மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கப்பம் கட்டிவிட்டு கட்டிடத்தைக் கட்டுங்கள்; அரசு அனுமதி எனும் பரமபத விளையாட்டு

வெங்கட்ரமணி

Jan 3, 2015

kattumaanam8இளங்கோவன்  ஒரு கட்டிடப் பொறியாளர், இருபது ஆண்டுகளுக்கு மேலாக கட்டிடத் துறையில் அனுபவம் வாய்ந்தவர். இளங்கோவன் பில்டர்ஸ் என்ற பெயரில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அவர் பல வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்துள்ளார், அவரது தரமான சேவையும் தொழிலின் மீது இருக்கும் அர்ப்பணிப்பும் ஏராளமான நிரந்தர வாடிக்கையாளர்களை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. சிறந்த கட்டிடங்களைக் கட்டி வாடிக்கையாளர்களுக்கு விற்று நல்ல ஒரு பெயரை ஈட்டி இருந்தார். இருப்பினும் கட்டுமானம் போன்ற போட்டிகள் மிகுந்த ஒரு துறையில் தொழில் செய்வதால் அவரது கையில் பெருத்த மூலதனம் எதுவுமில்லை.

ஒரு கட்டத்தில் சென்னையின் புறநகர் பகுதியில் ஒரு சிறிய நிலம் விற்பனைக்கு வந்தது. தொழிலில் முன்னேற வேண்டும் என்ற வேட்கைக் கொண்டிருந்த இளங்கோ அந்த நிலத்தை வாங்க முடிவுசெய்தார். மூலதனம் குறைவாக இருப்பதால் நிலத்தின் மதிப்பில் எழுபது சதவிகிதத்தை அவர் வங்கிகளிடமும் பிறரிடமும் கடனாகப் பெறவேண்டியிருந்தது. அந்த நிலத்தில் நடுத்தர குடியிருப்பு ஒன்றை கட்டவேண்டும் என்று திட்டமிட்டார். உற்சாகத்தில் மிதந்த அவர், தான் சந்திக்கவிருக்கம் சவால்களை உணராமல் இருந்தார். அதனை ஒவ்வொன்றாக சந்திக்க தலைப்பட்டார்.

kattumaanam4நிலத்தை வாங்கியவுடன் நிலத்தினது பட்டாவை தனது பெயரில் மாற்ற அரசிடம் விண்ணப்பித்தார். பட்டா வழங்கல் கணிணி மயமாக்கப்பட்ட போதிலும் அதற்காக இரண்டு மாதம் வரை காத்திருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஏனென்று கேட்டதற்கு வருவாய்துறை ஊழியர்கள் வெள்ளநிவராண பணிகளில் ஈடுபட்டிருப்பதால் உடனடியாக வழங்க இயலாது என்று தெரிவித்தனர். அப்படியே அவருக்கு விரைவாக கிடைக்கவேண்டும் என்றால் சிறிது பணம் செலவு செய்தால் நடக்க வாய்ப்பு உண்டு என்று தெரிவிக்கப்பட்டது. நேர்மையான நபரான இளங்கோ லஞ்சம் கொடுக்க திட்டவட்டமாக மறுத்தார்.

இரண்டு மாதங்கள் வரை வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு தொடர்ந்தது. பலமுறை அங்கே சென்று நினைவூட்டிய பிறகு லஞ்சம் இல்லாமல் பட்டா பெற்றார். அதுவே ஒரு வெற்றியாக அவருக்குத் தோன்றியது.

அடுத்தது கட்டுமானத்திற்கான அரசு அனுமதியைப்பெற வேண்டும். முறையாக நிலத்தை அளந்து கட்டுமானத் திட்டத்தினைத் தயாரித்து இணையம் வழியாக திட்ட அனுமதி பெற விண்ணப்பித்தார். 72 மணி நேர அவகாசத்தில் முடியவேண்டிய இந்த வேலை சில மென்பொருள் பிரச்சனைகளால் தாமதமாகும் என்று கூறப்பட்டது. 15 நாட்களுக்குப் பிறகு இணைய வழியாக அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதியுடனும் பிற ஆவணங்களுடனும் அரசு நிர்ணயித்த கட்டணத்தையும் இணைத்து கட்டிட அனுமதிக்காக விண்ணப்பித்தார்.

kattumaanam2பல நாட்கள் காத்திருந்த பிறகு குறிப்பிட்ட அதிகாரியை சந்தித்து தனது விண்ணப்பத்தின் நிலையை வினவினார். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தாலும் வேறு சில கவனிப்புகள் நிகழ்ந்தால் மட்டுமே அனுமதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அதற்கான செலவும் தோராயமாக தெரிவிக்கப்பட்டது. இதெற்கெல்லாம் செலவு செய்யமுடியாது என்று மறுத்தால் என்னாகும் என்று இளங்கோ கேட்டார். வேறொன்றும் இல்லை அதிகாரிகள் அனுமதி கொடுக்க ஆர்வம் காட்டமாட்டார்கள், மேலும் காலதாமதமாகும். ஏற்கனவே ஏராளமான வேலைகளுள் அமிழ்ந்து இருக்கும் அதிகாரிகள் உங்களுக்குத் தரவேண்டிய அனுமதிக்கு முன்னுரிமை தரமாட்டார்கள் என்று அக்கறையுடன் தெரிவித்தனர். ஏராளமான பணத்தை முதலீடு செய்திருக்கும் நீங்கள் கட்டிடத்தை ஆரம்பிக்காமல் தாமதம் செய்தால் வட்டியிலேயே பணத்தை இழக்க வேண்டியிருக்கும். அதுவன்றி கட்டுமானப் பொருட்களின் விலை உயரும். எனவே இதுபோன்ற செலவுகளைப் பாராது கவனிப்புகளை முடித்துவிட்டு அனுமதியை வாங்கிச் செல்லுங்கள் என்று கூறினர்.

இளங்கோ உறுதியோடு தன்னால் லஞ்சம் தரமுடியாது என்றும் அதே சமயத்தில் அர்த்தமற்ற தாமதங்களை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார். தேவையெனில் அவர்களது உயர் அதிகாரிகளிடம் தாம் எடுத்துச் செல்வேன் என்று உறுதிபடக் கூறினார். அரசு அதிகாரிகள் அவருடைய பேச்சை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. தத்தமது வேலைக்குத் திரும்பினர்.

அடுத்த சில நாட்களில் இளங்கோ தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக சில கேள்விகளை எழுப்பினார். அதற்கான பதில்கள் 15 நாட்களில் தரப்பட்டது. அதில் இதுபோன்ற சிறிய கட்டுமான விண்ணப்பங்களுக்கு 14 நாட்களில் அனுமதி தரப்பட வேண்டும் என்றும் அப்படி அனுமதி தரவில்லை எனில் முறையான காரணங்கள் விண்ணப்பித்தவருக்குத் தெரிவிக்கப்படவேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஏற்கனவே இணையம் வழியாக திட்ட அனுமதி பெறப்பட்டிருந்தால் அரசு அதிகாரிகள் வலுவான காரணங்கள் இல்லாமல் விண்ணப்பத்தை நிராகரிக்க முடியாது என்று தெளிவாக இருந்தது.

அடுத்தாக இளங்கோ நீண்ட கடிதம் ஒன்றைத் தயாரித்தார். அதில் அனுமதி வழங்கும் ஆணையத்திடம் தாமதத்திற்கான காரணங்களை கேள்விகளாகத் தொடுத்திருந்தார். ஏன் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று வினா எழுப்பியிருந்தார், மேலும் தாம் நீதிமன்றத்திடம் முறையிடப்போவதாகவும், தனக்கு நேர்ந்துள்ள இழப்பிற்கு அரசு அதிகாரிகள் தமது சொந்தப் பணத்திலிருந்து இழப்பீடு தரவேண்டும் என்று முறையிடப்போவதாகவும் தெரிவித்திருந்தார்.

ஒரு வாரத்திற்குப் பிறகு அரசிடமிருந்து அழைப்பு வந்தது. அவருடைய விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், அனுமதிகள் வழங்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்குள்ளாக மூன்று மாதங்கள் முழுமையாக முடிந்துவிட்டிருந்தது.

ஒரு வழியாக அந்த மனையில் அடித்தளப் பணிகள் தொடங்கின. ஒருநாள் காலை அந்தப் பகுதியின் நகராட்சி உறுப்பினர் அழைப்பதாக தகவல் வந்தது. எரிச்சலுற்ற இளங்கோ அந்தத் தகவலை அலட்சியப்படுத்தினார். தொடர்ந்து அழைப்புகளுக்கும் பதில் கூறவில்லை. மென்மையாகவும் சற்று கடுமையாகவும் எச்சரிக்கைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன, ஆனால் இளங்கோ அசையவில்லை. வணிகம் செய்வோர் உறுப்பினரை கவனிக்கவில்லை என்றால் வட்டத்தை (மக்களை) எவ்வாறு கவனிப்பது என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதுவும் தற்போது பதவி வகிக்கும் உறுப்பினர் வசூலில் உறுதியானவர் என்று தெரிவிக்கப்பட்டது. விசாரித்ததில் உறுப்பினர் தோராயமாக குடியிருப்புக்கு(Apartment) இளங்கோ தமது பிடியில் உறுதியாக இருந்தார். ஒரு லட்சம் ரூபாய் வரை எதிர்பார்ப்பார் என்று தெரியவந்தது.

அடித்தள வேலைகள் முடிந்து மேற்கூரை எழுப்பும் அளவிற்கு கட்டிடம் வந்தது. அதற்காக தெருவில் ஏராளமாக கட்டிட சாமான்கள் சேகரித்து வைக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது. போக்குவரத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று கவனமாக செயல்பட்டார். திடீரென ஒருநாள் நகராட்சி அதிகாரிகள் கட்டிடத்திற்கு வந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதால் வேலையைத் தொடரக்கூடாது என்று இடையூறு ஏற்படுத்தினர். அவர்களுடன் காவலர்களும் வந்து அதட்டினர்.

kattumaanam6வெகுன்டெழுந்த இளங்கோ அதிகாரிகளை நோக்கி கேள்வி எழுப்பினார். ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் தம்மைப்போல பத்து கட்டிடங்கள் எழுப்பப்படுகின்றன. ஏன் எங்களை மட்டும் குறிவைத்து தடுக்கிறீர்கள் என்று கேட்டார். தமக்கு விதிக்கப்படும் தடையை எழுத்து மூலமாக தரும்படியும்,போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியமைக்கு உண்டான அபராதத்தை தாம் கட்டிவிடுவதாகவும், தேவையெனில் தனிமைப்படுத்தி தம்மை மட்டும் தொந்தரவு செய்ததற்கு நீதிமன்றத்தை அனுகி நிவாரணம் கேட்கப்போவதாகவும் தெரிவித்தார். காவலர்களும் பிற அரசு அலுவலர்களும் இளங்கோவை மேலும் ஒரு முறை எச்சரித்து வெளியேறினர். ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வேலை தொடங்கியது.

இதே போல மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புக்கான விண்ணப்பங்களும் பல நிர்பந்தங்களை சந்தித்து தாமதப்படுத்தப்பட்டன. கடைசியாக ஒருவழியாக கட்டிட வேலை முடிவுக்கு வந்தது. இளங்கோ தன்னுடைய உறுதியான நடவடிக்கையால் பத்து லட்ச ரூபாய் மிச்சமாகியிருப்பதை உணர்ந்தார். தோராயமாக கட்டிடத்திற்கான செலவில் இந்தத் தொகை 10 சதவிகிதம் வரை இருக்கும். ஆனால் தாமதத்தினால் ஏற்பட்ட வட்டி அதிகரிப்பு 30 சதவிகிதம், இந்த சேமிப்பை விட அதிகமாக ஆகியிருந்தது. இருப்பினும் இளங்கோவுக்கு உள்ளூர வெற்றி பெற்ற மகிழ்ச்சியே ஏற்பட்டது.

இதுபோன்ற ஒரு சிறிய கட்டிடத்திற்கு ஒரு கட்டுமான நிறுவனம் இத்தகைய அழுத்தங்களையம் தொல்லைகளையும் சந்தித்தால் நெடிதுயர்ந்த கட்டிடங்களை கட்டும் நிறுவனங்கள் எத்தகைய பிரச்சனைகளை சந்திக்கும் என்று வாசகர்களே யூகித்துக்கொள்ளலாம். இது போல கேட்கப்படும் லஞ்சப்பணத்தை ஓரளவு கட்டுமான நிறுவனமும் மீதம் அனைத்தையும் வாடிக்கையாளர்களே மறைமுகமாக ஏற்றுக்கொள்கின்றனர்.

இவையன்றி பொருளாதார இழப்புகளும், வீட்டின் விலை உயர்வும், உற்பத்தி திறன் பாதிப்பும், அரசுக்கான வரி இழப்பும், வளங்கள் வீணாவதும் கணக்கிடப்பட்டால் வரும் தொகை நம்மை மூர்ச்சடைய செய்யும்.

இதுபோன்ற முறையற்ற சட்டத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களையும் லஞ்சக்கோரிக்கைகளையும் நம்மால் முடிந்த வரை நாம் எதிர்க்க வேண்டும். அதுவே இந்த நாட்டின் ஒட்டுமொத்த நலனுக்கு நன்மை பயக்கும்.

BVe Consulting Engineers

Engineering Project Consultancy & Property Advisory Services,

Residential-Commercial-Industrial-Infrastructure Designs

Due-diligence studies -Asset valuation services

Chennai -600 083

bv.consultingengrs@gmail.com

www.bveconsultingengineers.in

www.bveconsultingengineers.com


வெங்கட்ரமணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கப்பம் கட்டிவிட்டு கட்டிடத்தைக் கட்டுங்கள்; அரசு அனுமதி எனும் பரமபத விளையாட்டு”

அதிகம் படித்தது