மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வாட்ஸ்-அப்-பில் வதைபடும் மக்களின் நிலை

சித்திர சேனன்

Apr 11, 2015

whatsapp2ஒவ்வொரு கால வளர்ச்சியிலும் ஏதோ ஒரு புதிய அறிவியல் முன்னேற்றம் வந்து மக்களை சோம்பேறியாகவும், யோசிக்கும் திறன் அற்றவர்களாகவும், சிற்றின்பத் தேடுதல் மிக்கவர்களாகவும், கீழ்த்தரமான எண்ணமுடையவர்களாகவும் மாற்றி வந்து கொண்டிருப்பதை அனைவரும் அறிவர். அறிவியலில் நல்லெண்ணத்தின் அடிப்படையில், மக்களின் வேலைகளை எளிமைப்படுத்துவதற்காக வந்த அனைத்து அறிவியல் தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளும் இன்று அதற்கு எதிர்மாறான செயல்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்றைய சூழலில் அனைவரையும் ஈர்த்த தொழில் நுட்பமாக வாட்ஸ்-அப் விளங்குகிறது. குறுஞ்செய்தி என்ற பெயரில் வெறும் வார்த்தைகளை மட்டும் பரிமாறிக்கொண்டிருந்த மனித சமூகம், இந்த வாட்ஸ்-அப் வந்ததின் காரணமாக இதன் மூலம் குறுஞ்செய்தி, புகைப்படம், காணொளி, குரல் குறுஞ்செய்தி, தொடர்பு என அத்தனை வசதிகளையும் பரிமாறிக் கொள்கின்றனர். இதனை அறிந்த முகப்புத்தக நிறுவனத்தார் வாட்ஸ்-அப் நிறுவனத்தை சத்தமில்லாமல் விலைக்கு வாங்கிக் கொண்டு கல்லா கட்டுகின்றனர்.

இந்தத் தொழில் நுட்ப வருகையில், இதன் மேல் மக்களுக்கு உள்ள அதீத மோகத்தால் இதனைப் பயன்படுத்துவதற்காகவே ஆன்ட்ராய்டு அலைபேசிகளை அதிக விலை கொடுத்தாவது வாங்கிக் கொள்கின்றனர். இதுவரை இணையம் பற்றி அறியாதவர்கள் கூட இந்த அலைபேசியில் இணைய சேவையை பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டு வாட்ஸ்-அப்-ஐ பயன்படுத்தி வருகின்றனர்.

நாம் தெருவில் கை வீசி நடப்பதற்கு சுதந்தரம் உண்டு. ஆனால் வீசிய கைகள் அடுத்தவர் மேல் படாத அளவிற்கு நடந்து செல்வதே சமூகத்தால் நமக்கு வழங்கப்பட்ட சுதந்திரமாகும். அதுபோலத்தான் நாம் இங்கு ஆன்ட்ராய்டு அலைபேசி பயன்படுத்த சுதந்திரம் உள்ளது என்றாலும் அடுத்தவரின் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தி அசிங்கப்பட வைப்பதற்கு நமக்கு உரிமை இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். சில நேரங்களில் விளையாட்டாக நாம் செய்யும் விசயங்கள் கூட நம் எதிர்கால வாழ்வை முடக்கிவிடும் அளவிற்கு விசுவரூபம் எடுக்கும்.

வாட்ஸ்-அப் கண்டுபிடித்து மக்களின் பயன்பாட்டிற்கு ஜான்கோம் குழுவினரால் விடப்பட்டது. என்றாலும் இம்மென்பொருளை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே இதன் நன்மை, தீமை விளைகிறது. வாட்ஸ்-அப், ஆண்டிராய்டு இயங்குதளத்தில் 100 கோடி முறை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்றால் மக்களின் வாட்ஸ்-அப் மோகத்தை நான்கூறித் தெரியவேண்டியதில்லை.

சமீபத்தில் வாட்ஸ் அப் தகராறுகள்:

whatsapp3இந்த அரிய வாட்ஸ்-அப் தகவல் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்தினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பின்வருவாறு காண்க.

  • சென்னை மாநகர காவல் உதவி கமிஷனர் ஒருவர் திருமணமான பெண் காவலாளி ஒருவருடன் ஆபாசமாகப் பேசி வாட்ஸ்-அப்-ல் சிக்கி படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்.
  • போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவருடன் திருநங்கைகள் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்ட காணொளியானது காவல்துறை வட்டாரத்தையே கலங்கடித்துக் கொண்டிருக்கிறது.
  • சமீபத்தில் ஒரு காணொளி கண்டேன். சாலையோரம் ஆள் இல்லாமல் நிற்கும் ஒரு மகிழ்வுந்து வாகனத்திலிருந்து ஒரு சாலைப் பாதுகாப்பு காவல் அதிகாரி திருடி ஒருவரிடம் கொடுத்தனுப்பினார்.
  • பிரபல தமிழ் நடிகைகளின் ஆபாச படங்களையும், காணொளிகளையும் பரப்புதல்.
  • சாதாரணப் பெண்களை சாலையில் நடக்கும் போது முன் பின் அழகை பதிவு செய்து அனுப்புதல்.
  • தன் காதலிகளை இன்றைய காதலர்கள் அவர்களுக்கே தெரியாமல் ஆபாசமாக படம் எடுத்து பரப்புதல்.
  • பிரபல நடிகர், நம் ஜனாதிபதி ஆகியோர் இறந்து விட்டதாக செய்தி பரப்புதல்.
  • சமீபத்தில் அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் புற்றுநோயை குணப்படுத்தக் கூடிய மருந்து இருக்கிறது என்ற புரளி வாட்ஸ்-அப்பில் கிளம்பியதைக் கண்ட அடையார் புற்றுநோய் நிறுவனம் இதை மறுத்து தெரிவித்துள்ளது.
  • சமீபத்தில் கிருஷ்ணகிரியில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு கணிதத்தேர்வு வினாத்தாளை கண்காணிப்பாளராக பணியில் இருந்த ஆசிரியர் மகேந்திரன், தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்து அதை வாட்ஸ்-அப் மூலம் தனது சக ஆசிரியரான உதயகுமாருக்கு அனுப்பினார். தொடர்ந்து அந்த வினாத்தாள் கோவிந்தன், கார்த்திகேயன் ஆகியோருக்கும் வாட்ஸ்-அப் மூலம் அனுப்பப்பட்டது. இந்த விசயம் தெரிந்து இந்நான்கு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டு ஊத்தங்கரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு வாட்ஸ்-அப் மூலம் நிகழ்ந்த கொடுமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

வாட்ஸ்-அப் பயன்கள்:

whatsapp1

  • சமீபத்தில் வாட்ஸ்-அப் காணொளியில் டிராபிக் நடுவே நிற்கும் கண்காணிப்பு கேமராவில் வரும் வாகனங்களை வம்படியாக மடக்கி லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்ட காவல் அதிகாரி ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
  • ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் ஆடியோ ஒன்று வாட்ஸ்-அப்-பில் வலம் வருகிறது. அந்த ஆடியோவில் ஒருவர் “நான் ஒரு பெண்ணின் புகைப்படத்தை உங்களுக்கு பகிர்ந்துள்ளேன். இந்தப் பெண் சென்னையில் பகல் வேளையில் தனியாக பெண்கள் இருக்கும் பல வீடுகளில் காஸ் இணைப்புப் பரிசோதனை செய்வதாக வீட்டில் சென்று காஸ் இணைப்பைப் பரிசோதனை செய்த பின் கைகழுவ வேண்டும் என்பார்.

இவருக்கு உதவும் போது அவர் தண்ணீரில் கைகளைக் கழுவிய பின்னர், குளோரோபார்ம் (மயக்க மருந்து) திரவத்தில் நனைக்கப்பட்ட கைக்குட்டை கொண்டு வீட்டில் இருக்கும் பெண்ணை மயக்கமடையச் செய்து வீட்டுக்குள் இருக்கும் நகைகளைத் திருடிச் சென்றுவிடுவார். இந்தப் புகைப்படம் மற்றும் ஆடியோவை உங்களுக்குத் தெரிந்தவர்கள் எல்லோருக்கும் அனுப்புங்கள். பெண்களுக்கு விழிப்புணர்வு குறைவு நாம் தான் அவர்களை எச்சரிக்கை செய்ய வேண்டும் என நீளுகிறது இந்த ஒலிக்குறிப்பு.

இந்தத் தகவல் பொய்யாகவோ அல்லது உண்மையாகவோ இருக்கலாம். ஆனால் இச்சம்பவம் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்த்துகிறது. ஆகவே பெண்கள் வாட்ஸ்-அப்-பை பொறுத்தவரை பின்பற்ற வேண்டியவை.

கனிவான பெண்களின் கவனத்திற்கு:

  • மங்கையர் அனைவரும் இனி எந்தவித சமூக வலைத்தளங்களில் இருந்தாலும் முடிந்தவரை தங்களின் புகைப்படத்தை பதிவேற்றக்கூடாது.
  • வாட்ஸ்-அப்-பில் உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தொடர்பில் இருந்தாலும், உங்களின் கைப்பேசி எண்ணை வைத்திருக்கும் எவரும் உங்களைக் கண்காணிக்க முடியும். இதில் நீங்கள் என்ன படத்தை புரோபைல் படமாக வைத்திருக்கிறார்கள். என்னென்ன ஸ்டேட்ஸ் இருக்கிறீர்கள், எப்போதெல்லாம் வாட்ஸ்-அப்-பில் வருகிறீர்கள் என்பதன் மூலமாக உங்களை அவர்கள் தொடர்ந்து கண்காணிக்க முடியும். இதிலிருந்து மீள உங்கள் வாட்ஸ்-அப் செட்டிங்குகளை மாற்ற வேண்டும்.
  • உங்களது கைப்பேசியில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே, உங்களது புரோபைல் பற்றிய தகவல் தெரியவோ அல்லது யாருக்குமே உங்களது புரோபைல் பற்றிய தகவல் தெரியாமல் இருக்கவோ அதற்கான ஆப்சன்களை வாட்ஸ்-அப் தருகிறது. இதை முறையாகப் பயன்படுத்த வேண்டும்.

எனவே உங்களுக்குத் தெரியாத நபர்கள் இணையும் வாய்ப்பு உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் இருந்து விலகி விடுங்கள். உங்களுக்குத் தெரிந்த நெருங்கிய நண்பர்கள் மட்டுமே இருக்கக்கூடிய குழுக்களில் மட்டுமே இணையுங்கள். ஏனென்றால் வாட்ஸ்-அப் குழு மூலமாக உங்களைப் பற்றிய விவரங்கள், உங்கள் தொலைபேசி எண் சம்பந்தமில்லாத நபருக்கு சென்றடையும் வாய்ப்பும் அதை அவர்கள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது.

  • வேலை வாய்ப்புப் பற்றிய தகவல்களை உங்களுக்கு அளிப்பதாகக் கூறும் இணையதளங்களை நம்பி உங்கள் புகைப்படங்களை இணைக்காதீர்.

வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்புவர்களுக்கான தண்டனை:

பெண்களின் புகைப்படங்களை வாட்ஸ்-அப்பில் அவதூறாகப் பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அவையாவன.

  1. பெண்களின் புகைப்படத்தைத் தவறான நோக்கத்தில் பயன்படுத்துபவர்கள் மீது தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் சட்டம் 66 முதல் 69 வது வரையிலான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும். குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். மேலும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு கூடுதலான தண்டனை கிடைக்கும்.
  2. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப சிறப்பு சட்டத்தின் கீழ், பெண்களின் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்துபவர்களை குண்டர் சட்டத்தில் கூட கைது செய்ய முடியும். மேலும் முகப்புத்தகம், டிவிட்டர் மூலம் பெண்கள் புகைப்படத்தை பரப்புபவர்கள் பயன்படுத்தும் ஐ.பி. முகவரி மற்றும் சர்வர் மூலம் ஒரு மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து விடலாம் என காவல்துறை அறை கூவல் விடுத்தாலும் இதைப்பற்றிக் கொஞ்சமும் கவலைப்படா காளையர் கூட்டம் தொடர்ந்து அவதூறு பரப்பிக் கொண்டே வருகின்றனர். ஆதலால் நாமும், நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் சமூக வலைத்தளங்களில் மிகக் கவனத்தோடு இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதோடு இதை நடைமுறைப்படுத்தினால் கொஞ்சம் பிரச்சனையைக் குறைக்கலாம்.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வாட்ஸ்-அப்-பில் வதைபடும் மக்களின் நிலை”

அதிகம் படித்தது