மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்நாட்டில் ஒர் உலக அதிசய மாணவி..

சா.சின்னதுரை

Jul 11, 2015

tamilnaattil ulaga adhisaya maanavi2சாதாரண மனிதர்களுக்கு நுண்ணறிவுத் திறன் அளவு (Intelligence Quotient) 90லிருந்து 110 வரை இருக்கும். மன வளர்ச்சி குன்றியோருக்கு 90-க்கு குறைவாக இருக்கும். அதிக பட்சமாக பாப் பாடகி மடோனாவுக்கு 140, மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் பில்கேட்ஸுக்கு 160, தத்துவ மேதை பேகன்க்கு 200, இஸ்ரேல் நாட்டு முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெடன்யஹுக்கு 180, தென்கொரியாவின் கிம் யூங் யங்குக்கு (Kim Ung Yung) 210 ஐகியூ லெவல் உள்ளது. ஆனால் திருநெல்வேலியைச் சேர்ந்த 12 வயது மாணவி விசாலினியின் IQ 225. இதன் மூலம் விசாலினி, உலகிலேயே அதிகளவு நுண்ணறிவுத் திறன் (The Highest IQ in the World) என்ற சிறப்பினைப் பெற்றவர் ஆகிறார்.

விசாலினியின் இந்த நுண்ணறிவு திறன் சாதனை, கின்னஸ் சாதனைக்கு தகுதி உடையது ஆகும். ஆனால் கின்னஸ்சில் இடம் பெறுவதற்கு 14 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். விசாலினிக்கு தற்போது, 12 வயது தான் என்பதால் இன்னும் இரண்டாண்டுகள் காத்திருக்க வேண்டும். இனி விசாலினி மற்றும் அவரது தாயார் திருமதி. சேதுராகமாலிகா அவர்களுடன் ஒரு நேர்க்காணல்..

உங்களைப்பற்றி

விசாலினி: நான் பாளையங்கோட்டையில் உள்ள ஐ.ஐ.பி.இ., லட்சுமி ராமன் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். அப்பா கல்யாண குமாரசாமி, எலெக்ட்ரிகல் காண்டிராக்டர்; அம்மா சேதுராகமாலிகா, அகில இந்திய வானொலி நிலையத்தில் அறிவிப்பாளாராக இருந்தவர். எனக்கு IQ 225 இருப்பது தெரிய வந்ததும் என்னை கவனிப்பதற்காக அம்மா அவ்வேலையை ராஜினாமா செய்து விட்டார்.

உங்களின் பெற்றோரின் பங்களிப்பு:

tamilnaattil ulaga adhisaya maanavi1விசாலினி: என் பெற்றோர் கொடுத்த ஊக்கத்தால்தான் சிறு வயதிலிருந்தே ஞாபக சக்தியை வளர்த்துக் கொண்டேன். எந்த ஒரு சிறிய விஷயத்தையும் நுணுக்கமாக சிந்தித்து செயல்படுவேன். எனக்குப் புரியாத விடயங்களை ஏன், எப்படி என யாரிடமும் தயங்கமால் உடனே கேட்டு தெளிவு பெறுவேன். தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்வதில் எனக்கு தனி ஆர்வமுண்டு.

என்னென்ன சாதனைகள் படைத்திருக்கிறீர்கள்?

விசாலினி: அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சிஸ்கோ, சர்வதேச அளவில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பிற்காக, சி.சி.என்.ஏ., (CISCO Certified Network Associate) மற்றும் சி.சி.என்.பி., (CISCO Certified Network Professional) தேர்வுகளை நடத்தி வருகிறது. இத்தேர்வுகளை நான் பத்து வயதிலேயே எழுதி வெற்றி பெற்றிருக்கிறேன். இதற்காக சிஸ்கோ நிறுவனம் எனக்கு The Youngest CCNA World Record Holder என்ற சான்றிதழ் வழங்கியுள்ளது.

(இத்தேர்வில் பாகிஸ்தானில் உள்ள 12 வயது மாணவர் இரிடிசா ஹைதரின் (Irtiza Hider) சாதனையை விசாலினி பத்து வயதில் முறியடித்துள்ளார்.)

பிரிட்டிஷ் கவுன்சில், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியாவின் ஐ.டி.பி., மற்றும் இ.எஸ்.ஓ.பி., (Employee Stock Ownership Plan) தேர்வு மையங்கள் இணைந்து உலக அளவில் நடத்தும், IELTS (International English Language Testing System) தேர்வை, 11 வயதில் எழுதி வெற்றி பெற்றுள்ளேன். இதன் மூலம் நான் The Youngest IELTS in the World என்ற சாதனையும் படைத்துள்ளேன். (இத்தேர்வில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த, 12 வயது மாணவி சிடாரா அக்பரின் சாதனையை விசாலினி, 11 வயதில் முறியடித்துள்ளார்.)

நெதர்லாந்து நாட்டின் பிரபல நிறுவனம் EXIN நடத்திய Cloud Computing தேர்வில் 1,000க்கு 1,000 மதிப்பெண் பெற்றிருக்கின்றேன். மேலும் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் MCP (Microsoft Certified Professional), ORACLE நிறுவனத்தின் OCNP (Oracle Certified Network Professional) சிஸ்கோ நிறுவனத்தின் சி.சி.என்.ஏ. செக்யூரிட்டி போன்ற சர்வதேச சான்றிதழ்களையும் பெற்றிருக்கின்றேன்.

சென்னை, பெங்களூர், போபால், திருநெல்வேலி போன்ற பல இடங்களில் நடந்த ஏழு சர்வதேச கருத்தரங்களில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கின்றேன். சமீபத்தில் இலண்டனில் உள்ள ஒரு நிறுவனம் சர்வதேச கருத்தரங்கத்தில் தலைமை விருந்தினராக கலந்துகொள்ள அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் கலந்துகொள்ள இயலவில்லை. தமிழகத்தின் பல்வேறு பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நெட்வொர்க்கிங் சம்பந்தமாக பாடமும் நடத்தி வருகிறேன்.

எனது அறிவாற்றலைக் கண்ட பள்ளி நிர்வாகம் இரண்டு முறை ‘டபுள் புரமோஷன்’ கொடுத்துள்ளது.

எதிர்கால லட்சியம்:

விசாலினி: தற்போது, சிஸ்கோ மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகளுக்கு படித்து வருகிறேன். சொந்தமாக நெட்வொர்க்கிங் நிறுவனம் தொடங்கி CEO ஆவதே என் இலட்சியம்.

விசாலினியின் பிறப்பு பற்றி..

tamilnaattil ulaga adhisaya maanavi3சேதுராகமாலிகா: மே 23, 2000 அன்று எனக்கு குறைப்பிரசவத்தில் தான் விசாலினி பிறந்தாள். அப்போது அவளின் உடல்நிலை மோசமாக இருந்ததால் டாக்டர்கள் இன்குபேட்டரில் வைத்து கவனித்தனர். மருத்துவ சிகிச்சையால் உயிர் பிழைத்து வந்த விசாலினிக்கு சோதனை அதோடு முடிந்துவிடவில்லை. குழந்தையால் பேச முடியாது என டாக்டர்கள் அடுத்த குண்டை தூக்கிப் போட்டனர். நானும் எனது கணவரும் மிகவும் சோர்வடைந்து விட்டோம். பிறகு அறுவை சிகிச்சை செய்து அக்குறைப்பாடு சரிசெய்யப்பட்டு விட்டது. அன்று மருத்துவமனையில் சோதனை மேல் சோதனை சந்தித்த விசாலினி தான் இன்று உலக அரங்கில் சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறாள்.

விசாலினியின் நுண்ணறிவுத் திறனை எப்படி கண்டுபிடித்தீர்கள்?

சேதுராகமாலிகா: குழந்தைகள் நலச்சிறப்பு மருத்துவர் ராஜேஸ், மதுரை உளவியல் மருத்துவர் நம்மாழ்வார் ஆகியோர் தான் விசாலினி மற்றவர்களிடமிருந்து நுண்ணறிவுத் திறனில் மேம்பட்டவள் என கண்டுபிடித்தார்கள். Binet-Kamat என்ற நுண்ணறிவு திறன் சோதனை மூலம் பரிசோதித்தபோது IQ 225இருப்பது தெரியவந்தது. இது அசாதாரணமானது என்பதால் எனக்கு பிடித்தமான வானொலி அறிவிப்பாளர் பணியையும் விட்டுவிட்டு அவளை கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

அரசுத் தரப்பில் உதவிகள் கிடைக்கின்றனவா?

சேதுராகமாலிகா: திருப்திகரமான உதவிகள் கிடைக்கப்பெறவில்லை. நாங்கள் நடுத்தர குடும்பம் என்பதால், என் மகள் மேலும் மேலும் படித்து சாதனை படைப்பதற்கு போதிய உதவியை, உரிய நேரத்தில் செய்யமுடியாமல் சிரமப்படும் நிலை உள்ளது. ஒரு தேர்வுக்கு மட்டும் பயிற்சிக் கட்டணம் மற்றும் தேர்வு கட்டணம் சேர்ந்து பல இலட்ச ரூபாய் செலவாகிறது.

அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

சேதுராகமாலிகா: எனது மகள் உலகிலேயே அதிகளவு நுண்ணறிவுத் திறன் உடையவள் என்கிற சாதனைப் படைத்திருக்கிறாள். அதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் மற்றும் ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. ஆனால் அரசாங்க தரப்பில் எனது மகள் விசாலினியை அழைத்து பாராட்டவில்லை. அவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.

பாகிஸ்தானைச் சேர்ந்த இரிடிசா ஹைதர் என்கிற என்கிற 12 வயது சிறுவன், CCNA தேர்வில் வெற்றி பெற்றதும், அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஹைதரை ‘பாகிஸ்தானின் பெருமை’ (PRIDE OF PAKISTHAN) என்று ராணுவ இணையதளத்தில் பெருமைப்படுத்தியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவனின் கல்விச் செலவு, சர்வதேச தேர்வுகளுக்கான செலவு அனைத்தையும் அந்நாட்டு அரசே ஏற்கிறது. அந்தச் சாதனையை 10 வயதில் முறியடித்துள்ள என் மகள் விசாலினியை மத்திய அரசு, ‘இந்தியாவின் பெருமை’ என்று அங்கீகரிக்க வேண்டும் அல்லது நம் மாநில அரசாவது ‘தமிழ் நாட்டின் பெருமை’ என்று அங்கீகரிக்க வேண்டும்.

CCNA தேர்வுக்காக இல்லாவிட்டாலும் நுண்ணறிவு திறன் சாதனைக்காகக் கூட விசாலினியை மத்திய, மாநில அரசுகள் கெளரவப்படுத்தலாமே? அவ்வாறு அரசாங்கம் என் மகளை ஊக்கப்படுத்தி வழிநடத்தினால் இந்தியாவிற்கு இன்னும் பல பெருமைகள் சேர்ப்பாள்.

விசாலினியை தொடர்புகொள்ள: goldengirlvisalini@gmail.com


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்நாட்டில் ஒர் உலக அதிசய மாணவி..”

அதிகம் படித்தது