மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியாவில் சிறுத்தைப் புலிகளின் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டு வருகின்றதா?

சா.சின்னதுரை

Jun 13, 2015

siruththaip puligal1புலிகளின் பாதுகாப்புக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், சிறுத்தைகளுக்கு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது!

மனிதன் மற்றும் வனவிலங்குகளுக்கு இடையேயான மோதல்களில் யானைக்கு அடுத்தபடியாக அதிகம் இருப்பது சிறுத்தைகள் தான். சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN) சிறுத்தைகளை அச்சுறு நிலையை அண்மித்த இனமாக (Near Threatened) வகைப்படுத்தியுள்ளதால்,  இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட விலங்காக சிறுத்தை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை வேட்டையாடுவதோ அதன் உடல் உறுப்புகளை வாங்கி விற்பதோ தண்டனைக்குரிய குற்றம்.  ஆனால், இந்தியாவில் வாரத்திற்கு நான்கு சிறுத்தைகள் வேட்டையாடப்படுவதாக வன விலங்குகள் தொடர்புடைய வர்த்தகத்தை கண்காணிக்கும் TRAFFIC என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

siruththaip puligal2வனவிலங்கு வேட்டைக் குற்றங்களை கண்காணிக்கும், Wildlife Protection Society of India (WPSI) என்ற அமைப்பு ஆண்டுவாரியாக வெளியிட்டுள்ள கொல்லப்பட்ட சிறுத்தைகளின் எண்ணிக்கை:

ஆண்டு கொல்லப்பட்ட சிறுத்தைகளின் எண்ணிக்கை
2004 123
2005 200
2006 165
2007 126
2008 157
2009 161
2010 180
2011 187
2012 137
2013 110
2014 116

கடந்த பத்து ஆண்டுகளில் 424 புலிகள் கொல்லப்பட்டுள்ளன. ஆனால் சிறுத்தைகளோ, 1662 எண்ணம் கொல்லப்பட்டுள்ள. சிறுத்தையின் தோல் காட்சிப் பொருள் மற்றும் ஆடை அணிகலன்களுக்காகவும், சிறுத்தையின் மற்ற உடற்பாகங்கள் மருந்துப்பொருட்களுக்காகவும் வேட்டையாடப்பட்டு வெளிநாடுகளில் சட்டவிரோதமாக விற்கப்படுகிறது.

siruththaippuli2இந்தியாவில் புலிகளைப் பாதுகாக்க, ‘புலிகள் பாதுகாப்புத் திட்டம்’ (Project Tiger) அமல்படுத்தப்பட்டு, அதற்காக ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதால், புலி வேட்டைக்காரர்களின் கவனம் தற்போது சிறுத்தைகளின் பக்கம் திரும்பியுள்ளது. அதுமட்டுமின்றி, புலிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால் அதனை கண்டறிந்து வேட்டையாடுவது சவாலான ஒன்று. மேலும், பலம் பொருந்திய புலிகளை வேட்டையாடுவது சவாலானது என்பதால், வலிமை குறைந்த சிறுத்தைகளை பிடிப்பது வேட்டைக்காரர்களுக்கு சுலபமான ஒன்றாக தெரிகிறது. எனினும் சிறுத்தைகள் அழிந்துவர வேட்டையாடுதல் மட்டும் காரணமல்ல, சுருங்கி வரும் வனப்பரப்பும், சிறுத்தைகள் பாதுகாப்பை அரசு புறக்கணிப்பதும் தான்.

பெருகி வரும் மனித இனத்தின் அடர்த்தி, இயற்கையின் பல்வேறு சமநிலையைப் பாதிப்படையச் செய்துவிட்டது. அப்படியான ஒரு சமநிலைப் பாதிப்புத் தான், இப்போது அடிக்கடி செய்திகளில் வரும், கால்நடைகளை கடித்துக் குதறிய சிறுத்தை, ஊருக்குள் புகுந்த சிறுத்தை.

காடுகள் அழிக்கப்படுவது, சிறுத்தைகளின் முக்கிய உணவான மான், முயல், காட்டுப்பன்றி போன்ற விலங்குகளை வேட்டையாடப்படுவது போன்ற காரணங்களால் சிறுத்தைகளுக்கு இரைப் பற்றாக்குறை உண்டாகிறது. சிறுத்தைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து நாய், ஆடு, கோழி போன்ற கால்நடைகளை வேட்டையாடுவது, வனப்பகுதியில் சிறுத்தைக்கு தேவையான போதிய இரை இல்லாததேயே காட்டுகிறது.

மேலும், மனிதனுக்கும் சிறுத்தைகளுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் காரணமாகவும் அவை கொல்லப்படுகின்றன. மனிதர்களுடான மோதலில் சிக்கி இன்றைக்கு பல இடங்களில் கூண்டு வைத்து பிடிக்கப்படும் விலங்குகளில் சிறுத்தை முதலிடம் வைக்கிறது. சிறுத்தைகளின் வாழிடங்களை ஆக்கிரமிப்பு செய்து, அங்கே தோட்டங்களை உருவாக்குவதும், கால்நடைகளை வளர்ப்பதும் தான் மனிதர்களுக்கும் சிறுத்தைகளுக்கும் மோதல் ஏற்பட முக்கியக் காரணம். காடுகளின் புறப்பகுதிகளில் இருக்கும் கிராம மக்களின் கால்நடைகளுக்கு சிறுத்தைகள் பெரிய அளவில் அச்சுறுத்தல் அளிப்பதால், சில சமயங்களில் சிறுத்தைகள் நச்சு வைத்துக் கொல்லபட்ட சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன.

சிறுத்தைகள் பாதுகாப்பு தொடர்பான விடயத்தில் அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்பதே உண்மை. இந்தியாவில் சிறுத்தைகளுக்கு ஏற்பட்டுள்ள அபாயம் முழுமையாக உணரப்படவில்லை என்றும் சிறுத்தைகளின் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டி வருகிறது, ‘இயற்கைக்கான உலகளாவிய நிதியம்’ (World Wide Fund for Nature -WWF).

புலிகளின் பாதுகாப்புக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் சிறுத்தைகளுக்கு வழங்கப்படுவதில்லை. சிறுத்தைகளுக்கு என்று தனியாக கணக்கெடுப்பு கிடையாது. புலிகள் கணக்கெடுப்பின் போது சிறுத்தை உட்பட மற்ற வன உயிரினங்களையும் ஒப்புக்கு சப்பாக கணக்கீடப்படுகின்றன. இதனால் சிறுத்தைகள் எண்ணிக்கை தொடர்பான தகவல்களை துல்லியமாகக் கூறமுடியாத நிலை உள்ளது.

புலிகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் போன்று, சிறுத்தைகளுக்கு வழங்காவிட்டால், புலிகளை போன்றே சிறுத்தைகளின் எண்ணிக்கையும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு குறைந்துபோகும் ஆபத்து இப்போது நேர்ந்துள்ளது. அரசியல் சாசனத்தின்படி ஒரு மாநில அரசு, தனது மாநிலத்தில் வசிக்கும் மக்களை மட்டுமல்லாது விலங்குகளையும் பாதுகாக்க வேண்டும். வாழ்வதற்கு மனிதனுக்கு அளிக்கப்பட்டுள்ள அத்தனை உரிமைகளும் விலங்களுக்கும் இருக்கின்றன என்பதை நம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

அரசு செய்யவேண்டியது என்ன?

siruththaippuli

* நாட்டில் எத்தனை சிறுத்தைகள் இருக்கின்றன என்பது குறித்த கண்கெடுப்பு ஏதும் இதுவரை நடத்தப்படவில்லை. எனவே புலிகள் கணக்கெடுப்பை போன்று சிறுத்தைகளுக்கும் தனியாக கணக்கெடுப்பு நடத்தி, அதன் எண்ணிக்கையையும், தேவைகளையும், வாழ்வாதாரங்களையும் ஆராய வேண்டும்.
* சிறுத்தைகள் நடமாடும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு சிறுத்தைகளின் முக்கியத்துவத்தை விளக்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். மனிதன் – சிறுத்தை இடையேயான மோதல்கள் மற்றும் சந்திப்புகள் முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டும்.
* சிறுத்தைகள் நடமாடும் பகுதிகளில் கால்நடைகள் மற்றும் கோழிகள் இருப்பின் இரவில் அவற்றை, பாதுகாப்பான மூடிய கொட்டகைக்குள் வைத்து அடைக்க வேண்டும். நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் வைத்திருப்பதை கூடுமானவரை தவிர்க்கலாம்.
* ஊடகங்கள் சிறுத்தைகள் மக்களை கொல்ல வந்த கொடிய மிருகமாக சித்தரித்து மிகைப்படுத்தாமல்,  அறிவியல் பார்வையுடன் செய்தி வெளியிடவேண்டும். ‘சிறுத்தை அட்டகாசம்’ என்பது மாதிரியான செய்திகள் சிறுத்தைகள் மீது மக்களிடையே எதிர்மறை எண்ணங்களையே ஏற்படுத்தும்.
* சிறுத்தையின் முக்கிய இரையான மான், காட்டுப்பன்றி, முயல், குரங்கு போன்ற சிறு, நடுத்தர விலங்குகளை பாதுகாத்து, உணவுச் சங்கிலியை சமன்நிலைக்கு கொண்டுவரவேண்டும்.
அரசு செய்யுமா?


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியாவில் சிறுத்தைப் புலிகளின் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டு வருகின்றதா?”

அதிகம் படித்தது