மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அலுவலகக் கட்டிடங்களைத் தேர்வு செய்யும் பொழுது கவனம் தேவை

வெங்கட்ரமணி

Feb 14, 2015

aluvalagam3சென்னையில் தற்போது பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் நகரம் முழுக்க செயல்படுகின்றன. அத்தகைய அலுவலகங்களை நிர்மாணிப்பது சிக்கலான ஒரு பணியாகும். உதாரணமாக வழக்கமான ஒரு நடப்பைப் பார்ப்போம். அழகிய இளம்பெண் ஒருவர் தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்பவராக இருப்பார். அவர் அலுவலகத்துக்கு காலை 9 மணிக்கு காலம் தவறாமல் வந்திறங்குவார். சென்னையின் ஓயாத போக்குவரத்தைக் கொண்ட பிரதான சாலையில் அவரது அலுவலகம் அமைந்திருக்கும். பேருந்திலிருந்து இறங்கி அலுவலகத்துக்குள் நுழையும் பொழுது மிகப்பெரிய அந்த கட்டிடத்திற்குச் செல்லும் வழி மிகக்குறுகலாக இருக்கும். நூறு பேர் ஒரே நேரத்தில் அலுவலகத்துக்குள் நுழையும் பொழுது ஏற்படும் நெரிசல் அந்த சிறிய தூரத்தைக் கடக்க அதிக நேரத்தை விழுங்கும். ஒரு வழியாக கட்டிடத்தின் உள்ளே நுழைந்து தானியங்கி ஏணியில்(Lift) செல்ல முயற்சிக்கும் பொழுது அங்கே அவருக்கு முன்னமே மிகப்பெரிய கூட்டம் காத்திருக்கும். 10 பேருக்கு மேலே ஏறினால் அந்த ஏணி கத்திக் கூப்பாடு போடும். அந்தப்பெண் ஒரு நொடி, படிகளில் ஏறி தனது மாடியை அடையலாமா என்று யோசிப்பார். குறுகலான அந்தப் படியில் வியர்த்து விறுவிறுத்து ஏறுவதைக் காட்டிலும் காத்திருப்பதே மேல் என்று எண்ணுவார். ஒரு வழியாக அவரது மாடியில் ஏறி நாற்காலியில் அமரும் பொழுது கால்மணிநேரம் கடந்திருக்கும்.

அமர்ந்து வேலையை ஆரம்பித்து செய்யத் துவங்கும் பொழுது அலுவலகமே இளைஞர் இளம் பெண் பணியாளர்களுடன் நிரம்பி வழியும். கூட்டம் அதிகரிக்கும் பொழுது மெல்லிய வியர்வை அரும்புவதை நமது இளம் பெண் உணர்வார். காலை 11 மணிக்கு அலுவலகம் முழு வேகத்தில் இயங்கும் பொழுது, குளிர்பதனிகள் வேலை செய்யத் திணறிப் பின்தங்கும். உள்ளே நுழைந்திருக்கக்கூடிய அலுவலர்களின் உடல் சூடும் இணைந்து எரிச்சலை அதிகப்படுத்தும். ஒரு சிலர் மின் விசிறிகளை பயன்படுத்தி சூட்டை சமாளிப்பர். அந்த மின் விசிறிகளின் மெல்லிய ரீங்காரம் கேட்கத் துவங்கும். சிலர் வெளியேறி தங்களது காபிக் கோப்பைகளை நிரப்பிக் கொண்டு காற்றைத் தேடி அலைவர். காற்றோட்டம் புகுந்து வெளியேறுமாறு கட்டிடம் அமைக்கப்பட்டிருக்காது. சாளரங்களும் திறக்க முடியாமல் அடைக்கப்பட்டிருக்கும். நமது இளம் பெண் வெறுத்துப்போய் ஓய்வறையை நாடுவார். அங்கே சென்றால் 200 பெண்களுக்கு ஆறே ஆறு கழிவறைகள் அமைக்கப்பட்டிருக்கும். ஏற்கனவே பலர் காத்திருப்பர். அதையும் சகித்துக் கொண்டு மறுபடியும் அலுவலகத்திற்குள் நுழைந்தால் திடீரென மின்சாரம் தடைபடும். வெளிச்சத்துக்கு வழி இல்லாததால் மொத்த கட்டிடமும் இருளில் மூழ்கும். ஐந்து நிமிடம் கழித்து மின்சாரத்தை விளைவிக்கும் எந்திரங்கள் (generators) வேலை செய்து விளக்குகளை எரியவைக்கும்.

aluvalagam2நீங்கள் சென்னையின் அலுவலகங்களில் வேலை செய்யும் அலுவலராக இருந்தால் இது போன்ற தொல்லைகளை பல முறை அனுபவித்திருப்பீர்கள். இவையெல்லாம் ஏன் ஏற்படுகிறது. வசதி குறைவுக்குக் காரணங்கள் என்ன? அவற்றுக்கான விடைகளை நாம் தேடினால் கீழ்க்காணும் உண்மைகள் விளங்கும்.

இத்தகைய அலுவலகங்களை நடத்தும் தொழிலதிபர்கள் சற்றும் தெளிவின்றி கட்டிடத்தை தேர்வு செய்திருப்பார்கள். உள்ளே எத்தனை மக்கள் வேலை செய்யப்போகிறார்கள், கட்டிடத்தின் கட்டுமானம் முறையாக செய்யப்பட்டுள்ளதா, கட்டிடம் இயங்க தேவையான உபகரணங்கள் உள்ளனவா என்று யாரும் சோதிப்பதில்லை.

உள்ளே நுழையும் போது ஏற்படும் நெரிசல், ஏணிகளில் காத்திருப்பது, காற்றோட்டமற்ற சாளரங்கள்,வெளிச்சமற்ற அறைகள், குறைவான ஓய்வறைகள், இவையனைத்தும் சேர்ந்து வேலை செய்வதையே வெறுக்க வைக்கின்றன. நவீன உத்திகளும், முறையான பொறியியலும் கையாளப்படாததால் குறைகள் நிரம்பி வழிகின்றன. இவையன்றி நமக்குத் தெரியாத பல பிரச்சனைகள் இத்தகைய கட்டிடங்களில் இருக்கும். வேலைத் திறனை கடுமையாக குறைப்பதோடு, அலுவலர்களின் உடல் நலனையும் வெகுவாக பாதிக்கும். பெரிய தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிக்க வழிவகைகள் இருக்காது. அவசரமாக வெளியேற வேண்டும் என்றால் படிகள் உதவி செய்யாது. இது போன்ற குறைகளை எல்லாம் தீர்க்க முடியாதா என்ன?

முடியும், தொழிலதிபர்கள் ஒரு கட்டிடத்தை அலுவலுக்காக குத்தகைக்கு எடுக்கும் பொழுதோ அல்லது கட்டும் பொழுதோ முறையான தொழில் நுட்ப ஆய்வுகளை மேற்கொள்வதும் பொறியியல் நிபுணர்களைக் கொண்டு வடிவமைப்பதும் அத்தியாவசியமான ஒன்றாகும். இதற்கான செலவு செய்யும் பணமும் நேரம் கூடுதலாக இருந்தாலும் அதற்கு கிடைக்கும் பலன்களும் அதிகம்.

மேலே சொன்ன இளம் பெண்ணின் நிறுவனம் இத்தகைய கவனத்துடன் கூடிய அனுகுமுறையைக் கையாண்டிருந்தால் பலவேறு தொல்லைகள் தவிர்க்கப்பட்டிருக்கும். பணியாளர்களின் வேலைத் திறனும் கூடி அலுவலகத்திற்கு இலாபமும் கிடைத்திருக்கும்.

BVe Consulting Engineers

Engineering Project Consultancy & Property Advisory Services,

Residential-Commercial-Industrial-Infrastructure Designs

Due-diligence studies -Asset valuation services

Chennai -600 083

bv.consultingengrs@gmail.com

www.bveconsultingengineers.in

www.bveconsultingengineers.com


வெங்கட்ரமணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அலுவலகக் கட்டிடங்களைத் தேர்வு செய்யும் பொழுது கவனம் தேவை”

அதிகம் படித்தது