மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி – 49

கி.ஆறுமுகம்

Feb 21, 2015

bose14ஐயர், ஹபிபுர் ரஹமானைப் பார்த்து அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அனைத்தையும் ஹபிபுர் ரஹமான் கேட்டுவிட்டு பதில் கூற முயலும் அந்த சிறிது நேரத்திற்குள் ஐயர் மனம் படபடத்தது. விமான விபத்து நடக்கவில்லை போசு உயிருடன் இருக்கிறார் என்று கூற மாட்டாரா என அவர் மனம் தவித்தது. போசு நலமாக உள்ளார் என்று கூறினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று உள்ளம் எதிர்பார்த்தபடியே ஐயர், ஹபிபுர் ரஹமானை கவனித்துக் கொண்டிருந்தார்.

ஹபிபுர் ரஹமான், ஐயரின் அனைத்து கேள்விகளையும் கேட்டுவிட்டு உறுதியான வார்த்தைகளினால் “ஆம் நீங்கள் கேள்விப்பட்டதெல்லாம் உண்மை தான், போசு விமான விபத்தில் இறந்து விட்டார். இது மிகவும் துயரமான செய்தியாக இருந்தாலும் இதுதான் உண்மை” என்று வருத்தத்துடன் கூடிய குரலில் உண்மை வெளிப்படும் விதம் தெரிவித்தார்.

உடனே ஐயர், “அப்படி என்றால் நீங்கள் சைகோன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது முதல் இறுதி வரை நடந்தது என்ன?, விமான விபத்து எங்கே, எப்போது, எப்படி நடந்தது? என்று முழுவிவரத்தையும் தெரிவியுங்கள்” என்றதும்,

bose16ஹபிபுர் ரஹமான்: ஆகஸ்ட் 17, அன்று மாலை சுமார் 5.15 மணியளவில் சைகோன் விமானநிலையத்தில் இருந்து நாங்கள் புறப்பட்ட விமானம் இந்தோசீனத்தைச் சேர்ந்த டூரெய்னில் விமான நிலையத்தில் அன்று இரவு தரை இறங்கியது. அன்றைய இரவு முழுவதும் நாங்கள் அங்கேயே தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டோம். பின்னர் மறுநாள் அதிகாலையில் அங்கிருந்து எங்கள் விமானம் புறப்பட்டது. மதியம் சுமார் 2 மணியளவில் தைக்கோகு விமானம் வந்து சேர்ந்தது. விமானத்திற்கு எரிபொருள் நிரப்பப்பட்டது. அங்கு எங்கள் மதிய உணவுக்குக் கிடைத்த சிறு உணவை எடுத்துக் கொண்டு நாங்கள் புறப்படுவதற்கு தயாரான பொழுது நான் நேதாஜியிடம் நீங்கள் உங்கள் உடையை மாற்றிக் கொள்ளுங்கள், இனி நாம் போக இருக்கும் இடம் மிகவும் குளிர்பிரதேசம், எனவே உங்கள் பருத்தி ஆடையை மாற்றிக்கொண்டு கம்பளி ஆடையை உடுத்திக் கொள்ளுங்கள். நான் எனது ஆடையை மாற்றிக் கொண்டேன் என்றதற்கு நேதாஜி அவருக்கே உரிய சிறு புன்னகையைக் காட்டிவிட்டு நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள், அது தற்போது தேவையில்லை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

நாங்கள் புறப்பட்டதும் எங்கள் விமானம் சில மணி நேரத்திற்குள் மேலே சென்றது. அது சுமார் பல அடி உயரம் சென்றதும் எங்கள் விமானத்தில் பலத்த சத்தம் கேட்டது. என்ன சத்தம் அது, ஏதாவது வெடிகுண்டு வெடித்து விட்டதா? அல்லது எதிரி நாட்டு விமானம் எங்கள் விமானத்தின் மீது குண்டு வீசிவிட்டதா?, இல்லை விமானத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டுள்ளதா என்று நாங்கள் திடுக்கிட்டோம். அந்த சில நிமிடங்களில் எங்கள் விமானம் தரையை நோக்கி வேகமாக கீழே வந்தது. அனைத்தையும் பார்த்ததும் எதிரி விமானம் எதுவும் இல்லை எங்கள் விமானத்தில் தான் கோளாறு ஏற்பட்டுள்ளது என்று தீர்மானித்தோம். விமானி விமானத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எவ்வளவோ போராடிக் கொண்டிருந்தார். விமானம் வேகமாக தரையை நெருங்கியது எங்கள் விதிமுடியப் போகின்றது என்று எனக்குத் தோன்றியது. அப்போது நான் நேதாஜியைப் பார்த்தேன் அவர் சற்றும் கலவரம் அடையாமல் மிக சாதாரணமாக இருக்கையில் அமர்ந்திருந்தார்.

bose12எங்கள் விமானம் பலத்த சத்தத்துடன் தரையில் மோதியது. உடனே புகைமூட்டமாக இருந்தது. புகை நீங்கியதும் நான் பார்த்தேன் விமானத்தின் முன்பகுதியில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. என்மீது விமானத்தின் சில பகுதிகள் மற்றும் சில மூட்டைகள் கிடந்தது. அதனை அப்புறப்படுத்தி எழுந்து எந்த வழியாக வெளியேறலாம் என்று சிந்தித்துக் கொண்டு நேதாஜியைப் பார்த்தேன். அவர் இருக்கையின் இடையில் காயங்களுடன் சிக்கிக்கொண்டிருந்தார் அவர் அதில் இருந்து வெளிவர முயன்றுகொண்டு பின்பகுதி வழியாக வெளியேறலாம் என்றார். நான் பின்பகுதி அடைந்துவிட்டது முன்பகுதி வழியாகத்தான் வெளியேற வேண்டும் என்று தெரிவித்தேன். நேதாஜி உடனே தனது கைகளை நீட்டிக் கொண்டு தீயில் நுழைந்து முன்பகுதியின் வழியாக வெளியேறினார். அவரைத் தொடர்ந்து நானும் வெளிவந்தேன். விமானம் கீழே விழுந்து உடைந்ததில் பெட்ரோல் சிதறி நேதாஜியின் ஆடையில் பட்டிருந்தது, அவர் நெருப்பின் வழியாக வெளியேறிய போது அவரது உடல் முழுவதும் தீ பற்றிக் கொண்டு விட்டது.

தீ பற்றியதும் அவர் அதனை அணைக்க முயற்சித்தார். நான் உடனே அவருக்கு உதவினேன். அவர் இராணுவ சீருடையில் இருந்ததினால் ஆடைகளை கழற்றுவதில் சிரமமாக இருந்தது அந்த போராட்டத்தில் நான் அவரது முகத்தை பார்த்தேன் முகம் முழுவதும் காயங்கள் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அதனை பார்க்கவே எனது மனம் படபடத்தது. சில நிமிடங்களில் அவர் கீழே விந்து விட்டார். நிற்க முடியாமல் நானும் அவர் அருகில் விழுந்தேன். எங்களுடன் வந்தவர்கள் பற்றிய சிந்தனை எனக்குத் தோன்றவில்லை, விமானம் சிதறிக் கிடந்தது. நான் கண் விழித்துப் பார்க்கும் போது சைகோன் நகரின் இராணுவ மருத்துவமனையில் இருந்தது தெரிந்தது. உடனே நான் நேதாஜி எங்கே? என்றேன் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். விபத்து நடந்த சில மணி நேரத்திற்குள் நாங்கள் மருத்துவமனைக்கு வந்துவிட்டோம் என்பது எனக்குப் புரிந்தது. என்னால் எழுந்திருக்க முடியவில்லை என்றாலும் மிகவும் முயற்சி செய்து எழுந்து நான் நேதாஜியின் படுக்கை அருகில் சென்றேன். அவர் மயக்கத்தில் இருந்தார். பின்னர் கண்விழித்துப் பார்த்து உடனே மீண்டும் மயக்கத்திற்கு சென்றுவிட்டார். நான் அவர் அருகிலேயே இருந்தேன். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர்.

bose12பின்னர் மீண்டும் கண்விழித்துப் பார்த்ததும் என்னிடம் “என் முடிவு நெருங்கிவிட்டது, என் தாய்நாட்டு மக்களுக்குத் தெரிவியுங்கள், நான் என் இறுதி மூச்சுள்ளவரை இந்திய விடுதலைக்காகப் போராடினேன், விடுதலைக்காக இன்று இறக்கிறேன், இந்தியாவை எந்த நாடாலும் இனி அடிமைப்படுத்த முடியாது, நம்பிக்கை இழக்க வேண்டாம் மக்களே, தொடர்ந்து போராடுங்கள். இந்தியா விடுதலை அடையும் காலம் தொலைவில் இல்லை” என்று கூறி மயக்கம் அடைந்தார். அந்த வலியிலும் துன்பத்திலும் ஒரு வார்த்தை கூட, எனக்கு வலிக்கிறது என்று நேதாஜி மருத்துவர்களிடம் கூறவில்லை. மரணத்தில் கூட தனது வீரத்தை வெளிப்படுத்தினார். மருத்துவர்கள் நீண்ட நேரம் போராடியும் அன்று இரவு அவரது உயிர் பிரிந்துவிட்டது என்று மருத்துவர்கள் கூறினர்.

ஹபிபுர் ரஹமான் கூறிய அனைத்தையும் கேட்டுவிட்டு தனது மனதுக்குள், போசு இறந்துவிட்டார் இனி வரமாட்டார் என்று நினைத்துக் கொண்டு, ஐயர் மீண்டும் ஹபிபுர் ரஹமானைப் பார்த்து என்னிடம் மட்டும் நீங்கள் என்ன நடந்தது என்று உண்மையைக் கூறுங்கள். நான் நீங்கள் பொய் கூறமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். தயவு கூறி என்னிடம் மட்டும் அந்த இரகசியத்தைக் கூறுங்கள், உண்மையைக் கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு ஹபிபுர் கண்களில் கண்ணீருடன் நமது நேதாஜி வரமாட்டார் இது எல்லாம் உண்மை, நான் அவரின் இறுதி நேரத்தில் அவருடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் எனக்கு மிக பயங்கரமான நிமிடங்களாக இருந்தது. மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்தது. நான் சுய நினைவுக்கு வருவதற்கு சில நேரம் பிடித்தது.

bose2பின்னர் நான் ஜப்பானியர்களிடம் நேதாஜியின் உடலை சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கவும் என்று தெரிவித்தேன் அதில் உள்ள சிரமங்களை அவர்கள் எடுத்துரைத்தனர். நான் அப்படி என்றால் டோக்கியோவுக்காவது அனுப்ப ஏற்பாடு செய்யுங்கள் என்றதும் அதுவும் தங்களுக்கு சாத்தியம் இல்லை அதில் அதிகமாக பிரச்சனை உள்ளது எனவே நேதாஜியின் இறுதி சடங்குகளை தகுந்த மரியாதையுடன் செய்துவிட வேண்டும் என்று தெரிவித்தனர். அதற்கு எனது சம்மதத்தையும் கேட்டனர், அந்த நேரத்தில் அவர்கள் கூறியது சரியாக இருந்ததினால் சம்மதம் தெரிவித்து அவரது இறுதிச் சடங்கிற்கு மௌன சாட்சியாக அங்கு நின்று கொண்டிருந்தேன். மருத்துவமனையின் அருகில் இருந்த கோவிலில் நேதாஜியின் இறுதிச் சடங்குகள் இராணுவ மரியாதையுடன் நடந்தது. பின்னர் நேதாஜியின் சாம்பலை என்னிடம் கொடுத்தனர். அதனை பெற்றுக் கொண்டு உடனே நான் சிங்கப்பூருக்கோ அல்லது டோக்கியோவுக்கோ புறப்பட வேண்டும் என்றேன். அப்போது எந்த விமானமும் இல்லாததால் என்னை கப்பலிலாவது அனுப்பிவையுங்கள் என்றேன். ஜப்பானியர்கள் இப்போது எந்த விமானமும் இல்லை கப்பலும் இல்லை நீங்கள் சில நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டிருங்கள் நாங்கள் உங்களை அனுப்புவதற்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்கிறோம் என்று கூறி என்னை சில நாள் மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாக்கினார்கள். பின்னர் நான் டோக்கியோவுக்கு வந்ததும் இரகசியம் காக்க வேண்டி என்னை நகர்ப்புறத்தை விட்டு வெளியே தங்க வைத்து பின்னர் தான் நகருக்குள் அழைத்து வந்தார்கள் என்றார் ஹபிபுர் ரஹமான்.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி – 49”

அதிகம் படித்தது