமே கிடையாது. இன்றைக்கு உலகத்திலுள்ள பழமை பூர்வகுடிகளில் எஞ்சியிருக்கிற பூர்வகுடிமக்கள் தமிழகமக்கள் தான். உலகத்தில் எல்லாரும் சேர்ந்து தமிழகத்தை எந்தவகையிலாவது ஈழத்தினாலும் சரி மற்றவிதத்தினாலும் சரி, தமிழர்களை விட்டுவைக்கக்கூடாது தமிழர்கள் இயற்கையோடு இசைந்த வாழ்க்கையை வாழ்ந்தால் அந்த இயற்கை வளங்கள் எல்லாம் பத்திரமாகப் பாதுகாக்கப்படும். அந்நிய நாட்டு முதலாளிகளுக்கு அது கிடைக்காது என்ற ஒற்றைக் காரணத்தோடு தமிழர்களை அழித்து ஒழிப்பதற்கான முயற்சியில் உலகநாடுகள் இறங்கியுள்ளன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் தமிழக மக்கள் தமிழ்ச்சூழலில் சூழலியல் சார்ந்த வாழ்க்கையில் எப்படி வாழவேண்டும், அந்நிய முதலாளிகளுக்கும் பெருமுதலாளிகளுக்கும் கைகூடாமல் சூழலோடு இசைந்த வாழ்க்கையை தன்னிறைவு பெற்ற வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று நாம் பார்க்க வேண்டும்.

காந்தி மீது சில விமர்சனங்கள் இருந்தாலும் அவர் சொன்ன பொருளாதாரக்கோட்பாடுகள் மீது அதிகமாக நம்பிக்கைக் கொண்டவன் நான். India does not require mass production india request production by masses என்று சொன்ன ஜே.சி.குமரப்பாவின் கிராமியப் பொருளாதாரம் தமிழகமக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொருளாதார முறை, ஒரு வாழ்வியல் முறை. தமிழகம் எப்படி செல்லவேண்டும் என்றால் அதற்கான விடை அவர் சொன்ன தத்துவத்தில்தான் அடங்கியுள்ளது. அப்படி சூழலியல் கிடைக்காத இயற்கை வளங்களைப் பாதுகாக்கின்ற வாழ்வியல் முறைக்கு தமிழகம் தயாராகி நிச்சயமாக முன்னெடுத்தால் உலகத்தில் உள்ள மனித குளத்திற்கு தமிழக மக்கள் ஒரு எடுத்துக்காட்டாக விளங்க முடியும் என்ற நான் நம்புகிறேன்.


சிறகு சிறப்பு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன்– நேர்காணல்”

அதிகம் படித்தது