மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆந்திர படுகொலை – நேற்று இரண்டு, இன்று இருபது, நாளை இருநூறா?

சாகுல் அமீது

Apr 11, 2015

encounter_2366461gஆந்திர வனத்துறையும் காவல்துறையும் சேர்ந்து 20 தமிழர்களை படுகொலை செய்திருக்கிறார்கள். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அரசால் கொலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை அடைந்து கொண்டே வருகின்றது. குற்றங்களை குறைக்கவே  கொலை செய்கிறார்கள் என்றால் ஏன் குற்றங்களும் ஆண்டுக்காண்டு கூடிக் கொண்டே செல்கின்றன?

கொலைகளுக்கும் குற்றங்களுக்கும் பெரிய தொடர்பில்லை என்பது கொன்றவர்களுக்கும் தெரியும் கொல்லப்பட இருக்கின்றவர்களுக்கும் தெரியும். இருபது பேரை சுட்டுக் கொன்று விட்டதால், இனி செம்மரக் கடத்தல்  நின்று விடுமா? 2011 இல் வாராடி என்ற தமிழக கூலித் தொழிலாளியை  சித்தூரில் கொன்ற உடன் செம்மர கடத்தல் ஏதேனும் குறைந்ததா? இல்லை, டிசம்பர் 2012 இல் முருகன் என்ற தமிழக கூலித் தொழிலாளியை  கொன்ற உடன் குறைந்ததா? இல்லை, ஜனவரி 2014 இல் சம்பரியன் மணி என்ற தமிழக கூலித் தொழிலாளியை  கொன்ற உடன் குறைந்ததா?, சந்திரபாபு நாயுடு பதவி ஏற்ற 72 மணி நேரத்திற்குள் செம்மர கடத்தலை கட்டுப்படுத்த உத்தரவிட்ட உடன்  29-5-2014 அன்று மேலும் மூன்று தமிழர்களை சுட்டு கொன்றார்களே அன்றுடனாவது கடத்தல் குறைந்ததா?அதற்கடுத்த ஒரு மாதத்திற்குள்ளாகவே வீரமணி என்ற தமிழக கூலித் தொழிலாளியை சுட்டு கொன்றார்கள். அதன் தொடர்ச்சியாக தற்போது ஒரே நாளில் 20 தமிழக கூலித் தொழிலாளர்களை கொன்றிருக்கின்றார்கள். இனி அடுத்து ஒரே நாளில் இருநூறு முன்னூறு என்று கொலை செய்வார்களா என்ன? முட்டாள் ஆந்திர அதிகாரிகள்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் செம்மரக் கடத்தல் என்ற பிரச்சினையே இல்லை. செம்மர சந்தை தேவைக்கேற்ப தனியார் தோட்டங்களில் உற்பத்தி இருந்தது, அதற்கேற்ப கட்டுப்பாடான சந்தை விலையும் இருந்தது. சில அரசியல்வாதிகளின் கொடூர புத்தியால் வேண்டும் என்றே செம்மரத்தை அரிதான மரம் என்று அறிவித்து பொது மக்கள் வளர்ப்பதை, விற்பதை கட்டுப்படுத்தி விட்டனர். அரசியல்வாதிகள், சமூக விரோதிகளின் விருப்பப்படி செம்மர வியாபாரம் கள்ளச் சந்தைக்கு மாற்றப்பட்டுவிட்டது. குண்டர்களை கையில் வைத்துகொண்டு ஆயிரக் கணக்கான கோடிகளை செம்மரக் கடத்தல் மூலம் ஈட்டிக் கொண்டு இருக்கின்றனர். பதினைந்து ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடைந்து பயன்படுத்த தயாராகி விடும் செம்மரம் எப்படி அரிதான மரம் ஆனது? பொது மக்கள் தோட்டங்களில் விரும்பி வளர்த்து வியாபாரம் செய்தால் செம்மரம் வளர்ச்சி கூடுமா இல்லை குறையுமா? கேடு கேட்டவர்கள்,  நாட்டை எப்படி சூறை ஆடுகின்றார்கள் பாருங்கள்.

aandhira padukolai1கொல்லப்பட்டவர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டவர்கள் தானே, அவர்களுக்கு எதற்கு ஆதரவு தெரிவிக்கின்றீர்கள் என்று சமூக வலைத் தளங்களில் கேள்வி கேட்கின்றார்கள். தவறு செய்பவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பது நியாயம். ஆனால் தண்டனை தவறிற்கேற்ப இருக்க வேண்டும். சட்டத்தில் ஒவ்வொரு தவறிற்கும் என்ன தண்டனை என்று பின்பு எதற்கு தெளிவாக எழுதி இருக்கின்றார்கள்?அனைத்து தவறுக்கும் சுட்டுக் கொல்வோம் என்று ஒற்றை வரியில் சட்டத்தை எழுதி இருக்கலாமே. சமூக வலை தளங்களில் தட்டச்சு செய்யும் இவர்கள் அனைவரும் எந்த தவறுமே செய்யாதவர்களா? வருமான வரி குறைப்பு,  சொத்து வரி மதிப்பீடு, பதிவு வரி ஏய்ப்பு, விற்பனை வரி தவிர்ப்பு, சாலை விதி மீறல்  என்று எத்தனை விதிகளை மீறி இருக்கின்றார்கள். மனதை தொட்டு எந்த விதிகளையும் நாங்கள் மீறவில்லை என்று யாரேனும் கூற முடியுமா? அது அவர்களின் தவறில்லை. விதிமுறைகளை மீறாமல் இந்தியாவில் வாழ முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம். ஒவ்வொரு விதி மீறலையும் காரணம் கூறி அனைவரையும் சுட்டு கொன்றால் ஏற்று கொள்ள முடியுமா? தலைக்கவசம் அணியாத காரணத்திற்கு அவர்களின்  தம்பியை சுட்டு கொன்றால் அவர்கள் சும்மா இருப்பீர்களா, இல்லை நாம் தான் வேடிக்கை பார்த்து கொண்டு இருப்போமா? நியாயத்தையும் தர்மத்தையும் சூழ் நிலையை கருத்தில் கொண்டு தான் முடிவு செய்ய வேண்டும், கண் மூடித்தனமான நியாயம் பெரும்பாலும் அநியாயமே.

இன்னும் சிலர் கொலை செய்யப்பட்டது தவறு தான், ஆனால் தமிழர்கள் என்று பிரித்து பார்க்காதீர்கள் என்கிறார்கள். செம்மரக் கடத்தல் விவாகரத்தில் இது வரை முப்பதிற்கும் மேலானவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் அனைவருமே தமிழர்கள். இவ்விவகாரத்தில் இரண்டாயிரம் தமிழர்கள் ஆந்திராவில் பல மாதங்களாக சிறையில் வாடுகின்றார்கள். ஏன் கொல்லப்படுபவர்கள், கைது செய்யப்படுபவர்கள் அனைவருமே தமிழர்கள்? ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் கூலி கிடைக்கும் தொழிலில் ஆந்திர தொழிலாளிகள் இல்லாமல் இருப்பார்களா என்ன? இந்த தொழிலின் மூலம் கள்ள வருமானம் அடையும் அதிகாரிகள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், அடியாட்கள் என அனைவருமே ஆந்திரகாரர்கள் தானே. ஏன் அவர்கள் யாருமே கைது செய்யப்படவும் இல்லை, கொல்லப்படவும் இல்லை? அவர்கள் மீது கைவைத்தால் என்னாகும் என்று சுடுபவர்களுக்கு மட்டுமல்ல அந்த துப்பாக்கிகளுக்கும் தெரியும். இன்றைய நிலையில் இந்தியாவில் மலிவான உயிர் தமிழர்களின் உயிர் தான்.

தமிழர்கள் கொல்லப்பட்டால் தமிழக முதல்வர் கடிதம் தான் எழுதுவார். இன்றைய தொழில் நுட்ப முன்னேற்ற சூழ்நிலையில் கடிதம் எழுதுபவர்கள் ஒன்று ——– ஆக இருக்க வேண்டும் இல்லை முதல்வராக இருக்க வேண்டும். முதல்வர்கள் தான் சரியில்லை என்று பிரதமராவது கண்டிக்கலாமே என்றால், அவர் இது பற்றி வாயே திறக்கவில்லை. என்ன செய்வது தமிழர்களின் உயிருக்கு மதிப்பில்லை.

நமக்கு உண்மையான தலைவர்கள் இருந்திருந்தால் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்திருப்பார்கள், ஏன் இது போன்ற சூழ்நிலையே வரமால் முன்னரே காத்திருப்பார்கள். நம் மாநில மக்கள் 2000 பேருக்கும் மேல் அடுத்த மாநிலத்தில் சிறையில் இருக்கின்றார்களே என்று எந்த தலைவராவது வருந்தி இருக்கின்றார்களா? இந்த படுகொலைக்கு பின்னரும் மயிலிறகால் வருடும் அறிக்கைகளை தான் வெளியிடுகின்றார்கள். அவர்களுக்கு தெலுங்கு பேசும் மக்களின் ஓட்டும் வேண்டும், தெலுங்கு முதலாளிகளின் பணமும் வேண்டும், பின்னர் எப்படி இவ்விவகாரத்தில் சிரத்தை கொள்வார்கள்?

தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு மக்களாவது மனசாட்சிக்குட்பட்டு ஆந்திர அரசை கண்டிக்கின்றார்களா பாருங்கள். அவரவர்களுக்கு அவரவர்களின் மொழி, சாதி, பணம் முக்கியம். இது போன்ற சுயநலவாதிகள் தான் இன்றைய உலகை அபாயகரமானதாக மாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களின் தங்கைகள் கற்பழிக்கப்படும் பொழுது, அவர்களின் அண்ணன்கள் அதிகாரிகளால் கொல்லப்படும்  பொழுது அவர்களுக்கு அரை மணி நேரம் சமூக அக்கறை வரலாம். பிணங்களை எண்ணிக்கொண்டு காத்திருப்போம் அது வரை.


சாகுல் அமீது

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆந்திர படுகொலை – நேற்று இரண்டு, இன்று இருபது, நாளை இருநூறா?”

அதிகம் படித்தது