மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உலகப் பொருளாதாரத்தின் திசை-3

T.K.அகிலன்

Feb 7, 2015

porulaadhaaram4ஒரு பொருளாதாரம் ஒட்டு மொத்தமாக மந்த நிலையில் இருக்கும்போது, அந்த பொருளாதாரத்தின் அங்கங்களான மக்களும் அவர்களின் தனிப்பட்ட பொருளாதார தேக்க நிலையை அடைவார்கள். அதாவது, அவர்களிடம் தேவை எனக்கூறப்பட்ட நுகர்வுப் பொருட்களை வாங்க போதுமான பணம் இருக்காது. எனவே உற்பத்தியும் குறைக்கப்படும். இதன்மூலம் அந்த உற்பத்தியில் ஈடுபடும் உழைக்கும் வர்க்கத்துக்கு, குறைவான வேலையே உற்பத்தித்துறையில் இருக்கும். இதன்மூலம் அவர்கள் பண வருமானம் இன்னும் வீக்கமடையும். இது ஒரு சுழல் இயக்கமாக நிகழத்தொடங்கும் – பொது மக்களிடம் செயற்கையாக உருவாக்கப்பட்ட தேவைகள் அனைத்தும் இல்லாமல் ஆகும் வரை. அதன் பின் அவர்கள் அடிப்படைத்தேவைகள் மட்டுமே இருக்கும். அவற்றை குறைக்க முடியாது. எனவே அவற்றுக்கான உற்பத்தியும், தொழில்களும் அதற்கேற்ற வகையிலான பணப்புழக்கமும். இதுவே இயற்கை நிலையாக இருக்க முடியும்.

ஆனால், எந்தப் பொருளாதாரமும் அந்த நிலையை அடையும் வரை காத்திருக்க முடியாது. ஏனெனில் மற்ற பொருளாதாரங்கள், அவற்றுக்கான சூறையாடும் களங்களை எப்போதும் தேடிக்கொண்டே இருக்கும். இவ்வாறு வீக்கமடையும் பொருளாதாரங்கள், பொருளாதார சூறையாடலுக்கான எளிய களங்கள். எனவே எல்லா பொருளாதாரங்களும், அவற்றின் உற்பத்தியையும், எனவே தேவையையும் உயர்த்துவதற்கான எல்லா கதவுகளையும் தட்டிக்கொண்டே இருக்கும்.

porulaadhaaram2உதாரணமாக தற்போது உலகெங்கும் பரவலாக அறியப்படும் Quantitative Easing என அழைக்கப்படும், அரசாங்கங்களின் பணப்புழக்கத்துக்கான வழிமுறைகள். ஜப்பான் பொருளாதாரம் சுமார் 20 வருடங்களுக்கு முன்னால் மந்த நிலையை அடைந்தது. அதற்கு முந்தைய காலகட்டத்தில், அது உலகெங்கும் உள்ள மக்களின் ஆடம்பர நுகர்வு சாதனங்களின் உற்பத்தித் தளமாக விளங்கியது. உலகெங்கும் உள்ள மக்களின் நுகர்வின் காரணமாக, அதுவரைக்கும், ஜப்பான் மிக வேகமாக பொருளாதார வளர்ச்சியையும் அடைந்து வந்தது. ஆடம்பரப் பொருட்களின் நுகர்வுக்கான மனநிலை, அனைத்து மக்களிடமும் தோற்றுவிக்கப்பட்ட பின்னர், ஜப்பானின் உற்பத்தி மட்டும் அனைத்து உலகத்துக்கும் போதுமானதாக இல்லை. கொரியா, சைனா போன்ற பொருளாதாரங்கள், அந்த இடைவெளியை நிரப்பத்தொடங்கின. அத்துடன் அந்த புதிய பொருளாதாரங்களின் உற்பத்திச் செலவு ஜப்பானை விட குறைவாக இருந்ததால், அவற்றால் குறைந்த விலைக்கு பொருட்களை நுகர்வோருக்கு கொடுக்க முடிந்தது. அத்துடன் ஜப்பானின் பொருளாதாரம் தேக்க நிலையையும் அடைந்தது. இந்த தேக்க நிலையிலிருந்து விடுபட, கடந்த 20 வருடங்களாக ஜப்பான் முயற்சி எடுத்து வருகிறது. நாட்டில் செயற்கையாக பணப்புழக்கத்தை அதிகரிப்பதன் மூலம், பொருளாதார மந்த நிலையிலிருந்து விடுபடும் முயற்சி 20 ஆண்டுகளுக்குப்பின்னரும் பலன் அளிக்கவில்லை. இந்த செயற்கையான பண்புழக்கத்தை அதிகரிக்கும் முறை Quantitative Easing என அழைக்கப்படுகிறது.

2008-ம் ஆண்டுக்குப்பின் பொருளாதார மந்த நிலையை அடைந்த அமெரிக்கா, இதே வழியை, பணப்புழக்கத்துக்காக கையாண்டு வருகிறது. அமெரிக்காவுடன், இங்கிலாந்து உட்பட சில ஐரோப்பிய நாடுகளும் கூட! ஜப்பானுக்கு கை கொடுக்காத செயற்கை பணப்புழக்கம், அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் கைகொடுக்குமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும். அமெரிக்காவின் முதலாளித்துவ செயல்பாடுகள் எவ்வாறு 2008-ம் ஆண்டு உலகப் பொருளாதார உடைவை கொண்டு வந்தது என்பதை அறிய வேண்டுமானால், 2010 -ம் ஆண்டு சிறந்த ஆவணப்படத்துக்கான ‘அகாடமி விருது’ பெற்ற INSIDE JOB என்னும் ஆவணப்படத்தை நீங்கள் கண்டிப்பாக பார்த்தாக வேண்டும்.

இந்த செயற்கை பணப்புழக்கத்தின் நோக்கம்தான் என்ன? நான் புரிந்து கொண்டவரையில் இங்கு கூற முயற்சிக்கிறேன். மேலதிக விபரங்களுக்கும், இங்கு கூறப்பட்டுள்ளவற்றின் நம்பகத்தன்மையை உறுதி செய்யவும், (உண்மையான) பொருளாதார நிபுணர்களிடம் ஆலோசனையை பெறலாம்.

porulaadhaaram5அரசாங்கங்கள், அவற்றின் பணத்தேவைகளுக்காக கடன்பத்திரங்களை வெளியிட்டிருக்கும். இந்த கடன்பத்திரங்களை, ‘பென்ஷன்’ நிதியங்கள், ‘இன்ஷூரன்ஸ்’ நிதியங்கள், வங்கிகள் ஆகியவை பெரும்பாலும் வாங்கியிருக்கும். இந்த கடன்பத்திரங்களிலிருந்து கிடைக்கும் வட்டி, அந்த நிறுவனங்களின் வருவாயாக இருக்கும். இதன் மூலம் அரசாங்கம் செய்வதென்னவென்றால், புழக்கத்தில் உள்ள பணத்தை தன் செலவுகளுக்காக கடன் வாங்கிக்கொள்கிறது.

செயற்கை பணப்புழக்கத்தில், இதன் எதிர் இயக்கம் நடைபெறுகிறது. பொருளாதார சரிவின் போது, வங்கிகளிடம் போதிய பணம் இல்லை. எனவே அவற்றால், உற்பத்தி செய்யும் முதலாளிகளுக்கு கடன் அளிக்க முடிவதில்லை. உற்பத்தியை அதிகரிப்பதற்கு தேவையான பணத்தை அவர்கள் கடனாக பெற முடிவதில்லை. இதனால், அவர்களின் உற்பத்தி குறைகிறது. உற்பத்தி குறைவதனால், தொழிலாளர்களின் வேலை குறைகிறது. எனவே தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. அதனால் நுகர்வோர்களாகிய பொதுமக்களிடம் பணப்புழக்கம் குறைகிறது. எனவே, அவர்களின் தேவையும் நுகர்வும் குறைக்கப்படுகிறது. இதன் எதிர்வினையாக உற்பத்திப்பொருட்களின் தேவையும் குறைகிறது. எனவே உற்பத்தி மீண்டும் குறைகிறது…… இது ஒரு சுற்றியக்கம் – ஒன்றை ஒன்று குறைத்துக்கொண்டே வரும் இயக்கம்.

செயற்கை பணப்புழக்கத்தில், அரசாங்கம், அது முன்பு விற்ற கடன்பத்திரங்களை, அதிக விலைக்குத் திரும்ப வாங்கிக்கொள்கிறது. கடன் பத்திரங்களுக்கு, அது ஈட்டும் வட்டியை விட அதிக விலை கிடைப்பதால், அதை வைத்திருக்கும் வங்கி போன்ற நிறுவனங்கள், அந்த கடன்பத்திரங்களை அரசாங்கத்திடமே விற்று, அதற்கான பணத்தை பெற்றுக்கொள்கின்றன. இப்போது வங்கிகளிடம் கடன் கொடுப்பதற்கான பணம் உள்ளது. அத்துடன் அரசாங்கம், கடன்களுக்கான வட்டி விகிதத்தையும் மிகவும் குறைவாக வைத்துக்கொள்ள தேவையான அரசாங்க ஆணைகளை அளிக்கிறது. அதாவது, முதலாளிகளுக்கு, மிகக்குறைந்த வட்டியில் உற்பத்திக்கான பணம் கிடைக்கிறது. இதன் மூலம், தொழில் வளர வேண்டும் தொழிலாளர்களின் தேவை அதிகரிக்க வேண்டும், எனவே வேலையில்லா திண்டாட்டம் குறைய வேண்டும், பொது மக்களிடம் பணப்புழக்கம் அதிகரிக்க வேண்டும், எனவே தேவையும் நுகர்வும் அதிகரிக்க வேண்டும், அதன் மூலம் உற்பத்தி மீண்டும் அதிகரிக்க வேண்டும் – சுற்றியக்கம் வளர்ச்சிப்பாதைக்கு செல்ல வேண்டும். இதுவே இந்த பணப்புழக்க அதிகரிப்பின் எதிர்பார்ப்பு!

ஆனால் உண்மையில், செயற்கை பணப்புழக்கம் தொடங்கி சுமார் ஆறு ஆண்டுகள் சென்ற பின்பும் எந்த தளர்வடைந்த பொருளாதாரங்களும், மீண்டும் வளர்ச்சிப்பாதைக்கு திரும்பவில்லை. அதற்கு காரணம் என்ன? அதுவும் முதலாளித்துவம், தன் சுயலாபங்களுக்காக உருவாக்கிக்கொண்ட வழிமுறைகளே. அதற்கு முன்பாக, தன் செலவுகளுக்காக கடன்பத்திரங்கள் மூலம் கடன் பெற்ற அரசாங்கங்கள், இன்னும் பற்றாக்குறை நிலையிலேயே இருந்தாலும், அந்த கடன் பத்திரங்களை அதிக விலைக்கு வாங்குவதற்கான பணம் எங்கிருந்து வருகிறது? இது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறி! பொருளாதார நிபுணர்கள்தான் இதற்கான பதிலை அளிக்க வேண்டும். இதனாலாயே, செயற்கை பணப்புழக்கத்தை, அரசாங்கங்களின் ‘பணத்தை அச்சிடும்’ வேலை என, இந்த முறையை ஏற்க இயலாதவர்கள் கூறி வருகிறார்கள்.

முதலாளித்துவ பொருளாதாரங்கள், அவற்றின் லாப நோக்கங்களுக்களுக்காக, வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும், வெளி நாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பல வகையிலான சட்டங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த சட்டங்களே தற்போதைய செயற்கை பணப்புழக்கம் நுகர்வையும் உற்பத்தியையும் அதிகரிக்க செய்யாமல் இருப்பதற்கான காரணம்.

porulaadhaaram3வங்கிகள் செயற்கை பணப்புழக்கத்தின் மூலம் பெற்ற பணத்தை தற்போது பல வழிகளில் செலவிடலாம். அதை தங்கள் பொருளாதாரத்தில் உள்ள உற்பத்தியாளர்களாகிய முதலாளிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிக்கலாம். இங்கு அவர்கள் கடனுக்கான வட்டியின் மூலம் பெறும் லாபம் மிகவும் குறைவானது. அல்லது அந்த பணத்தை இன்னும் பொருளாதாரத்தில் தேக்க நிலையை அடையாத பொருளாதாரங்களில் முதலீடு செய்யலாம். இதன் மூலம், அந்த பொருளாதாரம் உறபத்தி செய்யும் லாபத்தில் பங்கு பெற முடியும். இவ்வாறு பெறும் லாபம், சொந்த பொருளாதாரத்தில் குறைந்த வட்டிக்கு கடன் கொடுத்து பெறும் லாபத்தை விட மிக அதிகமாக உள்ளதால், பெரும்பாலான வங்கிகள் அரசாங்கத்திடம் கடன்பத்திரங்களை அதிக விலைக்கு விற்றதன் மூலம் கிடைத்த பணத்தை, வெளிநாடுகளில் முதலீடு செய்து அதிக லாபம் பார்க்கின்றன. அதாவது அரசாங்கங்கள், அவை இயற்றிய முதலீடு சார்ந்த சட்டங்களின் மூலம் கட்டுண்டு இருக்கின்றன. அந்த நாட்டின் பொருளாதாரத்துக்காக அச்சிடப்பட்ட அந்த நாட்டுப்பணம், வெளிநாடுகளுக்கு முதலீடாக செல்வதை தடுக்க முடியாத நிலை. எனவே சொந்த பொருளாதாரம் தொடர்ந்து மந்த நிலையில் இருக்கும் நிலை.

இந்தியாவுக்கு தற்போது வெளிநாட்டு முதலீடுகள் அவசியமாகப்படுகிறது. எனவே வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான சட்டங்கள், எவ்வித கட்டுப்பாடும் இன்றி இயற்றப்படுகின்றன. ஆனால், இந்தியா ஒரு பொருளாதார நிலைத்தன்மையை அடைந்த பின், இந்த சட்டங்களே அதற்கு எதிரியாகவும் மாறலாம்!

முதலாளித்துவம், வரைமுறையற்ற உற்பத்தியையும், எனவே வரைமுறையற்ற நுகர்வையுமே விரும்புகிறது. முன்பே கூறியபடி, மனித நுகர்வின் எல்லை, அந்த நுகர்வால் உருவாக்கப்படும் கழிவுகள் மற்ற உயிரினங்களால் நுகர்ந்து அழிக்கப்படும் அளவுக்குள் இருந்தால்தான், பூமியின் சமநிலை குலையாமல் இருக்கும். ஆனால் மனித நுகர்வு, அந்த எல்லைகளை பெருமளவு கடந்து, மனிதனால் உருவாக்கப்படும் கழிவுகளை செயற்கையாக அழிக்கும் அளவுக்கும், அந்த அழிப்பின் இயக்கத்தில், பிற உயிரினங்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் அளவுக்கும் சென்று விட்டது. உற்பத்திக்கான கச்சா பொருட்களை அடைவதற்கு, அளவின்றி பிற உயிரினங்களின் வாழ்வாதாரங்களையும், எளிய மனிதர்களின் வாழ்வாதாரங்களையும் அழித்து, மனித நுகர்வு பொருட்களாக மாற்றுகின்றது. பிற உயிரினங்கள் அவற்றின் வாழ்வாதாரங்களை இழக்கும்போது, அவை அழிந்து போகின்றன. இதனால் உணவுக் கண்ணியில் ஒரு கண்ணி விடுபட்டு விடுகிறது. பாதிப்புக்குள்ளாவது மனித இனமும்தான்.

இன்னொரு புறத்தில், மனிதனுக்கான உணவை அடையும் பதட்டத்தில், கட்டுப்பாடற்ற செயற்கை உரங்களின் உபயோகத்தின் மூலம் நிலங்களின் சமநிலைத்தன்மை குலைக்கப்பட்டுள்ளது. பூச்சி மருந்துகளின் உபயோகத்தால், பூச்சியினங்களுடன் சேர்த்து அந்த பூச்சிகளை உண்டு வாழும் உயிரினங்களையும் அழிவுக்கு உட்படுத்துகிறோம் – தேனீக்கள் உட்பட. உலகத்தில் தேனீக்களின் இனம் அழிந்தால், அது பூமியில் மிகப்பெரிய உயிரின அழிவுக்கு காரணமாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.

porulaadhaaram1மனித இனம் விழித்துக்கொள்ள வேண்டிய காலம் கடந்து கொண்டே இருக்கிறது. அளவற்ற உற்பத்தியையும், எனவே கட்டுப்பாடற்ற நுகர்வையுமே அடிப்படையாக கொண்ட முதலாளித்துவத்தின் பங்களிப்பை முடித்து வைக்க வேண்டிய காலம் வந்து விட்டது. முதலாளித்துவத்தால், மனித வாழ்க்கை வசதிகள் பெருமளவு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், மனித இனம் மட்டுமல்லாமல், பல உயிரினங்களின் அழிவையும் அது தொடங்கி வைத்துள்ளது – பூமியின் சமநிலையை குலைப்பதன் மூலம்! பூமியின் சராசரி வெப்பம் அதிகமாக தொடங்கி விட்டது. துருவப் பனிபாறைகள் உருகி, கடல் மட்டம் உயரத் தொடங்கி விட்டது, அதன் மூலம் நிலப்பரப்பும் குறையத்தொடங்கி விட்டது. பல உயிரினங்கள், பூமியிலிருந்து முற்றாக அழியும் நிலையில் உள்ளன. புதிய பொருளாதார முயற்சிகளை மிக வேகமாக தொடங்கியாக வேண்டும்.

முதலாளித்துவம், அதன் தேவையான சமூக சமத்துவத்தை, ஒரு குறிப்பிடத்தக்க எல்லைக்குள் அடைந்து விட்டது. அது தேக்க நிலையையும் அடைந்து விட்டது. இந்த தேக்க நிலையிலிருந்து மீள வேண்டுமானால், பேரழிவு ஒன்றை சந்தித்தாக வேண்டும். அதுவே இயற்கை விதி. ஆனால் முதலாளித்துவம் அதன் அதிகப்பட்ச பரிசாக, மனித இனத்திற்கு சுதந்திரமான சிந்தனை என்னும் ஆயுதத்தை அளித்துள்ளது. மனித இனம் நிச்சயமாக அந்த ஆயுதத்தை உடனடியாக பயன்படுத்தியாக வேண்டும். அந்த ஆயுதம் முதலாளித்துவத்தை அழித்து விட்டாலும்! மனித இனம் அழிவதற்கு பதிலாக, முதலாளித்துவம் என்னும் பொருளாதார இயக்கத்தை பலி கொடுக்கலாம். இதன் மூலம் மனித இனம் பூமியில் தப்பிப்பிழைப்பதற்கான சாத்தியத்தை, முதலாளித்துவம் அளித்த சுதந்திர சிந்தனையே அளிக்கட்டும்.

எனில், அடுத்த பொருளாதார முயற்சி தொடங்கியாக வேண்டும். முதலாளித்துவம் விட்டுச் செல்லும் இடத்திலிருந்து தொடங்கி, சமூகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தேவையான பொருளாதார இயக்கம். இன்றைய பொருளாதார வல்லுனர்கள், முதலாளித்துவத்தில் மட்டுமே தேர்ச்சி பெற்றவர்கள். எனவே அவர்களால் புதிய பொருளாதார முயற்சிகளை முன்னெடுக்க முடியும் என்று தோன்றவில்லை. விதிவிலக்காக, அவர்களுக்கிடையே சிந்தனையாளர்கள் இருந்தால் அது சாத்தியமாகலாம்.

எதிரெதிர் துருவங்களான, முதலாளித்துவத்தையும் கம்யூனிஸ பொருளாதாரத்தையும் கலந்து, ஒன்றின் குறைபாட்டை மற்றொன்றால் களைந்து, ஒன்றின் நிறைவை மற்றோன்றின் நிறைவால் மேலும் முழுமையாக்கி ஒரு புதிய பொருளாதார கொள்கையை கொண்டு வரலாம். காந்திய பொருளாதார கொள்கையான, முழுமையான, பரவலாக்கப்பட்ட சுயசார்பு பொருளாதாரக் கொள்கைகளை ஆராயலாம். காந்திய பொருளாதார கொள்கை, மிகப்பரவலாக்கப்பட்ட நிலையிலேயே சமூகத்தை முன்னோக்கி எடுத்துச்செல்ல முடியும் என்று தோன்றுகிறது. பொருளாதார அலகின் அளவு அதிகரிக்கும் தோறும், காந்திய பொருளாதாரக் கொள்கைகள் எதிர்மறை விளைவுகளையும் அளிக்கலாம். பரவலாக்கம் நிகழ்ந்தால், தனிமனித சுதந்திரம் அதன் எல்லையை மிக எளிதாக அடைய முடியலாம். ஆனால், சமூகம் தனிமனித சுதந்திரத்தை கையாளத்தக்க அளவில் ஆன்மீக முன்னேற்றத்தை அடைந்திருக்க வேண்டும்.

சுதந்திரத்திற்கு பின், 1991-ம் ஆண்டு வரை இந்தியா பின்பற்றிய, முதலாளித்துவமும், அரசாங்கமும் இணைந்த பொருளாதாரக்கொள்கைகளை மீண்டும் பரிசீலனை செய்யலாம். இதன் மூலம் நுகர்வின் அளவையும் உற்பத்தியின் தேவையையும் ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்த முடியலாம்.

இன்னும் எண்ணற்ற சாத்தியங்கள். மனிதனின் சிந்தனைக்குதான் எல்லை இல்லையே. எனில் ஏன் ஒரு அடுத்த தலைமுறை பொருளாதார கொள்கையை உருவாக்க முடியாது. அதன் மூலம், பூமியில் மனித இருப்பை தக்கவைத்துக் கொள்வதையும்!


T.K.அகிலன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலகப் பொருளாதாரத்தின் திசை-3”

அதிகம் படித்தது