மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மஞ்சு விரட்டும் பத்மபிரியா அம்மையாரும்

சாகுல் அமீது

Jan 10, 2015

manju virattu1பத்மபிரியா அம்மா வெற்றி வெற்றி என்று யாரிடமோ தொலைபேசியில் கதறிக்கொண்டிருந்தார். எப்பொழுது இவர் பேசி முடித்துவிட்டு நகர்வார், தரையை துடைக்கலாம் என்றுகாத்திருந்த கலாவிற்கு பொறுமை கரைந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக அரை மணிநேர அறுவைக்குப்  பின்னர் நகர்ந்த பத்மபிரியா அம்மாவிடம் பேச்சு கொடுத்தார்கலா.

கலா:  என்னம்மா ஒரே வெற்றி வெற்றி என்று பேசிக்கொள்கிறீர்கள், எனக்கு தெரியாமல் தேர்தலில் ஏதும் நின்றீர்களா?

பத்மபிரியா: ஆமாடி தேர்தல்ல நின்று ஓட்டு பிச்சை கேட்டு அலையிற ஆளா நான்? நாங்கள் நினைக்கின்றதை நீதி மன்றத்திலே சாதித்துக் கொள்கிற ஆளுங்கள் நாங்கள். இந்தஆண்டு யாரும் ஜல்லிக்கட்டு நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றிருக்கிறோம்.  அதைத்தான் சுலோச்சனா அம்மாகிட்ட  மகிழ்வோடு சொல்லிக் கொண்டிருந்தேன்.

கலா: இன்று ஊரெல்லாம் அதே பேச்சு தான் போல் அம்மா. காலையிலிருந்து எங்கப்பா கூட வருத்தத்துடன் அதே வேலையாத்தான் சுத்திக்கொண்டிருக்கிறார்.

பத்மபிரியா: இதில் வருத்தப்பட என்னடி இருக்கு? சாமி மாதிரி கும்பிட வேண்டிய மாடுகளை போட்டு கண்ட கண்ட ஆளுங்கள் எல்லாம் கொடுமைப்படுத்துகிறார்கள் காட்டுமிராண்டி ஆட்கள். ஒரு வழியா பகவான் நல்ல தீர்ப்பை பெற்றுக் கொடுத்துவிட்டார்.

கலா: உங்களுக்கு வருத்தப்பட ஒன்றும் இல்லைமா. எங்கப்பா  வேலை பார்க்கிற இடத்தில் மாடுகளுக்கு அவர் தான் மஞ்சு விரட்டு பயிற்சிகொடுப்பார். மஞ்சு விரட்டிற்காகவே ஆறு காளை மாடுகளை பிள்ளைகளைப் போல பராமரித்துக் கொண்டிருக்கிறார். இனி அந்த மாடுகளுக்கு என்னாகுமோ என்றுபதட்டமாக இருந்தார். யாரா இருந்தாளும் அப்படித்தானம்மா இருப்பார்கள்.

பத்மபிரியா: (வியப்புடன்) காளை மாடுகளைத்தான் ஜல்லிக்கட்டுக்கு பயன்படுத்துவார்களா? (சுதாரித்துக் கொண்டு) இனிமேல் ஜல்லிக்கட்டு எல்லாம் எக்காலத்திலும் நடத்த முடியாது. பேசமால் அந்தக் காளைமாடுகளை எல்லாம் கேரளாவிற்கு அடிமாடாக அனுப்பச் சொல்.

கலா: (கோபமுடன்) ஏம்மா, வயல் வேலைக்குக் கூட அனுப்பாமல் வைத்திருக்கின்ற காளைகளை அடிமாடா அனுப்பச் சொல்ல எப்படிம்மா உங்களுக்கு மனசு வருது? (வேலைக்கு வந்த இடத்தில் எதற்கு வம்பு என்று நிதானமடைந்து) சரி அதைவிடுங்கள் அம்மா. நான் வந்த வேலையைப் பார்க்கின்றேன். எப்பவும்போல இந்த  ஆண்டும் மஞ்சுவிரட்டு நடக்கும் என்று எங்கப்பாவே சமாதானமாகிவிட்டார். நான் இங்கே அதைப் பேசி உங்களிடம் வாக்குவாதம் பண்ணி என்ன ஆகப் போகின்றது.

manju virattu2பத்மபிரியா: (பரபரப்புடன்) இந்த  ஆண்டும் ஜல்லிக்கட்டு நடக்குமா? எப்படி நடக்கும்? உச்ச நீதிமன்றத்திலேயே தடை வாங்கிட்டோம். இனிமேல் போவதற்கு நீதி மன்றம் ஏதுமில்லை. நடத்தட்டும் பார்க்கிறேன். ஒருத்தர் விடாமல் அத்தனை பேரும் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும், சொல்லிடு உங்கப்பாகிட்ட, நான் சொன்னேன் என்று அழுத்தி சொல்லிவிடு.

சரிம்மா சொல்கிறேன் என்று கலா சொன்னாலும் பத்மபிரியாவிற்கு மனது ஆறவில்லை. அலைபேசியை கையில் எடுத்து உள்ளூர் காவல் நிலைய ஆய்வாளரைத் தொடர்பு கொண்டார்.

பத்மபிரியா: வணக்கம். நான் பத்மபிரியா அம்மா பேசுகிறேன். இந்த ஆண்டு யாரும் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைத்திருக்கின்றது. அத்தீர்ப்பைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டியது உங்களுடைய பொறுப்பு.

ஆய்வாளர்: சரிங்கள் அம்மா, முயற்சி செய்கிறோம். காலையில் இருந்து இதே கோரிக்கையுடன் அழைக்கும் மூன்றாவது நபர் நீங்கள். எல்லோரும் வீட்டில் இருந்து எளிதாக கூறிவிடுகின்றீர்கள். இங்கு காவல் நிலைய வாயிலில் முன்னூறு பேருக்கும் மேலாக திரண்டு இருக்கிறார்கள் மஞ்சு விரட்டை நடத்தியே தீர்வோம் என்று.

பத்மபிரியா: அது உங்கள் பிரச்சினை. தீர்ப்பை மீறி ஜல்லிக்கட்டு நடந்தால், உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வோம், அப்புறம் என்ன அம்மா இப்படி செய்துவிட்டீர்களே என்று கேட்கக் கூடாது.

ஆய்வாளர்: (எரிச்சலுடன்) இந்த சின்ன நிகழ்வை ஏம்மா பெரிது படுத்துகின்றீர்கள். ஆயிரம் ஆண்டுகளாக செய்துகொண்டு வருகின்றார்கள். எல்லோரும் தாய் பிள்ளைகளாக ஒன்றாகப்பழகி வாழ்பவர்கள். மாலையில் ஊர் தலைக்கட்டை காவல் நிலையம் வரச்சொல்கிறேன், நீங்களும் வாருங்கள். அனைவரும் பேசி முடிவு செய்து கொள்ளலாம். நாம் கடுமையாக மஞ்சு விரட்டை நிறுத்தினால், தேவையற்ற ஊர்க்கலவரம் உருவாகும்.

பத்மபிரியா: வருகிறேன். ஆனால் எனக்கு முழு பாதுகாப்பு தர வேண்டும்.

ஆய்வாளர்: என்னம்மா தீவிரவாதிகளை சந்திக்க வருகின்ற மாதிரி பாதுகாப்பு எல்லாம் கேட்கிறீர்கள். எல்லாரும் விவசாயிங்கள் அம்மா. உங்களுடைய  பாதுகாப்பிற்குநான் முழுப் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன்.

மாலையில் நடந்த கூட்டத்தில் இரண்டு மணி நேர விவாதங்களுக்குப் பின்னர் பத்மபிரியா அம்மாவின் உடன் வந்தவர்கள் மஞ்சு விரட்டைத் தடுப்பதனால் தேவையற்ற சிக்கல்கள் உருவாகின்றது என்பதை படிப்படியாக உணரத் தொடங்கி இருந்தனர். இருப்பினும் பத்மபிரியா அம்மா எந்த உடன்பாட்டிற்கும் இறங்கி வருவதாக இல்லை. மீண்டும்ஒரு மணி நேர விவாதத்திற்கு பின்னர், ஆய்வாளர் எழுந்து நான் மஞ்சு விரட்டைத்தடை செய்து விடுகின்றேன், ஆனால் ஊரில் நடக்கும் கலவரத்திற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டி வரும், என்னால் உங்கள் ஒவ்வொருவருக்கும் வீட்டிற்குவீடு பாதுகாப்பு எல்லாம் கொடுக்க இயலாது. நடைமுறையை உணர்ந்து பொறுப்போடு பேசுவதென்றால் பேசலாம், இல்லை என்றால் இத்துடன் முடித்து கொள்ளலாம் என்றதும் பதமபிரியா அம்மா நிலைமையை உணரத் தொடங்குகின்றார். பின்னர் ஒருவழியாக கடுமையான நிபந்தனைகளுடன் மஞ்சு விரட்டை நடத்திக் கொள்ளலாம் என்றுமுடிவு செய்யப்படுகின்றது. பத்மபிரியா அம்மாவும் அவரின் தோழிகளும், கீழ்கண்ட நிபந்தனைகளை எழுதத் தொடங்கினர்.

1. மாடுகளுக்கு பொட்டு வைப்பதற்கு பதிலாக நாமம் போட வேண்டும்.

2. கொம்பு முளைக்காத மாடுகளை கண்டறிந்து வில்லோ(willow) மரத்தினாலான செயற்கை கொம்புகளை பொருத்தி பயன்படுத்த வேண்டும்.

3. மாட்டின் மரக் கொம்புகளுக்கு இந்திய தேசிய கொடியின் மூவர்ண நிறம் அடிக்கப்பட வேண்டும்.

4. மாடு பிடிக்கும் வீரர்கள் அணி அணியாகத் தான் விளையாட வேண்டும்.

5. பயந்த குணம் உடையவர்கள், எந்த உடற்பயிற்சியும் செய்யாதிருப்பவர்கள்பெரும்பான்மையாக விளையாட முடியும்படி விதிமுறைகள் மாற்றி வடிவமைக்கப்படவேண்டும்.

6. மாடுகள் ஒரு வாரத்திற்கு மேலாக பட்டினி போடப்பட்டு வலிமையை குறைத்த பின்னரே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப் படவேண்டும்.

பத்மபிரியா அம்மா அடுத்த நிபந்தனையை எழுத தொடங்கும் பொழுது பொறுமை இழந்த ஆய்வாளர் காகிதத்தை பறித்து கிழித்து எறிந்து விட்டு ஊர் தலைவர்களிடம் நீங்கள்சென்று வழக்கம் போல் காளைகளை அடக்குங்கள், இந்தக் கிழடுகளை நான் அடக்கிக் கொள்கிறேன் என்று கர்ஜிக்கிறார். 2015 இலும் மஞ்சு விரட்டு இனிதே நடக்கின்றது.


சாகுல் அமீது

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மஞ்சு விரட்டும் பத்மபிரியா அம்மையாரும்”

அதிகம் படித்தது