மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குறுகிய காலத்தில் காய்ப்புக்கு வரும் புது ரக எலுமிச்சையை உருவாக்கி சாதனை படைத்துள்ளார் தமிழக விவசாயி அந்தோணிசாமி!

சா.சின்னதுரை

Jul 25, 2015

pudhu raga elumichchai2நெல்லை மாவட்டம் புளியங்குடி, எலுமிச்சை சாகுபடிக்கும் பழங்களுக்கும் பெயர் பெற்றது. ‘லெமன் சிட்டி’ என அழைக்கப்படும் இப்பகுதியில் உற்பத்தியாகும் எலுமிச்சை பழங்களில் சிட்ரிக் அமிலத்தின் தன்மை அதிகமாக இருப்பதால் வியாபாரிகள் இதனை கூடுதல் விலைக்கு வாங்குவது வழக்கம். இவை தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்திலேயே எலுமிச்சைக்கு என்று பிரத்யேகமான தினசரி சந்தை இங்கு மட்டுமே உள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இப்பகுதியில் எலுமிச்சை சாகுபடி செய்துவரும் அந்தோணிசாமி, இரண்டே ஆண்டில் காய்ப்புக்கு வரும் புது ரக எலுமிச்சையை உருவாக்கியுள்ளார். பொதுவாக எலுமிச்சை செடிகள் காய்ப்புக்கு வர 5 முதல் 6 ஆண்டுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்புது ரக எலுமிச்சைக்காக, 2004-இல் அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள், அந்தோணிசாமிக்கு ‘சிருஷ்டி சல்மான்’ விருது கொடுத்து பாராட்டியுள்ளார். அந்தோணிசாமியுடன் ஒரு நேர்க்காணல்:

இந்த யோசனை எப்படி வந்தது?

”நான் 50 வருடங்களாக எலுமிச்சை சாகுபடி செய்து வருகிறேன். என்னுடைய அனுபவத்தில் நிறைய எலுமிச்சை ரகங்கள் வறட்சியைத் தாக்குப் பிடிக்க முடியாமலும், எளிதில் பட்டுப் போகிறதாகவும் இருந்ததால் கடும் நஷ்டமும், மன உளைச்சலும் அடைந்தேன். அதற்கு தீர்வு காண நானே ஒரு புது எலுமிச்சை ரகத்தை உருவாக்க முடிவெடுத்தேன்.

எப்படி உருவாக்கினீர்கள்?

அதிக நீர்ப்பாசனமும், பூச்சி மருந்துகளும் தேவைப்படாத நாட்டு எலுமிச்சையை தாய்ச் செடியாகக் கொண்டு ஒட்டுக் கட்டினேன். பின்பு, ஒட்டுக் கட்டிய செடியிலிருந்து சிறந்த விளைச்சல் தரும் ஒரு செடியை எடுத்து மீண்டும் ஒட்டுக்கட்டினேன். இப்படி மறுபடியும், மறுபடியும் ஒட்டுக்கட்டி ஒரு ரகத்தை உருவாக்கினேன். இந்த ரகம் 4 தலைமுறை செடிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். இது கிட்டத்தட்ட என்னுடைய 15 ஆண்டு கால உழைப்பு.

நீங்கள் உருவாக்கிய இந்த எலுமிச்சை ரகத்தின் சிறப்பம்சங்கள்?

pudhu raga elumichchai1இந்த ரக எலுமிச்சையில் 2 ஆண்டுகளில் காய்ப்பு துவங்கிவிடும். மற்ற ரகங்கள் காய்ப்புக்கு வர 5 முதல் 6 ஆண்டுகளாகும். பொதுவாக எலுமிச்சை ஆடி, தை என 2 மாதங்களில் தான் காய்ப்பு இருக்கும். ஆனால், இந்த புது ரகத்தில் அனைத்து மாதங்களிலும் காய்கள் பறிக்கலாம். 6 வருடங்களில் காய்ப்பிடிப்பு உச்சக்கட்டத்தை அடையும். அதாவது ஒரு கன்றிலிருந்து ஆண்டொன்றுக்கு 6,000 முதல் 7,000 காய்கள் பறிக்க முடியும். இந்த காய்ப்பிடிப்புத் திறன் 7 ஆண்டுகள் வரை தொடரும். அதன் பிறகு காய்ப்பிடிப்புத் திறன் படிப்படியாக குறைந்துகொண்டே வரும். மற்ற ரகங்களைக் காட்டிலும், 50 சதவிகிதம் கூடுதல் மகசூல் தாராளமாகக் கிடைக்கும். மேலும் இதில் சிறப்பம்சமாக, ஒரு பக்கம் காய்ப்பிடிப்பு இருக்கும் போதே, இன்னொரு பக்கம் பூக்கள் மற்றும் பிஞ்சுகள் தோன்றிவிடும். காய்கள் கொத்துக்கொத்தாக, பெரிதாகக் காய்ப்பதால் பறிப்பதற்கு எளிதாகவும் இருக்கும்.

இந்நாள் வரையிலும் இப்புது ரக எலுமிச்சைக்கு நான் பெயர் எதுவும் வைக்கவில்லை. மாநிலம் முழுதும் அநேக விவசாயிகள் நான் கண்டுபிடித்த எலுமிச்சையை பயிரிட்டு நல்ல வருமானமும், மகசூலும் பெற்று வருகிறார்கள்.

இப்புதுரக எலுமிச்சை சாகுபடி முறைகள் என்னென்ன?

”எலுமிச்சைக்கு 20 அடி இடைவெளியில், 3 அடி ஆழ, அகல அளவில் குழிகள் தோண்ட வேண்டும். ஏக்கருக்கு 100 குழிகள் வரை தோண்டலாம். ஒவ்வொரு குழியிலும் 15 கிலோ திருகுக் கள்ளியை போட்டு, அதற்கு மேல் தலா 25 கிலோ கொழிஞ்சி, ஆவாரை ஆகியவற்றைப் போட வேண்டும். அதற்கு மேல் அடுத்த அடுக்காக, 25 கிலோ தொழு உரம் இட வேண்டும். அதற்கு மேல், 2 கிலோ வேப்ப முத்து, ஒரு கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைப் போட்டு, தோண்டி எடுத்த மண்ணைப் போட்டு மூடி, 4 மாதங்கள் வரை காய விட வேண்டும்.

நடவுக்கு முன்பு கவனமாக நாற்று வளர்க்கப்பட்டிருக்கும் பாலிதீன் பையைக் கிழித்து விட வேண்டும். பிறகு குழியின் நடுவில் ஒன்றரை அடி ஆழத்தில், எலுமிச்சை நாற்றை கோடைக் காலங்களில் நடவு செய்ய வேண்டும். மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து நீர்ப்பாய்ச்ச வேண்டும். அளவுக்கு அதிகமாகவோ, குறைவாகவோ தண்ணீர் பாய்ச்சக் கூடாது. சொட்டுநீர்ப் பாசனம் சிறந்தது.

நடவு செய்து ஒரு வாரம் வரை, செடியின் மூட்டைச் சுற்றி தினமும் காலால் மிதித்து விட வேண்டும். ஒவ்வொரு எலுமிச்சை கன்றுக்கு அடியிலும் வெங்காயம், கேந்தி, அகத்தி இவற்றில் ஏதாவது ஒரு செடியை வைப்பதன் மூலம் நோய்த்தாக்குதல்களைக் கட்டுப்படுத்தலாம். நடவு செய்த 40-ம் நாளில் தளிர் வரும். அந்த நேரத்தில் வண்ணத்துப்பூச்சிகள் தாக்குதல் வரலாம். அவை, எலுமிச்சை இலைகளை உண்ணக்கூடும். 10 லிட்டர் நீருக்கு 1 லிட்டர் பசு மாட்டுக் கோமியம் மற்றும் 100 மில்லி வேப்ப எண்ணெய் என்ற அளவில் கலந்து, தெளிப்பான் மூலமாகத் தெளித்தால் வண்ணத்துப்பூச்சி தாக்காது. தொடர்ந்து, 20 நாட்களுக்கு ஒருமுறை இப்படி பூச்சிவிரட்டி தயாரித்துத் தெளிக்க வேண்டும். அவ்வப்போது களையெடுத்துக்கொள்ள வேண்டும்.

6 மாதங்களுக்கு ஒரு முறை மரத்தின் மூட்டில் இருந்து ஒரு அடி தள்ளி, 20 கிலோ ஆட்டு எரு, ஒரு கிலோ வேப்ப முத்து, ஒரு கிலோ மண்புழு உரம் ஆகியவற்றைக் கலந்து இட வேண்டும். இதன் மூலம் நிலத்தில் நுண்ணுயிர்கள் பெருகி, செடிகள் ஆரோக்கியமாக வளர உதவும். இயற்கை விவசாய முறையை பின்பற்றினால் நான் கூறியதுபடி மகசூல் கிடைக்கும்.


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குறுகிய காலத்தில் காய்ப்புக்கு வரும் புது ரக எலுமிச்சையை உருவாக்கி சாதனை படைத்துள்ளார் தமிழக விவசாயி அந்தோணிசாமி!”

அதிகம் படித்தது