மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை மழைநீர் மையத்தின் இயக்குநர் சேகர் ராகவன் அவர்களின் நேர்காணல்

சித்திர சேனன்

Oct 17, 2015

mazhai neer segarippu1கேள்வி: தங்களைப் பற்றிய அறிமுகம்?

பதில்: என்னுடைய பெயர் சேகர் ராகவன். நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தேன், இங்குதான் படித்தேன். அதன் பிறகு கடந்த நாற்பது ஆண்டுகாலமாக சென்னையில் பெசன்ட் நகர் என்கிற பகுதியில் வாழ்ந்து வருகிறேன். நான் இயற்பியல்துறையில் Phd பட்டம் வாங்கியிருக்கிறேன். நான் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக ஆறு வருடம் பணியாற்றினேன். பின் என்னை நிரந்தரமாக்காததால் அந்தப் பணியிலிருந்து வெளியில் வந்தேன்.

கேள்வி: தாங்கள் மழைநீர் சேமிப்பில் ஈடுபடக் காரணம்?

பதில்: எனக்கு சென்னை மீது ஒரு மோகம், வாழ்நாள் முழுவதும் சென்னையிலேயே இருக்கவேண்டும், சென்னையை விட்டுப் போவதில் எனக்கு எந்த வித விருப்பமும் இல்லை. வெளியூர்களில் எனக்கு நிறைய இடத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அதை நான் எடுத்துக்கொள்ளவில்லை. சென்னையிலேயே இருக்கவேண்டும், சென்னை மக்களுக்கு ஏதோ நம்மால் முடிந்த ஒரு சிறிய உதவி செய்யவேண்டும் என்பதால் இந்த மழைநீர் சேகரிப்பில் என்னுடைய ஈடுபாடு ஏற்பட்டது. கிட்டத்தட்ட இருபது வருடமாக என்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறேன். ஆனால் என் படிப்புக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. இந்த மழைநீர் சேகரிப்பைப் பற்றி தெரிந்துகொண்டது அனைத்தும் நான் நேராகப் பார்த்தது, அனுபவப் பூர்வமாகக் கற்றுக்கொண்டதுதான்.

எப்படி ஒரு வண்டி பழுது பார்ப்பவர் பல வண்டிகளை சரிசெய்து கற்றுக்கொண்டாரோ, தச்சர் எந்த கல்லூரிக்கும் சென்று படித்திருக்க மாட்டார். அந்த மாதிரி அனுபவத்திலேயே கற்றுக்கொண்டதுதான். கிட்டத்தட்ட இருபது வருடங்களாக இதைப்பற்றி நிறைய தெரிந்து வைத்திருக்கிறேன், நிறையபேருக்கு ஆலோசனை செய்து வருகிறேன்.

mazhai neer segarippu20பெசன்ட் நகரில் நான் வசித்து வருகிறேன். பெசன்ட் நகர் என்று சொன்ன உடனே இரண்டு முக்கிய விடயங்கள் நினைவிற்கு வரும். ஒன்று கடல்காற்று, கோடைகாலத்தில்கூட இரண்டு மணிக்குப் பிறகு நல்ல கடல் காற்று வீசத் தொடங்கிவிடும். அதனால் வெப்பத்தின் கொடுமை இறங்கிவிடும். இரண்டாவது மக்களுக்குத் தெரியாதது, இங்கே கிடைக்கக்கூடிய நிலத்தடி நீர். சென்னையிலேயே சுவையான நிலத்தடி நீர் பெசன்ட் நகர், கொட்டிவாக்கம், பாலவாக்கம் போன்ற பகுதியில்தான் கிடைத்து வந்தது. அதற்கு முக்கியக் காரணம் மலைப்பாங்கான பகுதி என்பதால். ஏனென்றால் எவ்வளவு மழை பெய்தாலும் தானாகவே பூமிக்குள் சென்றுவிடும். மழைநீர் சேமிப்பு என்றால் என்ன? இதுதான் மழைநீர் சேமிப்பு. இது நம்முடைய ஈடுபாடு இல்லாமலே நடந்து வந்தது. மழை காலத்தில் பெசன்ட் நகரில் நிலத்தடி நீர் 5 அடி, 6 அடிக்குக் கீழே கிடைத்துக் கொண்டிருந்தது. பெசன்ட் நகரில் ஒவ்வொரு வீட்டிலும் கிணறு இருக்கும். அந்த கிணற்றில் எட்டிப் பார்த்தாலே தண்ணீர் தெரியும். கையை விட்டே தண்ணீரை எடுக்கும் அளவிற்கு நிலத்தடி நீர் உயர்ந்து காணப்பட்டது. அதற்கு முக்கியமான காரணம் மழைநீர் தானாகவே பூமிக்குள் சென்று நிலத்தடி நீரை அதிகப்படுத்தியிருக்கிறது. இது நாளடைவில், அடுக்குமாடி குடியிருப்புகள் இங்கு கட்டப்பட்டு மக்கள் அதிகமாக வெளிப்பிரதேசத்திலிருந்து இங்கு வந்து வீட்டை வாங்கி தங்க ஆரம்பித்தார்கள். இதற்கு முக்கியக் காரணம் பெசன்ட் நகரில் நன்றாக தண்ணீர் கிடைக்கிறது, நிலத்தடி நீர் நன்றாக கிடைக்கிறது, ஏன் இங்கு ஒரு வீட்டை வாங்கி வசிக்கக்கூடாது என்று மக்கள் எண்ண ஆரம்பித்து நிறையபேர் இங்கு வந்து வாழ ஆரம்பித்தார்கள்.

ஒரு பக்கம் அடுக்கு மாடி குடியிருப்புகளில், வீட்டைச் சுற்றி இருக்கிற பகுதியை சிமெண்ட்டால் மூடிவிடுவார்கள். அடுத்து தெருவில் அரசாங்கம் தார் போட்டு அந்த சாலையை மூடிவிடும். இதனால் பெசன்ட் நகரில் திறந்த வெளிகள் குறைந்துகொண்டே வந்தது. எனவே மழைநீர் தானாகவே பூமிக்குள் செல்ல வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அதனால்தான் பெசன்ட் நகரில்கூட மழைநீர் தேங்க ஆரம்பித்தது.

எந்த அளவிற்கு நாம் மழைநீரை பூமிக்குள் செலுத்துகிறோமோ, அந்த அளவிற்கு நம் நிலத்தடி நீர் நன்றாக இருக்கும். இதுதான் முக்கியமான ஒரு விடயம். ஆங்கிலத்தில் common sense என்று சொல்வார்கள், அதில் புரிந்துகொள்வதுதான் இது. நானே எப்படி தெரிந்துகொண்டேன் என்றால், இரவு நன்றாக மழை பெய்யும், காலையில் எழுந்து பார்த்தால் ஒரு துளி மழை கூட இருக்காது. எங்கு சென்றிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் எல்லாமே பூமிக்குள் சென்றிருக்கும். கிணற்றை எட்டிப் பார்த்தால் கிணற்றில் தண்ணீர் மேலே வந்திருக்கும். இதுதான் மழை நீர் சேமிப்பு. இவ்வளவு சுலபமான, எளிமையான ஒரு விடயத்தை மக்கள் புரிந்துகொள்ளவே இல்லை.

mazhai neer segarippu16குறிப்பாக படித்தவர்கள் மத்தியில் யாருக்குமே இது பற்றிய புரிதல் இல்லை. நிலத்தடிநீர் மழைநீரிலிருந்துதான் வந்திருக்க வேண்டும் என்கிற எண்ணமே இல்லாமல் போய்விட்டது மக்கள் மத்தியில். எனவே என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை அதனால் நான் விடுமுறை நாட்கள், சனி, ஞாயிறு கிழமைகளில் மிதிவண்டியை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு தெருவாகச் சென்று அங்கு இருக்கிற ஒவ்வொரு அடுக்குமாடி குடியிருப்புக்குள்ளும் சென்று மழைநீரை சேமிக்க வேண்டும் அதாவது சேமிக்க வேண்டும் என்றால் பூமிக்குள் விடவேண்டும் அவ்வளவுதான் என்று சொல்வேன். ஆனால் அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் என்னை அந்த வீட்டுக்குள்ளேயே விடமாட்டார்கள். காவலாளியிடம் சொல்லி வெளியில் செல்லச்சொல்லுங்கள் என்று சொல்லிவிடுகிறார்கள். நான் ஏதோ ஒரு பொருளை விற்க வந்தமாதிரியும், ஒரு விற்பனையாளர் மாதிரியும்தான் என்னைப் பார்த்தார்கள். இப்படி சொல்வதனால் என்னால் எந்த ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்குள்ளும் நுழைய முடியவில்லை. இது ஒரு பெரிய பிரச்சனையாகப் இருந்தது எனக்கு.

அதற்காக ஒரு இயக்கத்தை 1995ல் ஆரம்பித்தேன். இதை ஆரம்பித்து இருபது வருடம் ஆகிறது. ஆனால் 1998 வரைக்கும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. மூன்று வருடம் மிகக் கடுமையாக இருந்தது. நானும் எவ்வளவோ முயற்சி செய்து, முயற்சி செய்து பார்த்தும் தோல்வியைத்தான் அடைந்தேன். பின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு உள்ளுர் பத்திரிக்கை நடத்துவார்கள். அந்த மாதிரியான பத்திரிக்கையைத் தேர்ந்தெடுத்து அதன் ஆசிரியரைச் சென்று பார்த்தேன். அவரிடம் நான் ஒரு முக்கியமான விழிப்புணர்வு இயக்கத்தில் இருக்கிறேன். மக்களுக்கு மழைநீர் சேமிப்பைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் என்னை யாரும் வீட்டிற்குள்ளேயே விட அனுமதிக்கவில்லை. நீங்கள்தான் எங்களைப் பற்றி ஏதாவது எழுதவேண்டும் என்று கூறினேன். பின் அந்த பத்திரிக்கையில் என்னைப் பற்றி எழுதினார்கள். இது நடந்தது 1998ல்.

அந்த பத்திரிக்கையைப் பார்த்துவிட்டு நிறைபேர், சரி இவர் என்னதான் சொல்கிறார் பார்க்கலாம், கேட்கலாம் என்று என்னை உள்ளே அனுமதித்தார்கள். நான் விளக்கமாகக் கூறினேன். அதைக்கேட்டு அதிக நபர்கள், ‘எங்களுக்குத் தேவையில்லை, நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் சென்று வாருங்கள்’ என்று மரியாதையாக சொல்லி அனுப்பி வைத்தார்கள். நான் அவ்வாறு சந்தித்த பத்து நபர்களில் இரண்டு நபர்கள், ‘சரி, என்ன செய்யலாம் சொல்லுங்கள், உங்களால் செய்துதரமுடியுமா?’ என்று கேட்டார்கள். நான் இதற்காக ஒரு சிறிய குழுவை தயார் செய்து, அவர்களுக்கு மழைநீர் சேமிப்பை எப்படியெல்லாம் செய்யலாம் என்பதைக் கற்றுக்கொடுத்து, அவர்களையும் நான் செல்லும் இடங்களுக்கு அழைத்துச்சென்று அதை செய்து கொடுத்தேன்.

mazhai neer segarippu9அதன்பிறகு 2001ல் பெரிய பெரிய பத்திரிகைகள் எல்லாம் இந்த மழைநீர் சேமிப்பைப் பற்றி எழுத ஆரம்பித்து சென்னைக்கே பரவ ஆரம்பித்துவிட்டது. அந்தப் பத்திரிகையில் என்னுடைய பெயர் சேர்த்து இவர்கள் இம்மாதிரி செய்து கொண்டிருக்கிறார்கள், இலவச ஆலோசனை கொடுத்து வருகிறார் என்று கொடுக்கப்பட்டதால், ‘ஏன் அவரை அழைத்து கேட்கக்கூடாது’ என்று என்னை வெளியிலிருந்து அழைக்க ஆரம்பித்தார்கள். பெசன்ட் நகரில் ஆரம்பித்த இந்த இயக்கம், சென்னை முழுவதும் பரவ ஆரம்பித்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்பொழுது இருக்கிற அரசாங்கம்தான் 2001-லும் இருந்தார்கள். அந்த அரசாங்கம் மழைநீர் சேமிப்பை மக்கள் மத்தியில் பரவச்செய்யவேண்டும், மக்களை செய்யவைக்கவேண்டும் என்று 2001 சூன் மாதத்தில் அவர்கள் குழு ஒன்றை அமைத்தார்கள். அதில் அரசாங்க அதிகாரிகள்தான் பெரும்பாலும் இருந்தார்கள், என்னைப்போன்ற ஒரு சிலர் அந்தக் குழுவில் இருந்தோம். ஒரு செயலாளரின் (Water Supply Secretary) கீழ்தான் இந்தக் குழுவை அமைத்தார்கள். குழு அமைத்து மழைநீர் சேமிப்பை எப்படியெல்லாம் தமிழ்நாட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்று ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அவர்களுடைய அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடக்கும். அதன் மூலமாக எப்படி பெசன்ட் நகரில் ஆரம்பித்து சென்னைக்கு பரவியதோ, அதே மாதிரி சென்னையிலிருந்து தமிழ்நாடு முழுவதும் இது பரவியது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அரசாங்கம் இதற்குண்டான காரியங்களை செய்துவந்தார்கள்.

அதன் பிறகு என்னுடைய நண்பர்கள் சிலர் வெளிநாட்டிலேயே தங்கியிருக்கிறார்கள், சென்னையில் வாழ்ந்து பின் அங்கு படிக்கச் சென்று அங்கேயே நிரந்தரமாக இருக்கிறார்கள். அவர்கள் ‘நீ வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குப் பதிலாக, நாம் ஏன் மழை இல்லம் என்று ஒன்றை அமைத்து அதில் மக்களை வரவழைக்கக்கூடாது’ என்று சொல்லி முடிவெடுத்தோம். இப்பொழுது நாங்கள் இருப்பது மழை இல்லத்தில்தான் இருக்கிறோம், இது வாடகை வீடுதான். உள்ளே மழைநீர் சேமிப்பைப் பற்றியான நிறைய விடயங்கள் இதில் வைத்திருக்கிறோம். இது அரசு சாரா நிறுவனம்தான், ஆங்கிலத்தில் NGO என்று சொல்வார்கள்.

mazhai neer segarippu3ஆகாஷ் கங்கா அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி அதிலிருந்து வெளிநாடுகளிலிருந்து நன்கொடை மாதிரி வந்ததில், இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து, அதனுள்ளே மழைநீர் சேமிப்பைப் பற்றிய தகவல்கள் வைத்தோம். இது ஒரு தகவல் மற்றும் உதவி மையம். இதில் இலவசமாக யார் வேண்டுமானாலும் வரலாம், மழைநீர் சேமிப்பைப் பற்றி தெரிந்துகொள்ளலாம், எங்களிடம் சிறிய சிறிய புத்தகங்கள் இருக்கிறது. ஆங்கிலத்திலேயும் இருக்கிறது, தமிழிலும் இருக்கிறது. அதை நாங்கள் இலவசமாகத்தான் கொடுக்கிறோம். அதிலேயே எப்படியெல்லாம் செய்வது என்று வரைபடங்கள் இருக்கிறது. 2002 ஆகஸ்டு மாதம் இந்த மழை இல்லத்தை மாண்புமிகு முதலமைச்சர்தான் திறந்து வைத்தார்கள். அதில்தான் எங்களுக்கு பெரிய பெயர் கிடைத்தது. இந்த மாதிரி சிறிய தெருவில், சிறிய வீட்டில் செய்வார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவர்கள் வந்ததே எங்களுக்கு பெரிய உதவியாக இருந்தது. ஆகஸ்ட் மாதம் வந்தார்கள், துவக்கி வைத்தார்கள். பின் அக்டோபர் மாதம் ஒரு சட்டம் கொண்டுவந்தார்கள், ஒவ்வொரு வீட்டிலும் அது பழைய வீடாக இருக்கட்டும், புது வீடாக இருக்கட்டும் மழைநீர் சேமிப்பை கட்டாயப்படுத்த வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டுவந்து மக்களுக்கெல்லாம் ஒரு வருடம் அவகாசம் கொடுத்தார்கள். இந்த ஒரு வருடத்திற்குள் அதாவது 2003 ஆகஸ்ட் 31க்குள் எல்லோரும் செய்து முடிக்கவேண்டும், அப்படி செய்யவில்லை என்றால் உங்களுக்கு குடிநீர் இணைப்பைத் துண்டித்துவிடுவோம் என்று தமிழ்நாடு முழுவதும் செய்தார்கள். அந்த விடயத்தில் இன்று வரைக்கும் தமிழ்நாடு இந்தியாவிற்கே ஒரு முன்னோடி மாநிலமாக இருக்கிறது. ராஜஸ்தான், டெல்லி, ஆந்திரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்களிலிருந்து நம்மை வந்து பார்க்கிறார்கள், பார்த்துவிட்டு அவர்களும் அதிக ஆர்வம் காட்டினார்கள். இந்த மழைநீர் சேகரிப்பில் (Rainwater Harvesting) தமிழ்நாடு மாநிலம்தான் ஒரு முன்னோடி மாநிலமாக இருந்திருக்கிறது. அதற்கு நம் முதலமைச்சர் பெரிய காரணமாக இருந்திருக்கிறார்கள்.

கேள்வி: மழைநீர் சேமிப்பு என்றால் என்ன?

பதில்: பூமிக்கு இரண்டு விதமாக தண்ணீர் கிடைக்கிறது, ஒன்று பனி உருகி கிடைக்கிறது, மற்றொன்று மழையிலிருந்து கிடைக்கிறது. இப்படித்தான் கிடைக்குமே ஒழிய வேறு எப்படியும் தண்ணீர் கிடையாது, கிடைக்க வாய்ப்பில்லை. இந்தியாவில் 32 மாநிலங்கள் இருக்கிறது. இதில் ஏறக்குறைய 30 மாநிலங்கள் மழையை நம்பித்தான் இருக்கிறது. உத்திரப்பிரதேசம், பீகார், வடஇந்தியாவில் ஒரு சில மாநிலங்கள் எவரெஸ்ட் மலையிலிருந்து பனி உருகியும் தண்ணீர் கிடைக்கிறது, மழையும் உண்டாகிறது. நமக்கு அவ்வாறு இல்லை, நமக்கு மழைதான் முக்கிய ஆதாரம். எனவே அதனால் மழைநீரை கண்டிப்பாக நாம் சேமிக்கவேண்டும் முதல் விடயம்.

mazhai neer segarippu18இரண்டாவது இந்த மழை ஒரு வருடத்திற்கு 60லிருந்து 90 நாட்கள் வரைதான் பெய்கிறது, இடத்திற்கு ஏற்றாற்போல். சென்னைக்கு என்று சொல்லும்போது 57 நாட்கள்தான் சொல்வார்கள். ஆங்கிலத்தில் rainy days என்று சொல்வார்கள். இணையதளத்தில் சென்று பார்த்தீர்கள் என்றால் தெரியும் rainy days எவ்வளவு என்று. அதுபோல ஒரு குறிப்பிட்ட காலத்தில்தான் மழை பெய்கிறது. ஆனால் நமக்கு தண்ணீர் தேவையோ வருடம் முழுவதும், 365 நாட்களும் தண்ணீர் தேவை. அதனால் 60 நாட்களில் பெய்கிற மழைநீரை நாம் சேமித்தால்தான் மீதம் இருக்கிற 300 நாட்கள் நாம் தண்ணீர் கஷ்டம் இல்லாமல் இருக்க முடியும்.

மூன்றாவது முக்கியக் காரணம் நமக்குத் தேவையான மழை பெய்கிறது. சௌதி அரேபியா, குவைத், துபாய் போன்ற நாடுகளை எடுத்துக்கொண்டால் பாலைவன நாடுகள். அங்கெல்லாம் மழையே பெய்யாது, அதனால் அங்கு சென்று மழைநீர் சேமிப்பைப் பற்றிப் பேசுவது முடியாது, அர்த்தமும் இல்லை. இங்கு ஒரு கணக்கெடுப்பில் சென்னைக்கு ஒரு வருடத்திற்கு 130 சென்டிமீட்டர் மழை பெய்கிறது என்கிறது. மழையை சென்டிமீட்டரில்தான் அளப்பார்கள். இந்த மழைநீரை சேமித்தால் சென்னையில் வாழ்கிற ஒவ்வொரு குடிமகனுக்கும், ஒவ்வொரு நாளுக்கும் 120 லிட்டர் தண்ணீர் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது, மழையிலிருந்து மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அவ்வளவு மழை பெய்கிறது நமக்கு, அதை ஏன் வீணாக்கவேண்டும், அதனால் மழைநீரை கண்டிப்பாக சேமிக்க வேண்டும். இதுதான் மூன்று முக்கியக் காரணங்கள் மழைநீர் சேமிப்பதற்கு.

மழைநீர் சேமிப்பை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று கிராமப்புறங்களில் மழைநீர் சேமிப்பு, நகர் புறங்களில் மழைநீர் சேமிப்பு. கிராமப்புறங்களில் திறந்த வெளிகள் அதிகமாக இருக்கும், எல்லாமே வயல்காடாக இருக்கும் இல்லையென்றால் குளம், குட்டை, ஏரிகள் என்றுதான் இருக்கும். அதனால் அங்கு மழைநீரை ஒரு குளத்திலேயோ, ஒரு குட்டையிலேயோ, ஒரு ஏரியிலேயோ சேமிப்பார்கள். அதற்கு ஆங்கிலத்தில் surface water body என்று சொல்வோம். அதாவது நிலத்திற்கு மேல் இருக்கும், நீங்கள் பார்த்தால் தண்ணீர் தெரியும். கிராமங்களில் அவ்வாறு சேமிப்பார்கள். இது பாரம்பரியமாக சேமிக்கிற ஒரு முறை.

mazhai neer segarippu11இன்னொரு விடயம் நாம் தெரிந்துகொள்ளவேண்டும், உலகத்திற்கே இந்தியாதான் ஒரு முன்னோடி நாடாக இருந்திருக்கிறது இந்த மழை நீர் சேமிப்பில். குஜராத் மாநிலத்தில் டோலோவேரா என்ற இடத்தில் மழை நீர் சேமிப்பைப் பற்றியான தொல்பொருள் ஆராய்ச்சி செய்யும் பொழுது, ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பே, இந்தியாவில் மழைநீரை சேமித்ததற்கு உண்டான ஆதாரங்கள் இருக்கிறது. இதில் இந்தியாவம் சீனாவும்தான் பாரம்பரிய நாடுகள், பாரம்பரிய நாகரிகங்கள். எனவே நாம் மழைநீர் சேகரித்ததற்கு ஆதாரங்கள் ஐந்தாயிரம் வருடங்களுக்கு முன்பே இருந்திருக்கிறது. நாம் மிகப் பெருமைப்படவேண்டிய விடயம். இந்தியன் என்று சொல்வதில் பெருமைப்படவேண்டும், மழைநீர் சேமிப்பில் இந்தியா முன்னோடி நாடாக இருக்கிறது. இந்தியாவில் ஒவ்வொரு இடத்திலும் மழைநீர் சேமித்ததற்குண்டான ஆதாரங்கள் இருக்கிறது. விதவிதமாக சேமித்திருக்கிறார்கள். அதாவது மழை குறைவாக இருக்கும் இடத்தில் எப்படி சேமித்திருத்திருக்கிறார்கள், மழை அதிகமாக இருக்கும் இடத்தில் எப்படி சேமித்திருத்திருக்கிறார்கள் என்பதற்கு நிறைய புத்தகங்களில் இதைப் பற்றியான விடயங்கள் இருக்கிறது. ஆங்கிலத்தில் dying wisdom என்ற புத்தகமே இருக்கிறது. இந்த புத்தகத்தில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் பாரம்பரிய மழைநீர் சேமிப்பு முறைகள் என்ன? என்று எழுதியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பாரம்பரிய மழைநீர் சேகரிப்பு என்னவென்றால் ஏரிகள்தான். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற மூன்று மாநிலங்களிலும் இந்த மாதிரியான ஏரிகள் இருந்திருக்கிறது. தமிழில் ஏரி என்று சொல்கிறோம், தெலுங்கில் செருவு என்று சொல்வார்கள். கர்நாடகாவில் கேரே என்று சொல்வார்கள். எல்லாமே ஒன்றுதான், பெயர்தான் வித்தியாசம். இது விவசாயத்திற்காக மழைநீரை சேமிக்கிற ஒரு கட்டமைப்பு. இந்த தண்ணீரை குடிக்கமாட்டார்கள், இதை விவசாயத்திற்காக மட்டும்தான் பயன்படுத்துவார்கள்.

மழைக்காலத்தில் அந்த ஏரியில் தண்ணீரை சேமித்துவிடுவார்கள். மதகு என்று ஒன்று இருக்கும், அந்த மதகை காலையில் திறப்பார்கள், திறந்துவிட்டார்கள் என்றால் வயலுக்கு வாய்க்கால் வழியாக தண்ணீர் சென்றுவிடும், மாலைவேளையில் மூடிவிடுவார்கள். அதேமாதிரி கலங்கள் என்று ஒன்று இருக்கும், கலங்கள் என்னவென்றால் ஏரி நிரம்பிவிட்டது என்றால் உபரிநீர் அந்த கலங்கள் வழியாகச்சென்று பக்கத்து கிராமத்தினுடைய ஏரியை நிரப்பும். ஏரிகளை சங்கிலி மாதிரி இணைத்திருந்தார்கள். மிகச்சிறப்பான கட்டமைப்பு அது. எனவே வீணாவது குறைவாகத்தான் இருக்கும். ஒன்றில் சேமிக்கவில்லை என்றால் அடுத்ததில் சேமிக்கப்படும். அடுத்தது, அடுத்தது என்று சென்றுகொண்டே இருக்கும்.

mazhai neer segarippu12இந்த ஏரியில் இரண்டு விதமான ஏரிகள் சொல்கிறார்கள். ஒன்று நதியில் ஓடுகிற நீரை திருப்பி ஏரிகளில் சேமிப்பார்கள். அதற்கு உதாரணம் வீராணம். காவிரியில் ஓடுகிற தண்ணீரை திருப்பிவிட்டு வீராணம் ஏரியில் சேமிப்பார்கள். நதிகளே இல்லாத இடத்திலேயும் ஏரிகள் இருந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் பாலாறைத் தவிர அதிகமாக ஆறுகள் கிடையாது. அந்த மாதிரி இடங்களிலேயும் பெய்கிற மழைநீரை ஏரிகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள். இதற்கு உதாரணம் செம்பரம்பாக்கம் ஏரி. தமிழ்நாட்டில் மொத்தம் 39000 ஏரிகள் இருக்கிறது. அதில் பெரிய ஏரி செம்பரம்பாக்கம்தான். அடுத்தது மதுராந்தகம், உத்திரமேரூரில் ஒரு பெரிய ஏரி இருக்கிறது, இப்படி பல ஏரிகள் இருக்கிறது. இவையனைத்துமே விவசாயத்திற்குத்தான் பயன்படுத்திக் கொண்டார்கள்.

குடிநீருக்கு ஊரணிகள் என்று இருந்தது அல்லது குளங்கள் என்று இருந்தது. ஊரணி இன்றும் இராமநாதபுரத்தில் இருக்கிறது. பேராவூரணி என்ற ஊரே இருக்கிறது, அந்த ஊரணியை வைத்துத்தான் அதற்கு அந்த பெயரே. அதில் படித்துறை இருக்கும், எனவே படியில் இறங்கிச் சென்று குடத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்று உபயோகப்படுத்துவார்கள். எனவே குடிப்பதற்கு ஊரணி, விவசாயத்திற்கு ஏரிகள். கிராமப்புறங்களில் மழைநீர் சேமிப்பை இவ்வாறு சிறப்பாக செய்திருந்தார்கள்.

இப்பொழுது நகர்புறங்களுக்கு வருவோம், கிராமத்திற்கும் நகரத்திற்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தீர்கள் என்றால் இங்கே திறந்த வெளிகளே கிடையாது. திறந்த வெளியாக இருந்தது என்றால் அங்கே குப்பையைக் கொட்டி சமப்படுத்தி, அதில் அரசாங்க அலுவலகமோ ஒரு பேருந்து நிலையமோ, கல்லூரியோ கட்டிவிடுகிறோம். எனவே திறந்த வெளிகள் நகர்புறங்களில் குறைந்துகொண்டே வருகிறது. இரண்டாவது சிமெண்டைப் போட்டு மூடிவிடுகிறோம் அலுவலகத்தைச் சுற்றி, வீட்டைச்சுற்றி. அதனால் மழைநீர் பூமிக்குள் செல்ல வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. வெள்ள அபாயம் வருவதற்கு முக்கியக் காரணங்களே இந்த இரண்டுதான்.

mazhai neer segarippu5வள்ளுவர் கோட்டம் என்று ஒன்று இருக்கிறது, வள்ளுவர் வான் சிறப்பு என்று பத்து குறள் கூறியிருக்கிறார். அவருக்கு ஒரு நினைவு மண்டபம் எங்கு கட்டுகிறார்கள் என்றால், அது ஒரு ஏரியில்தான் குப்பையைக்கொட்டி, அதை மேவி அதில் ஒரு நினைவு மண்டபம் கட்டியிருக்கிறோம், அந்த அளவிற்கு இருக்கிறது. இன்று லயோலா கல்லூரி இருக்கும் சாலைக்கு tank bund road என்றுதான் பெயர். Tank தான் இல்லை road இருக்கிறது. அதேமாதிரி நிறைய குளங்கள் சென்னையிலேயே இருந்திருக்கிறது. அதற்குண்டான ஆதாரங்கள் நிறைய இருக்கிறது. இன்றைக்கு எதுவுமே கிடையாது. அனைத்தையும் மூடிவருகிறோம். எனவே நகர்ப்புறங்களில் நிலத்தடி நீராகத்தான் சேமிக்க முடியும், இதை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். வேறு எந்தவகையிலும் சேமிக்க முடியாது. அதற்குண்டான அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

ஒரு வீடோ, அடுக்குமாடி குடியிருப்போ, ஒரு தொழிற்சாலையோ அல்லது அலுவலகமோ எதுவாக இருந்தாலும் இரண்டு இடத்தில்தான் மழை பெய்யும். ஒன்று மொட்டைமாடியில் பெய்யும், இதை roof top என்று ஆங்கிலத்தில் சொல்வோம். இரண்டாவது வீட்டை சுற்றி இருக்கிற இடத்தில் பெய்யும். மொட்டைமாடி தண்ணீரை harvesting செய்வதற்குப் பெயர் roof top harvesting என்று சொல்வோம் ஆங்கிலத்தில். அது ஒரு சில குழாய்கள் மூலமாகத்தான் கீழே வரும். எனவே அந்தக் குழாய்களை இணைத்து ஒரு வடிகட்டி தொட்டிமாதிரி சிறியதாக கட்டி, அதை வீட்டில் நிலத்தடி நீர் தொட்டி ஒன்று இருக்கும். மெட்ரோ வாட்டர் வருவதற்காகத் தொட்டி தரையின் கீழ் கட்டியிருப்பார்கள். அந்தத் தொட்டியில் இந்த மொட்டைமாடி மழைநீரை செலுத்தி உடனடித் தேவைக்கு சேமிக்கலாம்.

mazhai neer segarippu6மழைநீரை இரண்டு விதமாகத்தான் சேமிக்க முடியும். ஒன்று உடனடித் தேவைக்கு சேமிப்பது, ஒரு தரைத்தொட்டியிலோ அல்லது நெகிழித் தொட்டியிலோ செலுத்தி சேமிக்கலாம். மற்றொன்று நிலத்தில் செலுத்தி, நிலத்தடி நீராக சேமிக்கலாம். தேவைக்கு ஏற்ப செய்து கொள்ளவேண்டும். மெட்ரோ வாட்டரே வராத இடங்களில் தொட்டிக்கு மாற்றி சேமிக்கலாம். வேண்டுமென்றால் வடிகட்டி தொட்டி உருவாக்கி சேமிக்கலாம். கூரை வடிவில் இருக்கிற வீடுகளில் ஒரு குழாயை பாதியாகவெட்டி கூறையின் விளிம்பில் வைத்து அதில் அந்த கூரை தண்ணீர் விழுந்து அதில் ஒரு strobe கொடுத்துவிட்டீர்கள் என்றால் ஏதாவது ஒரு பக்கம் இறக்கிவிடலாம். அதை இறக்கிவிட்டால் அந்த இடத்தில் சேமிக்கலாம். உண்மையான கூரையாக இருந்தாலுமே அதில் ஒரு நெகிழி உறையை மேலே விரித்துவிடலாம். விரித்துவிட்டால் தண்ணீர் அழகாக ஓடிவரும். half round gutter அதாவது ஒரு குழாயை எடுத்து பாதியாக வெட்டி அதில் விழ வைத்து அதை எடுத்துச்சென்று ஒரு தொட்டியில் சேமிக்கலாம். உடனடித் தேவைக்கு சேமிக்கத் தேவையில்லை என்றால், அதாவது மெட்ரோ வாட்டர் நிறைய வருகிறது என்றால் நிலத்தடி நீராக சேமிக்கலாம்.

mazhai neer segarippu7கசிவுநீர் கிணறு என்று நாங்கள் ஏற்படுத்துவோம், ஆங்கிலத்தில் recharge well என்று சொல்லுவோம். சிமெண்ட் உறைகள் விற்கும், அந்த உறைகளை வாங்கி ஒரு கிணறு மாதிரியே ஏற்படுத்துவோம், உறைகிணறு என்று சொல்வார்கள், அதை ஏற்படுத்தி அதில் கொண்டுபோய் மொட்டைமாடி தண்ணீரையும் விடலாம். வீட்டைச்சுற்றி பெய்யும் மழையை வாயில் வழியாக தெருவுக்குத்தான் செல்லும். அதை வாயிலில் தடுத்து அதையும் ஒரு கசிவுநீர் கிணற்றில் விட்டு நிலத்தடிநீராக சேமிக்கலாம். நிலத்தடிநீராக சேமிப்பதற்கு வடிகட்டி தேவையில்லை. நம்ம பூமிதான் வடிகட்டி. ஒவ்வொரு துளி மழைநீரையும் பூமியில் கொண்டுபோய் சேர்த்துவிட்டீர்கள் என்றால் அது நிலத்தடிநீரை அதிகப்படுத்தும். ஒன்று roof top harvesting மற்றொன்று வீட்டைச்சுற்றி பெய்கிற மழைநீரை வாயிலில் தடுத்து அதை சேமிக்கிற ஒரு முறை, இந்த இரண்டுதான், வேறு எதுவும் செய்யமுடியாது.

நமக்கு இரண்டு பருவமழைதான். சென்னைக்கு தென்மேற்கு என்று பெய்யும், சூன் மாதம் ஆரம்பித்து செப்டம்பர் வரையிலும் பெய்யும். வடகிழக்கு பருவமழை என்று மற்றொன்று உள்ளது, அது அக்டோபர் மாதம் ஆரம்பித்து டிசம்பர் மாதம் வரையிலும் பெய்யும். ஆனால் 70 சதவிகிதம் நமக்கு வடகிழக்கு பருவமழையில்தான் மழை கிடைக்கும். தென்மேற்கில் அவ்வளவாக கிடைக்காது, 20 அல்லது 25 சதவிகிதம்தான் கிடைக்கும். அதனால் இந்த மழைக்காலத்திலும் நாம் மழைநீரை சேமிக்க தயாராக இருக்கவேண்டும். ஆனால் 2003ல் பருவமழை சரியாக பெய்யவில்லை, 2004லேயும் பெய்யவில்லை ஆனால் 2005ல் 130 சென்டிமீட்டர் பெய்யவேண்டிய இடத்தில் 250 பெய்தது. அப்பொழுது இந்த மழை இல்லத்தில் ஒரு கணக்கெடுப்பு எடுத்தோம். மக்களுக்கு என்ன பலன் கிடைத்திருக்கிறது என்று பார்க்கலாம் என்று, நூறு வீட்டை தேர்ந்தெடுத்து கிணறு இருக்கிற வீடாகச் சென்று அவர்களிடம் ஒரு வருடத்திற்கு முன்பு எவ்வளவு இருந்தது, இப்பொழுது எவ்வளவு இருக்கிறது என்று பார்க்கச் சொன்னதில், நிலத்தடி நீர் மட்டம் 6 மீட்டர் உயர்ந்து காணப்பட்டது. மிக அருமை. நிறையபேர் 10 வருடம், 20 வருடமாக என்னுடைய கிணறு வற்றித்தான் இருந்தது, இப்பொழுதுதான் அதில் தண்ணீர் வந்திருக்கிறது. அப்படியே நீர் அட்டவணை உயர்ந்து காணப்பட்டது, இது ஒரு பக்கம்.

mazhai neer segarippu13மற்றொரு பக்கம் கோவில் குளங்கள். சென்னையில் 39 கோவில்குளங்கள் இருக்கிறது. உங்களுக்குத் தெரியுமோ, தெரியாதோ அந்த 39 கோவில் குளங்களிலும் கிரிக்கெட்தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதை விளையாட்டு மைதானமாகத்தான் பயன்படுத்தி வந்தார்கள். மயிலாப்பூர் கோவில் குளத்திலே கிரிக்கெட் விளையாடுவது போல் புகைப்படமே இருக்கிறது. ஏனென்றால் அவ்வாறு வற்றிக்கிடந்தது. ஆனால் 2005 மழைக்குப் பிறகு அனைத்து கோவில் குளத்திலும் தண்ணீரைப் பார்க்க முடிகிறது. கோவில் குளத்தில் எப்படி தண்ணீரைப் பார்க்க முடியும் என்றால், அந்த பகுதியில் இருக்கிற நிலத்தடி நீர் மேலே சென்றால்தான் குளத்தில் தண்ணீரைப் பார்க்கலாம். உதாரணமாக மயிலாப்பூர் கோவில் குளம், திருவான்மியூர் கோவில் குளம். இவையனைத்தும் 14 வருடமாக வற்றித்தான் இருந்தது. அதில் எல்லாம் இன்றைக்கு தண்ணீரைப் பார்க்க முடிகிறது. இதற்கு முக்கியக் காரணம் மழைநீர் சேமிப்பை எல்லோரும் செய்ததுதான். 2005ல் நல்ல மழை பெய்தது அது மற்றொரு முக்கியக் காரணம். இதுதான் பலன்கள். இதற்கு மற்றொரு பலன் என்னவென்றால் நிலத்தடிநீர் ஒருவேளை மோசமாக இருந்தது என்றால், ஒரு பகுதியில் மழைநீரை சேமித்தோம் என்றால் தரம் மேம்படும். மோசமாக இருக்கிற தண்ணீரும் நல்ல தண்ணீராக மாறுவதற்கு இந்த மழைநீர் சேமிப்பினால் நல்ல வாய்ப்பு இருக்கிறது. இதுதான் நகர்புறங்களில் மழைநீர் சேமிக்கவேண்டிய ஒரு முறை.

கேள்வி: மழைநீர் சேமிப்பினால் ஏற்படக்கூடிய பயன்கள் என்னவென்று கூறுங்கள்?

mazhai neer segarippu2பதில்: நிலத்தடிநீர் மட்டம் உயரும், நாம் அரசாங்கத்தை நம்பி இருக்கவேண்டாம் தண்ணீருக்கு. என் வீட்டுக் கிணறே எனக்கு நன்றாக தண்ணீர் கொடுக்கிறது, அது போதும் எனக்கு என்று சொல்லலாம். இரண்டாவது தரமும் மேம்படும், தன்மை மேம்படும். நிறைய இடங்களில் மெட்ரோ வாட்டர் வரவில்லை. அங்கெல்லாம் உங்களுடைய கிணற்றில் தண்ணீர் இருந்தது என்றால் நீங்கள் தாராளமாக அதை பயன்படுத்தி பயனடையலாம்.

கேள்வி: இந்த மழைநீர் சேகரிப்பு என்பது அரசின் கடமையா? அல்லது தனிமனிதனுடைய கடமையா?

பதில்: இது ஒவ்வொரு மனிதனுடைய கடமை. அது அரசாக இருக்கட்டும், தனிமனிதனாக இருக்கட்டும். நீங்கள் ஒரு வீடு கட்டுகிறீர்கள், கட்டி ஆழ்குழாய் போடுகிறீர்கள், நிலத்தடி நீரை நம்பியிருக்கிறீர்கள். அதை காப்பாற்றவேண்டிய பொறுப்பு யாரிடம் உள்ளது, நம்முடையதுதானே. யார் போர்வெல் போட்டார்களோ அவர்தானே காப்பாற்றவேண்டும். அதனால் அந்த இடத்தில் தனி மனிதன். நாங்கள் ஆங்கிலத்தில் macro level, micro level என்று சொல்லுவோம். micro level என்றால் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தனி மனிதனுடைய கடமை.

பொது இடங்களில் செய்யவேண்டியது அரசாங்கத்தினுடைய கடமை. ஏரிகளை தூர் வாருவது, சாலைகளில் பெய்யும் மழையை நாம் சேமிக்க முடியாது, அதை அரசாங்கம்தான் சேமிக்கவேண்டும். இப்பொழுது மழைநீர் வடிகால் என்று கட்டி அதை கொண்டுசென்று கடலில் விட்டுவிடுகிறார்கள். அது மிகவும் கொடுமையான விடயம், அதை செய்யக்கூடாது. நமக்கு மெத்தனமான போக்குதான் இருக்கிறது தண்ணீரைப்பற்றி, அது மாறவேண்டும்.

mazhai neer segarippu10உணவை விட தண்ணீர் முக்கியம் என்று நினைப்பவன் நான். ஏனென்றால் உணவில்லாமல் பல நாட்கள் வாழ்ந்துவிடலாம், தண்ணீர் இல்லாமல் ஒரு நாள்கூட வாழமுடியாது. தண்ணீர் நிறைய இருக்கிறதே, என்றைக்கும் கிடைக்கும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். இது ஒரு தவறான கண்ணோட்டம். பெரும்பாலுமே சென்னையில் நீரை விரயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாவது காசு கொடுத்தால் வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள், அது உண்மையே கிடையாது. உன்னிடம் நிறைய பணம் இருக்கும், ஆனால் வாங்குவதற்கு தண்ணீர் இருக்கவேண்டுமே. மெட்ரோ வாட்டரிலேயே ஒரு வாரம் கழித்துத்தான் தண்ணீர் வழங்குகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு நிறையபேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது நாம் வீட்டில் இருக்கிற மழைநீரை சேமித்து நம்முடைய நிலத்தடிநீரை அதிகப்படுத்தி வாழ்வது ஒரு நல்ல வாழ்க்கை, பெருமைப்படவேண்டிய வாழ்க்கை. ஆனால் நான் அரசாங்கத்தைத்தான் நம்பி இருப்பேன், என்னிடம் பணம் இருக்கிறது என்றெல்லாம் நினைக்கமுடியாது.

உதாரணத்திற்கு ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு பால் மாற்றுகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், ஒரு துளி கூட வீணாகாமல்தானே விடுகிறோம். இதே தண்ணீரை ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு மாற்றினால் கவனக்குறைவாக இருப்போம். அப்படி இருக்கக்கூடாது. பால் விலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது தண்ணீரும், அருகில் செல்லவில்லை நெருங்கிக்கொண்டே இருக்கிறது.

அந்தக் காலத்தில் தண்ணீர் நிறைய இருந்தது, ஆனால் சிக்கனமாகவும் இருந்தார்கள். இந்தக் காலத்தில் தண்ணீர் குறைவாக இருக்கிறது, ஆனால் சிக்கனமே இல்லை. கண்டிப்பாக சிக்கனமாகத்தான் இருக்கவேண்டும். தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள், அதற்காக வீணாக்காதீர்கள். வண்டியை வளைகுழாயை வைத்து கழுவுவார்கள், எதற்கு நாமே வளை குழாயை வைத்து குளிக்க முடியாது, காரை எதற்கு வளை குழாயை வைத்து கழுவவேண்டும். ஒரு வாளியில் தண்ணீரை வைத்து துடைத்து கழுவலாம். அந்த மாதிரியெல்லாம் செய்யவேண்டும். செடிக்கு தண்ணீர் ஊற்ற பூவாளி என்று ஒன்று இருக்கும், அதில்தான் அன்று விடுவார்கள். ஆனால் இன்று வளை குழாய் வழியாகவே விடுகிறார்கள். ஏனென்றால் இப்பொழுது விடுவது எல்லாமே தோட்டக்காரன்தான். காசு கொடுத்து வாங்குபவர் முதலாளி, தண்ணீர் விடுவது தோட்டக்காரன். அதனால் ஒரு ஈடுபாடே இல்லாமல் இருக்கிறது. மெத்தனமான போக்கை கண்டிப்பாகக் குறைக்கவேண்டும். பணம் இருந்தாலும் தண்ணீர் கிடைக்காத நாள் வரும், கண்டிப்பாக வரும், அதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும். இன்றைக்கே சிக்கனத்தை கடைபிடித்தோம் என்றால் வருங்காலத்தில் வருத்தப்பட தேவையில்லை.

கேள்வி: மழை நீர் சேகரிக்க அரசும், அரசு சாரா நிறுவனங்களும் வேறு முயற்சிகள் என்னென்ன எடுத்து வருகிறார்கள்?

mazhai neer segarippu17பதில்: இப்பொழுதுதான அரசு, பொது இடங்களில் சேகரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கோவில் குளங்களைச் சுற்றி பெய்கிற மழைநீரையெல்லாம் கோவில் குளங்களுக்குத் திருப்பிவிட்டு சேமிக்கப் பார்க்கிறார்கள். மழைநீர் வடிகால் கட்டுகிறார்களே, அதையும் அவர்களோடு சேர்ந்துதான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். அரசும் அரசு சாரா நிறுவனங்களும் இணைந்துதான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். எனவே அரசாங்கத்தில் மிகவும் ஈடுபாடோடு செய்துகொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் தண்ணீர் பிரச்சனை எல்லோருக்குமே தெரியும், பரவலாக இருக்கிறது. தண்ணீர் பிரச்சனை(கஷ்டம்) வரும்பொழுதுதான் மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் கிடைக்கிறது. அது இப்பொழுது கிடைத்திருக்கிறது. அரசு சார்பிலும் நன்றாக செய்துகொண்டிருக்கிறார்கள். என்னவென்றால் மழைநீர் சேமிப்பின் கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு மானியம்கேட்டார்கள் அதாவது நான் செய்கிறேன், அரசாங்கத்தில் ஏதாவது சலுகை கொடுப்பார்களா என்று கேட்டார்கள். அதற்கு முதலமைச்சர் திட்டவடடமாக முடியாது என்றார். நீ உன்னுடைய வீட்டு தண்ணீரைத்தான் காப்பாற்றிக் கொள்கிறாய், அதில் உனக்குதான் ஆர்வம் இருக்கவேண்டும். மானியம் கொடுத்தால் அதில் பல பிரச்சனை இருக்கிறது. அதில் நிறைய ஊழல் (corruption) வர வாய்ப்புகள் இருக்கிறது. இப்பொழுதுதான் மக்கள் உணருகிறார்கள் இந்த திட்டம் எவ்வளவு நல்லது என்று.

கேள்வி: இறுதியாக மக்களுக்கு நீங்கள் கூறவிரும்பும் கருத்து என்ன?

mazhai neer segarippu24பதில்: ஒவ்வொரு துளி மழைநீரையும் நாம் சேமிக்க எல்லாவித ஏற்பாடுகளும் செய்யவேண்டும். மொட்டைமாடியை சுத்தமாக வைத்துக்கொள்வதிலிருந்து, வீட்டைச்சுற்றி பெய்கிற மழைநீர் தெருவுக்கு சென்றுவிடாதபடியும் அதாவது ஒவ்வொரு தனிமனிதனும் தன்னுடைய வீட்டைவிட்டு ஒரு துளி மழைநீரைக்கூட வெளியில் அனுப்பமாட்டேன் என்று ஒரு சபதம் எடுத்துக்கொண்டு, மழைநீரை சேமித்தார்கள் என்றால் கண்டிப்பாக பலன் கிடைக்கும். இது மிக முக்கியம். இரண்டாவது திறந்த கிணறுகள் நிறைய இருக்கிறது நகரத்தில். அதையெல்லாம் மூடிக்கொண்டு வருகிறார்கள், அது தவறான ஒரு செயல். நம்மை வருங்காலத்தில் காப்பாற்றக்கூடியது கிணறுகள்தான். நாம் செய்கிற மழைநீர் சேமிப்பு எல்லாமே அந்த கிணற்றுக்குத்தான் தண்ணீர் கொடுக்கிறது, போர்வெல்லுக்குக் கொடுப்பது கிடையாது. அதனால் ஒரு வங்கியில் பணத்தைப் போட்டுவிட்டு இன்னொரு வங்கியிலிருந்து பணத்தை எடுக்கக்கூடாது. கிணறுகள் மிகமிக முக்கியம். எனவே இருக்கிற கிணறை மூடாதீர்கள், அப்படி கிணறு இல்லையென்றால் உறைகிணறாகவே போட்டு இருபது அல்லது முப்பது அடி ஆழம் போட்டு அதை நிலத்தடி நீர் ஆதாரமாக கண்டிப்பாக மக்கள் வைத்துக்கொள்ளவேண்டும்.

சிறகுக்கு நேர்காணல் அளித்தமைக்கு மிக்க நன்றி!


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை மழைநீர் மையத்தின் இயக்குநர் சேகர் ராகவன் அவர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது