மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தெய்வத் தமிழ் அறக்கட்டளையின் அறங்காவலர் பா.சீனிவாசு அவர்களின் நேர்காணல்

சித்திர சேனன்

Apr 18, 2015

shrinivascகேள்வி: தமிழ் வழிபாட்டிற்காக தெய்வத் தமிழ் அறக்கட்டளை செய்து வரும் பணிகள் யாது?

பதில்: கருவறையிலிருந்து கல்லறை வரை, பிறப்பிலிருந்து இறப்பு வரை, தொடக்கம் முதல் அடக்கம் வரை நம் வாழ்வில் பதினாறு இல்ல சடங்குகள் உள்ளன. அதுமட்டுமல்லாது திருக்கோவில் நாட்பூசை, திருக்கோவில் குடமுழுக்கு போன்ற வழிபாட்டு முறைகளை SRM பல்கலைக் கழகம், தமிழ்ப்பேராயம் மூலம் தமிழ் அர்ச்சகர்களை இந்தத் தெய்வத் தமிழ் அறக்கட்டளை உருவாக்கியுள்ளது. இதற்கான பாடநூல்களையும், பயிற்சி செய்வதற்கான ஆசிரியர் குழுவையும் எங்களது ஆசான் திரு.மு.பெ.சக்திவேல் முருகனார் அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதுவரை நான்கு குழாம் அதாவது நான்கு ஆண்டுகள் இந்த வகுப்பு நடைபெற்று, நானூறுக்கும் மேற்பட்ட தமிழக அர்ச்சகர்கள் ஒரு பட்டயப்படிப்பினை நிறைவு செய்து அவரவர் இல்ல சடங்குகளையும், கோவில் வழிபாட்டுகளையும், குடமுழுக்குகளையும் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாது இந்தக் குறைந்த கட்டணத்தில், ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு உட்பட்டு SRM பல்கலைக் கழகம் வடபழனி வளாகத்தில் மாதம் இரு சனி, ஞாயிறுகளில் மட்டுமே இந்த வகுப்பு நடைபெறுகிறது. ஒரு பகுதிநேரப் படிப்பாகவும், ஒரு பட்டயப்படிப்பாகவும், இந்த வழிபாட்டு முறையை பாடத்திட்டமாக SRM தமிழ்ப்பேராயம் எங்கள் தெய்வத்தமிழ் அறக்கட்டளையின் ஆசிரியர் உருவாக்கிய பாடத்திட்டத்தினை, ஏற்றி போற்றி இன்றைக்கு நான்கு ஆண்டுகள் நானூறுக்கும் மேற்பட்ட தமிழ் அர்ச்சகர்களை உருவாக்கி, ஐந்தாம் ஆண்டில் படியெடுத்து வைத்திருக்கிறது.

இந்தத் தமிழ் அர்ச்சகர்கள் இல்ல சடங்குகளான புதுமனை புகுவிழா, திருமணம், ஒரு பெண் பூப்படைந்தால் அதற்கு செய்யவேண்டிய சடங்கு, இறைவனடி சேர்ந்தால் திருவடிப்பேறு, ஆண்டு திதி, பொன்விழா, வைரவிழா, முதியோர்களுக்கான நிகழ்வுகள் போன்ற நிகழ்வுகள் அனைத்தும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் போன்ற பாடல்களின் மூலமாக நம் தமிழர்களுடைய ஆதிமுறையை, இந்த நூல்கள் இன்றைய தமிழ்வழிபாட்டிற்காக உலகமெங்கும் இருக்கிற தமிழர்கள் பயன்படும் வகையில் இந்த அர்ச்சகர்கள் இன்று இறைத்தூதகர்களாக, தமிழ் தூதுவர்களாக எங்கள் தெய்வத் தமிழ் அறக்கட்டளையினுடைய “தமிழா வழிபடு தமிழில் வழிபடு”

என்ற முழக்கத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் இன்றைக்கு உலகமெங்கும் இந்த வழிபாட்டு முறையை எடுத்துச்சென்றிருக்கிறார்கள்.

கேள்வி: கருவறையில் கன்னித்தமிழ் செல்லவேண்டும் என்றால் தமிழர் செய்யவேண்டியது என்ன?

பதில்: இன்றைக்கு பார்த்தீர்கள் என்றால் ஒவ்வொரு கோவில்களிலும் பல நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கிறது மாதந்தோறும். எடுத்துக்காட்டாக பிரதோஷம் என்ற வழிபாட்டைப் பார்த்தீர்கள் என்றால் எல்லா சிவன் கோவில்களிலும் நிறைந்த கூட்டம் இருக்கிறது. ஆனால் பிரதோஷம் என்பதுகூட திரிந்த தமிழ், தூய தமிழில் பார்த்தீர்கள் என்றால் கழுவாய் வழிபாடு என்று பெயர். இந்த கழுவாய் வழிபாட்டை எப்படி செய்யவேண்டும், எதற்காக இந்த நாளில் என்ன செய்யவேண்டும் என்பது இன்றைய தமிழனுக்குத் தெரியாது. ஆனால் இதற்கான நூல்கள், குறுந்தகடுகளை தெய்வத்தமிழ் அறக்கட்டளை உருவாக்கியிருக்கிறது. வழிபாட்டு முறையின் பகுத்தறிவு என்பது தெளிந்து வழிபட வேண்டும், அறிவோடு அர்ச்சிக்க வேண்டும், புரியாத மொழியில் ஒரு அர்ச்சனையோ ஒரு சடங்கோ இருந்தால் நாம் இறைவனிடம் ஒன்றி இருக்க முடியாது. இறைவனிடம் மனதளவில் ஒன்றி இல்லை என்றால் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. எனவே ஒவ்வொரு தமிழனும் தன் வாழ்க்கைச் சடங்குகளை தமிழிலே கொண்டு வருவதற்கான ஒரு உறுதியை பூண்டான் என்றால் கருவறையில் தமிழும் வரும், இல்லங்களில் வழிபாடுகள் மட்டுமல்லாமல் சடங்குகளிலும் தமிழ் வரும்.

கேள்வி: இல்லச்சடங்குகளில் தமிழ் வழிபாடு பற்றி கூறுங்கள்?

seenivasan5பதில்: ஏற்கனவே சொன்ன மாதிரி பதினாறு சடங்குகள் இருக்கிறது. பதினாறு சடங்குகள் வரும்பொழுதே நாம் ஒரு புரோகிதரைக் கூப்பிடுகிறோம். அந்த புரோகிதர் வருகிறார், அவர் என்ன மந்திரம் சொல்கிறார்?, ஏது சொல்கிறார்?, அதனுடைய உள் அர்த்தம் என்ன? என்பது நம் யாருக்கும் தெரிவது கிடையாது. ஆனால் அந்த முறை உண்மையிலேயே தமிழருடைய முறையா என்பதும் நமக்கு கேள்விக்குறியாக இருக்கிறது. ஆனால் நம் ஆதித் தமிழர்கள் சங்க இலக்கியங்களிலும், சமய இலக்கியங்களிலும் என்ன விட்டு சென்றிருக்கிறார்கள் என்பதை யாரும் தேடவில்லை. அந்த மாதிரி தேடலை நீங்கள் தொடங்கினீர்கள் என்றால் இந்த மாதிரி நூல்கள் நிச்சயம் விடை கொடுக்கும். இந்த நூல்கள் மூலமாகத்தான் இந்த அர்ச்சகர்களை உருவாக்கியிருக்கிறார்கள். எனவே உங்கள் இல்லச் சடங்குககளை, அதாவது ஆண்டுத் திதியாக இருக்கலாம், புதுமனை புகுவிழாவாக இருக்கலாம், திருமணமாக இருக்கலாம், ஏன் இன்று பிரபலமாகப் பேசப்படுகிற சூரியா-ஜோதிகா இல்ல திருமணமே தேவார திருமறை ஓதித்தான் நடத்தப்பட்டு இருக்கிறது. எங்கள் ஆசிரியர் மு.பெ.சக்திவேல் முருகனார் அவர்கள்தான் இதை நடத்திவைத்தார்.

கேள்வி: தமிழ் நாட்டில் தமிழ் இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே, புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளில் இதே நிலைதானா?

பதில்: பொதுவாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் வெளிநாடு செல்லும் பொழுது பல பண்பாடு, கலாச்சாரங்களை எடுத்துச் செல்கிறார்கள். இல்லை என்று மறுக்கமுடியாது. அதே சமயத்தில் தமிழ் வழிபாடு என்பது பெருமளவில் வெளிநாடுகளில் இருக்கிறதா என்றால் குறைந்தே இருக்கிறது. ஆனால் இன்றைக்கு தமிழர்கள் இறைவனை தமிழிலே வழிபடவேண்டும் என்பதை முதன்மைக் குறிக்கோளாக சுவிஸ்நாட்டில் இருக்கிற ஒரு செய்வினைக்கூடம் என்ற தன்னார்வ அறக்கட்டளை, தமிழர்கள் இறைவனை தமிழிலே வழிபடவேண்டும், இல்ல சடங்குகளும் தமிழிலே செய்யவேண்டும் என்று ஒரு உலக பிரகடனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மாநாடு நடத்தி இருபத்துஏழு நாடுகளிலிருந்தும் மக்கள் வந்து அந்த மாநாட்டு தீர்மானத்திற்கு முன்மொழிந்தார்கள். இன்றைக்கு புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடையே இந்த தமிழ் வழிபாட்டுக்கான ஒரு புரிதலும், தெளிதலும் இன்று வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் அவரவர் கோவில்களில் தமிழ்தான் வழிபடவேண்டும், அவர்களுடைய சடங்குகளும் தமிழில்தான் இருக்கவேண்டும் என்கிற ஒரு வேகம் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களிடம் இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டு தமிழர்களிடம் இன்னும் அது விதைக்கப்பட வேண்டும், அவர்களுக்கு இதற்கான புரிதலையும் எடுத்துச் சொல்ல வேண்டும்.

கேள்வி: தமிழ்வழிபாட்டிற்கு தடை எது, அர்ச்சர்களா?, அரசா?, நீதிமன்றமா?

பதில்: இது எதுவுமே கிடையாது. தமிழர்களின் மனப்போக்குதான். ஏனென்றால் ஒரு கோவிலுக்குச் செல்கிறோம் பூ, பழம், தேங்காய் இவையனைத்தும் வாங்கி செல்கிறோம். அர்ச்சனைக்கான பணத்தை செலுத்தி அர்ச்சனை செய்வதற்கு சொல்கிறோம். எல்லா கோவில்களிலும் அரசே எழுதி வைத்திருக்கிறார்கள் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று. அப்பொழுது யாரும் அந்த குருக்களிடம் கேட்பதில்லை தமிழில் செய்யுங்கள் என்று. குருக்களை கேட்டீர்கள் என்றால் இங்கு யாரும் கேட்கவில்லை அதனால் நாங்கள் சமசுகிருதத்தில் பண்ணுகிறோம் என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர் பண்ணாவிட்டாலும் நீங்கள் கவலைப்படவேண்டாம். உங்களது கையில் தேங்காய், வாழப்பழத் தட்டு எப்படி இருக்கிறதோ அதேமாதிரி திருப்புகழும், தேவாரமும், திருவாசகமும் அடங்கிய சிறிய நூலை கையில் எடுத்துக்கொண்டு நீங்களாகவே அங்கு பாடினீர்கள் என்றால் அந்தத் தமிழ் வழிபாடு என்பது அங்கே நிற்கிற மக்களிடையே பரவ ஆரம்பிக்கும். இதைத்தான் நாங்களும் செய்துகொண்டிருக்கிறோம், எங்களது அடியார் கூட்டங்களும் இதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். சிவன் கோவிலுக்குச் செல்கிறீர்களா தென்னாடுடைய சிவனே போற்றி என்று சொல்லுங்கள், முருகன் கோவிலுக்குச் செல்கிறீர்களா அரோகரா என்று சொல்லுங்கள், ஐயப்பன் கோவிலில் சரணம் ஐயப்பா என்று சொல்கிறார்கள் இல்லையா, அந்த முழக்கங்கள் எல்லாம் குறைந்து விட்டன. அந்த முழுக்கங்கள் இல்லாததால்தான் மக்களிடையே இந்த வழிபாட்டு முறை தெரியாமல் போய்விட்டது.

A Malaysian of Hindu faith recites a prayer during Diwali celebrations in Kuala Lumpurஎனவே இந்த முழக்கங்கள் மூலமாகத்தான் இன்றைக்கு தமிழ்வழிபாட்டினைக் கொண்டுவரவேண்டுமே தவிர, இங்கு அரசு ஆணை போடலாம், இன்றைய தேதியில் நீதிமன்றத்தில் எந்தத் தடையும் கிடையாது. ஏன் தமிழ்நாட்டில் இருக்கிற சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு மூத்த நீதிபதி மதுரையில் சென்ற மாதம் பிப்ரவரி 28ந்தேதி இல்ல சடங்குகளையும், கோவில் வழிபாட்டு முறைகளிலும் தமிழே இருக்கவேண்டும் என்று ஒரு கூட்டத்தில் பேசியிருக்கிறார். எனவே நீதிமன்றத்திலும் இதற்கான தடை இல்லை. ஒரு மத வழிபாடு என்பதும், ஒரு வாழ்வியல் சடங்கு என்பதும் ஒரு தனி மனிதனுடைய உரிமை. அங்கே தமிழர்கள் தமிழில் வழிபடுவதற்கு அரசியல் சாசனமும் வழிவகுக்கிறது. அரசும் எந்தத் தடையும் இல்லை, நீதிமன்றத்திலும் எந்தத் தடையும் இல்லை, எனவே அந்தக் கோவிலில் இருக்கிற குருக்களிடம் நாம் யாரும் விண்ணப்பம் வைப்பதில்லை, அப்படி விண்ணப்பத்தை பத்து நபர்கள் கேட்கும் பொழுது அவர்களுக்கும் மனமாற்றம் வரும். இந்த விண்ணப்பம் வைக்காத காரணம், தமிழர்களே அன்றி இதற்கு எந்த விதமான தடையும் இல்லை, தமிழர்கள்தான் இதற்கு தடையாக இருக்கிறார்கள், அதனால் இந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதுதான் இந்த தெய்வத்தமிழ் அறக்கட்டளையின் நோக்கம்.

கேள்வி: கருவறையிலும், இல்ல சடங்குகளிலும் தமிழ் பற்றி கூறினீர்கள். கல்விக் கூடங்களில் தமிழ்மொழியை மென்மேலும் வளர்க்க இளைய தலைமுறைக்கு எவ்வாறு எடுத்துச் செல்லாம்?

பதில்: தமிழ் என்பதை ஒரு மொழிப்பாடம் என்ற ஒரு நிலையிலே இன்றைக்கு இளைஞர்கள் அந்த ஒரு நோக்கிலே இருக்கிறார்கள். ஆனால் இது வெறும் மொழிப்பாடம் மட்டுமல்ல, அறிவியல், சித்தாந்தம், தாவரவியல், பூலோகவியல், இன்றைக்கு படிக்கக்கூடிய வானியல், கணிதம் இவை அனைத்துமே இந்த மொழியில் புதைந்திருக்கிறது என்று இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லவேண்டும். சிலபேர் இந்த ஆன்மீகமே தமிழில் இருக்கிறதா என்ற கேள்வியைக்கூட கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், இல்லை சமய இலக்கியங்கள் வழியாகவும், இது ஒரு தெய்வமொழி என்பதையும் இளையதலைமுறைக்கு சொல்லவேண்டிய கடமையில் நாம் இருக்கிறோம். அப்படி எடுத்து செய்துவருவதில் தெய்வத்தமிழ் அறக்கட்டளை என்ன செய்து வருகிறது என்று கேட்டீர்கள் என்றால், ஆண்டுதோறும் சென்னையில் இருக்கிற பள்ளிகளுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு திருமூலர் திருமந்திரம் ஒப்புவித்தல் போட்டியில் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக இதை ஒரு மனனப்போட்டியாக ஐந்தாம் வகுப்புக்கு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு அந்த ஆசிரியரின் துணையோடு இந்தப் போட்டி நடத்துகிறோம். இந்தப் போட்டி நடத்துவதினால் சைவ சமயம் அல்லாத பிற மதத்தினவர்களும் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இது நமது தெய்வத் தமிழை மட்டும் எடுத்துச் செல்லவில்லை, இன்றைக்கு திருமூலர் திருமந்திரத்தில் இருக்கக்கூடிய செய்திகள் அனைத்தும், இன்றைய வாழ்வியலுக்குத் தேவையான எல்லா செய்திகளும் அதில் இருக்கிறது. இன்றைய நிலையில் அவன் அதை மனனப் போட்டியாக எடுத்துக்கொள்வான்.

வளர வளர அவன் படித்தது, அவன் கல்லூரி காலங்களில் அந்தப்பாடல் நினைவிற்கு வரும், அந்த உண்மைப் பொருளை அவன் அறிவான். அனைத்து தன்னார்வ தமிழ் வளர்ச்சி தன்னார்வ நிறுவனங்கள் இந்த மாதிரி போட்டிகளை மென்மேலும் எல்லா கல்விக் குடும்பத்திலும், கல்வி சாலைகளிலும், கல்விக் கூடங்களிலும் இந்த மாதிரியான போட்டிகள் வழியாக வெறும் இலக்கியப் போட்டியாக அல்லாமல் அறிவியல் சார்ந்த, கணிதம் சார்ந்த, வானியல் சார்ந்த நோக்கத்தோடு இந்தப் போட்டிகளை நடத்தினீர்கள் என்றால் நிச்சயமாக இந்த இளைய தலைமுறையை ஈர்க்க முடியும்.

கேள்வி: கணிணித்துறையிலும், வணிகவியல் துறையிலும் வெற்றிபெற்ற நீங்கள் தமிழாசிரியர்களே தொடாத தமிழ் கடலின் ஆழத்திற்குச் சென்றது எப்படி?

பதில்: நான் பிறந்த ஊர் சிதம்பரம் அதாவது பாடல் பெற்ற தலம் மட்டுமல்ல, இன்றைக்கு சைவத்தின் தலைநகரம் என்று சொல்லக்கூடிய சிதம்பரம். வளர்ந்தது திருமுதுகுன்றம் என்று சொல்லக்கூடிய விருதாச்சலம் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது எனது ஆசிரியர் திரு. மு.பெ.சக்திவேல் முருகனார் அவர்களுடைய நூல்களைப் படித்ததின் தாக்கமாகவும், தெய்வமுரசு இதழில் பதிப்பாசிரியராகவும் மாறிய காலகட்டத்தினாலும் இருக்கலாம். அல்லது என் துணைவியார் திரு.முருக கிருபானந்த வாரியாருக்கு உறவின் முறை, அவரின் மூலமாக வாரியாரின் நூல்களையும் நான் படித்த ஒரு காரணத்தினால் இந்த தமிழ் கடலில் மூழ்கி தமிழ் முத்தெடுப்பது மட்டுமல்ல, இதை பலருக்கும் கொண்டுசேர்க்கும் ஒரு வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.

கேள்வி: தாங்கள் மென்மேலும் மேற்கொள்ளவிருக்கும் தமிழ்ப் பணிகள் என்ன?

பதில்: இன்றைய தலைமுறைக்கு தமிழ்சார்ந்த செய்திகளை எடுத்து செல்லவேண்டும் என்றால் பொதுவாக நூல்கள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டுக்கள் இதில்தான் தன்னுடைய தொன்மை மறைந்துகொண்டிருக்கிறது. ஆனால் இன்றைய இளைஞர்கள் இதன் அருகிலேயே வரமறுக்கிறார்கள். ஆனால் அவர்கள் கையில் என்ன இருக்கிறது அலைபேசியும், கை அலைபேசியும் இந்த மாதிரியான தகவல் தொழில் நுட்பக் கருவிகள் இருக்கிறது. அந்தத் தகவல் தொழில்நுட்பக் கருவிகள் மூலமாக இந்தத் தமிழுடைய பெருமையையும் தொன்மையையும் எடுத்துச் சென்றீர்கள் என்றால் உலகளாவிய வாழும் தமிழர்களுக்கு இந்தத் தமிழினுடைய பெருமையை எடுத்துச்செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இதைத்தான் இந்த அறக்கட்டளை செய்து வருகிறது.

கேள்வி: இளைஞர்களிடையே வாசிப்புத்தன்மை குறைந்துவரும் இன்றைய இளைஞர்களுக்கு வாசிப்புத் தன்மையை மேம்படுத்த தமிழின்பால் ஈர்ப்பு கொள்ள தாங்கள் எடுக்கும் முயற்சிகள் என்ன?

பதில்: இன்றைக்கு இளைஞர்களின் நிலையைப் பார்த்தீர்கள் என்றால் பல ஊடகங்கள் மூலமாக சினிமா போன்ற செய்திகளில்தான் தமிழ் இருக்கிறது என்பதைப் போல ஒரு பாவனை உள்ளது, அப்படி அல்ல தமிழ் என்பது மொழி அல்ல இது வாழ்வியல் நெறி. இதனுள்ளே இருக்கிற, புதைந்திருக்கிற அறிய தகவல்களை தெரியப்படுத்தவேண்டும் என்று சொல்லும் போது நான் ஏற்கனவே சொன்னது போல தகவல் தொழில் நுட்ப புரட்சி இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய மனித குளத்திற்குக் கிடைத்த வரப்பிரசாதம். அந்தத் தகவல் தொழில்நுட்ப புரட்சியின் மூலமாக இளைஞர்களை இந்த வாசிப்புத் தன்மைக்குக் கொண்டுவரலாம். பழைய நூல்கள் எல்லாவற்றையும் இந்தத் தகவல் தொழில்நுட்பத்திற்கான mobile Book, இணைய வழியாக e-book, i-pad என்றிருக்கிற தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் மூலமாகத்தான் இந்த இளைஞர்களுக்கு தமிழ் ஈர்ப்பைக் கொண்டுவரமுடியும். அதற்கான முயற்சியைத்தான் நாங்கள் செய்து வருகிறோம்.

சிறகுக்கு நேர்காணல் அளித்தமைக்கு நன்றி.

பா.சீனிவாசு அவர்களைத் தொடர்பு கொள்ள:  மின்னஞ்சல் முகவரி: shri@pppindia.com

தமிழ் அருட்சுனைஞர்(அர்ச்சகர்) – Diploma in Tamil Arutsunaignar (ஓர் ஆண்டு (இரண்டு பருவம்)
பட்டயப்படிப்பு) – ஒரு செய்தி தொகுப்பினைக்காண : http://dheivathamizh.org/video/

விண்ணப்பப் படிவத்தை  பதிவிறக்கம் செய்ய :  http://www.dheivathamizh.org/Application_Fresh2015.pdf


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தெய்வத் தமிழ் அறக்கட்டளையின் அறங்காவலர் பா.சீனிவாசு அவர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது