மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உணவுக்கடத்தலும் உடைந்த சமுதாயமும்

சித்திர சேனன்

Mar 7, 2015

unavu kadaththal3நாற்பது வருடத்திற்கு முன்பு நவதானியங்களை உண்டு,ஊக்கம் பெற்று,உழைத்து,உதவி,உயர்ந்த தமிழ்ச் சமுதாயம் இன்று அந்நிலை தவறிய வாழ்வை தாராளமாக வாழ்ந்து வருகிறது. இயற்கையோடு இயற்கையாய் இருந்த மனித சமுதாயம் அறிவியல் வளர்ச்சியினால் செயற்கையோடு செயற்கையாய் வாழப்பழகி வருகிறது. மனித சமுதாயத்திற்கு அடிப்படைத்தேவை உணவு,உடை,உறைவிடம். இதில் முதலாகவதாக இருக்கும் உணவே மனித உயிர்வளர்க்கும் மருந்தாகும்.

இந்த உணவிற்காக மனிதனை மனிதனே வஞ்சிக்கும் வக்கிர குணம் செழித்தோங்கி வளர்ந்து வந்துகொண்டிருக்கிறது. உணவு உயிர் வாழ முக்கியம் தான் என்றாலும் இந்த உணவு விளைவிக்கும் நிலம் வேண்டும். நிலம் செழிக்க நீர் வேண்டும். நீர் பெருக மரம் வளர்க்க வேண்டும். மரம் வளர மனிதன் இயற்கையை நேசிக்க வேண்டும்.

unavu kadaththal2ஆனால் இன்று மக்கள் விவசாய நிலங்களை எல்லாம் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி விற்று வருகிறார்கள். நிலத்திற்கு அடியில் இருக்கும் நீரை உறிஞ்சி பாக்கெட், பாட்டில் வடிவில் விற்று வருகிறார்கள். இயற்கையாய் விளைந்து விரிந்து கிடக்கும் மரங்களை எல்லாம் வெட்டி வருகிறார்கள். இவ்வாறு இயற்கையை அழித்து வருவதால் மிகுந்த தானியங்களை விளைவிக்கும் வேளாண்மைத் தொழிலானது முடங்கி குறைந்த அளவில் விளைவிக்கும் சூழலுக்கு நிகழ்கால நிலத்தரகர்கள் மாற்றி வருகின்றனர்.

இவ்வாறு குறைந்த அளவில் ஒருபுறம் தானிய விளைச்சல் இருந்தாலும் நாள்தோறும் மக்கள் தொகைப் பெருகிக் கொண்டே வருகிறது. அதாவது 1 பழத்தை 5 பேர் உண்ணும் சூழலுக்கு பண முதலைகளால் நாம் தள்ளப்பட்டு வருகிறோம். இந்நிலையில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மெத்தனப் போக்கால் அன்றாடம் அரிசி கடத்தல் நிகழ்வானது அனுதினமும் நடைபெறுகிறது.

தமிழகத்தில் கடந்த 30 வருடத்தில் 12,456 ஏரிகள் மூடப்பட்டிருக்கிறது, 27 ஆயிரத்திற்கும் மேல் குளங்கள் அழிக்கப்பட்டிருக்கிறது, 7 பெரும் ஆறுகள் வெற்றியிருக்கிறது, 1,67,512 ஏக்கர் விவசாய நிலம் அழிக்கப்பட்டிருக்கிறது. மேலும் 2002-லிருந்து 10 லட்சம் விவசாயிகள் இந்த விவசாயத் தொழிலை விட்டே வேறு வேலைக்குச் சென்றதின் விளைவு உணவுத் தட்டுப்பாடு, வறுமை, உணவுத் திருட்டு எனப் பற்பல.

இதில் தமிழகத்தையே உலுக்கும் செய்தியாக நாள்தோறும் நாளேடுகளில் நியாய விலைக்கடை அரிசிக் கடத்தல் என்ற செய்தியானது வந்துகொண்டே இருக்கிறது. காற்றில், சுடுகாட்டு கூரையில், நிலக்கரியில் ஊழல் திருட்டு செய்தவர்கள் இன்று குடிக்கும் பாலில், உண்ணும் உணவில் ஊழலும், திருட்டும் நடப்பது, நாட்டு மக்களை நரகக் குழியில் தள்ளும் முயற்சியாகவே படுகிறது.

தமிழகத்தில் நியாய விலைக்கடை அரிசி கடத்தும் ஊர்களாவன வேலூர்,ஜோலார் பேட்டை, கன்னியாகுமரி, நாகர்கோவில், குளித்தலை, வித்துக்குடி, கடலூர், திருவள்ளுர், பொள்ளாச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, காஞ்சிபுரம், சேலம் என இந்த ஊர்களிலிருந்து லாரி மூலமும், சொகுசுப் பேருந்து மூலமும், புகைவண்டி மூலமும் டன் கணக்கில் தமிழகத்திலிருந்து மூட்டை மூட்டையாக அரிசி கடத்தப்பட்டு கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதில் தமிழகத்திலிருந்து அதிகம் அரிசி செல்வது கேரளாவிற்கே.

unavu kadaththal1மேற்கண்ட மாவட்டங்களில் எல்லாம் அரிசி கடத்தப்படுகிறது என்று செய்தித்தாளில் இடம்பெற்ற மாவட்டங்களே. ஆனால் செய்தித்தாளில் இடம்பெறாத மற்ற மாநிலங்களில் இந்த நியாய விலைக்கடை அரிசித் திருட்டு நடைபெறுகிறது என்பதை எவரும் மறுக்க முடியாது.

தமிழகத்திலிருந்து கோதுமை,சர்க்கரை,மண்ணெண்ணெய் மற்றும் விலையில்லா நியாய விலைக்கடை அரிசி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாய விலைக்கடை கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் குறைந்த விலை கொடுத்து மக்களிடம் பெற்றோ அல்லது உறைக்கிட்டங்கியில் இருந்து மொத்தமாகவோ பெற்று கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. அங்கு கொண்டு செல்லப்படும் இவை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில்,நியாய விலைக்கடை அரிசி கடத்தியதாக 391 வழக்குகளும், மண்ணெண்ணெய் கடத்தியதாக நான்கு வழக்குகளும் பான்சால் ஆயில் கடத்தியதாக 7 வழக்குகளும்,வீட்டில் பயன்படுத்தக்கூடிய சிலிண்டரை வியாபார நோக்கத்திற்குப் பயன்படுத்தியதாக 5 வழக்குகளும்,கோதுமை கடத்தியதாக 5 வழக்குகளும், சர்க்கரை கடத்தியதாக 1 வழக்கு என மொத்தம் 417 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2014 –ஆம் ஆண்டு கடத்தல் நியாய விலைக்கடை அரிசி 14 ஆயிரத்து 549 குவிண்டால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 6478 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 122 பேர் கள்ளச் சந்தைத் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டனர்.

இதில் இன்னும் காவல்துறை கண்களுக்கு சிக்காமல் பலபேர் உள்ளனர். மேலும் கடத்தலில் மாட்டியும் கூட காவல்துறையை கைக்குள் போட்டுக் கொண்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்தவர்கள் உண்டு. அவ்வளவு ஏன் நியாய விலைக்கடை கடத்தல் வழக்கில் 4,5 முறை சிறை சென்று திரும்பிய பல பேர் மீண்டும் இதே கடத்தலைச் செய்து சிறைக்குள் அடைபட்டதும் உண்டு.

இவை எல்லாம் நிகழும் போது நமக்கு இந்த சந்தேகம் வராமல் இருக்குமா? லாரியில் கடத்தப்படும் நியாய விலைக்கடை பொருளை கையூட்டு பெற்று கண்டுகொள்ளாமல் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் இங்கு இல்லையா? புகைவண்டியில் கடத்தும் போது சோதனை செய்து கண்டுபிடித்தும்,கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டு கொள்ளாது இருக்கும் காவல் அதிகாரிகள் இல்லையா? இவர்களை தடுக்கா விட்டால் தலைமையும் இவ்வாறுதானோ என எண்ணத் தோன்றுகிறது.

நம் தமிழகத்திலிருந்து கேரளாவிற்குக் கடத்த முயன்ற 1465 குவிண்டால் நியாய விலைக்கடை அரிசி, மண்ணெண்ணெய் 530 லிட்டர், பான்சால் ஆயில் 2 லட்சத்து 19 ஆயிரத்து 880 லிட்டர், கோதுமை 142 குவிண்டால், சர்க்கரை 80 குவிண்டால் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்றால் இதில் பார்த்தும் பார்க்காமல், பறிமுதல் செய்யாமல் விட்ட உணவுப் பொருட்கள் எவ்வளவு இருக்கும் என்று கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

கடத்தல் முறை ஒன்று:

நியாய விலைக்கடை கடைகளில் முறைகேடாக அரிசி மூட்டைகளை வாங்கிப் பதுக்கும் நபர்கள் சரக்கு ஆட்டோ, வேன், டூவீலர் மற்றும் ரயிலில் கேரளா, கர்நாடகா, ஆந்திராவிற்குக் கடத்துகின்றனர். மேலும் அரசு உணவு கிட்டங்கியில் இருந்து நியாய விலைக்கடை கடைக்கு லாரி வரும் முன், வரும் வழியிலேயே சில மூடைகளை இறக்கி விட்டு வரும் முறைகேடும் நடக்கிறது.

கடத்தல் முறை இரண்டு:

இது பெரிய அளவில் திட்டமிட்டு அரசு அதிகாரிகள், அரசு சாரா கடத்தல் கும்பல்கள் பலரை ஒருங்கிணைந்து நடக்கிறது. இந்த முறையில்,  நியாய விலைக்கடை கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய அரிசி மூட்டைகள் சிவில் சப்ளை கிட்டங்கியில் இருந்தே நேரடியாக லாரிகளில் கடத்தப்படுகிறது. இவ்வகையாக கடத்தலில் லாரி டிரான்ஸ்போர்ட், கான்ட்ராக்டர்கள், சிவில் சப்ளை அதிகாரிகள், நியாய விலைக்கடை கடை ஊழியர்கள் கூட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 33,973 நியாய விலைக் கடைகள் உள்ளன. இவற்றில் 20 ஆம் தேதிக்குப் பின் எந்தக் கடையிலும் பொருள் பெற முடியாத நிலையே உள்ளது. இதில் உள்ள ஒவ்வொரு நியாய விலைக் கடைக்கும் எவ்வளவு அரிசி ஒதுக்கீடு செய்கிறார்களோ அதில் 60% மட்டுமே கிடைக்கிறது எனும் அதிர்ச்சித் தகவலும் வருகிறது.

இதேபோல் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் 50% அளவுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகின்றன என்றால் மீதமுள்ள பொருட்கள் அரசு அதிகாரிகளால் கடத்தப்பட்டிருக்கத்தான் வேண்டும். இந்த கணக்கின்படி பார்த்தால் அரிசி கடத்தல் மூலம் 1280 கோடியும், பருப்பு, பாமாயில் கடத்தல் மூலம் அரசுக்கு ரூ.697 கோடியும் இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். நியாய விலைக்கடை கடையில் இப்பொருட்கள் கடத்தப்படுவதால் அரசுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.1977 கோடி என்றால் 4 ஆண்டிற்கு 7,908 கோடி இழப்பு ஏற்பட்டிருக்க வேண்டும்.

உழைத்துக் கொடுக்கும் மக்களின் வரிப்பணமானது, உணவுக் கடத்தலின் பேரால் வீண் விரயமாவதை அரசு கண்டு இதைத்தடுக்க மேலான நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகள் தொடரும் இந்த கடத்தலுக்கு மாற்று நடவடிக்கையை நம் அரசு அமல்படுத்துவது அவசியமாகும். குறிப்பாக அரிசி மூட்டைகளில் அடையாளக் குறியீடு இடுவது, புட்செல் சி.ஐ.டி நிர்வாகத்தை சீரமைப்பது உள்ளிட்ட சில நடவடிக்கைகள் மேற்கொண்டால் நியாய விலைக்கடை அரிசி கடத்தலை முடிவுக்குக் கொண்டு வருவதோடு மக்களின் நல்மதிப்பையும் அரசு பெறும் என்பதில் ஐயமில்லை.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உணவுக்கடத்தலும் உடைந்த சமுதாயமும்”

அதிகம் படித்தது