மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இன்ஜ் லேமேன்: புவி திடமான உட்பகுதியைக் கொண்டதென்று கண்டறிந்தவர்

தேமொழி

May 17, 2015

puvi-thidamaana-utpagudhi5-300x186கூகுள் டூடுல் மே 13 ஆம் தேதி (2015) அன்று “இன்ஜ் லேமேன்” (Inge Lehmann, 1888-1993) அவர்களைச் சிறப்பிக்கும் ஓவியம் ஒன்றினை வெளியிடும் வரை இன்ஜ் லேமேன் என்பவர் யார், அவர் ஆணா பெண்ணா, எந்த நாட்டைச் சேர்ந்தவர், அவருடைய எந்தப் பங்களிப்பிற்காக அவர் பாராட்டப்பட்டார் என்பது பெரும்பாலோருக்குத் தெரியாது. கூகுளின் ஓவியத்தைப் பார்த்த பிறகு அவரைப் பற்றித் தகவல் தேடி அறிந்து கொண்டோரே பலர். அவர் டென்மார்க்கில் பிறந்த டேனிஷ் பெண்மணி என்றும், அத்துடன் அவர் ஒரு ‘புவியதிர்ச்சியியல்’(seismologist) ஆய்வாளர் என்பதும் தெரிய வந்தது. மேலும், புவியின் உட்பகுதி பாறைக்குழம்பால் ஆனதல்ல, புவி திடமான நடுப்பகுதியைக் கொண்டதென்று கண்டறிந்தவர்தான் இந்த இன்ஜ் லேமேன் என்பதும் தெரிய வந்தது. அவர் நிலநடுக்க அதிர்வலைகளை ஆராய்ந்து புவியின் நடுப்பகுதியைப் பற்றிக் கண்டறிந்தார் என்று தெரிந்து கொண்ட அதே நேரம், நேபாளத்தில் மற்றொரு 7.3 ரெக்டார் நிலநடுக்கம் மேலும் பல உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்துவிட, இன்ஜ் லேமேனின் ஆராய்ச்சி முடிவுகளின் முக்கியத்துவம் மேலும் தெளிவாயிற்று.

புவியானது 1. திடமான நடுப்பகுதியையும், 2. அதன் வெளியே திரவநிலையில் பாறைக்குழம்பாலான பகுதியையும், தொடர்ந்து 3. படிம அடுக்குப் பகுதியையும், மேலே 4. புவியோடு (solid inner core, liquid outer core, mantle, and crust) என நான்கு அடுக்குகளைக் கொண்டதென்று இன்ஜ் லேமேன் 1936 ஆம் ஆண்டு தனது “P” என்ற தலைப்பில் ஓர் ஆய்வறிக்கையை வெளியிடும் வரை, புவியின் நடுப்பகுதி பாறைக்குழம்பாலானது என்றே நம்பப்பட்டு வந்தது. இந்த ஆய்வறிக்கையில், நியூசிலாந்தில் 1929ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் உருவாக்கிய அதிர்வலைகளை ஆராய்ந்த இன்ஜ் லேமேன், புவி திடமான உட்பகுதியைக் கொண்டதென்ற முடிவிற்கு வந்திருந்தார். உயர்ந்த அளவு வெப்பம் மற்றும் அதிக அழுத்தம் காரணமாகவும், புவியின் நடுப்பகுதி இருக்கும் தொலைவின் காரணமாகவும் புவியின் நடுப்பகுதியானது ஆய்வதற்கு வழியற்ற வகையில் அமைந்துள்ளது. எனவே நிலநடுக்கத்தின் அதிர்வலைகள் புவியில் பரவுதலின் அடிப்படையில் புவியின் அமைப்பு ஆராயப்படுவது வழக்கில் உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பெரியதும் சிறியதுமாக ஆயிரக்கணக்கில் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. நிலநடுக்கங்கள் பலவகை அதிர்வலைகளையும் கொண்டவை. இவற்றில் “முதன்மையான அதிர்வலைகள்” (P-waves or Primary waves, or compressional waves), “இரண்டாம் நிலை அதிர்வலைகள்” (S-waves or Secondary waves, or shear waves) என்ற வகைகளும் உண்டு. முன்னர் இருந்த அறிவியல் கருதுகோள்களின்படி, புவியின் நடுப்பகுதி திரவநிலையில் இருப்பதால் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும்பொழுது முதன்மை அலைகள் திசைவிலகும் (deflect the P-waves). அதனால் நிலநடுக்க அதிர்வலைகள் புவியின் மறுபக்கத்தில் பரவ வாய்ப்பில்லை என்று அறிவியல் அறிஞர்கள் நம்பியிருந்தார்கள். ஆனால், 1929 ஆம் ஆண்டின் நியூசிலாந்தின் நிலநடுக்கத்திற்குப் பிறகு, நிலநடுக்க அதிர்வலைகள் வலிவற்ற அலைகளாக உலகின் மறுபுறத்து நிலநடுக்க அதிர்வலைமானியில் பதிவாகி இருந்ததை இன்ஜ் லேமேன் கண்டார்.

ஆனால் அந்நாளைய அறிவியல் புரிதலின்படி இது நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லாத ஒன்றென்பது ஆய்வாளர்கள் கருத்தாக இருந்தது. இந்த அதிர்வலை பதிவுகளுக்குக் காரணம் புவி திடமான நடுப்பகுதியைக் கொண்டிருந்தாலே சாத்தியம் என்பதால், புவி திடமான நடுப்பகுதியைக் கொண்டது என விளக்கம் கூறி தனது ஆய்வறிக்கையை 1936 ஆம் ஆண்டு இவர் சமர்ப்பித்தார். இன்ஜ் லேமேனின் விளக்கத்தின்படி புவியின் நடுப்பகுதி திடமான உட்படிவம், அப்படிவத்தைச் சூழ்ந்த திரவ பாறைக்குழம்பாலான படிவம் என இரு அடுக்குகளைக் கொண்டது. இரு உள் அடுக்குகளுக்கும் இடையே தொடர்பின்மையும் உள்ளதாகக் குறிப்பிட்டார். இத்தொடர்பின்மை “லேமேன் தொடர்பின்மை”(Lehmann Discontinuity) என பின்னர் இவர் பெயராலேயே இப்பொழுது அழைக்கப்படுகிறது. புவியின் நடுப்பகுதியைப் பற்றிய இவரது இந்தக் கண்டுபிடிப்பே இன்றளவும் நிலநடுக்கவியல் சார்ந்த ஆய்வுகளுக்கு அடிப்படையாக இருந்து வருகிறது.

இன்ஜ் லேமேனின் ஆய்வு முடிவுகள் குறிப்பிட்டது ஒரு மாறுபட்ட புதிய கோணம் என்றாலும், ஆய்வறிக்கை வெளியான உடனே அத்துறையினரால் உடனடியாக ஒப்புக் கொள்ளப்பட்ட முடிவாகவும் இருந்தது. அதுவரை புவியின் நடுப்பகுதி பாறைக்குழம்பினால் ஆனது என்ற அடிப்படையில் அறிவியல் அறிஞர்கள் தாங்கள் மேற்கொண்ட கணிப்புகளுக்கும், ஆனால் அதிர்வலைகள் புவியின் மறுபகுதியில் பதிவாகும் நிகழ்வின் முடிவுகளுக்கும் ஆய்வுலகில் இருந்த இடைவெளியின் காரணமாக குழப்பமடைந்திருந்த வேளையில், இந்தப் பதிவுகளுக்கு அதிர்வலைமானிக் கருவிகளின் குறைபாடுகளே காரணம் எனக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்த காலத்தில், இன்ஜ் லேமேனின் ஆய்வு முடிவுகள் சரியான விளக்கத்தை முன்வைத்த காரணத்தினால் அவரது ஆய்வு முடிவுகள் நிலநடுக்க ஆய்வுகளில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்த திருப்புமுனையாக அமைந்தது.

நிலநடுக்க அதிர்வலைமானி வரைபடக்கருவிகள் (seismograph) 1880 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இன்ஜ் லேமேன் ஆய்வுகளை மேற்கொண்ட காலங்களில் நிலநடுக்க அதிர்வலைமானி வரைபடக்கருவிகள் 40 ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்தாலும், அவை இந்நாளைய மானிகளின் தரத்துடன் ஒப்பிட்டால் மிக நுட்பமானவையே அல்ல. இருப்பினும் அக்கால அறிவியல் ஆய்வாளர்களுக்குக் கிடைத்த கருவிகளில் அவை சிறந்தவையாகக் கருதப்பட்டன. அனைவராலும் இன்ஜ் லேமேனின் விளக்கம் மறுப்பின்றி ஒப்புக்கொள்ளப்பட்டாலும், நிலநடுக்க அதிர்வலைகளை மிகத்துல்லியமாக பதிவு செய்யும் தரம் கொண்ட மிகவும் நுட்பமான பிற்கால மானிகளின் உதவியால் அவரது தேற்றம் முற்றிலும் உண்மை என ஐம்பது ஆண்டுகள் கழித்து 1970 ஆண்டில்தான் நிரூபிக்கப்பட்டது. இதற்கு உதவும் வகையில் துல்லியமான கருவிகள் உருவாகக் காரணமாக இருந்தது அணுகுண்டு ஆராய்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றம். அணுகுண்டு வெடிப்பு விளைவிக்கும் அதிர்வுகளை அளக்க அறிவியல் உலகம் காட்டிய ஆர்வம் புவியதிர்வுகளை துல்லியமாக அளக்கும் கருவிகள் தோன்ற வழி வகுத்தது.

இன்ஜ் லேமேன் ஆய்வுகள் மேற்கொண்ட காலத்தில் உலகம் முழுவதும் நிலநடுக்க ஆய்வியல் தரவுகளைச் சேகரிக்கவும், அதிர்வலைகளை தரவுகளாகவும், வரைபடங்களாகவும் பதிவு செய்ய ஆய்வுக்கூடங்கள் நிறுவப்பட்டன. ஆய்வாளர்கள் அனைவரும் தங்கள் ஆய்வுக்கூடங்கள் சேகரிக்கும் தரவுகளை உலகம் முழுவதும் உள்ள பிற ஆய்வாளர்களுடன் பகிர்ந்துகொண்டு, அதன் மூலம் அனைவரும் தரவுகளைப்பெற்று ஆய்வுகள் நடத்தினர். நொடியில் உலகின் மறுகோடிக்கு செய்தியனுப்பும் தொலைத்தொடர்பு வசதியற்ற அந்த நாட்களில், கிடைக்கும் தரவுகளை ஆய்வதற்கும் கணினிகள் இல்லாத காலத்தில், ஆய்வாளர்கள் தரவுகளை தாள்களில் பதிவு செய்து கணித்துக் கொண்டிருந்தார்கள்.

இன்ஜ் லேமேனும் தான் பெறும் உலக நிலநடுக்கங்கள் பற்றிய தகவல்களைக் குறிப்பெடுத்த தாள்கள் யாவற்றையும் காலை உணவு சீரியல் அட்டை பெட்டிகளில் சேகரித்துத் தொகுத்து வைத்திருப்பாராம். அவற்றை மேசைகளில் பரப்பி தனது ஆய்வுகளை மேற்கொள்வாராம். அவர் கையாண்ட தரவுகளின் தொகுப்பு முறை இக்காலக் கணினி வழி பயன்பாட்டில் உள்ள தரவுகள் தொகுப்பு முறையைப் போன்ற வகையிலேயே அமைந்திருந்தது என அவரது உறவினர் ஒருவர் கூறியதாக இன்ஜ் லேமேன் வாழ்க்கைக் குறிப்பைக் கூறும், யூனிவெர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா அட் லாஸ்ஏஞ்லஸ் (UCLA) பல்கலைக்கழக கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது.

“நான் டென்மார்க்கின் ஒரே நிலநடுக்கவியல் ஆய்வாளர்” என இன்ஜ் லேமேன் தன்னை விளையாட்டாகக் குறிப்பிடுவார். அதன் காரணம் அவரது டென்மார்க்கில் இதுவரை நிலநடுக்கமே ஏற்பட்டதில்லை. அதனால் அத்துறையில் ஆர்வம் கொண்டவர்களும் அந்நாட்டில் வெகு சிலரே. அறிவியல் அறிஞர் இன்ஜ் லேமேன் ஒரு பெண்ணியவாதியும், பாலின சமத்துவக் கொள்கையின் ஆதரவாளரும் ஆவார். அறிவியல், கணிதத் துறைகளில் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்ற கருத்தினைக் கொண்டவர் இன்ஜ் லேமேன். அவர் பிறந்து வளர்ந்து, ஆய்வுப்பணிகளை மேற்கொண்ட சென்ற நூற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் இருந்த காலகட்டம் பெண்களின் முன்னேற்றதிற்குத் தடைகள் பல நிறைந்த காலமாகும்.

டென்மார்க்கின் தலைநகரான கோப்பென்ஹாகென் நகருக்கு அருகில் உள்ள ஆஸ்டர்ப்பரோ (Østerbro), என்ற இடத்தில் 1888 ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் தேதி பிறந்தவர் இன்ஜ் லேமேன். இவரது குடும்பத்தினரும், முன்னோர்களும் மிகவும் பிரபலமானவர்களாகவோ, அல்லது ஏதேனும் ஒரு துறையில் சாதனையாளர்களாகவோ விளங்கியவர்கள். இவரது அறிவியல் ஆர்வத்திற்குக் காரணமானவர் இவரது தந்தை “ஆல்ஃபிரட் லேமேன்”. இவர் கோப்பென்ஹாகென் பல்கலைக் கழகத்தின் உளவியல் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். இவரது பெற்றோர்கள் இவரை ஆண்களும் பெண்களும் இணைந்து பயிலும், ஆண் பெண் பேதம் காட்டாத, இருபாலரின் அறிவுத் திறத்தையும் சமமாகக் கருதும், இருபாலரையும் ஒன்றாகவே நடத்தும் முற்போக்கு பள்ளி ஒன்றில் சேர்த்தார்கள்.

இந்தச் சூழ்நிலையில் வளர்ந்தவருக்கு பிற்காலத்தில் பல்கலைக் கழக காலங்களும், அறிவியல் தொடர்பான துறைகளில் பணியாற்றும் காலங்களும், உண்மையில் உலக நடைமுறை மாறானது, பெண்களின் முன்னேற்றதிற்கு சற்றும் உதவாதது என்ற உண்மையை உணர்த்தியதும் இவர் அதிர்ச்சி அடைந்தார். “தகுதியில் குறைவான எத்தனையோ ஆண்களுடன் நான் தேவையற்ற வகையில் போராட வேண்டியிருந்ததை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்” என்று தனது உறவினர் ஒருவருக்கு இவர் எழுதிய தகவல், நடைமுறை வாழ்க்கையில் பெண்களின் திறமையை மதிக்காது, அவர்களை சமமாகக் கருதாத நடவடிக்கைகளால் இவர் எதிர் கொண்ட கசப்பான அனுபவங்களின் பிரதிபலிப்பு என நாம் கொள்ளலாம்.

கோப்பென்ஹாகென் பல்கலைக்கழகத்திலும் இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் கணிதவியல் படித்து கணிதவியலில் முதுகலை பட்டம் பெற்றார். பிறகு சிறிதுகாலம் காப்புறுதி நிறுவனத்தில் பணியாற்றிய இன்ஜ் லேமேன் 1925 ஆம் ஆண்டு “நீல்ஸ் எரிக் நோர்லாண்ட்” (Niels Erik Nørlund) என்ற கணிதவியலாளரின் உதவி ஆய்வாளராகப் பணியேற்றார். “ராயல் டேனிஷ் ஜியோடெடிக் இன்ஸ்டிடியுட்” (Royal Danish Geodetic Institute) நிறுவனத்தின் தலைவரான நோர்லாண்ட் நிலநடுக்க ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக ஐரோப்பிய நாடுகளில் பலவற்றுக்கும் பயணித்து, புதிய நிலநடுக்கமானிகளை நிறுவும் கட்டமைப்புகளை மேற்பார்வையிடுவதில் உதவி புரிவதிலும், தரவுகளை ஆய்வதிலும் உதவினார்.

பணி நிமித்தமாக ஈடுபட்ட அத்துறையில் தோன்றிய ஆர்வம் காரணமாக மேலும் முறையான கல்வித் தகுதிகளைப் பெற்று மற்றுமொரு முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர் 1928 ஆம் ஆண்டு ராயல் டேனிஷ் ஜியோடெடிக் இன்ஸ்டிடியுட் நிறுவனத்தின் நிலநடுக்க ஆய்வுத்துறையின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். தனது 70 வயதுகளிலும் தனது ஆர்வம் காரணமாக தொடர்ந்து ஆய்வுப்பணியில் ஈடுபட்டார். முதுமையில் 105 ஆண்டுவரை வாழ்ந்தவர், தனது கண்பார்வையை இழந்தாலும் அதனைப் பொருட்படுத்தாது ஆக்கப்பூர்வமான, சாதனைகள் பல நிறைந்த, மகிழ்ச்சி ததும்பிய வாழ்வாக தனது வாழ்வை மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டு 1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் நாள் மறைந்தார்.

வாழ்நாள் சாதனையாளரான இன்ஜ் லேமேன் பற்பல பட்டங்களையும், பதவிகளையும், கௌரவங்களையும், விருதுகளையும் பெற்றவர். இவர் முனைவர் பட்டம் பெற்றிராவிட்டாலும் உலகப் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள் கௌரவ முனைவர் பட்டங்களை இவருக்கு வழங்கி இவரது அறிவியல் பங்களிப்பை சிறப்பித்துப் பாராட்டின. இன்ஜ் லேமேன் பெற்ற பல விருதுகளில் குறிப்பிடத் தக்கது 1971 ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்ட, புவிஇயற்பியல் புலத்தின் மிக உயர்ந்த விருதான “வில்லியம் பவ்வி பதக்கம்” (William Bowie Medal) என்ற விருதாகும். இந்த விருதைப் பெற்ற முதல் பெண்மணி இவர்தான் என்ற சிறப்பும் இன்ஜ் லேமேனுக்கு உண்டு. டேனிஷ் ராயல் சொசைட்டியின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்கப்பதக்கமும் வழங்கப் பெற்றார். விண்கல் ஒன்றிற்கும் இவரது பெயர் (asteroid 5632) சூட்டப்பட்டுள்ளது. அறிவியல் துறையில் சாதனைகள் செய்யவேண்டும் என்று விரும்பும் இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இன்ஜ் லேமேன் ஒரு சிறந்த முன்மாதிரி என்பதில் ஐயமில்லை.

கட்டுரையின் தகவல்களுக்கான சான்றுகள்:

University of California, Los Angeles (UCLA) – Dr Inge Lehmann profile by UCLA

http://www.physics.ucla.edu/~cwp/articles/bolt.html

Smithsonian Magazine:

http://www.smithsonianmag.com/smart-news/happy-birthday-inge-lehmann-180955246/?no-ist

American Museum of Natural History:

http://www.amnh.org/education/resources/rfl/web/essaybooks/earth/p_lehmann.html

Time Magazine:

http://time.com/3856721/inge-lehmann-google-doodle-seismology-scientist-civil-rights/

Washington Post:

http://www.washingtonpost.com/news/comic-riffs/wp/2015/05/13/inge-lehmann-how-google-salutes-more-women-who-seismically-change-history/

Googles-doodle News:

http://www.cnet.com/news/what-googles-doodle-about-inge-lehmann-is-all-about/

Family History:

http://www.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GRid=80488687

An illustration from Lehmann’s 1936 paper. (Inge Lehmann)

https://cdn1.vox-cdn.com/thumbor/uqk9PHUav-CmPx7C-O8Ovt_4gJQ=/800×0/filters:no_upscale()/cdn0.vox-cdn.com/uploads/chorus_asset/file/3691526/Picture1.0.jpg

 


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இன்ஜ் லேமேன்: புவி திடமான உட்பகுதியைக் கொண்டதென்று கண்டறிந்தவர்”

அதிகம் படித்தது