மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி – 48

கி.ஆறுமுகம்

Feb 14, 2015

bose3போசு இறந்த செய்தி தெரியாமல் அவரது நண்பர்கள் எஸ்.ஏ.ஐயர், கலோனல் குல்ஸாரா சிங், கலோனல் பிரீதம் சிங், மேஜர்–அபித்ஹஸன், தேப் நாத் தாஸ் முதலியோர் போசு சென்ற இடத்திற்கு ஜப்பானியர்கள் தங்களையும் அனுப்பிவைப்பார்கள் என்று எதிர்பார்த்து  சைகோன் விமான நிலையத்தை அடைந்தனர். எஸ்.ஏ.ஐயர் ஜப்பானுக்கும் மற்றவர்கள் ஹனோய் நகருக்கும் செல்ல வேண்டும். ஐயர் ஜப்பானுக்குச் சென்றால் போசுக்கு உதவியாக இருப்பார் என்று தீர்மானித்திருந்தனர். இவர்கள் டோக்கியோவுக்கு செல்லும் விமானத்தில் ஒருவருக்கு மட்டும்தான் இடமும் இருந்தது. ஐயர் செல்லும் விமானத்திற்கு முன் அவருடைய நண்பர்கள் விமானம் புறப்பட்டது. ஐயர் மட்டும் தனியாக விமானத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.

பின்னர் விமானம் வந்ததும் ஒரு ஜப்பான் அதிகாரி வந்து ஐயரிடம் நான் போசுக்காக வருந்துகிறேன் என்றார். இவர் ஏன் அவ்வாறு கூறுகின்றார் என்று ஒன்றும் புரியாமல் திகைத்திருக்கும் போது, மற்றொரு ஜப்பான் அதிகாரி வந்து முதலில் வந்தவரிடம் ஜப்பானிய மொழியில் பேசினார். இவர்கள் உரையாடலின் மூலம் போசு சென்ற விமானத்தில் ஏதோ ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சற்றே ஐயர் ஊகித்துக் கொண்டாரே தவிர போசு உயிர் இழந்திருப்பார் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை. பின்னர் அவர்கள் இருவரும் பேசி முடித்த பின்னர், ஐயர் அவர்களிடம் போசுக்கு என்ன நேர்ந்தது என்று வினவினார். ஒருவர் மட்டும் ஐயர் நீங்கள் இதை கேட்பதற்கு சற்று உங்கள் மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறி போசு மஞ்சுரியா செல்லவில்லை என்றதும், ஐயரின் அச்சம் அதிகமானது. என்ன சொல்லுகிறீர்கள் தெளிவாகக் கூறுங்கள் என்றதும் போசு சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. அதில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பலன் இன்றி இறந்துவிட்டார் என்று கூறினார். இதனை ஐயர் அறிந்த தேதி 1945 ஆகஸ்டு 20. ஜப்பானியர் கூறியதாக ஹபிபுர் ரஹமான் குறிப்பிட்டிருந்தது, “நான் போசின் உயிர் பிரியும் போது அவருடன் இருந்தேன் அவரது உடலை பாடம் பண்ணி சிங்கப்பூருக்குக் கொண்டு செல்ல எனக்கு உதவுங்கள் என்று ஜப்பானியரிடம் கேட்டதாகவும் ஆனால் இன்றைய சூழ்நிலையில் அது தங்களால் முடியாது என்று தெரிவித்து விட்டனர். எனவே பின்னர் ஆகஸ்டு 20ல் அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. ஆகஸ்டு 22ல் எரியூட்டப்பட்டது. தைக்கோ நகரிலேயே இதனை ஜப்பானியர்கள் இராணுவ மரியாதையுடன் என் கண்ணெதிரில் இதனை செய்தனர் என்று ஹபிபுர் ரஹமான் கூறியுள்ளார்”. ஆனால் ஜப்பானியர் கூறுவது ஆகஸ்டு 20ல் போசின் உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டது. ஆகஸ்டு 21ம் தேதி எரியூட்டப்பட்டது. பின்னர் அஸ்தியை ஹபிபுர் ரஹமானிடம் ஒப்படைத்தோம் என்றனர்.

விமான விபத்து நடந்தது ஆகஸ்ட் 18-1945 மதியம் 2 மணி முதல் 3 மணிக்குள் 3.30மணிக்கெல்லாம் இராணுவ மருத்துவமனைக்குச் சென்றுவிட்டனர். பின்னர் அன்று இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் போசின் உயிர் பிரிந்துவிட்டது என்று மருத்துவமனை குறிப்பிடுகின்றது. ஆனால் ஜப்பான் அரசு போசு இறந்த செய்தியை 1945 ஆகஸ்டு 22ம் தேதி முதன் முதலில் உலகறிய செய்தியை வெளியிடுகிறது. அதுவும் ஆகஸ்டு 21ல் இந்தியாவில் டெல்லியில் வானொலி ஒன்றில் போசு விமான விபத்தில் இறந்துவிட்டார் என்று தெரிவித்த மறுநாள் ஜப்பான் அரசு தெரிவிக்கிறது. 18ல் நடந்த விபத்து 22ல் ஜப்பான் அறிவிக்கக் காரணம் என்ன?

subash3அன்று இந்தியாவில் இருந்த மக்கள் எவரும் போசு இறந்திருக்க வாய்ப்பே இல்லை, அவர் பிரிட்டன் கண்களில் மண்ணை தூவவே அவர் செய்திருக்கும் ஏற்பாடு இது. 1941ல் போசு எவ்வாறு இந்தியாவில் இருந்து பிரிட்டனை ஏமாற்றி தப்பித்து பின்னர் சில மாதம் சென்ற பிறகு நான் போசு பேசுகிறேன் என்று ஜெர்மனில் இருந்து வானொலியில் பேசினார் பின்னர் சில மாதம் காணாமல் போய் பின்னர் நான் போசு பேசுகிறேன் என்று ஜப்பானில் இருந்து வானொலியில் பேசினார். அப்போது பிரிட்டனும் போசு இறந்துவிட்டதாகவே கூறியது. அது போன்று இன்று போசு தப்பிச் செல்லுவதற்காக ஜப்பான் அரசு இவ்வாறு தெரிவிக்கின்றது என்று மக்கள் கூட்டம் கூட்டமாகப் பேசினர். இந்த செய்தியை அப்போது நேரு மற்றும் காந்தியும் கூட நம்பவில்லை. இது போசு செய்த ஏற்பாடு என்று இந்தியாவில் இருந்த அவரது நெருங்கிய நண்பர்கள் கூறினர்.

ஆகஸ்டு 28 1945ல் கல்கத்தா முனிசிபல் கவுன்சில் கூட்டம் கூடியது. அப்போதைய அதன் தலைவர் தேபேந்திரநாத் முகர்ஜி வருத்தம் கூடிய குரலில் நமது பெரும் தலைவரின் ஆத்மா சாந்தி அடைய நாம் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்றார். கூட்டத்தில் இருந்த எவரும் எழுந்திருக்கவில்லை. அதைப் பார்த்ததும் சற்று கோபத்துடன் உத்தரவிட்டும் பலன் இல்லை. உடனே அவர் எனது கட்டளைக்கு அடிபணியாதவர்கள் எவரும் இங்கு இருக்கக் கூடாது என்று உத்தரவிட்ட மறுநிமிடத்தில் தலைவர் மட்டும் தனியாக அறையில் அமர்ந்திருந்தார். இந்தியாவில் போசின் மரணத்தை மக்கள் ஒருவர் கூட நம்பவில்லை. ஐயர் ஜப்பானியரின் உரையாடலில் சற்று உருகியிருந்தார். அவரிடம் ஜப்பான் அதிகாரி போசு விமான விபத்தில் இறந்துவிட்டார் என்று தெரிவித்ததும் ஐயர் தலை சுற்றி கீழே விழாத குறையாக தடுமாறி நின்றார். என்ன சொல்கிறீர்கள் போசு இறந்துவிட்டாரா? என்றார். ஆம் போசு இறந்துவிட்டார் அப்படி என்றால் அவருடன் வந்த ஹபிபுர் ரஹமான் நிலை என்ன என்றதும் அவர் காயத்துடன் உயிர் பிழைத்துவிட்டார், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார் என்றதும் ஐயர் சற்று நிம்மதியுடன் இவர் கூறுவது பொய்யாக இருக்கும். ஹபிபுர் ரஹமானை நாம் சந்தித்தால் இவர் கூறியது அனைத்தும் பொய் என்று நமக்கு தெரிந்துவிடும். நாம் ஹபிபுர் ரஹமானை பார்ப்போம் என்று நினைத்துவிட்டு அந்த ஜப்பானிய அதிகாரியிடம் நீங்கள் கூறுவது உண்மை என்றால் என்னை உடனே அங்கு அழைத்துச் சென்று போசின் உடலைக் காட்டுங்கள் இல்லை என்றால் நான் மட்டும் அல்ல தென்கிழக்கு ஆசியவாழ் இந்தியர்கள் ஒருவர் கூட போசு இறந்த செய்தியை நம்ப மாட்டார்கள் உடனே என்னை அழைத்துச் செல்லுங்கள் என்றார்.

விமானம் புறப்பட்டது, அதில் மனக் குழப்பத்துடனும் வருத்தத்துடனும் அமர்ந்து பல சிந்தனைகள் மனதில் ஓடவிட்டுக் கொண்டு ஐயர் பயணம் செய்தார். இந்த செய்தி போசு ஆலோசனையின் மூலம் ஜப்பானியர் இது போன்று செய்கின்றனர் போலும், நாம் ஹபிபுர் ரஹமானை நேரில் சந்தித்தால் என்ன நடந்தது என்று அனைத்தையும் அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்ற நினைப்பில் ஆழ்ந்திருந்தார் ஐயர். விமானம் டோக்கியோவை நோக்கி சென்றது ஐயர் ஜப்பானிய அதிகாரிகளிடம் தன்னை தைகோன் நகருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். இதனைக் கேட்காமல் ஜப்பானியர் ஐயரை டோக்கியோவுக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு விடுதியில் தங்க வைத்துவிட்டு பின்னர் மறுதினம் ஜப்பானிய அரசின் தலைமைச் செயலகத்திற்கு அழைத்துச் சென்று வெளிநாட்டு அமைச்சரக அதிகாரிகள் என்ன நடந்தது என்று முழுவிவரத்தையும் ஐயரிடம் தெரிவித்தனர். எங்களால் போசின் உடலை சிங்கப்பூருக்கோ அல்லது டோக்கியோவுக்கோ கொண்டு வர முடியாத சூழ்நிலையில் இருந்ததினால் அங்கேயே எரியூட்டிவிட்டதாகவும் ஹபிபுர் சிகிச்சை பெற்று திரும்பும் போது அவரிடம் அஸ்தி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். உடனே ஐயர் ஹபிபுர் எப்போது இங்கு வருவார் என்றார். அவர் மருத்துவ சிகிச்சை முடிந்ததும் டோக்கியோவிற்கு வருவார் என்று தெரிவித்தனர்.

subaash newஐயர் டோக்கியோவில் இந்திய சுதந்திர லீக் அமைப்பைச் சேர்ந்த ஏ.எம்.சஹாஸ் என்பவரின் வீட்டில் தங்கிருந்தார். ஹபிபுர் ரஹமான் வரவை எதிர்நோக்கி காத்திருந்தார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகம் போன்று இருந்தது இரவில் உறக்கம் இல்லை மனதில் பல கேள்விகள் பல சிந்தனைகள் கொண்டு பித்து பிடித்தவரைப் போல் ஐயர் காணப்பட்டார். செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் ஐயரை ஜப்பானிய தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் போசின் அஸ்தி ஒப்படைக்கப்பட்டது. உடனே ஐயர் ஹபிபுர் ரஹமான் எங்கே? என்றார். இதற்கு அதிகாரிகள் ஹபிபுர் ரஹமான் டோக்கியோவிற்கு வந்துவிட்டார். இன்று இரவு உங்களை வந்து சந்திப்பார் என்று தெரிவித்தனர். கையில் போசின் அஸ்தியோடு வீட்டுக்குத் திரும்பினார் ஐயர். வீட்டில் இருந்த அனைவரும் ஐயருடன் சேர்ந்து இரவு வரவிருக்கும் ஹபிபுர் ரஹமானுக்காக உறக்கம் இல்லாமல் கண்விழித்துக் காத்திருந்தனர். வீட்டின் கதவு தட்டும் சத்தம் கேட்டது உடனே அவசரமாகச் சென்று கதவு திறக்கப்பட்டது. வாசலில் ஹபிபுர் ரஹமான் கையிலும் தலையிலும் சிறு கட்டுடன் வீட்டினுள் நுழைந்தார். அவரை ஜெய்ஹிந்த் கூறி ஐயர் வரவேற்று அமரவைத்தார். பதிலுக்கு ஹபிபுர் ஜெய்ஹிந்த் கூறி அமர்ந்தார். சிறிது நேரம் அனைவரும் மௌனமாக இருந்தனர். ஐயர் தனது குரலை சரிசெய்து கொண்டு ஹபிபுர் இந்த ஜப்பானியர் கூறுவது அனைத்தும் பொய்தானே இவ்வாறு போசுதானே செயல்பட திட்டம் தீட்டி கொடுத்துள்ளார் போசு எங்கே சென்றுள்ளார். என்னிடம் மட்டும் உண்மையை சொல்லுங்கள் என்றார்.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி – 48”

அதிகம் படித்தது