மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உயரும் செலவுகளால் சரியும் கட்டிடத்துறை!

வெங்கட்ரமணி

Apr 11, 2015

kattumaanam3தமிழகத்தில் கட்டிடத்துறையானது மிக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது அனைவரும் அறிந்த செய்தியாக உள்ளது. கட்டிமுடிக்கப்பட்டு விற்கமுடியாமல் தேங்கிநிற்கும் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள்(Apartments); முதலாளிகளால் புதிய முதலீடு செய்ய இயலாமை; கட்டிடங்களுக்கான அரசு அனுமதிகள் பெறுவதில் தாமதம்; அரசு அதிகாரிகளின் மெத்தனப்போக்கு; வேலையாட்களின் பற்றாக்குறை; அதிகமான வட்டி விகிதம்; கடன் வசதிகள் இன்மை: சுற்றுச்சூழல் துறை அனுமதிகளின் தாமதம்; மின்சாரப் பற்றாக்குறை: இவ்வாறு கட்டிடத்துறை பிரச்சனைகளால் நிரம்பி வழிகிறது.

என்னைப் பொறுத்தவரை பரிவர்த்தனை கட்டணங்களைக் குறைப்பதும் முறைப்படுத்துவதும் கட்டிடத்துறையின் மீட்புக்கு மிகவும் பயன்தரும். உதாரணமாக பிட்சா, அலைபேசிகள், திரைப்பட சீட்டுகள், கம்ப்யூட்டர்கள் போன்ற பொருட்களை வாங்குவது மிகவும் எளிமையாகிவிட்டது. ஒரு தொலைபேசி அழைப்பின் மூலமே இதனை வாங்கிவிட இயலும்.

இதே போல கட்டிடங்களுக்கான அனுமதிகளைப் பெறுவதில் எளிமைப்படுத்துதல் சாத்தியமற்ற ஒன்றா? அல்லது கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கான நிறைவு சான்றிதழ் ஏன் இலகுவாக கிடைக்கக்கூடாது? ஒரு புதிய கட்டிட நிர்மாணத்திற்கான முதலீட்டை செய்வதற்கு முதலாளிகள் அஞ்சி நடுங்குகிறார்கள். வெவ்வேறு ஒப்புதல்களையும், அனுமதிகளையும், அதற்கான போராட்டங்களையும் செய்வதில் அவர்களுடைய ஆற்றல் கரைந்துவிடுகிறது. அரசு அமைப்பில் உள்ள குறைபாடுகள் பெரிதும் முதலீடுகளைத் தடுக்கின்றன. இவற்றால் தொழில்நுட்ப முன்னேற்றம், தரம், வாடிக்கையாளர் சேவை, விலைகுறைப்பு, புதுமைகாணல் போன்ற விடயங்களை சிந்திப்பதற்கு நேரம் இருப்பதில்லை.

என்னுடைய சொந்த அனுபவத்திலேயே நான் பல முறை கண்டிருக்கிறேன், குடிநீர், கழிவுநீர் மற்றும் மின்சார இணைப்புகளைப் பெறுவதற்கு 3லிருந்து 5 மாதம் வரை காலஅவகாசம் தேவைப்படுகிறது. கட்டிடம் அரசு விதிகளை குறையே இல்லாமல் பின்பற்றினாலும் இதே நிலைதான். அரசு அலுவலகங்களையும், அதிகாரிகளையும் தொடர்ந்து சந்தித்து மன்றாடியே பல்வேறு அனுமதிகளை பெறவேண்டியிருக்கிறது. இதனால் ஏற்படும் நேர விரயமும் செலவுகளும் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு இழப்புகளை ஏற்படுத்துகின்றன. முறையான அனுமதிகளைத் தருவது என்பதையே குடிமக்களுக்கு தாம் செய்யும் மிகப்பெரிய உதவியாக அதிகாரிகள் எண்ணிக்கொள்கின்றனர். உண்மையில் அவை அடிப்படை உரிமைகளாகும்.

byst16

ஏறத்தாழ இருநூறு முற்றிலும் நிறைவடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள், நிறைவுச் சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்களினால் தேங்கியுள்ளன. சராசரியாக நிறைவுச் சான்றிதழ் பெறுவதற்கு 75லிருந்து 100நாட்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. இந்த காலகட்டத்தில் வீட்டை வாங்கியுள்ள உரிமையாளர்கள் வாடகைக் குடியிருப்புகளில் தங்கவேண்டியுள்ளது. கட்டிடத்தைக் கட்டிய முதலாளி மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகளைப் பெற இயலாத நிலை உள்ளது. இதனால் அதிக விலைகொடுத்து மின்சாரத்தையும், டீசல் போன்ற எரிவாயுகளையும் வாங்கி பணத்தை வீணடிக்க வேண்டியுள்ளது. இத்தகைய தொல்லைகளால் ஏற்படும் நேர இழப்பும் அளவிடமுடியாதது.

கிட்டத்தட்ட லாபத்தின் 10 சதவீதம் மேற்படி தாமதங்களால் இழக்கப்படுகிறது. இதனால் அடுத்த முதலீட்டுக்கான பணம் குறைந்துவிடுகிறது. இங்கே அரசாங்கத்தால் ஏற்படும் வேறுசில தாமதங்களான கட்டிட திட்ட அனுமதி, கட்டிடப் பதிவு போன்றவற்றைப் பற்றி பேசவில்லை. அவற்றையும் கணக்கில் எடுத்தால் அரசாங்கத்தால் ஏற்படும் நேர இழப்பும், அரசு அதிகாரிகளின் ஊழல் காரணமாக ஏற்படும் பொருள் இழப்பும் மொத்த லாபத்தில் 25 சதவிகிதத்தை அழித்துவிடும்.

100 அடுக்ககங்களைக் கொண்ட ஒரு குடியிருப்பில் சதுரடிக்கு 300 ரூபாய் லாபம் கிடைக்கும் என்ற தோராயமான கணக்கை ஒரு முதலாளி போட்டிருந்தால் அதில் 25 சதவிகிதம் என்பது 75 ரூபாயாகும். இந்த 75 ரூபாயை வேறு வழியின்றி கட்டிட முதலாளிகள் வாடிக்கையாளர் தலையில் சுமத்துகின்றனர். அப்படி செய்யாவிட்டால் கட்டிடத்தைக் கட்டுபவர் கடனாளியாகவே அதிக வாய்ப்பு இருக்கிறது. விலை அதிகரிப்பதால் வாடிக்கையாளர்களும் வீடுகளை வாங்க தயங்குகின்றனர். இந்த ஊழல்களையும், நேர விரயங்களையும் களைந்தால் அதனால் மிச்சப்படும் பணமானது ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படும்.

மேலே குறிப்பிட்டபடி வெவ்வேறு அனுமதிகளுக்காக ஏற்படும் செலவினங்கள் விற்பவரையும், வாங்குபவரையும் கடுமையாக பாதிக்கின்றன. அரசின் மெத்தனமும், அசட்டையும் இந்த சிறிய பொருளாதார நடவடிக்கையில் இவ்வளவு பெரிய நட்டத்தை ஏற்படுத்தும் என்றால் மொத்த அரசின் செயலின்மையும், ஊழலும் எத்தகைய பொருளாதார இழப்புகளை உருவாக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். இத்தகைய ஊழல்களையும், முறைகளையும் ஒழுங்குபடுத்தி சரிசெய்வது காலத்தின் கட்டாயம் அல்லவா. எனவே கீழ்கண்ட முயற்சிகளை மேற்கொண்டால் நாம் அனைவருமே பயன்பெறுவோம்.

  • அனுமதி விதிகள் மற்றும் முறைகளில் தெளிவு ஏற்படுத்தப்படவேண்டும்.
  • அனுமதிகளுக்கான எழுத்துப்பணி குறைவானதாகவும், தெளிவானதாகவும் இருக்க வேண்டும்.
  • இணையம் மூலம் அனுமதி பெறுதல் ஊக்குவிக்கப்படவேண்டும்.
  • அனுமதிகளுக்கான காலநிர்ணயம் செய்யப்படவேண்டும்.
  • பிற பிரச்சனைகளைத் தேடிக் கண்டறிந்து களைய வேண்டும்.

மேலே சொன்ன பட்டியல் எளிதாக செயல்படுத்தப்படக்கூடியதாகும். அவ்வாறு செய்யப்பட்டால் கட்டிடத்துறையில் உற்பத்தி பெருகி பொருளாதாரம் வளர்ந்து வளமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்.

BVe Consulting Engineers

Engineering Project Consultancy & Property Advisory Services,

Residential-Commercial-Industrial-Infrastructure Designs

Due-diligence studies -Asset valuation services

Chennai -600 083

bv.consultingengrs@gmail.com

www.bveconsultingengineers.in

www.bveconsultingengineers.com


வெங்கட்ரமணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உயரும் செலவுகளால் சரியும் கட்டிடத்துறை!”

அதிகம் படித்தது