மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கண்ணை விற்று சித்திரமா? நியூட்ரினோ ஆராய்ச்சி X சுற்றுச்சூழல்- மீள்பதிவு

சாகுல் அமீது

Jan 31, 2015

இத்தாலியின் நியூட்ரினோ கண்டறியும் கருவி

காலையில் எழுந்து செய்தி பார்க்கிறீர்கள். உங்கள் பகுதியில் ஒரு பேருந்து நிலையம் அமைக்கப் போவதாக அரசு அறிவித்திருக்கிறது. உங்களது எதிர்வினை எப்படி இருக்கும்? அட போங்க நீங்க வேற ஒரு குடும்ப அட்டை வாங்குவதற்கே ஆறு மாசம் அலையணும். இதில் பேருந்து நிலையம் எல்லாம் வேண்டும் என்றால் ஒரு தலைமுறைக்காவது போராடனும். அரசாவது நமக்கு தேவையான திட்டத்தை தானாக முன்வந்து தருவதாவது என்று உங்களில் பலர் நினைக்கலாம். அவ்வாறு நினைப்பதில் ஒன்றும் தவறில்லை. நீண்ட காலமாகவே நம் நாட்டில் நிலைமை அவ்வாறு தான் இருந்து வருகிறது. இந்நிலையில் நடுவண் அரசு 900 கோடி ரூபாய் மதிப்பிலான நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடத்தை தேனி மாவட்ட மக்களுக்கு தானாக அள்ளிக்கொடுத்திருக்கிறது. இது அள்ளிக் கொடுக்கப்பட்ட திட்டமா அல்லது தள்ளிவிடப்பட்ட திட்டமா என்று தேனி மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். சிலரோ இது உறுதியாக நமக்கு எதிரானது தான் என்று ஏற்கனவே கொடி பிடித்து போராடத் துவங்கிவிட்டனர்.

நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடத்தைப் பற்றிய விரிவான தகவல்களை அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பதைக் காணமுடிகிறது. நியூட்ரினோ ஆராய்ச்சி என்றால் என்ன? இந்த ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்படுகிறது? இந்த ஆராய்ச்சியால் கிடைக்கும் முடிவு பலன் யாது? போன்ற கேள்விகளுக்கு தேனி மாவட்ட மக்கள் விடை தேடிக்கொண்டிருக்கின்றனர். இவற்றை பொது மக்களுக்கு விளக்கிச் சொல்வதற்கு அரசு சிரத்தை எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை. இந்த அறிவியல் விளக்கங்கள் மக்களுக்குப் புரியாது என்று அரசு அதிகாரிகளும் ஆராய்ச்சியாளர்களும் கருதுகிறார்களோ என்னவோ? மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்கிய முன்னோர்கள் வழி வந்த நம் தமிழர்களுக்கு நியூட்ரினோ பற்றி புரியாமலா போய்விடும்?

அனைத்து பொருட்களும் அணுக்களால் ஆனது என்பதை நாம் தொன்று தொட்டறிவோம். ஆனால் 1789 ஆம் ஆண்டு தான் அன்டைன் லேவோய்சியர் என்ற பிரெஞ்சு அறிவியல் அறிஞர் முதன் முதலில் அறிவியல் முறைப்படி அணுக்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிந்தார். அவருக்குப் பின் வந்த பல ஆராய்ச்சியாளர்கள் அணுக்கள் இருப்பதை உறுதி செய்தது மட்டுமல்லாமல், ஒவ்வொரு பொருட்களின் அணுக்களையும் பற்றி விரிவான தகவல்களை வெளிக்கொணர்ந்தனர். அணு ஆராய்ச்சியில் அடுத்த கட்டமாக 1897 ஆம் ஆண்டு ஜே.ஜே.தாம்சன் என்ற அறிவியல் அறிஞர் அணுக்களுக்குள் இருக்கும் எலெக்ட்ரான் துகளைக் கண்டறிந்தார். அதுவரை அணுவே கடைசி சிறிய நிலை, அணுக்களைப் பிளக்க இயலாது என்றிருந்த கருத்தாக்கம் அறிவியல் முறைப்படி தகர்க்கப்பட்டது. அவருக்குப் பின் வந்த ரூதர்போர்ட் அணுக்களின் நடுவில் இருக்கும் நியுக்கிளியஸ், புரோட்டான், நியூட்ரான் துகள்களைக் கண்டறிந்தார். இவரது கண்டுபிடிப்புகள் இன்றைய அணு ஆராய்சிகளுக்கு அடித்தளம் அமைத்தன.

1930 ஆம் ஆண்டு வொல்ப்கேங் பாலி என்ற ஆராய்ச்சியாளர் பீட்டா கதிர்களை ஆராயும்போது ஒரு வியப்புக்குரிய நிகழ்வைக் கண்டறிந்தார். ஒரு நியூட்ரான் துகளை எலெக்ட்ரான் மற்றும் புரோட்டான் துகள்களாக உடைக்கும் பொழுது வினைக்குப் பிந்திய ஆற்றல் வினைக்கு முந்தைய ஆற்றலை விடக் குறைவாக இருந்தது. சிறிது ஆற்றல் கணக்கில் விடுபடுவதாக உணர்ந்தார். இது அடிப்படை அறிவியல் தத்துவமான ஆற்றலை அழிக்கவோ ஆக்கவோ இயலாது, மாற்றவே இயலும் என்பதை மீறுவதாக இருந்தது. ஆகவே கணக்கில் விடுபடும் ஆற்றல் அழிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை, மாறாக நாமறியாத ஏதோ துகள்கள் மூலம் வெளியே கடத்தப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பை வெளியிட்டார். அவரை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் என்ரிகோ பெர்மி என்ற இத்தாலிய ஆராய்ச்சியாளர் விடுபட்ட ஆற்றல் நியூட்ரினோ துகள்களால் வெளியே கடத்தப்பட்டிருப்பதாகக் கூறி, இந்த மாயத் துகள்களுக்கு நியூட்ரினோ என்று பெயரிட்டார்.

நியூட்ரினோவிற்கு பெயர் சூட்டிய என்ரிகோ பெர்மி சிறப்பு தபால் தலை

உலகெங்கும் பல ஆராய்ச்சியாளர்கள் இந்த நியூட்ரினோ துகள் ஆராய்ச்சியில் இறங்கினர். நியூட்ரினோவின் சில குணங்கள் ஆராய்ச்சிக்கு மிகுந்த சவாலாக அமைந்தன. மனிதன் இதுவரைக் கண்டறிந்த பொருள்களிலே மிகவும் எடை குறைந்தது இந்த நியூட்ரினோ தான். ஒரு மில்லி கிராம் எடையில் குறைந்தது ஆயிரம் கோடி கோடி கோடி கோடி (நான்கு முறை கோடி தவறாக தட்டச்சு செய்யப்படவில்லை) துகள்களாவது இருக்கும் என்று கணித்திருக்கின்றனர். சிறிது காலத்திற்கு முன்னர் வரை சில ஆராய்ச்சியாளர்கள் நியூட்ரினோவிற்கு எடையே இல்லை என்று கூட சொல்லிக்கொண்டிருந்தனர். நியூட்ரினோ ஒளியை விட வேகமாக பயணிக்கக் கூடியது.

இதை விட பெரிய சிக்கல் நியூட்ரினோ மின் காந்த சக்தியற்றது. எந்தப் பொருள்களுடனும் எளிதில் வினை புரியாது. உதாரணத்திற்கு இந்த நொடியில் உங்கள் உடலினுள் ஒரு கோடி கோடி (இரண்டு முறை கோடி தட்டச்சுப் பிழை இல்லை) நியூட்ரினோக்கள் புகுந்து எந்த பாதிப்புக்களுமின்றி வெளியேறிக்கொண்டிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த நியூட்ரினோக்கள் அனைத்து பொருள்களையும் ஊடுருவி புவிக்குள் ஒரு புறம் நுழைந்து மறுபுறம் வெளியேறி விண்வெளியில் தன் பயணத்தை முடிவில்லாமல் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இவற்றுள் பெரும்பாலான நியூட்ரினோக்கள் சூரியனில் இருந்து வருகின்றன. சூரியனின் வெப்ப ஆற்றலில் பத்து சதவிகித ஆற்றலை நியூட்ரினோக்கள் வெளிக்கடத்துகின்றன.

பெரும்பாலும் எந்த ஒரு பொருளையும் ஆராயும் பொழுது அப்பொருள் எவ்வாறு மற்ற பொருள்கள் மற்றும் கதிர்களுடன் வினைபுரிகிறது என்பதை ஆராய்ந்தே அப்பொருளின் குணங்களைக் கண்டறிய இயலும். ஒரு மனிதனைப் பற்றி அறிய வேண்டும் என்றாலும் அம்மனிதரின் பேச்சு, எழுத்து அல்லது செயல் மூலம் மற்றவர்கள் அல்லது மற்ற பொருள்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார் என்பதை வைத்து தான் அம்மனிதரைப் பற்றி நாம் அறிய முடியும். யாரிடமும் பேசாத, தொடர்பு கொள்ளாத மனிதரைப் புரிந்து கொள்வது எப்படி? அது போன்று தான் நியூட்ரினோவை புரிந்துகொள்ள இயலாமல் ஆராய்ச்சியாளர்கள் திணறிக்கொண்டிருக்கின்றனர். உலகெங்கும் பல விதமான சோதனைகளில் நியூட்ரினோவை கண்டறிந்து உறுதி செய்ய இயலுமா என்று ஆராய்ச்சிகளை நடத்திவந்தனர்.

பிரெடெரிக் ரெய்னஸ் மற்றும் கிள்ய்டே கவண் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் ஒரு பெரிய தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பி நியூட்ரினோவிற்காக காத்திருந்தனர். இவர்களின் எதிர்பார்ப்புபடி ஒவ்வொரு வினாடியிலும் கோடிக்கணக்கான நியூட்ரினோக்கள் எந்த வித சலனமுமின்றி தொட்டியில் உள்ள நீரின் வழியே செல்லும். அந்த கோடிக்கணக்கான நியூட்ரினோக்களில் ஒரு சில நியூட்ரினோக்கள் தண்ணீரில் உள்ள புரோட்டான்களின் மீது மோதலாம். அவ்வாறு மோதினால் பாஸிட்ரான்கள் உருவாகும். அந்த பாஸிட்ரான்கள் ஏதேனும் எலெக்ட்ரான்கள் மீது மோதினால் காம்மா கதிர்கள் உருவாகும். அந்த காம்மா கதிர்களை சிண்டிலேட்டர் கருவிகள் உள்வாங்கி ஒளியை வெளியிடும். அப்படி ஒரு வேளை ஒளி வெளிவந்தால் அவற்றை உணருவதற்கான கருவிகளுடன் சோதனையை அமைத்திருந்தனர். இவர்களின் உழைப்பு வீண் போகவில்லை. சில குறும்புக்கார நியூட்ரினோக்கள் இவர்கள் எதிர்பார்த்த படி நீரில் இருந்த புரோட்டான்களில் மோதி தாங்கள் இருப்பதை உறுதிசெய்தன. இதன் மூலம் உலகில் முதல் முறையாக நியூட்ரினோவை சோதனையில் கண்டறிந்த பெருமையை 1956 ஆம் ஆண்டு பிரெடெரிக் ரெய்னஸ் மற்றும் கிள்ய்டே கவண் பெற்றனர். இந்த ஆராய்ச்சி கண்டுபிடிப்பிற்காக நாற்பது வருடங்களுக்கு பின் பிரெடெரிக் ரெய்னஸ்க்கு நோபல் பரிசு கிடைத்தது.

இது போன்ற நியூட்ரினோ கண்டறியும் முறை பல சிக்கல்களைக் கொண்டிருந்தன. இவற்றுள் பெரிய சிக்கல் புவி மேற்பரப்பில் எங்கும் பரவி இருக்கும் காஸ்மிக் கதிர்கள். இந்த நியூட்ரினோ சோதனையில் காஸ்மிக் கதிர்களும் நியூட்ரினோவைப் போன்றே வினைத் தொடரை உருவாக்கும் குணமுடையது. இதனால் சோதனையின் முடிவு நியூட்ரினோவால் உருவானதா அல்லது காஸ்மிக் கதிர்களால் உருவானதா என்ற குழப்பம் தோன்றும். இச்சிக்கலை தீர்க்க ஆராய்ச்சியாளர்கள் காஸ்மிக் கதிர்கள் இல்லாத இடங்களை தேடி நியூட்ரினோ ஆராய்ச்சியை செய்ய வேண்டியதாகியது. புவியில் காஸ்மிக் கதிர்கள் இல்லாத இடத்திற்கு செல்லவேண்டுமாயின் குறைந்தது ஆயிரம் அல்லது இரண்டாயிரம் மீட்டர் பூமிக்குள் ஆழத்திற்குத் தான் செல்லவேண்டும். ஆராய்ச்சியாளர்கள் அதற்கெல்லாம் தயங்குபவர்களா என்ன? புவியின் ஆழத்தில் ஆராய்ச்சியை அமைப்பதற்கு மிக எளிதான வழியைக் கண்டறிந்தனர். இருக்கவே இருக்கிறது உலகெங்கும் ஆழமாக தோண்டப்பட்ட சுரங்கங்கள்.

ஜப்பானின் சூப்பர்-கே (முழுப் பெயர் – சூப்பர் கமயொகண்டே அணுச் சிதைவு சோதனைகள்) நியூட்ரினோ ஆராய்ச்சி மொசுமி சுரங்கத்தில் ஆயிரம் மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 1983 ஆம் ஆண்டு இந்த ஆராய்ச்சி மையத்தை புரோட்டான் சிதைவைக் கண்டறிவதற்காக தொடங்கினர். இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் 1985-இல் நியூட்ரினோ கண்டறியும் வகையில் மேம்படுத்தினர். இந்த ஆராய்ச்சியில் நியூட்ரினோவை கண்டறிய ஐம்பதாயிரம் டன் (ஒரு டன் ஆயிரம் கிலோ கிராம்) எடையுள்ள சுத்தமான நீரைப் பயன்படுத்தினர். வெற்றிகரமாக 1988 ஆம் ஆண்டில் நியூட்ரினோக்களை கண்டறியத்தொடங்கினர். பத்தாண்டுகளுக்குப் பின்னர் 1998 ஆம் ஆண்டில் நியூட்ரினோ அலைவுகளையும் (oscillations) கண்டறிந்தனர். எதிர்பாரா விதமாக நவம்பர் 12 ஆம் தேதி 2001 ஆம் ஆண்டு பல சோதனைக் குழாய்கள் உள்நோக்கி வெடித்துச் சிதறிவிட்டன. மீண்டும் ஐந்து வருடங்களுக்குப் பின்னர் 2006 ஆம் ஆண்டு சீரமைத்து இரண்டு வருடங்கள் நியூட்ரினோ ஆராய்ச்சி செய்தனர். பின்னர் ஏனோ இந்த ஆராய்ச்சி மையத்தை நிறுத்தி வைத்துவிட்டனர்.

ஜப்பானின் சூப்பர்-கே உட்புறம் எடுக்கப்பட்ட புகைப்படம்

இதே போன்று கனடாவின் சட்பரி (Sudbury) நியூட்ரினோ ஆராய்ச்சி மையமும் சட்பரி சுரங்கத்தில் இரண்டாயிரம் மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆயிரம் டன் எடையுள்ள கனநீரை பயன்படுத்தி நியூட்ரினோவை கண்டறிந்தனர். மே மாதம் 1999 ஆம் ஆண்டு தொடங்கி 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நியூட்ரினோ சோதனைகளை நடத்தினர். தற்போது சோதனைகளை நிறுத்திவிட்டு இதுவரை கிடைத்த தகவல்களை ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.

பிரான்சு நாட்டில் அன்டாரஷ் (Antares) நியூட்ரினோ ஆராய்ச்சியை நேரடியாக கடலில் அமைத்திருக்கின்றனர். நியூட்ரினோ கண்டறியும் சோதனைக் கருவிகளை 2500 மீட்டர் ஆழமான இடத்தில் மத்திய தரைக் கடலில் நிறுவி நியூட்ரினோக்களை கண்டறிய முயன்றுவருகின்றனர். 2000 ஆம் ஆண்டில் சோதனை முறையில் தொடங்கப்பட்ட இந்த ஆராய்ச்சி 2008 ஆம் ஆண்டிலிருந்து முழுவீச்சில் நடந்துவருகிறது.

நியூட்ரினோ ஆரய்ச்சியின் அடுத்த கட்டமாக அமெரிக்கா தென்துருவமான அன்டார்டிகாவில் நியூட்ரினோ சோதனை மையத்தை டிசம்பர் 2010 இல் தொடங்கியிருக்கிறது. இந்த ஆராய்ச்சியில் நீருக்குப் பதிலாக பனிக்கட்டியை பயன்படுத்துகிறார்கள். அன்டார்டிகா முழுவதும் பனியால் நிறைந்திருப்பதை நாமறிவோம். இவர்கள் அந்த பனிக் கண்டத்தில் ஒரு சரியான இடத்தை தேர்ந்தெடுத்து 2000 மீட்டர் ஆழத்திற்கு பனிக்கட்டியில் துளைகள் அமைத்து நியூட்ரினோ கண்டறியும் கருவிகளை நிறுவியிருக்கின்றனர். பனிக்கட்டிகளில் துளைகள் இடுவதற்கு தனிச் சிறப்புள்ள வெந்நீர் செலுத்தும் துளைப்பான்களைப் பயன்படுத்தியிருக்கின்றனர். இது போன்று 86 துளைகள் அமைத்து ஒவ்வொரு துளையிலும் 60 கருவிகளை அமைத்திருக்கின்றனர்.

அண்டார்டிகா பனிக்கட்டியில் நியூட்ரினோ கண்டறியும் முறை – விளக்கப் படம்

நம் நாட்டிலும் 1965 ஆம் ஆண்டு முதல் கோலார் தங்கச் சுரங்கத்தில் 2300 மீட்டர் ஆழத்தில் நியூட்ரினோ ஆராய்ச்சி செய்துவந்தனர். பின்னர் 1992 ஆம் ஆண்டு கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டதுடன் நியூட்ரினோ ஆராய்ச்சியும் மூடப்பட்டுவிட்டது. அன்று முதல் இந்த ஆராய்ச்சியை எங்கு தொடர்வது என்று தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர். பல ஆண்டு தேடலுக்குப் பின்னர் இரண்டு இடங்களை தேர்ந்தெடுத்தனர். அவற்றுள் முதல் இடமாக நம் தமிழகத்தின் முதுமலைக் காட்டில் உள்ள சிங்காரா என்ற இடத்தை தேர்ந்தெடுத்தனர். வன விலங்குகளுக்கு இத்திட்டத்தால் பாதிப்பு ஏற்படும் என்று வனவிலங்கு பாதுகாவலர்கள் போராடவே இந்த இடம் கைவிடப்பட்டது. பின்னர் மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங் அருகில் ரம்மம் என்ற இடத்தை தேர்ந்தெடுத்தனர். பின்னர் பல சிக்கல்களால் அந்த இடத்தை கைவிட்டனர். இதற்கிடையில் இமாச்சல் பிரதேசத்தில் மணாலி அருகில் நிறுவுவதற்கு பரிசீலனை செய்து, பின்னர் அதையும் கைவிட்டனர். தற்போது தேனி மாவட்டத்தில் புதுக்கோட்டை கிராமத்திற்கருகே அமைக்க திட்டமிட்டிருக்கின்றனர்.

தேனியில் 2000 ஆயிரம் மீட்டர் உயர அழகான மலைக்கு அடியில் சுரங்கம் தோண்டி நியூட்ரினோ ஆராய்ச்சி அமைக்கப்போகிறார்கள். இதில் இந்த சுரங்கம் தோண்டுவது தான் மிகப்பெரிய சவால். இந்த சுரங்கம் குறைந்தது இரண்டு சரக்கு வாகனங்கள் செல்லும் அகலத்திற்காவது தோண்டப்படவேண்டுமாம். இவ்வளவு அகலமான சுரங்கத்தை இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு மலைக்கு அடியில் தோண்டுவது என்பது எளிதான செயலல்ல. இந்த சுரங்கத்திற்குள் ஐம்பதாயிரம் டன் எடையுள்ள காந்த சக்தியுள்ள இரும்பு தகடுகளை நெருக்கமாக அடுக்கி நியூட்ரினோ கண்டறிய திட்டமிட்டிருக்கின்றனர்.

உலகெங்கும் இவ்வளவு சிரமப்பட்டு நியூட்ரினோவை ஆராய்ச்சி செய்கிறார்களே அதனால் அப்படி என்ன பயன் என்ற கேள்வி நமக்கு தோன்றாமல் இல்லை. புவிக்கு வரும் பெரும்பாலான நியூட்ரினோக்கள் சூரியனில் இருந்து வருகின்றன என்று கண்டறிந்து இருக்கிறார்கள். ஆகவே இந்த நியூட்ரினோக்களை ஆராய்ந்தால் சூரியனின் உள் நடக்கும் வினைகளை அறிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. இதன் மூலம் சூரியனைப் பற்றி நாம் கொண்டிருக்கும் ஆராய்ச்சி கருத்துக்களை சரிபார்த்துக் கொள்ள இயலும். நியூட்ரினோக்கள் மூலம் சூரியன் மட்டுமல்லாது தொலை தூரத்தில் இருக்கும் பல விண்மீன்களைப் பற்றியும் அறிந்து கொள்ள இயலும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இதுவரை விண்வெளியை தொலைநோக்கிகள் மூலம் பார்த்து தான் ஆராய்ந்து வருகிறார்கள். நியூட்ரினோ ஆராய்ச்சிகள் மூலம் விண்வெளியைப் பார்ப்பது அதை விட பலமடங்கு தகவல்களை தரும் என்று எதிர்பார்க்கிறார்கள். உதாரணத்திற்கு நிழற்படத்தைப் பார்ப்பதற்கும் எக்ஸ்க்ரே எடுத்து பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்று இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். நியூட்ரினோக்கள் எளிதாக புவியில் ஒரு புறம் நுழைந்து மறு புறம் வெளியேறுவதால் புவியைப் பிளந்து பார்ப்பதைப் போன்று எளிதாக புவியின் மையப்பகுதியை ஆராய முடியலாம் என்றும் நம்புகிறார்கள்.

இந்த ஆராய்ச்சிகள் மூலம் நியூட்ரினோக்களை புரிந்துகொண்ட பின்னர் தான் அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று அதன் பல பயன்களைக் கண்டறிய முடியுமாம். ஆம் அதுவும் சரிதான். 1897-இல் ஜே.ஜே.தாம்சன் எலெக்ட்ரான் துகளைக் கண்டறிந்த போது, அந்த எலெக்ட்ரான் துகள்களால் தான் இன்று நாங்கள் எழுதிய கட்டுரையை நீங்கள் உங்கள் கணினியில் வாசித்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள் என்பதை யாரும் அன்று அறிந்திருந்தார்களா என்ன? அது போன்று ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் நியூட்ரினோவை பயன்படுத்தி ஒளி வேகத்தில் ஓடும் வாகனத்தைக் கண்டறியலாம் அல்லது ஊழல் செய்யாத அரசியல்வாதியைக் கூட கண்டறியலாம்.

இதற்கு முன்பு இந்த நியூட்ரினோ ஆராய்ச்சி மையத்தை, நீலகிரி மாவட்டம் மசினகுடி பைக்காரா மின் உற்பத்தி நிலையம் செயல்படும் சிங்காரா மலைக்கு அருகில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்து பின்னர் சுற்றுப்புறச் சூழல், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் திட்டத்தைக் கைவிட்டது. அப்போதே இதுபற்றி சுற்றுப்புறச் சூழல் ஆர்வலரும் எழுத்தாளருமான கடற்கரய் கூறியதாவது:-

சிங்காரா மலைக்கு அருகில் நியூட்ரினோ சுரங்கத்தை இரண்டு கிலோ மீட்டர் மலையைக் குடைந்து உருவாக்கப்போகிறார்கள். நியூட்ரினோ சுரங்கம் இங்கு வந்துவிட்டால் இப்பகுதி ராணுவத்தின் கட்டுப்பாட்டில் சேர்க்கப்பட்டுவிடும். ஏற்கனவே மின் பற்றாக்குறையால் அவதிப்படும் தமிழகம், பைக்காராவை இழக்க நேரலாம். நல்லவேளை தமிழக அரசு இத்திட்டத்திற்கு அனுமதி தரவில்லை. வனத்துறையும் கடுமையாக எதிர்க்கிறது. இந்தியாவில் முதல்முறையாக 1965இல் கோலார் தங்கச் சுரங்கத்தில்தான் நியூட்ரினோ ஆய்வுச் சுரங்கம் அமைக்கப்பட்டது. அதைப் புதுப்பிக்காமல் விட்டுவிட்டு ஆரோக்கியமான மலையைக் குடைந்து நிறுவ வேண்டுமா என்பது சுற்றுச்சூழல்வாதிகளின் நயமான கேள்வி. உலக அளவில் பாதுகாக்கப்பட்ட முல்லை, குறிஞ்சி காடுகளில் முதுமலை மிக முக்கியமான காடு என்பது ஊரறிந்த தகவல். ஆசிய அளவில் அதிகப்படியான யானைகள் முதுமலையில்தான் உள்ளன. ஆசிய அளவில் தலைசிறந்த யானை ஆய்வாளர்கள் தமிழ் நாட்டில்தான் உள்ளனர். அவர்கள் எல்லோரும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியே தங்களின் ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள்.

யானைகளை அழித்துவிட்டு ஆய்வு செய்தால் அதற்குப் பெயர் ஆய்வல்ல, அகழ்வாராய்ச்சி. டினோசர்களைப் போல யானைகளும் முன்பொரு காலத்தில் இங்கு வாழ்ந்தன என்று பாடத்திட்டத்தில் நம் பிள்ளைகளுக்குப் பின் நாளில் நாம் பாடம் நடத்தலாம். அந்தக் கொடுமையை அரங்கேற்றிவிட்டுத்தான் நம் விஞ்ஞானிகள் ஓய்வார்கள் போல. விஞ்ஞானியும் முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல் கலாம் அய்யாவோ தன் கனவுத் திட்டமான நியூட்ரினோ மட்டும் நிறைவேற்றப்பட்டால் உலக அரங்கில் நம் நாட்டில் அறிவியல் கொம்பு பெரியதாகிவிடும் என்கிறார். நமது விஞ்ஞானிகள் உலகம் முழுதும் இயற்கை வளங்களை மீட்டெடுக்க திரும்பிக் கொண்டிருக்கிற காலத்தில் மலையைச் சிதைத்து இயற்கையை அழித்து அறிவியல் வளர்க்கலாம் என்கிறார்கள்.

இந்த மலையைக் குடைந்தால் வரக்கூடிய கழிவுகள் அப்பகுதியின் சுற்றுச் சூழலையே நாசப்படுத்திவிடும். மலைக்குள்ளே கட்டவுள்ள ஆராய்ச்சிக் கூடத்திற்கு மொத்தம் ஒரு லட்சம் டன் இரும்புப் பொருட்கள் தேவைப்படும் என்று கணக்கிட்டிருக்கிறார்கள். இதைத் தவிர சிமென்ட், அலுமினியம், மணல் இன்னபிற பொருட்கள் என்று முப்பத்து ஐயாயிரம் டன் பொருட்கள் தேவைப்படும் என்கிறார்கள். எட்டு டன் ஏற்றக்கூடிய வாகனத்தைப் பயன்படுத்தினால், 17 ஆயிரம் வாகன லோடுகள் தேவை. இவர்களின் கணக்கில் பார்த்தால் மொத்தம் 6,30,000 டன் வருகிறது. அப்படி என்றால் தினசரி வேலைகளுக்காக 50 வாகனங்கள் 50 முறை வந்துசெல்ல வேண்டும். இதில் மலையைக் குடைவதால் கிடைக்கக் கூடிய கழிவை கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை. அதையும் சேர்த்தால் காடே காணாமல் போவது உறுதி. தினமும் வந்துபோகிற வாகனத்தில் அடிபட்டு அத்தனை விலங்குகளும் சாக வேண்டியதுதான்.

நம்மால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உருவாக்கவே முடியாத 5000 அடி சதுர கிலோ மீட்டர் உள்ள முதுமலைக் காட்டை ஒழித்துவிட்டு வெறும் ஆராய்ச்சிக் கூடத்தை வைத்துக்கொண்டு வழிக்க வேண்டியதுதான். அதுதானே வளர்ச்சி. 1990 களில் உறுதிசெய்யப்பட்ட இத்திட்டத்தை இப்போதுதான் மக்களின் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் தனி நபர்கள் நுழைவதற்கே ஆயிரம் கெடுபிடிகள் உள்ளபோது இப்படியொரு ஆய்வை மேற்கொள்ள மத்திய அரசு எப்படி அனுமதித்தது என்பதே சுற்றுச் சூழல் ஆர்வலர்களின் கேள்வி.

(‘அணிநிழற் காடுகள்’ எனும் நூலில் இருந்து இப்பகுதி கடற்கரய் அவர்களின் அனுமதியுடன் எடுக்கப்பட்டது. கடற்கரய் அவர்களுக்கு நன்றி)

இவ்வாறு கடற்கரய் கூறுகிறார். இப்போது தேனி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆராய்ச்சியை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மேலே சொன்ன பாதகங்கள் அனைத்தும் தேனி மலைப் பகுதியில் ஏற்படாதா? வன விலங்குகள் செத்து மடியாதா? பசுமையான மரங்கள் எல்லாம் நச்சு காற்றால் அழியாதா? அழியும். இவை எல்லாம் தெரிந்திருந்தும் நடுவண் அரசு தேனியில் நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடத்தை அமைத்தால் கடும் எதிர்ப்புகளை சந்ததிக்க நேரிடும். கண்ணை விற்று சித்திரம் வாங்கி என்ன பயன்? இயற்கை வளத்தை அழித்து நியூட்ரினோ ஆராய்ச்சி தேவையா?


சாகுல் அமீது

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “கண்ணை விற்று சித்திரமா? நியூட்ரினோ ஆராய்ச்சி X சுற்றுச்சூழல்- மீள்பதிவு”
  1. ஆதி says:

    மிக அருமையான கட்டுரை,நன்றி,எமது எதிர்ப்பை பதிவு செய்கிறேன்….

    ஆதி – தேனி

  2. chandrasekar says:

    Very interesting news to me!!!!!!!! we are awaiting this kind of news..continue your job

  3. சரவணகுமார் முத்துசாமி says:

    மிக அருமையான அறிவியல் உண்மைகளை, அனைவரும் புரிந்துகொள்ளும்படி எளிய தமிழில் கொடுத்துள்ளீர்கள்.
    இணைத்துள்ள படங்களும் அருமை.
    மிக்க நன்றி.
    கட்டுரையாளரின் பெயர் என்ன…? ஏன் குறிப்பிடவில்லை….? அவருக்கு ஏன் பாராட்டுக்களும், நன்றிகளும்….

    ”சிறகின்” அனுமதியுடன் என்னுடைய முகநூல் சுவரில் பதிகிறேன்.

அதிகம் படித்தது