மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சருமப் பராமரிப்புக்கு சில குறிப்புகள்

சிறகு சிறப்பு நிருபர்

May 17, 2015

sarumap paraamarippu2சரும நோய் குணமாக:

  • சோப்புக்கு பதிலாக கமலா ஆரஞ்சு பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய்கள் குணமாகும்.
  • வெற்றிலையுடன் வெள்ளைப் பூண்டை சேர்த்து நன்றாக அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வந்தால் தேமல் குணமாகும்.
  • தகரைச் செடியின் வேரை எலுமிச்சைசாறு விட்டு நன்றாக அரைத்து தோலின் மீது பூச தோல்வியாதி குணமாகும்.
  • பசும்பாலில் வேப்பமரத்தின் பிசினை பொடியாக்கி குடித்து வந்தால் சரும நோய்கள் குணமாகும்.
  • கருந்துளசி இலை, கஸ்தூரி மஞ்சள் இவற்றை சேர்த்து அரைத்து உடல்முழுவதும் பூசி வெந்நீரில் குளித்து வந்தால் எவ்வித சருமப் பிரச்சனையும் வராது.
  • முல்தானி மெட்டியை தண்ணீரிலோ அல்லது பன்னீரிலோ கலந்து உடல் முழுவதும் தடவி பத்து நிமிடங்களுக்குப் பிறகு குளித்து வந்தால் சரும பிரச்னை இருக்காது. இதனை வாரம் ஒரு முறை செய்ய வேண்டும்.

முகப்பரு குணமாக:

  • சந்தனத்துடன் அல்லி இதழ்களை சேர்த்து ஒன்றாக அரைத்து, இரவு முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் முகப்பருக்கள் மறையும்.
  • சிவப்பு கீரைத்தண்டின் இலையை அரைத்து கட்டிகள் மற்றும் மருக்கள் மேல் தடவிவந்தால் பழுத்து உடைந்து குணமாகும்.
  • முகப்பரு உள்ள இடத்தில் பன்னீரில் சங்கை உரசிப் போட குணமாகும்.
  • முகப்பரு உள்ள இடத்தில் நறுக்கிய வெங்காயத்தைத் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.

தோல் பளபளப்பாக:

  • மஞ்சள்தூளை, தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் கலக்கி உடம்பிற்குத் தடவி, பின் பயத்தமாவைத் தேய்த்துக் குளித்து வந்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
  • இரண்டாக வெட்டப்பட்ட ஆரஞ்சு பழத்தை முகத்தில் தேய்த்து, பத்து நிமிடங்கள் வைத்திருந்து பின் சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
  • பதினைந்து நிமிடங்கள் முகத்தில் மோரைத் தடவி பின் கழுவினால் வறண்ட சருமம் புதுப்பொலிவு அடையும்.
  • நன்றாகப் பிசைந்த பழுத்த வாழைப் பழத்தை முகத்தில் தடவி, இருபதுநிமிடங்கள் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.
  • சந்தனம், பால், கடலை மாவு, மஞ்சள் அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.
  • தேங்காய்ப் பாலுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து முகத்தில் ஐந்து நிமிடங்கள் தேய்த்தால் சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.
  • பன்னீர், சந்தனம், உலர்ந்த ரோசா இதழ்கள் இவை மூன்றையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவிவந்தால் தோலின் நிறம் பொலிவு பெறும்.
  • வேப்பிலை, துளசி மற்றும் புதினா இலைகளை சமமாக எடுத்து வெயிலில் காயவைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு தேக்கரண்டி எடுத்து பன்னீருடன் சேர்த்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
  • வெயிலில் சென்று வருவதால் சருமத்தில் உள்ள புத்துணர்ச்சி குறையும். அந்த நேரத்தில் பாலில் ரோசா இதழ்களை சிறிது நேரம் ஊற வைத்து, அதனை முகத்தில் தடவி கழுவி வந்தால் புதுப்பொலிவு ஏற்படும்.
  • ஒரு தேக்கரண்டி துளசி இலைச்சாற்றுடன், அரை தேக்கரண்டி தேன் கலந்துதினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் தோல் பளபளப்பாக மாறும்.

சருமம் கருக்காமல் இருக்க:

  • புதினா, வேப்பிலை, குப்பைமேனி மற்றும் சிறிது மருதாணி இலைகளை காயவைத்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிதளவு எடுத்து, பாலில் கலந்து, முகத்தில் பூசி, இருபது நிமிடங்கள் ஊற வைத்து குளித்து வந்தால், முகம் வியர்வைக்குரு வராமலும், வெயிலில் கறுத்துப் போகாமல் இருக்கும்.
  • கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருக்குமானால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம் பழச்சாற்றை தேய்த்து சோப்புப் போட்டு குளிக்க வேண்டும். நாளடைவில் கறுமை நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
  • ஆரஞ்சுப் பழத்தோலை வெயிலில் நன்றாக காயவைத்து பொடி செய்து, பாலுடன் கலந்து சருமத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வந்தால், வெயிலில் ஏற்பட்ட கருமை மறையும்.
  • எலுமிச்சம் பழச்சாறு விட்டு கசகசாவை நன்றாக அரைத்து தினசரி தடவி வந்தால்சில தினங்களில் உடலில் ஏற்பட்ட கரும்படை மாறி தோல் இயற்கை நிறம் பெறும்.

பருவின் தழும்பு குணமாக:

  • அரை தேக்கரண்டி எலுமிச்சம்பழச்சாறு, புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, ஆகியவற்றுடன் பயிற்றம் பருப்பு மாவை கலந்து கொண்டு இரவு படுக்கும் முன் முகத்தில் தடவிக்பத்து நிமிடங்கள் ஊறிய பிறகு குளிர்ந்த நீரால் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.

சருமத்தில் எண்ணெய்ப் பசை போக:

  • ஆப்பிள் பழத்தை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் எண்ணைப் பசை குறையும்.
  • இரண்டாக நறுக்கிய தக்காளி பழத்தை முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.
  • வேப்பிலைக் கொழுந்தை பறித்து அரைத்து முல்தானி மெட்டி பவுடரை சேர்த்து முகத்தில் தடவி வந்தால் எண்ணைப்பசை குறைந்து பருக்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும்.

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற:

  • சோளமாவு, முட்டையின் வெள்ளைக் கரு, சர்க்கரை இம்மூன்றையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவி காய்ந்தவுடன் மெதுவாக எடுத்தால் முடியும் எளிதில் வரும்.
  • எலுமிச்சை சாற்றை அடிக்கடி முகத்தில் தடவ வேண்டும். தினசரி இவ்வாறு செய்து வந்தால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகுபெறும்.

முகத்தில் உள்ள சுருக்கம் மறைய:

  • முகத்தில் ஆலிவ் ஆயிலைப் பூசிசிறிதுநேரம் ஊற வைத்து, சோப்பு வைத்து கழுவ முகத்தில் உள்ள சுருக்கம் மறையும்.
  • முட்டையின் மஞ்சள்கருவுடன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவவும். அது நன்றாக காய்ந்த பிறகு சருமத்தைப் பிடித்து இழுக்க ஆரம்பிக்கும். பின் குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால் நாளடைவில் சுருக்கம் மறைந்து போகும்.

சொறி, சிரங்கு குணமாக:

  • குப்பைமேனி இலையுடன் உப்பையும் சேர்த்து அரைத்து தேய்த்துவர சொறிசிரங்கு குணமாகும்.
  • எண்ணெய்விட்டு  கருஞ்சீரகத்தை கருக வறுத்து அதனை காடி விட்டரைத்துப்பூச சொறி, தேமல் குறையும்.

வியர்வைகுரு குணமாக:

  • பன்னீரில் சந்தனத்தை அரைத்து உடம்பில் பூசி வர வியர்வைக்குரு நீங்கும்.

தழும்பு மறைய:

  • வேப்பம்பட்டை, கியாழம் இவையிரண்டையும் கலக்கி அதில் வரும் நுரையை தழும்பில் தடவிவர மறையும்.

சருமம் மிருவாக:

  • கடலை மாவு, முல்தானி மெட்டி, எலுமிச்சைச் சாறு இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து கெட்டியாக கலந்து வைத்துக் கொள்ளவும். இதனை முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்களுக்குப் பின் குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் சருமம் மிருவாக இருக்கும்.


சிறகு சிறப்பு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சருமப் பராமரிப்புக்கு சில குறிப்புகள்”

அதிகம் படித்தது