மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தானியங்கி விமானங்கள் பாகம்-2

விவேக் கணேசன்

Dec 13, 2014

இசுரேல்:

thaaniyangi1எழுபதுகளில் அமெரிக்கா தானியங்கி விமானங்களை உழவு மற்றும் கண்காணிப்பு வேலைகளுக்காக பரிசோதித்து வந்தாலும் இசுரேலானது போர்தளவாடங்களின் ஓர் பகுதியாக தானியங்கி விமானங்களை பயன்படுத்தத் தொடங்கியது. முதல் உலகப்போரிலிருந்தே தானியங்கி விமானங்கள் இலக்குகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதாவது விமானங்கள் குறிபார்த்து அடிக்கும் இலக்குகளாக பயன்படுத்தப்பட்டுவந்தது. 1973ம் ஆண்டு நடந்த yom kippur போரில் இசுரேலுக்கு தானியங்கி விமானம் தேவைப்பட்டது. எகிப்து நாட்டின் ராடார் கருவிகளைக் கண்டறிய தானியங்கி விமானம் பறக்கவிடப்பட்டது. அந்தத் தானியங்கி விமானங்கள் பின்னால் சென்ற போர்விமானங்கள் ராடார் கருவிகளை அழித்தன. மிகச் சிறந்த வின்வெளி அறிவியல் நிபுனரான Abe Karim மிகச்சிறந்த இசுரேலிய வின்வெளி பொறியாளர். ஒரே மாதத்தில் தனது குழுவினருடன் இணைந்து இத்தகைய விமானத்தைத் தயாரித்தார். ஆனால் அது பெரிதாக போரில் பயன்படுத்தப்படவில்லை. இதனால் வெருப்புற்று அமெரிக்காவிற்குக் குடிபுகுந்து தானியங்கி விமானங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றைத் துவங்கினார்.

thaaniyangi2கரீம் அமெரிக்காவில் வந்து இறங்கிய பொழுது அந்த நாட்டில் தானியங்கி விமான தொழில்நுட்பம் கிட்டத்தட்ட கைவிடப்பட்டிருந்தது. அதற்கான காரணங்களாக நம்பகமற்ற தன்மை, கட்டுப்படுத்த இயலாமை, அதீத செலவு, திடீரென நொறுங்குதல் போன்றவை கூறப்பட்டன. மிகச் சிறிய குழுவினைக் கொண்டு கரீம் இதனை மாற்ற முற்பட்டார். Albatross என்ற 56 மணிநேரம் பறக்கக்கூடிய தானியங்கி விமானத்தைத் தயாரித்தார். இதைக் கண்ட அமெரிக்க அரசு தமது பாதுகாப்புத் துறை மூலம் கரீம் அவர்களுக்கு தானியங்கி தொழில் நுட்பத்தைத் துவங்க நிதி வழங்கியது. அதைக்கொண்டு Albatross விமானத்தில் மேம்படுத்தப்பட்ட வடிவமாக Amber விமானம் தயாரிக்கப்பட்டது. 1986ம் ஆண்டு Amber விமானம் நிற்காமல் 24 மணிநேரம் பறக்கவும், நொறுங்குதல் மிகவும் குறைக்கப்பட்டும் மேம்பாடு செய்யப்பட்டது. 1987ம் ஆண்டு தானியங்கி விமானத்திற்கான நிதி குறைக்கப்பட்டது. இதனால் கரீம் தனது நிறுவனத்தை Hughes Aircraft என்ற நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். General Atomics நிறுவனம் Amber விமானத்தின் தொழில் நுட்பத்தைக் கொண்டு Gnat 750      என்ற விமானத்தைத் தயாரித்தது. இந்த விமானத்தை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.

இசுரேலிய தானியங்கி விமானங்கள்:

thaaniyangi3இசுரேலிய வின்வெளி நிறுவனங்கள் 1974 ஆண்டு முதல் தானியங்கி விமானங்களை தயாரிக்கத் தொடங்கின. Yom kippur போரும், இசுரேலின் முந்தைய தானியங்கி தொழில் நுட்ப அனுபவங்களும், அமெரிக்கா மற்றும் பிறநாட்டு அனுபவங்களும் இணைந்து தானியங்கி விமான தொழில்நுட்பத்தை பெரிதும் உயர்த்தின. 1979ம் ஆண்டு இசுரேலிய வின்வெளித்துறை தயாரித்த கண்காணிப்பு தானியங்கி விமானங்கள் (Scout drones) பயன்பாட்டுக்கு வந்தன. இதற்கிடையில் Tadiran என்ற நிறுவனம் Mastiff drones என்ற விமானத்தைத் தயாரிக்க ஆரம்பித்தது. இந்த இரண்டு விமானங்களும் (Scout drones, Mastiff drones) 1982ம் ஆண்டு நடந்த இசுரேல் லெபனான் போரில் எதிரியை கண்காணிக்க பயன்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து Pioneer என்ற மேம்படுத்தப்பட்ட விமானத்தை 1985ம் ஆண்டு தயாரித்தது. Pioneer மற்றும் அதன் பிறகு வந்த Searcher என்ற இரண்டையும் அமெரிக்கா மற்றும் இசுரேலிய கடற்படைகள் வாங்கி கண்காணிப்பு மற்றும் இலக்கறிதல் பணிகளுக்காக பயன்படுத்தியது. 1991ம் ஆண்டு நடந்த வளைகுடாப்போரில் இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்கா கடற்படை பயன்படுத்தியது.

இசுரேலியப் போர்த்துறை தானியங்கி விமானங்கள்:

thaaniyangi5இசுரேல் தமது தானியங்கி விமானத் தொழில் நுட்பத்தைத் தொடர்ந்து மேம்படுத்திவந்தது. Searcher IIஎன்ற விமானம் பல நூறு கிலோ மீட்டர் தூரம் பறக்கவும், செயற்கைக் கோள் மூலம் தகவல் பெறவும் திறன் பெற்றிருந்தது. மேலும் போரில் ஈடுபடுத்தும் வகையில் ஏவுகணைகளைத் தாங்கிய தானியங்கி விமானங்களையும் இசுரேல் தயாரித்தது. 2004ம் ஆண்டு இசுரேல் விமானப்படையினால் தானியங்கி விமானம் மூலம் முதல் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இசுரேல் Searcher II என்ற விமானத்திலிருந்து Shoval என்ற விமானத்தைத் தயாரித்தது. மேலும் தானியங்கி போர் விமானங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது. அதே காலகட்டத்தில் அமெரிக்காவும் போர்துறை தானியங்கி விமான எண்ணிக்கையை அதிகரித்தது.

2005ம் ஆண்டிற்குப் பிறகு இசுரேல் நாடு தானியங்கி விமானங்களைப் பயன்படுத்தி கொடிய போர்தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தது. 2006ம் ஆண்டு நடந்த Gaza-க்கு எதிரான போரில் Shoval மற்றும் பிற தானியங்கி விமானங்களைப் பயன்படுத்தி குண்டுகளை வீசியது மேலும் லெபனானுக்கு எதிரான இசுரேலியப் போரின் போது இவ்வகையான விமானங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. நெடுந்தூரங்களுக்கு ஏவுகணைகளை தாங்கி செல்லக்கூடிய Hermes 450 , Eitan என்ற விமானங்கள் இசுரேல் விமானப்படையில் சேகரிக்கப்பட்டன. 2008ம் ஆண்டு நடந்த புயணயவிற்கு எதிரான போரில் Hermes 450 , Eitan விமானங்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் 1330 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுள் 430 பேர் குழந்தைகள் ஆவர்.

இசுரேலிய தானியங்கி விமான ஏற்றுமதி:

thaaniyangi7இசுரேல் மிக அதிகமாக ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடு. ஏறத்தாள 10 சதவீதம் தானியங்கிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலகில் பயன்படுத்தப்படும் 50 சதவீத தானியங்கி விமானங்கள் இசுரேலில் தயாரிக்கப்பட்டவையாகும். இசுரேல் தமது பழைய தயாரிப்புகளான Harpy, Haron I, Searcher I, மற்றும் Searcher II drones களும் searcher II விமானங்களை அதிகம் ஏற்றுமதி செய்கிறது. மேலும் பல நாட்டு ஆயுத உற்பத்தியாளர்களிடமும் ஒப்பந்தங்கள் மேற்கொள்கிறது. அவற்றில் தமது தானியங்கி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த உரிமங்கள் வழங்கப்படுகின்றன, தானியங்கி விமானங்கள் குத்தகைக்கும் விடப்படுகின்றன. இதனால் ஐரோப்பா மற்றும் ஆஸ்ரேலியாவில் தானியங்கி விமானங்களின் ஊடுருவல் மிக அதிகமாக உள்ளது. தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்காவில் இசுரேல் நேரடியாக ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்காவுடன் இணைந்து Watchkeeper drone என்ற விமானத்தைத் தயாரிப்பதில் இசுரேல் ஈடுபட்டுள்ளது, மேலும் ரசிய மற்றும் சார்ஜிய(Georgia) மோதலின் போது இருவருக்குமே இசுரேல் இத்தகைய தானியங்கி விமானங்களை ஏற்றுமதி செய்தது என்ற குற்றச்சாட்டுகள் உள்ளது.

ஈரான் மத்திய கிழக்கின் புதிய வல்லமை:

thaaniyangi81980ம் ஆண்டு முதல் ஈரான் தனது இராணுவ உற்பத்தித் திட்டத்தில் தன்னிறைவு அடைய துவுங்கியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் ஈரான், இசுரேலிய தானியங்கி விமான தொழில்நுட்பத்தை நெருங்கும் விதமாக தமது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது, அதற்கு விழுந்து நொறுங்கிய தானியங்கி விமானங்களையோ பழைய இசுரேலிய விமானங்களையோ ஆய்வு செய்து தமது தொழில் நுட்பத்தை வளர்த்து வருகிறது. 2010ம் ஆண்டில் ஈரான் தமது விமானப்படையில் தானியங்கி விமாங்களை சேர்க்க ஆரம்பித்து விட்டது. ஈரானின் Mohajer வகை தானியங்கி விமானங்கள் கண்காணிப்பு விமானங்களாகும். Mersad வகை விமானங்கள் போர் விமானங்களாகும். இவையன்றி ஈரான் தற்பொழுது ஏற்றுமதியிலும் ஈடுபட்டுள்ளது. வெனிசுலா, Gaza, லெபனான் பொன்ற நாடுகளக்கு ஏற்றுமதி செய்துவருகிறது. தற்போது நடந்துவரும் சிரிய உள்நாட்டுப் போரில் ஈரானின் தானிங்கி விமானங்கள் திட்டவட்டமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. சூலை 2014ம் ஆண்டு முதல் Hamas இயக்கமானது ஈரான் நாட்டின் Ababil தானியங்கி விமானங்களை தற்கொலை விமானங்களாக (கொல்வதற்காகவே பயன்படுத்தப்படும் தானியங்கி விமானம்) இசுரேலுக்கு எதிராக பயன்படுத்தி வருகிறது. இத்தகைய தற்கொலை விமான தாக்குதலுக்குப் பிறகு இசுரேல் நாட்டின் விமான பாதுகாப்புத்துறை தீவிர மறுசிந்தனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.

-தொடரும்


விவேக் கணேசன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தானியங்கி விமானங்கள் பாகம்-2”

அதிகம் படித்தது