மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அமெரிக்காவில் யோகா

தேமொழி

Aug 22, 2015

Finding peace by the watersஇந்திய அரசின் முயற்சியால், குறிப்பாக பிரதமர் மோதி ஐக்கிய நாடுகள் பொது சபையில் நிகழ்த்திய உரையின் அடிப்படையில் “அனைத்துலக யோகா நாளாக” ஆண்டுதோறும் ஜூன் 21 ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐ. நா. சபை அறிவித்துள்ளது. தொடர்ந்து, ஐயாயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுத்த இந்திய அரசு, ஜூன் 21, 2015 அன்று முதல் அனைத்துலக யோகா நாளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களது தலைமை டெல்லியில் கொண்டாடியது. இந்நிலையில் அமெரிக்காவில் யோகாவின் பரவலைப்பற்றிய ஆய்வறிக்கை ஒன்றும் சென்ற மாதம் வெளியானது.

yoga4டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட் (Dun & Bradstreet) என்ற அமெரிக்க வணிக சேவை நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான வணிகநிறுவனங்களைப் பற்றிய தரவுகளை சேகரித்து, அந்த நிறுவனங்களின் நிர்வாகத் தொடர்பு, நிதிநிலை போன்ற முக்கியமான தகவல்களை கட்டண அடிப்படையில் தேவையானோருக்கு வழங்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது. இந்த ‘டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட்’ நிறுவனம், அமெரிக்காவில் தொழில் நடத்திவரும் யோகா மற்றும் தியான நிறுவனங்களையும் (yoga and meditation centers); “குத்தூசி மருத்துவம்” என அழைக்கப்படும் சீனாவின் பாரம்பரிய மாற்றுமுறை மருத்துவ (ancient chinese acupuncture medical practice – alternative medicine) நிறுவனங்களையும் பற்றி ஆராய்ந்தது. ஒவ்வொரு அமெரிக்க நகரிலும் 10,000 பேருக்கு, இது போன்ற எத்தனை நிறுவனங்கள் சேவைபுரிகின்றன என்ற தகவலைக் கொண்டு “சென்டெக்ஸ்” (Zen-dex) என்ற குறியீட்டை உருவாக்கி, சீன நாட்டில் தோன்றிய மகாயான புத்தமதத்தின் பிரிவான ‘சென்’ பிரிவின் அடிப்படையில் அக்குறியீட்டிற்குப் பெயரிட்டுள்ளது.

yoga6இந்தியாவின் தியானமும் யோகாப் பயிற்சியும் புத்தமதத்தால் சீனாவிற்குப் போயிருந்தாலும், இப்பொழுது டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட் வழங்கிய குறியீட்டின் பெயரால் அது சீனாவின் மரபுச்செல்வமாக அறியப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர்கள் உருவாக்கிய இந்த சென் குறியீடு கொண்டு அமெரிக்க நகரங்களைத் தரவரிசைப்படுத்தி, தியானமும் மாற்றுமருத்துவ வசதிகளும் மக்களுக்கு எளிதாகக் கிடைக்கக் கூடிய நகர்களை “சென் நகர்கள்” (Zen Cities) என்று தேர்வு செய்து “அமெரிக்காவின் 50 சென் நகர்கள்”(The 50 most Zen Cities in America) என்ற அவர்களது ஆய்வறிக்கை பட்டியலிடுகிறது. மனநலம், உடல்நலம் பேணுதல் என்ற அடிப்படையில், தியானமும், யோகாவும்,குத்தூசி மருத்துவமும் மனஅழுத்தத்தை குறைத்திடும் மாற்று வழிகளாக அறியப்படுகின்றன. அத்துடன் இவை யோகாவும், குத்தூசி மருத்துவமும் அறிவியல் ஆய்வுகள் மூலம் மனஅழுத்தத்தை குறைப்பதாக அறியப்படுவதாலும் இந்த சென் குறியீட்டின் அடிப்படையாக இந்த ஆய்வில் கையாளப்பட்டுள்ளன.

***** Zen Cities in America picture @http://wtop.com/lifestyle/2015/07/the-50-most-zen-cities-in-america/

(picture embedding is possible and allowed)

இந்த அறிக்கையின் தரவுகளின்படி …

1. தரவரிசையில் முதலில் வந்த 50 நகரங்களில் 50 விழுக்காட்டு நகர்கள் அமெரிக்க மேற்குக்கரை மாநிலங்களான கலிஃபோர்னியா, ஆரிகன், வாஷிங்டன் மாநிலங்களின் நகர்களாகும். பொதுவாக முற்போக்கு கருத்துடைய மக்களும் பல ஆசிய மக்களும், வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்த மக்கள் வாழும் நகரங்கள் இவை.

2. முதல் பத்து சென் நகர்களில் 50 விழுக்காட்டு நகர்கள் கலிஃபோர்னியா மாநிலத்தின் நகர்கள்.

3. மேற்குக்கரையோர நகர்களும், கலிஃபோர்னியா மாநில நகர்களும் இந்த சென் நகர்கள் பட்டியலை ஆக்கிரமித்தாலும், அமெரிக்காவின் தலைசிறந்த சென் நகர் என்ற முதலிடத்தைப் பெறுவது கொலராடோ மாநிலத்தில் பொவ்ல்டர் நகர்தான்.

4. புகழ்பெற்ற அமெரிக்க மெட்ரோ நகர்கள் பல இந்தப்பட்டியலில் இருப்பது; பெருநகர்கள் தியானம், யோகா, மாற்று மருத்துவ வசதிகளைக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது, மேலும்

5. பழமைவாத, மதச்சார்புடைய அமெரிக்க மக்கள் அதிகம் வாழும் அமெரிக்காவின் மையப்பகுதிகளில், குறிப்பாக ‘சென்ட்ரல் டைம் சோன்’(central time zone) காலநேரத்தைக் கடைப்பிடிக்கும் பகுதியில் உள்ள நகர்களில் வாழும் மக்கள் யோகாவிலும், மாற்று மருத்துவத்திலும் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. ஒரு சிலர் யோகாவை மதத்தொடர்பு கொண்டதாகக் கருதுவதால் “பைபிள் பெல்ட்” பகுதி என அழைக்கப்படும் மத்தியப்பகுதி மாநிலங்களின் மக்களை யோகாவும் தியானமும் கவராது போயிருக்க வழியுண்டு.

இந்த ஆய்வறிக்கை கொடுக்கும் தகவல் இதற்கு முன் அறியப்படாத ஒன்றல்ல. “ஆரோக்கிய வாழ்க்கைக்கான அமெரிக்க நகர்கள்” என்ற ஆய்வறிக்கைகள் பலகாலமாக “அமெரிக்கன் காலேஜ் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின்” (The American College of Sports Medicine – ACSM) என்ற அமைப்பால் வெளியிடப்படுகிறது. இந்த அமைப்பு 2008 ஆம் ஆண்டு முதல் “அமெரிக்கன் ஃபிட்நெஸ் இன்டெக்ஸ்” (American Fitness Index® – AFI) என்ற ஆய்வுத் திட்டத்தை ஏற்படுத்தி உடல்நலமுடன் வாழச் சிறந்த நகர்கள் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. இதன் நோக்கம் மக்களுக்கு அவர்கள் வாழச் சிறந்த நகர்களைத் தேர்ந்தெடுக்க உதவுவதும், நகர்கள் தங்கள் நகரைச் சிறந்த நகராக மாற்றியமைக்க உதவுவதும்தான்.

***** http://www.hivplusmag.com/sites/hivplusmag.com/files/imagecache/stories/25-healthiest-and-unhealthiest-cities-400×300.jpg

ஆரோக்கிய வாழ்வின் அறிகுறி என்பதால் “சரிவிகித உணவு உட்கொள்ளும் உணவுப்பழக்கமும்”, “உடற்பயிற்சி மேற்கொள்ளும் வாழ்க்கைமுறையும்” (Healthy Eating and Active Living ) ஆரோக்கிய வாழ்வை அறிய உதவும் காரணிகளாகக் கருதப்படும். யார் ஆய்வு செய்தாலும் இக்காரணிகள் பயன்படுத்துவதில் மாற்றமிருப்பதில்லை என்பது இக்காரணிகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. மேலும், இக்காரணிகள் தனிமனித அளவிலும், பொதுமக்கள் வாழும் சமூக அமைப்பிலும் என்ற இரு வேறு கோணங்களில் ஆராயப்படுகிறது.

yoga7குறிப்பாக, மக்கள் காய்கனிகளை உணவில் சேர்த்துக் கொள்கிறார்களா என்று பார்ப்பதோடல்லாமல், அவர்கள் அவற்றைப் பெறுவதற்கு ஏற்றவாறு சமூகத்தில் உழவர் சந்தைகள் உள்ளனவா என்பதும் ஆராயப்படும். மக்கள் ஆரோக்கிய வாழ்விற்காக உடற்பயிற்சி மேற்கொள்கிறார்களா என்று தனிமனித அளவில் கணக்கெடுப்பதுடன், அவர்கள் நடைப்பயிற்சி போன்றவற்றைச் செய்ய நகரில் பூங்கா வசதிகள் உள்ளனவா? உடற்பயிற்சி நிலையங்கள் உள்ளனவா? என்பனவும் கவனிக்கப்படும்.

எனவே பசுமை நிறைந்த நகர்கள், சரியான உடல் எடை கொண்ட மக்கள், நோயற்ற நீண்ட வாழ்வு வாழ்பவர்கள், மருத்துவ வசதி நிறைந்த நகர்கள் போன்றவற்றை அறியும் நோக்கில் காரணிகள் தேர்வு செய்யப்படும். இத்தரவுகள் யாவும் பொதுமக்கள் அறியும் வகையில் வெளிவந்துள்ளனவாகவும், எளிதில் கிடைப்பவையாகவும், தொடர்ந்து கண்காணிக்க ஏதுவாக இற்றைப்படுத்தும் வகையிலும் அமைந்தவையாகவும் இருக்கும்.

இந்த அடிப்படையில் ‘அமெரிக்கன் ஃபிட்நெஸ் இன்டெக்ஸ்’ ஆய்வுக்குத் தேர்வு செய்து தனிமனித அளவிலும், சமூக அளவிலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட காரணிகள்:

[1]தனிமனிதர் ஆரோக்கிய வாழ்வின் அறிகுறி:

[1A] ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்: 1. நார்ச்சத்துள்ள உணவு (காய் பழங்கள்) உண்ணுதல் 2. உடற்பயிற்சி செய்தல், உடலுக்கு ஊறு விளைவிக்கும் புகைபிடித்தல் போன்ற பழக்க வழக்கங்களைத் தவிர்த்தல்

[1B]நோயற்ற வாழ்வுக்கான அறிகுறி: அதிக உடல் எடை இல்லாமை, இதய நோய் மற்றும் நீரிழிவு நோய்கள் இல்லாமை, மற்ற பிற நோய்கள் இல்லாதிருத்தல்

[2] தனிமனிதர் ஆரோக்கிய வாழ்விற்கு உதவும் சமூகக் கட்டமைப்பு அறிகுறிகள்:

[2A] ஆரோக்கிய வாழ்வுக்கான வசதிகள்: பூங்கா, உழவர் சந்தை, பொதுபோக்குவரத்து வசதிகள், மிதிவண்டி பயணங்கள், நடைப் பயணங்கள், நடைப்பயிற்சிகள் செய்ய உதவும் நகரக் கட்டமைப்பு, மருத்துவ வசதிகள்

[2B] பொழுதுபோக்கு வசதிகள்: விளையாட்டுத் தடங்கள் நீச்சல், டென்னிஸ், கால்ஃப் மைதானங்கள் போன்ற வசதிகள்

[3] ஆரோக்கிய வாழ்விற்கு உதவும் நகராட்சியின் கொள்கைகள்:

[3A]பள்ளியில் விளையாட்டு பயிற்சி வகுப்புக்கு ஆதரவான கொள்கைகள்

[3B] நகரசபை பொழுதுபோக்கு, விளையாட்டு மைதானம், பூங்கா போன்றவற்றை மேம்படுத்த ஒதுக்கும் நிதியின் அளவு

yoga9அமெரிக்கன் ஃபிட்நெஸ் இன்டெக்ஸ் ஆய்வின் 2015 ஆம் ஆண்டறிக்கையின் முக்கிய முடிவாக, ஆரோக்கிய வாழ்விற்கான சிறந்த நகர்களில், மக்களுக்கு நடைப்பயிற்சி செய்ய பூங்கா வசதிகள் நன்கு அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டது. சில ஊடகங்கள், சில நிறுவனங்கள் இவற்றின் தனிப்பட்ட காரணிகளை மட்டும் பிரித்தெடுத்து தங்களுக்கு ஏற்றவகையிலும் செய்யும் ஆய்வுகள்; சிறந்த மருத்துவ வசதி கொண்ட 25 அமெரிக்க நகர்கள், உடற்பயிற்சியில் ஆர்வமுள்ளோர் வாழ்வதற்கேற்ற முதல் 10 இடங்களில் இருக்கும் அமெரிக்க நகர்கள் என்ற தலைப்புகளில் பலவகை அறிக்கைகளாக வெளிவருவதும் வழக்கம்.

கடந்த இரண்டு (2014, 2015) ஆண்டுகளில், அமெரிக்கன் ஃபிட்நெஸ் இன்டெக்ஸ் தயாரித்தளித்த ஆண்டறிக்கைகளில் முன்னிலை வகித்த அமெரிக்க நகர்களே இப்பொழுது டன் அண்ட் பிராட்ஸ்ட்ரீட் அமைப்பு வெளியிட்ட “சென் நகர்கள்” அறிக்கையிலும் முன்னிலை வகிக்கின்றன. தரவரிசையில் சற்றே மாற்றம் இருக்கலாம், ஆனால் அதே நகர்கள் இப்பட்டியலிலும் இடம் பெறுவது, பெரும்பாலான அமெரிக்க மேற்குக்கரை மக்கள் தங்களது ஆரோக்கிய வாழ்வில் கொண்டுள்ள அக்கறையையும், அமெரிக்க பெருநகர்களும், கலிஃபோர்னியா மாநில நகர்களும் மக்களின் தேவைக்கு ஈடுகொடுக்கும் வகையில் உடற்பயிற்சி, மருத்துவ (மாற்றுமுறை மருத்துவமும்) வசதிகள் நிறைந்துள்ளதை உறுதிப்படுத்துகிறது.

______________________________________________________________________________

சான்றுகள்:

The 50 most zen cities in America, July 29, 2015

http://wtop.com/lifestyle/2015/07/the-50-most-zen-cities-in-america/

Re-Wiring Your Brain for Happiness: Research Shows How Meditation Can Physically Change the Brain, July 28, 2011

http://abcnews.go.com/US/meditation-wiring-brain-happiness/story?id=14180253

Acupuncture Relieves Stress: New Understanding Of Why The Ancient Practice Eases Anxiety, March 16, 2013

http://www.huffingtonpost.com/2013/03/16/acupuncture-could-help-prevent-stress_n_2883996.html

ACSM American Fitness Index ® 2015:

https://timedotcom.files.wordpress.com/2015/05/acsm_afireport_2015.pdf


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அமெரிக்காவில் யோகா”

அதிகம் படித்தது