மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தானியங்கி விமானங்கள் – பாகம் 4

விவேக் கணேசன்

Jan 10, 2015

thaaniyangi vimaanangal2பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தானியங்கி விமானங்கள்:

தானியங்கி விமானங்கள் இந்தியாவிலும் பிற நாடுகளிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பெருமளவில் உதவ ஆரம்பித்திருக்கின்றன. அமெரிக்காவில் பண்ணை விவசாயம் நடத்தும் நிறுவனங்கள் கண்காணிப்பு மற்றும் மருந்து தெளிப்பு பயன்பாட்டிற்கு தானியங்கி விமானங்களை பயன்படுத்துகின்றனர். காவல் துறையினரும் தேடுதல், மீட்பு, கண்காணிப்புப் பணிகளுக்கு இவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவையன்றி வரைபடங்கள் வரைதல், ஆகாயத்திலிருந்து காணொளிகள் மற்றும் புகைப்படங்களை எடுத்தல் போன்ற பணிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. அமேசான் போன்ற இணையவழி வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கு தானியங்கி விமானங்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அமெரிக்காவில் தானியங்கி விமானப்பயன்பாடு அரசால் கட்டுப்படுத்தப்படுவதால் பெரிய வளர்ச்சியை எட்டவில்லை.

thaaniyangi vimaanangal1ஆனால் இந்தியாவில் தானியங்கி விமானங்கள் கொள்கையில் சற்று தாராளமயம் காணப்படுகிறது. தானியங்கி விமானங்களை தயாரித்தலும், பயன்படுத்துதலும் பெருமளவில் தொடங்கவில்லை. வர்த்தக பயன்பாடுகளுக்கான தானியங்கி விமான சேவை சார் கொள்கைகளை இந்திய அரசின் விமானத்துறை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. இந்தியாவில் இன்னும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாததால் அமேசான் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர் சேவைக்கு தானியங்கி விமானங்களை பயன்படுத்தும் சோதனைகள் செய்யப்படுகின்றன. சென்னை மாநகரத்தில்தான் முதற்கட்ட சோதனை அமேசான் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது, இது நமக்கு நற்செய்தியாகும். ஏனெனில் சென்னை உற்பத்தித் துறையில் வலிமையாக இருப்பதால் தானியங்கி விமான உற்பத்தி கேந்திரமாக சென்னை மாற வாய்ப்புள்ளது. SRM போன்ற பொறியியல் கல்லூரிகள் ஏற்கனவே தானியங்கி விமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கின்றன. MIT கல்லூரி தானியங்கி விமான தளத்தை உருவாக்கி உள்ளது. அதனை தமிழ்நாடு காவல்துறை, போக்குவரத்து கண்காணிப்புக்கு பயன்படுத்துகிறது. மேலும் உத்ரகாண்டு நிலச்சரிவின் போது தேடுதல் மீட்புப் பணிகளுக்கு இவ்விமான தளம் பயன்பட்டது.

thaaniyangi vimaanangal4பொதுமக்களுக்கான தானியங்கி விமான பயன்பாட்டுக்கு இந்தியாவில் பெரிய தேவை உள்ளது. இந்த ஆண்டு மும்பை காவல்துறையினரால் பிள்ளையார் சதுர்த்தி விழாவின் போது இவ்வகை விமானிகள் கண்காணிப்புப் பணிக்கு பயன்படுத்தப்பட்டது. இதர மாநில காவல்துறையினரும் தேடுதல் பணிகளில் இவற்றை பயன்படுத்த ஆர்வம் காட்டி வருகின்றன. சமீபத்தில் மும்பையில் உள்ள பிட்சா விற்கும் நிறுவனம் பிட்சாவை வாடிக்கையாளருக்கு தானியங்கி விமானம் கொண்டு சேர்த்தது. பெங்களுரில் உள்ள பெரிய கட்டுமான நிறுவனம் அவர்களின் கட்டுமான நடவடிக்கைகளைக் கண்காணிக்க இவ்விமானங்களை பயன்படுத்தியது. தமிழக அரசு இத்தகைய விமான பயன்பாடுகள் மற்றும் உற்பத்திக்கான சட்டங்களை முறையாக வரையறுத்தால் நமது மாநிலம் இந்தியாவின் தானியங்கி விமானத் தேவையை பூர்த்தி செய்யமுடியும்.

தொடக்கத்தில் தமிழக அரசு ELCOT போன்ற ஒரு ஒருங்கிணைப்பு நிறுவனத்தை இதற்காக ஏற்படுத்த வேண்டும். அடுத்தபடியாக சென்னை, திருச்சி, கோவை, மதுரை போன்ற நகரங்களில் விமான உற்பத்திக்கான சிறப்புப் பொருளாதார மண்டங்களை உருவாக்கவேண்டும். சென்னையிலும் திருச்சியிலும் இராணுவ பயன்பாட்டிற்கான தானியங்கி விமானங்களையும் பிற நகரங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான தானியங்கி விமான உற்பத்தியையும் தொடங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்வி நிறுவனங்களில் இதற்கான பட்டப்படிப்பை அறிமுகப்படுத்த வேண்டும். கடைசியாக பொதுமக்களிடம் தானியங்கி விமானங்கள் பற்றிய விழிப்புணர்வும் அவற்றின் பயன்பாடும் பெருமளவில் பரப்புரை செய்யப்படவேண்டும். இளைஞர்களிடம் இச்செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும். அவர்களை தானியங்கி விமானங்கள் குறித்த கல்வி கற்பதற்கும் உற்பத்தியில் ஈடுபடுவதற்கும் ஊக்குவிக்க வேண்டும். இத்தகைய சீரிய பணிகளை தமிழக அரசு செய்தால் உலகை உலுக்கப்போகும் இந்தத் தொழில் நுட்பத்தின் மூலமாக தமிழகம் வளமான எதிர்காலத்தையும், சிறப்பையும், செல்வத்தையும் அடையலாம்.


விவேக் கணேசன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தானியங்கி விமானங்கள் – பாகம் 4”

அதிகம் படித்தது