மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய ஜாதிக்காய் மரங்களை சமவெளிப் பகுதியில் விளைவித்து சாதனை படைத்துள்ள தமிழன்

சா.சின்னதுரை

Aug 22, 2015

jaadhikkaai2மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய ஜாதிக்காய் மரங்களை சமவெளிப் பகுதியில் விளைவித்து சாதனை படைத்துள்ளார் நெல்லை மாவட்டம் ஆயக்குடி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியராஜா. அவருடன் ஒரு நேர்க்காணல்:

ஜாதிக்காய் சாகுபடியின் சாதகமான வானிலை என்னென்ன?

சுப்பிரமணியராஜா: ஜாதிக்காய் மரங்கள் பசுமை மாறாத தாவர வகையைச் சார்ந்தது. அடர்ந்த இலைப் பரப்புகளைக் கொண்டு இருபது மீட்டர் உயரம் வரை வளரும் தன்மை உடையது. ஆண்டில் சராசரி மழை அளவு 150 செ.மீ. மற்றும் அதற்கு மேலாகக் கிடைக்கும் கதகதப்பான ஈரப்பதம் உள்ள சூழலில் மட்டுமே ஜாதிக்காய் மரம் நன்கு வளரும். கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் முதல் 1,000 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகள் இதற்கு ஏற்ற சூழ்நிலை ஆகும். தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள மலைப்பாங்கான பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

ஜாதிக்காய் மரங்களை சமவெளியில் வளர்ப்பது எப்படி சாத்தியமாகியது?

Jaadhikkaai1சுப்பிரமணியராஜா: எனது மதுரை நண்பர் ஒருவர் ஜாதிக்காய் மரம் ஒன்றை வீட்டில் வளர்த்து வருவதைக் கண்டேன். அது நல்ல காய்ப்பிடிப்புடன் விளைந்திருப்பதைக் கண்டு வியந்தேன். அப்படியென்றால் ஜாதிக்காய் எந்தச் சூழலிலும் வளரக்கூடியவையா என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஆய்க்குடி கிராமத்தில் உள்ள என்னுடைய விளைநிலத்தில் தென்னைக்கு ஊடுபயிராக ஜாதிக்காயை சாகுபடி செய்ய முடிவெடுத்தேன்.

‘’இது தேவையில்லாத வேலை. மழைக்காடுகளில் விளையக்கூடிய மரத்தை இப்படி பொட்டல் காடுகளில் பயிரிடுகிறாயே.. உனக்கு என்னாயிற்று’’ என பலர் ஏளனம் செய்தார்கள். ஆனால் எனது நம்பிக்கையும் ஆர்வமும் இதை கைவிடும்படியாக இல்லை. ஆரம்பத்தில் பயிரின் வளர்ச்சி மந்தமாகவே இருந்தது. போகப்போக அதுவாகவே இந்த வெப்பமான சூழலுக்கு தகவமைத்துக் கொண்டுவிட்டன.

ஜாதிக்காய் சாகுபடி குறிப்புகள் பற்றி?

சுப்பிரமணியராஜா:2 அடி நீள அகல ஆழத்தில், குழிகள் எடுத்து ஒவ்வொரு குழியிலும் 2 கிலோ சாணம், 100 கிராம் வேப்பம் புண்ணாக்கு இட்டு, 2 ஏக்கர் பரப்பளவில் கன்றுகளை நடவு செய்தேன். 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். பொட்டாசியம், யூரியா, வேப்பம் புண்ணாக்கு கலந்து வருடத்திற்கு மூன்று முறை உரமிட்டு வருகிறேன். மலைப்பகுதிகளில் பயிரிட்டிருந்தால் உரமிட அவசியமில்லை. அங்கு இயற்கை விவசாயமே போதுமானதாக இருக்கும். மூன்றரை வருடத்தில் மூன்று முதல் நான்கரை அடி உயரம் வரை வளர்ந்தது. 6 வருடத்தில் பூக்கத்துவங்கியது. விதைகள் மூலம் நடவு செய்யப்பட்ட ஜாதிக்காய் மரங்கள் ஏழாவது ஆண்டிலிருந்தும், ஒட்டுக்கன்றுகள் மூலம் நடவு செய்யப்பட்ட ஜாதிக்காய் மரங்கள் நான்காவது ஆண்டிலிருந்தும் மகசூல் தந்துக்கொண்டிருக்கின்றன.

ஜாதிக்காயில் ஆண் மரம், பெண்மரம் என தனித்தனியாகக் காணப்படும். இதை 6 வருடங்கழித்து, அவை பூக்கும் போதுதான் காண முடியும். இவற்றின் பூக்கள் இளமஞ்சள் நிறத்தில் மிகச் சிறியதாகக் காணப்படும். பெண் ஜாதிக்காய் மரங்களில் மட்டுமே காய் காய்க்கும். ஆண் மரங்கள் மகரந்தச் சேர்க்கைக்கு மட்டுமே பயன்படும். ஒரு ஜாதிக்காய் தோட்டம் ஐம்பதிற்கும் மேற்பட்ட பெண் மரங்களையும் ஓர் ஆண் மரத்தையும் உடையதாக இருக்கும்.

ஜாதிக்காய் மரங்களை சமவெளிப் பகுதிகளில் பயிரிட விரும்புவோர் தென்னைக்கு ஊடுபயிராக பயிரிட வேண்டும். ஏனெனில் ஜாதிக்காய் மரங்களுக்கு நிழற்பாங்கான சூழல் அவசியம்.

ஜாதிக்காயில் கிடைக்கும் லாபம் பற்றி?

jaadhikkaai3சுப்பிரமணியராஜா: தற்போது ஒரு ஜாதிக்காய் மரத்திலிருந்து மாதம் ஒன்றுக்கு 30 முதல் 40 காய்கள் வரை தருகிறது. மரம் வளர வளர அதிலிருந்து காய்களும் அதிகரிக்கும். இப்படியாக 50 வருடங்கள் வரை காய்த்து பலன் தரும். முழு வளர்ச்சியடைந்த ஜாதிக்காய் மரத்திலிருந்து ஆண்டுக்கு 1,000 முதல் 2,000 பழங்கள் வரை கிடைக்கும்.

ஆண்டுக்கு இரண்டு பருவங்களில் அறுவடை செய்கிறேன். விளைந்த ஜாதிக்காயில் வெடிப்புகள் தோன்றும். அதுதான் அறுவடைக்கான அறிகுறி. அறுவடை செய்யப்பட்ட ஜாதிக்காய்களை ஈரப்பதம் நன்கு குறையும் வரை காயவைக்க வேண்டும். பொதுவாக ஜாதிக்காய் சுமார் 6-8 வாரம் வரை காயவைக்கப்படுவது வழக்கம்.

காயவைக்கப்பட்ட ஜாதிப்பத்திரி கிலோ ரூ. 2,500, ஜாதிக்காய் கிலோ ரூ. 600, கொட்டைகள் கிலோ ரூ. 600, மேல் ஓடு ரூ. 15 என நேரடி விற்பனை செய்து வருகிறேன்.

ஜாதிக்காய் விளைபொருட்களுக்கு போதுமான அளவு சந்தை வாய்ப்புகள் உள்ளனவா?

சுப்பிரமணியராஜா: ஜாதிக்காய், ஒரு பணப்பயிர். இவற்றிலிருந்து பெறப்படும் ஜாதிப்பத்திரி, ஜாதிக்காய், மேல் ஓடு, பழக்கொட்டை ஒவ்வொன்றும் விலை மதிப்புமிக்கது. உலகம் முழுவதும் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன் ஜாதிக்காய்கள் தேவைப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. மூன்று ரகங்களாகப் பிரிக்கப்படும் ஜாதிக்காயின் முதல் ரகம் சமையல் தேவைகளுக்காகவும், மற்ற ரகங்கள் உணவைப் பாதுகாக்கும் பொருட்களைத் தயாரிக்கவும், அழகு சாதனப் பொருட்களை உண்டாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.

ஜாதிக்காயின் தேவை அதிகரித்துக்கொண்டே வருவதால் அதற்கு நல்ல சந்தை வாய்ப்புகள் உள்ளன. மாறி வரும் விவசாயத் தொழிலில் மாற்றுப்பயிர் பற்றி சிந்தித்து ஜாதிக்காய் போன்ற பயிர்களை சாகுபடி செய்தால் நிச்சயமாக நல்ல இலாபம் பெற முடியும்.


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மலைப்பகுதிகளில் மட்டுமே விளையக்கூடிய ஜாதிக்காய் மரங்களை சமவெளிப் பகுதியில் விளைவித்து சாதனை படைத்துள்ள தமிழன்”

அதிகம் படித்தது