மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அடுக்குமாடி கட்டிடம் சீட்டுக்கட்டு போல் சரிந்தது ஏன்?

வெங்கட்ரமணி

Dec 20, 2014

kattumaanam1சென்னையில் உள்ள மௌலிவாக்கத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததால் அறுபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தியை சில மாதங்களுக்கு முன்பு செய்தித்தாள்களில் பார்த்தோம். இந்த அளவு பெரிய விபத்து சென்னையில் முதன்முதலில் ஏற்பட்டிருந்தாலும் இதுவே கடைசி விபத்தாக இருக்காது என்பது எனது கருத்தாகும். இந்த விபத்து நிகழ்ந்த சில நாட்களிலேயே செங்குன்றம் அருகே மிகப்பெரிய சுற்றுச்சுவர் இடிந்து 11 பேர் கொல்லப்பட்டனர் அவர்களுள் குழந்தைகளும் அடங்குவர். சொல்வதற்கு வருத்தமாக இருந்தாலும் இனி வரும் நாட்களில் இத்தகைய விபத்துகள் நடந்துகொண்டுதான் இருக்கும்.

மேலே சொன்ன கட்டிடம் இடிந்து விழுந்ததற்கு பல்வேறு காரணங்கள் அலசப்பட்டன. அவற்றுள் ஒன்று கட்டிடத்தில் ஏற்கனவே திட்டமிட்டு இருந்ததை விட அதிகப்படியான மாடிகள் கட்டப்பட அனுமதி பெறப்பட்டு வேலைகள் செய்யப்பட்டதாகும். அதாவது கட்டிடத்தின் அடித்தளத்தை பலப்படுத்துவதை தவிர்த்துவிட்டு இருமடங்கு எடையை உயர்த்தியதால் விபத்து நிகழ்ந்தது என்று சொல்லப்பட்டது.

அடுத்ததாக கட்டிடம் ஏரிக்கரையில் அமைந்ததால் உறுதியான அடித்தளம் அமையாமல் பிடிமானம் அற்று நொறுங்கியது என்று சொல்லப்பட்டது. இவையன்றி மற்றொரு காரணமும் சொல்லப்பட்டது. கட்டிடத்தின் வடிவமைப்பும், கட்டுமான உறுதியும் சரியற்றதாகவும், வரைமுறைகளுக்கு உட்படாததாகவும் இருந்தது காரணம் என்று சொல்லப்பட்டது.

பலர் சென்னை மாநகர வளர்ச்சிக் குழுமம் அதிகப்படியான மாடிகளைக் கட்ட அனுமதி கொடுத்தது தவறு என விமர்சித்தனர். அங்குள்ள ஊழல் அதிகாரிகளின் துணையைக் கொண்டு தவறு நிகழ்த்தப்பட்டது என்றும் கூறினர். ஆனால் குழுமத்தின் அனுமதிகளை நாம் குற்றம் சொல்ல முடியாது, ஒரு கட்டிடத்தின் வடிவமைப்பையோ,கட்டிடம் அமைந்திருக்கும் நிலத்தின் தன்மையையோ ஆய்ந்து அலசுவது குழுமத்தின் வேலை அல்ல. பார்க்கப்போனால் குழுமத்தின் அனுமதியில் கட்டிடத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம், அதனை கட்டுபவரின் பொறுப்பு என்றும் அதற்கு குழுமம் எவ்வகையிலும் பொறுப்பாகாது என்றும் எழுதப்பட்டிருக்கும்.

ஒருவேளை அதிகப்படியான மாடிகளைக் கட்டுவதற்கு அனுமதி பெறப்படும்வேளையில் கட்டிடம் பாதி எழுப்பப்பட்டிருந்தால் குழுமம் கட்டிடத்தை ஒரு நிபுணரைக்கொண்டு பரிசோதிக்க வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும். அதாவது பாதி கட்டப்பட்டிருந்த கட்டிடம் அதிகப்படியான மாடிகளைத் தாங்குமா என்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கும். இது நடந்ததா என்று தெரியவில்லை. எப்படிப் பார்த்தாலும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் இத்தகைய பரிசோதனைகளை செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

kattumaanam3இந்தக் கட்டிடத்தை வடிவமைத்த கட்டமைப்பு வடிவமைப்பாளர் (Structural Designer) சில நாட்களுக்குப் பிறகு கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்றும்,அந்தப் பணிகளை வேறு ஒருவர் கவனித்தார் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் ஆரம்பகட்ட வடிவமைப்பிலிருந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. உதாரணமாக தூண்கள், விட்டங்கள் போன்றவற்றின் அளவுகள் மாற்றப்பட்டது. எனக்கு சில கேள்விகள் எழுந்தன. அவற்றை கீழே காணுங்கள்.

  1. வங்கியில் வேலைபார்த்து விட்டு பிறகு கட்டிட முதலாளியாக உருவெடுத்த ஒருவர் இத்தனை பெரிய உயரமான கட்டிடத்தை எழுப்பும்பொழுது எந்த நம்பிக்கையில் கட்டிட பொறியாளர்களையும், கட்டிட வடிமைப்பாளர்களையும் கலந்துகொள்ளாமல் கட்டிடத்தைக் கட்டினார். ஆரம்பத்தில் வேலைபார்த்த வடிவமைப்பாளர் கட்டிடதிலிருந்து விலகிய பின்பும் கட்டுமானம் தொடர்ந்து எந்த நம்பிக்கையில் கட்டப்பட்டது?
  2. கட்டிடத்தின் வரைபடங்களை வரைந்துதரும் ஒருவர் வடிவமைப்புப் பொறியாளராக செயல்பட்டது எவ்வாறு?
  3. இத்தகைய உயரமான கட்டிடத்தில் உள்ள குடியிருப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு ஆய்வையும் மேற்கொள்ளாமல் எப்படி வாங்கினார்கள்?
  4. வாங்கிய எந்த வாடிக்கையாளரும் நிபுணரான ஒரு பொறியாளரைக்கொண்டு பரிசோதனை செய்யாதது ஏன்? (கட்டிடம் வாங்குதல் போன்ற பெரிய முதலீட்டை செய்யும் பொழுது அதனை ஆய்வு செய்ய நிபுணத்துவம் நமக்கு இல்லையென்றால் அப்படிப்பட்ட நிபுணர் ஒருவரை அழைத்து பரிசோதிக்க வேண்டுமா? வேண்டாமா?)
  5. அந்தக் கட்டிடத்தை அங்கீகரித்த வங்கியின் பொறியாளர்கள் ஒருவர் கூட குறைபாடுகளை ஏன் எடுத்து சொல்லவில்லை?

ஏன் இந்த வீழ்ச்சி?:

பத்தாண்டுகள் முன்புவரை கட்டிட முதலாளிகள், கட்டிட வடிவமைப்பாளர்கள், கட்டிடப் பொறியாளர்கள், மண் பரிசோதனையாளர்கள் போன்றோரிடம் ஒரு பொறுப்புணர்ச்சி இருந்தது. நிலத்திற்குத் தகுந்தவாறு கட்டிடம் கட்டப்படவேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டனர். கட்டிட வடிவமைப்பு நிலத்திற்குத் தோதாக அமையவில்லை என்றால் உரிய நிபுணரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது, தேவையென்றால் மொத்த வடிவமைப்புமே மாற்றத்திற்குள்ளானது. வடிவமைப்பாளர்கள் கட்டிடத்திற்கான அடித்தளம், தூண்களின் அகலம் மற்றும் உறுதி போன்றவற்றை மனதிற்கொண்டு வடிவமைத்தனர். நாட்கள் செல்ல கணிணி மயமாக்கலும், பணத்தாசையும் வடிவமைப்பாளர்களை தவறான வழியில் தள்ளியது. முன்பெல்லாம் சிறிய தவறுகளைக் கூட கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்த பிறகே கட்டிடத்தைத் தொடர்ந்தனர். அதன் விளைவாக எழும் கட்டிடம் மிகவும் வலுவானதாகவும் உறுதியுடைதாகவும் அமைந்திருந்தது. தற்காலத்தில் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு செயல்படும் கட்டிட முதலாளிகளின் அழுத்தத்திற்கு பணிந்து வடிவமைப்பாளர்கள் பிறழ்ந்து விடுகின்றனர். முதலாளிகளின் தயவை வேண்டி பாதுகாப்பைப் புறந்தள்ளி லாபகரமான நோக்கில் வடிவமைப்புகளை அமைக்கின்றனர். தற்பொழுது கட்டிடத்தை விரைவாக முடிக்கவேண்டும் என்ற அவசரம் ஆய்வுகள், பரிசோதனைக்கான நேரத்தைக் குறைக்கிறது. கட்டிடப் பொறியாளர்கள் முன்பு அதன் உறுதியில் கவனமாக இருப்பார்கள். தற்போது அப்படி இல்லை.

சில ஆண்டுகளாக கட்டிட முதலாளிகளும் முதலீட்டாளர்களும் பெருவாரியான வடிவமைப்பு கூறுகளைத் தீர்மானிக்கின்றனர். எத்தகைய தூண்கள், விட்டங்கள் பயன்படுத்த வேண்டும் என்று அவர்கள் கூறுவது வேடிக்கையாக உள்ளது. கட்டிடப் பொறியியல் குறித்த அறிவு சற்றும் இன்றி மூக்கை நுழைக்கும் இந்த நபர்கள் நல்ல ஒரு வடிவமைப்பு அமைவதைத் தடுக்கின்றனர், சில நேரங்களில் அடுத்த கட்டமான மின்சாரம், தீ பாதுகாப்பு போன்றவற்றிலும் தலையிடுகின்றனர். இவர்களின் தொல்லையால் சில வடிவமைப்பாளர்கள் தரமற்ற உறுதியற்ற கட்டிடங்கள் உருவாக உடந்தையாக இருக்கின்றனர். இந்த இழிநிலையுடன் மோசமான மண்ணும் தவறான கட்டிட வேலைகளும் நடைபெற்றால் இங்கே கேடு விளையாமல் வேறு என்ன விளையும்.

இவை போதாதென்று மோசமாக சரிந்து வரும் பொறியியல் கல்வித்தரம் மற்றொரு முக்கியக் காரணமாக அமைகிறது. மிக மிக அடிப்படையான கேள்விகளுக்குக் கூட பதில் தெரியாத பல இளம் பொறியாளர்களை சந்தித்துள்ளேன். இவர்களைக் கொண்டு வேலை நடந்தால் அது எந்த அழகில் இருக்கும்.

ஆக மேற்கண்ட விபத்தானது நமது கட்டிடத் துறையைப் பீடித்திருக்கும் நோய்களின் அறிகுறிதான். நோயைத் தீர்ப்பது என்பது மிக நீண்ட கடினமான செயலாகும். அதனைத் தீர்க்க நாம் இன்னும் முயற்சியைத் தொடங்கவே இல்லை. முடிவாக என ஒன்றைத்தான் சொல்ல முடியும், எளிமையான, விரைவான தீர்வு என்று ஒன்று இல்லை.

BVe Consulting Engineers

Engineering Project Consultancy & Property Advisory Services,

Residential-Commercial-Industrial-Infrastructure Designs

Due-diligence studies -Asset valuation services

Chennai -600 083

bv.consultingengrs@gmail.com

www.bveconsultingengineers.in

www.bveconsultingengineers.com


வெங்கட்ரமணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அடுக்குமாடி கட்டிடம் சீட்டுக்கட்டு போல் சரிந்தது ஏன்?”

அதிகம் படித்தது