மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உங்கள் பழையவீட்டை புதியதாக்குங்கள்

சித்திர சேனன்

Oct 31, 2015

pazhaya veettai1சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய நண்பர் ஒருவர், தனது சொந்த ஊரிலுள்ள வீட்டின் நிமித்தம் என்னை சந்தித்தார். அந்த வீடு ஏராளமான பிரச்சினைகளுடன் இருந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவரும், அவரது மனைவியும் இணைந்து முதன் முதலாக கட்டிய வீடாகும். அந்த சொத்தின் மீது அவர்கள் ஆழ்ந்த பற்றுதல் கொண்டிருந்தனர்.

அந்த வீட்டின் மேற்கூரை பூச்சுகளையெல்லாம் இழந்து, கம்பிகள் எல்லாம் துருப்பிடித்துக் கிடந்தது. எந்த நேரத்தில் மேற்கூரை இடிந்துவிழுமோ என்ற பயத்துடன் உள்ளே செல்லவேண்டியிருந்தது. பூச்சுகளை மட்டும் சரிசெய்து விட்டுவிடலாம் என்ற எண்ணத்திற்கு வரமுடியாதபடி பிரச்சினை வேர்விட்டிருந்தது. கூரையை மாற்றுவதைத்தவிர வேறு வழியில்லை.

அதுமட்டுமின்றி அனைத்து சுவர்களும் வெடிப்புகளுடன் காணப்பட்டன, கண்ட இடமெல்லாம் கரையான் தென்பட்டது. என் நண்பரின் பெற்றோர் அந்த வீட்டில் வசித்து வந்தனர். இந்த வீட்டின் பிரச்சனைகளினால் அவர்களின் தினசரி வாழ்வே போராட்டமாக இருந்தது.

pazhaya veettai3என்னை நண்பர் அந்த வீட்டிற்கு அழைத்தபோது, நான் சென்று பரிசோதனைகளை மேற்கொண்டேன். உடனடியாக எனக்கு என்ன தோன்றியது என்றால், தண்டமாக வீட்டிற்கு செலவு செய்வதைக் காட்டிலும் வீட்டை விற்றுத் தொலைத்துவிடுவதே மேல் என்பதாகும். ஆனால் வீட்டை வாங்குபவரின் நிலையை எண்ணிப் பார்க்கும்போது இதுபோன்ற பாழான வீட்டை மேற்பூச்சுகள் செய்து, அவரின் தலையில் கட்டுவது முற்றிலும் நியாயமில்லை என்று பட்டது, நண்பரும் அதே எண்ணத்தைக் கொண்டிருந்தார். மேற்கூரையை முற்றிலும் தகர்த்து எறிந்துவிட்டு, அவ்விடத்தில் புதிய கூரையை அமைப்பதே சரியானதாக இருந்தாலும், அதை செய்ய எனக்கு மனமில்லை. எனது நண்பர் மேற்கூரையை இழந்து தனது வீடு எலும்புக்கூடுபோல் நிற்பதைக் காண சக்தி அற்றவராக இருந்தார்.

சில நாட்கள் அந்த வீட்டைக்குறித்து நான் சலனம் கொண்டிருந்தேன், ஒரு உருப்படியான தீர்வைக் கொடுக்கமுடியவில்லையே என்ற வருத்தம் மிஞ்சியது. ஓரிரு நாள் யோசனைக்குப்பிறகு ஒரு தீர்வு தென்பட்டது. அது என்னவென்றால் பழைய கூரையை உடைக்காமலேயே, புதிய கூரையை ஏற்படுத்துவதாகும். அதை நான் விளக்கியபோது என் நண்பர் புரிந்து கொண்டார். அதனை எப்படி செய்வது என்பதை கீழே விளக்குகிறேன்.

  1. ஏற்கனவே உள்ள கூரையை தாங்குவதற்கு ஏற்ப சில இரும்புத் தூண்களை நிறுத்தி வைத்தல். மாடியில் சுற்றுச்சுவர்களை சற்றே உடைத்துவிட்டு அதன் மேல் கூரை அமைய வழி ஏற்படுத்துதல்.
  2. பழைய கூரையின் மீது நெகிழி தாளை வைத்து அதன் மேலே புதிய கூரை அமைத்தல்.
  3. மூன்று வாரங்களுக்குப் பிறகு பழைய கூரையை நுணுக்கமான வெட்டும் முறைகளின் மூலம் வெட்டி பிரித்து எடுத்தல்.
  4. புதிய கூரையின் மீது சொருவோடு அமைத்து சுற்றுச்சுவர்களை சரிப்படுத்துதல், வர்ணம் தீட்டுதல்.

pazhaya veettai2இவ்வாறு பழைய கூரை எடுக்கப்பட்டு புதிய கூரை வேயப்பட்டது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்கூட, கூரை மாற்றப்பட்டிருப்பதை உணர்ந்திருக்க முடியாது. வெறும் சத்தங்கள் மட்டும் கேட்டிருக்கும்.

மற்ற பழுதுகளை மூன்றே மாதத்தில் சரிசெய்துவிட்டு, அந்த வீடு மேலும் ஒரு நாற்பது வருடங்கள் வாழத்தக்கதாக மாற்றப்பட்டது. இதற்கான செலவு புதிய வீட்டைக் கட்டுவதைக்காட்டிலும் குறைவானதாகவே ஆனது. மேலும் எனது நண்பர் அந்த வீட்டை சரிசெய்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி கொண்டார்.

எப்பொழுதுமே கட்டிடம் சார்ந்த பழுதுகளுக்கு, நல்ல நிபுனரை அணுகி தீர்வுகளைத் தேடினால் நமக்கு கட்டிடம் மிஞ்சும். எளிமையான முறைகளைக் கொண்டு பெரிய சொத்துக்களை நமக்கு பாதுகாக்க இயலும், அவற்றின் வாழ்வும் அதிகரிக்கும்.

இவ்வாறு செய்வதன் மூலம் சுற்றுச்சூழலை நீங்கள் பாதுகாக்குகிறீர்கள். ஏனென்றால், புதிய ஒரு கட்டிடத்தைக் கட்டும்பொழுது ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும் பழுது சரிபார்த்தல் குறைந்த பாதிப்பையே தரும்.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உங்கள் பழையவீட்டை புதியதாக்குங்கள்”

அதிகம் படித்தது