மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தானியங்கி விமானங்கள் -பாகம் 3

விவேக் கணேசன்

Jan 3, 2015

தெற்காசியாவும் தானியங்கி விமானங்களும்:

thaaniyangi vimaanangal1தெற்காசியாவிலும் தானியங்கி விமானங்களின் பயன்பாடு துவங்கிவிட்டது. தானியங்கி விமானங்கள் பயன்படுத்துவதை பாகிஸ்தான் முதலில் ஆரம்பித்தது. தாலிபனுக்கு எதிராக அமெரிக்காவுடன் சேர்ந்து பாகிஸ்தான் தானியங்கி விமானங்களைப் பயன்படுத்தியது. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளுக்கு இவ்வகை விமானம் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இடையில் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட தானியங்கி விமானத் தாக்குதல், பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததால் சிக்கல் ஏற்பட்டது. பாகிஸ்தான் உள்நாட்டிலேயே தானியங்கி விமானம் தயாரிக்க நடவடிக்கை எடுத்தது. சீனாவிடமிருந்து தொழில்நுட்பத்தை வாங்கி சொந்தமாக தானியங்கி விமானம் தயாரிப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதுவரையிலும் இராணுவ பயன்பாட்டில் இவ்வகை விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தானியங்கி விமானத்தை கையிலெடுத்த மற்றொரு தெற்காசிய நாடு இலங்கை. தனது கடற்படை மற்றும் தரைப்படை தேவைகளுக்கு, இஸ்ரேல் நாட்டிடமிருந்து இலங்கை பல தானியங்கி விமானங்களை வாங்கியது. மேலும் சீனாவிடமிருந்து தானியங்கி போர் விமானங்களை இலங்கை வாங்கியிருக்க வாய்ப்புகள் உள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை தானியங்கி விமானங்களை வெகுவாகப் பயன்படுத்தியது. அவை உளவு பார்ப்பதற்கும், குறி பார்த்து தாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டன. குறிப்பாக புலிகளின் அரசியல் பிரிவின் தலைவர் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டது தானியங்கி விமானங்களால் என்று நம்பப்படுகிறது. போரின் இறுதிகட்டத்தில் நடத்தப்பட்ட கொடுரமான தாக்குதல் தானியங்கி விமானங்கள் மூலமே நடத்தப்பட்டன. போரை கண்காணித்து வந்த பலர், பொதுமக்களையும் குழந்தைகளையும், பெண்களையும் குறிவைத்து தானியங்கி விமான தாக்குதல்கள் இயக்கப்பட்டன என்று தெரிவித்துள்ளனர். இலங்கையில் நடந்த மனிதப்பேரழிவே தானியங்கி விமானங்களால் உலகில் நடத்தப்பட்ட மிகப்பெரிய அழிப்பு நடவடிக்கையாகும்.

இந்தியாவில் தானியங்கி விமானங்கள்:

thaaniyangi7வழக்கம் போலவே தமது அண்டை நாடுகளைக் காட்டிலும் இந்தியா தானியங்கி விமானங்களைப் பயன்படுத்துவதில் மந்தமாக இருந்தது. முதலில் இந்திய கப்பற்படை தானியங்கி விமானங்களை உளவு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியது. தானியங்கி விமானங்களின் மதிப்பை இந்தியா எப்போது உணரத் துவங்கியது என்றால் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கையில் நடந்த போரில் இந்திய கப்பற்படையே பல்வேறு உளவு மற்றும் செயல்பாட்டு உதவிகளை இலங்கைக்கு அளித்தது. அதில் தானியங்கி விமானங்கள் பெரும்பங்கு வகித்தன. இந்திய அரசு நமது தமிழகத்தின் இராமநாதபுர மாவட்டத்தில் INS பருந்து என்ற பெயரில் கடற்படை விமான நிலையத்தை உருவாக்கியுள்ளது. இதன் முக்கியப் பணியே வங்காள விரிகுடாவிலும் மற்ற கடற்பகுதிகளிலும் தானியங்கி விமானங்களைக்கொண்டு கண்காணிப்பதாகும். மேலும் இரண்டு இடங்களில் இந்த கப்பற்படை இத்தகைய விமான படையை உருவாக்கியது. தொடக்கத்தில் இஸ்ரேலிடமிருந்து Sear Cherமற்றும் Heronதானியங்கி விமானங்களை வாங்கியது. தானியங்கி விமானங்களின் பயன்பாட்டை உணர்ந்த இந்தியா இஸ்ரேலிடமிருந்து உளவு மற்றும் போர் புரியும் அத்தகைய விமானங்களை சமீபத்தில் வாங்கியது. இவற்றை பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் பயன்படுத்த இந்திய இராணுவம் திட்டமிட்டுள்ளது.

thaaniyangi vimaanangal4இந்தியா உள்நாட்டிலேயே தானியங்கி விமானங்களை தயாரிக்க வேண்டும் என்ற பெருவிருப்பத்தை கொண்டுள்ளது. DRDO நிறுவனம்Rustom என்ற பெயரில் இஸ்ரேலின் Heron விமானத்திற்கு மாற்றாக உருவாக்கி வருகிறது. Rustom கண்காணிப்பு பணிகளுக்காக உருவாக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக Rustom2 என்ற விமானம் போர் பணிகளுக்காக உருவாக்கப்படுகிறது. இவை மிகவும் வெற்றிகரமான தயாரிப்புகளாக இருந்தாலும் இந்திய இராணுவத்தில் பெரிய அளவில் பயன்படுத்தவில்லை. தற்போது ஆட்சி செய்யும் பா.ஜ.க. அரசு இந்தியாவிலேயே பொருட்கள் தயாரிக்கப்படவேண்டும் என்ற கொள்கையை கொண்டிருப்பதால் Rustom விமானங்களை இந்திய இராணுவத்தால் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.


விவேக் கணேசன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தானியங்கி விமானங்கள் -பாகம் 3”

அதிகம் படித்தது