மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-4

கி.ஆறுமுகம்

Aug 29, 2015

puli thevar9புலித்தேவர் திருவில்லிபுத்தூர் கோட்டையைக் கைப்பற்றிட படையுடன் சென்று போரிட்டார். இவரின் படையின் பாய்ச்சலுக்கு முன்பு, ஆற்காடு நவாப்பின் படைகளும், வெள்ளையனின் இராணுவத்தினர்களின் போய்வாய் பீரங்கி குண்டுகள், கூலிப்படையினர் அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு கோட்டையை விட்டு தலைத்தெறிக்க ஓடினர், உயிரை பாதுகாத்துக் கொள்வதற்கு. புலித்தேவரின் இந்த வெற்றி மதுரை நகர் முழுவதும் பரவியது. மதுரை பாளையக்காரர்கள் அனைவரும் புலித்தேவருக்கு ஆதரவு தர முன்வந்தனர். திருவில்லிபுத்தூர் கோட்டை இருந்த இடம் தற்பொழுது கோட்டைத் தலைவாசல் என்று அழைக்கப்படுகிறது. திருவில்லிபுத்தூர் கோட்டையை புலித்தேவர் 1755ல் கைப்பற்றினார்.

பின் திருநெல்வேலியில் இருந்த ஆற்காட்டு நவாப்பின் படையையும், வெள்ளையர்களையும் விரட்டியடிக்க திட்டமிட்டார் புலித்தேவர். திருநெல்வேலியில் இருந்த மாபூசுக்கான் புலித்தேவரின் படை வருவதை அறிந்த உடனே, கிழக்கு பாளையக்காரர்களையும் வெள்ளையர்களையும் அழைத்து ஒரு கூட்டம் கூட்டி, அதில் புலித்தேவருக்கு எதிராக போரில் எங்களுக்கு நீங்கள் உதவ வேண்டும், உதவினால் உங்களுக்கு பதவி பணம், பொன், துரைமார்களிடம் நன்மதிப்பு ஆகியவைகள் கிடைக்கும் என்று நயவஞ்சகமான வார்த்தைகளைக் கூறி, புலித்தேவருக்கு எதிராக திரும்பினான். போரில் கிழக்கு பாளையக்காரர்கள் அனைவரையும் வெள்ளையன் அணியில் சேர்ந்து நின்றனர். இந்தப் போர் 1756ல் நடந்தது.

புலித்தேவரின் முகத்தினையும் அவரது வீரத்தினையும் கண்டு, அவர் மீது மதிப்பு கொண்டு அவரிடம் நட்புகொள்ள விரும்பி, ஆற்காடு நவாப்பின் படையிலிருந்து முடோமியா என்னும் முகமது மியானச், முகமது பார்க்கி, நபிகான் கட்டாக் போன்றோர் புலித்தேவருடன் நண்பர்களாக இணைந்தார்கள். இந்த மூவரும் ஆற்காடு நவாப்பின் படை தளபதிகளாக இருந்தவர்கள். இவர்கள் நவாப்பின் ஆணையினை ஏற்றுக் கொண்டு புலித்தேவரை போரில் எதிர்த்தவர்கள். போரில் புலித்தேவரின் வீரத்தினைக் கண்டு அவரின் நெருங்கிய நண்பர்களாக மாறியவர்கள்.

puli thevar6 புலித்தேவரின் திருநெல்வேலி போரில் இந்த இஸ்லாமிய நண்பர்கள் புலித்தேவருக்குத் துணையாகப் போரிட்டனர். போரில் முடோமியா என்னும் முகமது மியானச் வேங்கையென பாய்ந்து, எதிரிகளின் தலைகளை வெட்டி தரையில் வீழ்த்தி முன்னேறிக் கொண்டிருந்தார். இவரைக் கண்டு பின்வாங்கி ஓடிய வெள்ளையர்களின் கூட்டத்தில் ஒருவன் மறைந்திருந்து, முடோமியா மார்பை குறிவைத்து தனது கையில் இருந்து துப்பாக்கியினால் சுட்டான். துப்பாக்கியிலிருந்து காற்றை கிழித்துக் கொண்டு விரைந்து வந்த துப்பாக்கிக் குண்டு முடோமியா மார்பை துளைத்துச் சென்றது. உடனே இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார் முடோமியா. புலித்தேவருக்கு முடோமியா போரில் வீழ்ந்தது தெரிந்ததும், விரைந்து சென்று முடோமியாவைப் பார்த்தார். முடோமியாவின் உயிர் உடலை விட்டு பிரிந்து விண்ணுலகம் சென்றது. போர்க்களத்தில் எதற்கும் கலங்காத அந்த மறத்தமிழன் புலித்தேவர், தனது படையின் தளபதியும் தனது உயிர் நண்பனான முடோமியா இறப்பைக் கண்டு மீளாத் துயரத்தில், இஸ்லாமியக் குலத்தில் பிறந்து தனக்காக போரில் உயிர் இழந்தாயே என்று கலங்கினார்.

இந்த மரணத்தின் சோகத்தினால் புலித்தேவர் போரை அன்றே நிறுத்திவிட்டு நெற்கட்டான் செவ்வல் கோட்டைக்குத் திரும்பி வந்தார். முடோமியா வீரத்தினை உலகறிந்திட வேண்டும் என்று நடுகல் எழுப்பினார் புலித்தேவர். இந்தப் போரில் புலித்தேவரின் படைவீரர்கள் ஏராளமானவர்கள் உயிர் துறந்தனர், ஆனால் எதிரியின் படையில் இருந்த குதிரைகள், யானைகள், பீரங்கிகள், துப்பாக்கிகள் என்று பலவற்றை புலித்தேவரின் வீரர்கள் கைப்பற்றினார்கள். புலித்தேவர் போரை நிறுத்திவிட்டு திரும்பி வந்ததினால், மாபூசுக்கான் ‘தனக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துவிட்டது, புலித்தேவரை போரில் வென்றுவிட்டோம்’ என்று வெள்ளைக்கார அதிகாரிகள் மற்றும் ஆற்காடு நவாப்பிற்கும் செய்தி அனுப்பினான்.

இந்தப் போரில் தான் வெற்றி பெற்று விட்டோம் என்ற தலைக்கனத்தினால் திருநெல்வேலி கோட்டையை மேலும் பலப்படுத்த கான்சாகிப் என்ற மருதநாயகத்தின் தலைமையில் ஒரு படையை அனுப்பினான் மாபூசுக்கான். இந்த மருதநாயகத்தின் படை திருநெல்வேலி வரும் செய்தியை அறிந்த கொல்லங்கொண்டான் பாளையத்தின் தலைவர் வாண்டாயத்தேவன் எதிர்த்தார். இந்தப் போரில் வாண்டாயத்தேவன் மருதநாயகத்தினை வெற்றிகொள்ள முடியவில்லை. உடனே வாண்டாயத்தேவன் தனது கோட்டையை விட்டு வெளியேறி, நெற்கட்டான் செவ்வல் பகுதியில் உள்ள புலித்தேவனிடம் தஞ்சம் அடைந்தார்

மேற்கு பாளையத்தில் வரி வசூல் செய்ய முடியாமல் மூச்சு திணறிய வெள்ளையர்கள், அவர்களுக்கு அடிமையான ஒருவருக்கு வரி வசூல் செய்யும் உரிமையைக் கொடுக்கிறோம் என்று ஒருவருக்கு ஒப்பந்தம் செய்தனர். இதனை அறிந்த மாபூசுக்கான் வரி வசூல் செய்யும் உரிமையை தனக்குத்தான் வழங்க வேண்டும் என்று வெள்ளையனிடமும், நவாப்பிடமும் கேட்டான். பின் பாளையக்காரர்கள் அனைவரும் தனக்குத்தான் வரி செலுத்த வேண்டும் என்று அறிவித்தான். இதனை அறிந்த புலித்தேவர் மிகுந்த கோபத்தின் உச்சத்தில் இருந்தார். ஆண்டாண்டு காலமாக தாய் மண்ணில் உழைத்து வாழும் நாம், எங்கிருந்தோ வந்தேறிய இந்த அந்நியர்கள் பிழைப்புக்காக வந்தவர்கள், வியாபாரத்திற்காக நம்மை நாடியவர்கள். ஆனால் இப்போது இவர்கள் எங்களுக்கு வரி வசூல் செய்யும் உரிமை உண்டு, எங்களிடம் வரி செலுத்துங்கள் என்று ஆணை பிறப்பிக்கிறார்கள். இவர்களுக்கு வரி வசூல் செய்யும் உரிமையை எவன் கொடுத்தது. அந்த அதிகாரம் அவனுக்கே இல்லை, பின் எப்படி இவன் வரி வசூலிப்பான் என்று தனது பாளையத்தினைச் சேர்ந்தவர்களுக்கு அறிவித்தார்.

puli thevar11மாபூசுக்கான், எனக்கு வரி செலுத்தாவிட்டால் உங்கள் விளைச்சலை நான் எடுத்துக் கொள்ளுவேன் என்று மிரட்டினான். இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், நாம் விளைச்சல் செய்தால்தானே இவன் எடுத்துக்கொள்ள முடியும், நாம் விவசாயம் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தனர். இதனை அறிந்த புலித்தேவர் கிராம மக்களிடம் சென்று ‘நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் உங்கள் விலை நிலத்திற்கும், விவசாயத்திற்கும், விளைச்சலுக்கும் பாதுகாப்பு நான் கொடுக்கிறேன், உங்களுக்கு நான் இருக்கிறேன், நீங்கள் விவசாயம் செய்யுங்கள்’ என்று நம்பிக்கை தெரிவித்தார். மக்களின் துயரத்தினைத் துடைத்தார்.

மருதநாயகம் புலித்தேவரைப் போரில் எதிர் கொண்டான். புலித்தேவரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பின்வாங்கிய மருதநாயகம், வெள்ளையர்களின் உதவியை நாடினான். உடனே புலித்தேவர் நெற்கட்டான் செவ்வல் கோட்டைக்குச் சென்று மேலும் தம் படையை அதிகப்படுத்தினார். பின் மதுரைக்குச் சென்று அங்கிருந்து, திருச்சியிலிருந்து திருநெல்வேலிக்கு வரும் ஆங்கிலேயரின் படையைத் தடுக்க திட்டம் தீட்டினார். பின்னர் திண்டுக்கல்லில் இருந்து ஹைதர் அலியின் படை வந்துவிடாமல் இருக்க அதற்குத் திட்டம் தீட்டி செயல்பட்டார் புலித்தேவர்.

படைபலத்தினை அதிகப்படுத்திக் கொண்டிருக்கும் போது புலித்தேவரின் நண்பனான நபிகான் கட்டாக் என்பவன் பெரும் படையுடன் நெற்கட்டான் செவ்வல் பகுதிக்கு வந்தான். ஆற்காடு நவாப்பின் புதிய அதிகாரியாக வந்த பர்கத்துல்லா என்பவனும் புலித்தேவருக்கு உதவி செய்ய வந்தான். இதற்குள் திருநெல்வேலியிலிருந்த மருதநாயகம் மாபூசுக்கானை மதிப்பதில்லை, மேலும் வரி வசூல் செய்வதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே மாபூசுக்கான் திருநெல்வேலியிலிருந்து நெற்கட்டான் செவ்வல் பகுதி வந்து புலித்தேவரை சந்தித்து, ‘உண்மையாக உயிர் கொடுத்து உழைத்தேன், எனக்கு அவர்கள் அநீதி இழைத்துவிட்டனர். எனவே நான் தங்களிடம் பணிபுரிய வந்துவிட்டேன் என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றான். புலித்தேவர், தஞ்சம் என்று நம்பி வந்தவனை திருப்பி அனுப்புவது என் மறவர் குலத்துக்கு இல்லை. ஆனால் என்னை உறவாடி கெடுக்க மட்டும் எண்ணி விடாதே என்று எச்சரித்தார்.

-வேட்டை தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் பூலித்தேவர்- பகுதி-4”

அதிகம் படித்தது