மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

438 நாட்கள்: கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை

தேமொழி

Nov 21, 2015

438 days1(ஜானதன் ஃபிராங்க்ளின் கட்டுரையின் மொழிபெயர்ப்பு)

நிலப்பரப்பில் இருந்து தொலைதூரத்தில், பசிபிக் பெருங்கடலின் மையத்தில், மார்ஷல் தீவுகளின் (Marshall Islands) கடற்காயலில் சென்று கொண்டிருந்த அந்தப் படகில் இருந்த கடலோரக் காவல்படையினர் தமது படகின் மேல்தளத்தில் சுருண்டு படுத்திருந்த அந்த உருவத்தை வெறித்துப் பார்த்தனர். அவர் பலநாட்கள் கடலில் தனித்துவிடப்பட்டவர் என்ற மறைக்கமுடியாத உண்மையை அவரது தோற்றம் காட்டியது. சிக்குப்பிடித்துப் புதர் போல மேல்நோக்கி மண்டியிருந்த தலைமுடியும், சீரற்று வளைந்த முடிக்கற்றையுடன், பலநாட்களாகச் சவரம் செய்யப்படாத ஒழுங்கற்ற தாடியும் கொண்டிருந்தார் அந்த மனிதர். மணிக்கட்டுகள் சிறுத்துப்போய், கணுக்கால்களும் வீங்கியிருந்த நிலையில் கொஞ்சமும் நடமாடாத முடியாதவராக அவர் இருந்தார். யாருடைய கண்களையும் சந்திக்க விருப்பமின்றிப் பார்வையைத் தவிர்த்து அவ்வப்பொழுது முகத்தையும் மூடிக் கொண்டார்.

எல் சல்வடோர் (El Salvador) நாட்டைச் சேர்ந்த 36 வயதான ‘ஹோஸே சல்வடோர் ஆல்வரெங்கா’ (José Salvador Alvarenga) என்ற மீனவர் தனது உதவியாளரான இளைஞருடன் பதினான்கு மாதங்களுக்கு முன்னர் மெக்சிகோவின் கடற்கரையிலிருந்து ஒரு சிறிய படகில் தனது பயணத்தைத் துவக்கினார். இப்பொழுது அவர் கரை ஒதுங்கிய இடத்திற்கு அருகில், மார்ஷல் தீவுகளின் தென்முனையில் இருக்கும் ஏபான் ஆட்டல் (Ebon Atoll) என்ற ஊருக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். புயலில் சிக்கி, தான் புறப்பட்ட இடத்திலிருந்து 6,700 மைல்களுக்கு அப்பால், கடலில் 438 நாட்கள் அலைக்கழிக்கப்பட்டு மீண்டிருக்கிறார்.

பசிபிக் கடலில் படகில் மிதந்தவண்ணம், நிலவு குறைவதையும் வளர்வதையும் ஓராண்டுக்கும் மேலாகப் பார்த்துக் கொண்டிருந்த ஆல்வரெங்கா, தனிமையையும், மனச்சோர்வையும், அவ்வப்பொழுது தோன்றிமறையும் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணங்களுடனும் போராடிக் கொண்டிருந்தார். ஆனால், காட்டுவிலங்குகளுடன் வாழ்வது போன்ற கற்பனையுலகில், மனப்பிரமைகளுடன், மிகத்தனிமையில் வாழ்ந்த அந்த வாழ்க்கை, கரைதிரும்பிய பின்னர் உலகப்புகழ் பெற்று, அனைவரும் ஆர்வத்துடன் அறிய விரும்பும் மனிதராக வாழப்போகும் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு அவரைத் தயார் செய்யவில்லை.

சில நாட்களுக்குப் பிறகு, ஆல்வரெங்கா பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அவரது குச்சி உடலை மறைத்த தொள தொளத்த பெரிய பழுப்புநிற சட்டையணிந்து, காவல்துறையினரின் படகில் இருந்து மெதுவாகவும், ஆனால் பிறர் உதவியின்றி இறங்கினார். நலிந்து ஒட்டி உலர்ந்த உடலுடன், நோய்ப்படுக்கையில் இருந்தவர் போன்ற தோற்றம் கொண்ட ஒருவரை எதிர்பார்த்த கூட்டத்தினரிடம் அவநம்பிக்கை அலைமோதியது. ஆல்வரெங்கா விரைவில் ஒரு புன்முறுவலை உதிர்த்துவிட்டு, படம் எடுத்த ஒளிப்படக் கருவிகளை நோக்கிக் கையசைத்தார். பலருக்கு அவரது தோற்றம் ‘காஸ்ட்அவே’ என்ற கடலில் தனித்துவிடப்பட்ட நாயகனாக ‘டாம் ஹான்க்ஸ்’ நடித்த ஹாலிவுட் படத்தின் பாத்திரத்தை நினைவூட்டியது. தாடியுடன் கரைமீண்ட மீனவரின் படம் விரைவில் எங்கும் பரவியது, சுருக்கமாக, ஆல்வரெங்கா என்ற பெயர் அனைவருக்கும் தெரிந்த பெயராகப் பேசப்பட்டது.

438 days2யாரால் கடலில் 14 மாதங்கள் தனித்து உயிர்வாழ முடியும்? ஹாலிவுட் கதாசிரியர்களால் மட்டுமே எல்லாம் மகிழ்ச்சிகரமாக இனிதே முடிந்தது என்று திரைக்கதை வசனம் எழுத முடியும். பத்திரிக்கையாளர்களுக்கு இவர் உயிர் பிழைத்த கதையை நம்பி ஏற்றுக்கொள்வது கடினமாக இருந்தது. துப்பறிந்ததில், ஆல்வரெங்கா படகில் கடலுக்குச் சென்றதற்குச் சாட்சிகள் பலர் இருந்தனர். அவரைக் காப்பாற்றுமாறு அவர் எழுப்பிய எஸ்ஓஎஸ் அபயக்குரல் செய்திகளுக்குச் சான்றுகள் இருந்தன. மெக்சிகோவில் இருந்து புறப்பட்ட அதே படகுடன் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் அவர் கரை ஒதுங்கிய பொழுது, அவர் உறுதியுடன் ஆணித்தரமாகப் பேட்டி கொடுக்க மறுத்துவிட்டார். மருத்துவமனை அறையின் கதவில் கூட அவரைத் தனித்துவிடும்படி செய்தியாளர்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டு செய்தி எழுதி வைத்திருந்தார். பிறகு, எல் சல்வடோரில் உள்ள தனது வீட்டில் கார்டியன் பத்திரிக்கைக்குப் பேட்டி அளித்த பொழுது, மிகவும் விரிவாக, தான் கடலில் ஓராண்டுக்கும் மேலாகத் தத்தளித்து, கொடுமையான துன்பங்களை எதிர்கொண்டு, உயிர்பிழைத்து கரைமீண்ட கதையை விவரித்தார். இதோ அவரது கதை …

கடந்த 2012 ஆண்டின் நவம்பர் மாதம் 18ஆம் தேதியன்று, ஒரு பெரும் புயலால் தாக்கப்பட்டதற்கும் மறுநாள், தனது காலின்கீழ் படகில் குளம் போல் நிரம்பும் கடல்நீரை ஆல்வரெங்கா பொருட்படுத்தவில்லை. ஒரு அனுபவமற்ற படகோட்டிக்கு வேண்டுமானால் அந்தச் சூழ்நிலை அச்சம் தந்திருக்கும். அலை மோதி படகு தத்தளிக்கும் பொழுது, பதற்றத்தில் அலையின் போக்கில் படகைச் செலுத்துவதில் கவனச் சிதறல் ஏற்பட்டிருக்கும். ஆல்வரெங்கா அனுபவசாலியான ஒரு கடலோடி, ஆபத்தைக் கையாள்வதிலும், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்தவர். தனக்கு உதவியாக உடன் வந்துள்ள, ‘எசீக்கில் கோர்டபா’ (Ezequiel Córdoba) என்ற அனுபவமற்ற இளைஞரின் உதவியுடன், கரையின் 50 மைல் தொலைவிலிருந்து, மெதுவாகக் கவனமாகக் கரையை நோக்கிப் படகைச் செலுத்த துவங்கினார்.

கொந்தளித்துப் படகில் மோதிய கடலலைகள் குடம் குடமாக நீரைப் படகில் வாரிக் கொட்டியது, படகு மூழ்குமோ அல்லது கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது. ஆல்வரெங்கா படகை செலுத்துவதில் கவனமாக இருக்க, கோர்டபா பதறிப் பதறி படகில் நிறையும் நீரை வாரி மொண்டு கடலில் வீசிக் கொண்டிருந்தார், அவ்வப்பொழுது நோகும் தோளுக்குச் சற்றே ஓய்வு கொடுத்துவிட்டு நீரை வெளியேற்றுவதைத் தொடர்ந்தார்.

438 days5இருபத்தைந்து அடி நீளத்திலும், ஆறடி அகலத்திலும், எந்த ஒரு உயரமான கட்டுமானமோ, கண்ணாடியோ, இயங்கும் விளக்கோ எதுவுமின்றி இருந்த ஆல்வரெங்காவின் படகு, கடலோடு கடலாக, கிட்டத்தட்ட தெளிவாகக் கண்டறிய முடியாத வண்ணம் இருந்தது. படகின் தளத்தில் குளிர்சாதனப் பெட்டியின் அளவு கொண்ட தொட்டி ஒன்றில் இரண்டு நாளாகப் பிடித்த சுறா, சூரை, மகிமஹி மீன்கள் நிறைந்திருந்தன. பிடித்த மீன்களைக் கரைக்குக் கொண்டு சென்றால், ஒரு வாரத்திற்குக் கவலையின்றி வாழத் தேவையான பணம் கிடைக்கும்.

ஆல்வரெங்காவின் படகில் பெட்ரோல் 70 கேலன்கள், குடிநீர் 16 கேலன்கள், தூண்டில் இரையாக 50 பவுண்ட் சார்டின் மீன்கள், 700 தூண்டில் கொக்கிகள், பல மைல் நீளத்திற்குத் தூண்டில் கயிறுகள், ஒரு மண்டா ஈட்டி, மூன்று கத்திகள், நீர் வாரி வாளிகள் மூன்று, நீர்ப்புகா பிளாஸ்டிக் உறையினுள் கைபேசி ஒன்று, நீர்ப்புகா பாதுகாப்பு அற்ற நிலையில் புவியிடத்தை அறிய உதவும் ஜிபிஎஸ் கருவி ஒன்று, அரையளவு மின்கல மின்சக்தி கொண்ட இரு-வழி வானொலி ஒன்று, படகின் மோட்டாரைப் பழுது பார்க்க அத்தியாவசியக் கருவிகள் ஒருசில, மற்றும் 200 பவுண்ட் பனிக்கட்டிகள் உட்படத் தேவையான பொருட்கள் பல நிரம்பியிருந்தன.

ஆல்வரெங்கா பயணத்திற்காகப் படகை, தனது நம்பிக்கைக்குரிய நண்பரும், வழக்கமாகத் தனக்கு உதவும் தோழர், ‘ரே பெரெஸ்’ (Ray Perez) உதவியுடன் தயார் செய்திருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரால் வர இயலாமல் போனது. கடற்பயணத்தை நிறுத்த விரும்பாத ஆல்வரெங்கா பதிலுக்குக் கோர்டபாவை உதவிக்கு ஏற்பாடு செய்து கொண்டார். ‘பின்யாட்டா’ (Piñata) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட 22 வயதான கோர்டபா அந்தக் கடற்காயல் பகுதியின் மறுமுனையில் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த கிராமத்தின் கால்பந்தாட்டக் குழுவின் சிறந்த விளையாட்டு வீரர் என்ற புகழ் பெற்றவர் கோர்டபா. ஆல்வரெங்காவும் கோர்டபாவும் அன்றுவரை ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டதுமில்லை, சேர்ந்து வேலை பார்த்ததும் இல்லை.

ஆல்வரெங்கா பதட்டத்துடன் படகை லாவகமாக, மெதுவாகக் கரையை நோக்கி செலுத்திக் கொண்டிருந்தார். நீர்ச்சறுக்கு விளையாடுபவர் அலைகளினூடே நேர்த்தியாக வழுக்கிச் செல்வது போலப் படகைச் செலுத்தினார். வானிலை மோசமடையத் துவங்கியதும் கோர்டபாவின் உறுதி குலையத் தொடங்கியது. சில நேரங்களில் படகில் நிரம்பும் நீரை வாரி வீச மறுத்துவிட்டு, படகின் கம்பியை இருகரங்களாலும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு வாந்தி எடுப்பதும் அழுவதுமாக இருந்தார். இந்த வேலைக்காக அவர் 50 டாலர் ஊதியத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார். தடகள விளையாட்டு வீரர் போன்ற உறுதியான திடகாத்திரமான உடல்வாகு கொண்ட கோர்டபாவினால் எந்தக் குறையும் சொல்லாமல் 12 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்ய முடியும். ஆனால் நீரை வாரி வீசி மோதும் அலைகளில், தத்தளிக்கும் படகில் கரை நோக்கிச் செல்லும் அந்தப் பயணம்? தங்களது சிறு படகு உடைந்து நொறுங்கி, அவர்கள் சுறா மீன்களுக்கு இரையாகப் போகிறார்கள் என்று அவர் உறுதியாக நம்பத் தொடங்கியதால் அச்சத்தில் அலறத் தொடங்கினார்.

இப்பொழுது புயல் மிகத் தீவிரமாகிவிட, கரையோர துறைமுகத்தின் அதிகாரிகள் மீன்பிடி படகுகளைக் கடலுக்குள் செல்ல அனுமதிக்காத நிலைமையாக மாறிவிட்ட நேரம்; அந்தச் சூழ்நிலையில் கடலில் படகின் சுக்கானை இறுகப்பிடித்தபடி அமர்ந்திருந்த ஆல்வரெங்காவோ மிக உறுதியுடன் கரை நோக்கி படகைச் செலுத்தினார். கடைசியாக மழை மேகம் கொஞ்சம் விலகி, கடலின் மூட்டம் நீங்கி கரைவரை பலமைல்களுக்குத் தெளிவாகப் பார்க்க முடிந்தது. காலை 9 மணி போலத் தொடுவானத்தில் கரையின் மலை தெரிந்தது. கரையில் இருந்து இரண்டு மணி நேரப் பயணத் தொலைவில் இருந்த பொழுது அவர்களது படகின் மோட்டார் இயந்திரம் பழுதாகி, திக்கித் திணறி உயிரை விட்டது. ஆல்வரெங்கா தனது முதலாளி வில்லி (Willy) யை ரேடியோவில் தொடர்பு கொண்டார்.

“வில்லி! வில்லி! வில்லி! எனது படகின் மோட்டார் பழுதாகிவிட்டது.”

கரையோரத்தில் தனது படகிலிருந்து முதலாளி வில்லி குரல் கொடுத்தார், “அமைதியாய் இருப்பா, எங்கிருக்கிறாய் உன் ஜிபிஎஸ் காட்டும் இடம் எது, சொல்லு.”

“எங்கள் ஜிபிஎஸ் வேலை செய்யவில்லை, கருவி பழுதாகிவிட்டது”

“நங்கூரத்தைப் போடு” என்றார் வில்லி.

“எங்களிடம் நங்கூரமும் இல்லை” என்றார் ஆல்வரெங்கா. கிளம்பும் முன் படகில் நங்கூரம் இல்லாததை அவர் கவனித்திருந்தார், இருந்தும் ஆழ்கடலுக்குப் போவதால் அதற்குத் தேவையிருக்காது என்று அதனைப் பொருட்படுத்தவில்லை.

“சரி, நாங்கள் வந்து உன்னை மீட்கிறோம்” என்றார் வில்லி.

“சீக்கிரம் வாருங்கள், நான் மிகவும் ஓய்ந்து போய்விட்டேன்,” என்று பதிலுக்குக் கத்தினார் ஆல்வரெங்கா. இதுதான் கரையில் இருந்தவர்கள் கடைசியாக அவர் குரலைக் கேட்டது.

438 days4படகின்மீது பேரலைகள் மோதத் துவங்க ஆல்வரெங்காவும் கோர்டபாவும் இணைந்து வேலை செய்யத் தொடங்கினர். காலைச் சூரிய ஒளியில், அவர்கள் அளவு உயரமுள்ள பெரிய அலைகள் அவர்களை நோக்கி வருவதைப் பார்த்தார்கள். அவர்கள் மீது அவை மோதிப் பிரிந்தது. இருவரும் அந்தத் திறந்த படகின் ஓரத்தில் சாய்ந்து, இறுக பற்றிக் கொண்டு உருண்டுவிழாமல் சமாளித்தார்கள்.

அலைகளின் போக்கு கணிக்க முடியாத வகையில் மாறிக்கொண்டே இருந்தது. பேரலைகள் ஒன்றுடன் ஒன்று மோதி அறைந்து, நடுவானில் ஒருங்கிணைந்து, சக்தியெல்லாம் ஒன்று திரட்டி, பெரும் சுவர் போல் உயர்ந்து எழும்பி சிறிது நேரத்திற்கு மிக உச்சத்திற்கு அவர்களைத் தூக்கியது. மூன்று மாடி உயரத்திற்குத் தூக்கிய பிறகு, உயரத்தில் இருந்து விழும் எலிவேட்டர் போலத் திகிலை ஏற்படுத்தும் வண்ணம் உடனே தடாலெனக் கீழே போட்டது. அவர்களது கடற்கரைக் காலணிகள் தரையில் நிலைத்து நிற்க உதவாமல் வழுக்கியது.

ஆல்வரெங்காவிற்குக் காரணம் புரிந்தது, குறைந்தது 500 கிலோ அளவிற்குப் புதிதாய்ப் பிடித்த மீன்களின் பாரம்தான் படகை நிலைகொள்ளாமல் அலைக்கழிக்கிறதென்று. அவருக்குத் தனது முதலாளி வில்லியைக் கலந்தாலோசிக்க நேரமுமில்லை. தனது உள்ளுணர்வு சொல்வது போல நடக்க எண்ணிய அவர் பிடித்த மீன்கள் அத்தனையையும் கடலில் கொட்ட முடிவெடுத்தார். அவர்கள் ஒவ்வொரு மீனாகக் குளிர்ப்பதனப் பெட்டியில் இருந்து இழுத்து வந்து, அந்த உயிரற்ற மீன்களைக் கடலில் வீசி வீசி எறிந்தார்கள். இப்பொழுது கடலில்தவறி விழுந்தால் அதைவிட ஆபத்து வேறேதும் இல்லை, தூக்கி வீசிய மீன்களின் இரத்த வாடையால் சுறாக்கள் ஈர்க்கப்பட்டிருந்தால் அவர்களை வந்து தாக்கும்.

ஆத்திரம் அடைந்த ஆல்வரெங்கா மீனைக் கொல்வதற்காகப் பயன்படுத்தும் கனமான தடியை எடுத்து பழுதாகிப்போன மோட்டார் இயந்திரத்தை ஓங்கி ஓங்கி அடித்தார். அடுத்துப் படகில் இருந்த அதிகப்படி பனிக்கட்டிகள், பெட்ரோல் ஆகியவற்றை எடுத்துக் கடலில் வீசினார்கள். ஆல்வரெங்கா 50 மிதவைகளை இணைத்துக் கட்டி ஒரு தற்காலிகக் கடல் நங்கூரமாக அதனைக் கடலில் வீசி மிதக்கவிட்டு, அதன் இழுவையினால் படகை கொஞ்சம் நிலை நிறுத்தினார். ஆனால் காலை 10 மணி போல ரேடியோவும் பழுதாகிவிட்டது. புயல் தொடங்கிய முதல் நாளின் நண்பகலிலேயே இந்த அலைக்கழிப்பு இன்னமும் ஐந்து நாட்களுக்காவது தொடரும் என அவர் நினைத்தார். ஜிபிஎஸ் கருவி பழுதாகிப் போனது பெரிய சிரமத்தைத் தந்தது. பழுதான மோட்டார் ஒரு பேரழிவு, இப்பொழுது தொடர்பு கொள்ள ரேடியோவும் இல்லாமல் அவர்கள் சுயமாக எதையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

புயல் அந்த மதியம் முழுவதும் அவர்களைப் படகில் தேங்கும் நீரை வாரி வாரி வெளியேற்ற வைத்து நிலைகுலைய வைத்தது. ஒரே வேலையை, அதே தசைகளுக்கு வேலைக் கொடுத்து மீண்டும் மீண்டும் மணிக்கணக்காகச் செய்தும், பாதி அளவு நீரை மட்டுமே அவர்களால் வெளியேற்ற முடிந்தது. இருவருமே கலைத்து மயங்கும் நிலைக்குப் போனாலும், ஆல்வரெங்காவிற்குக் கோபமும் தாளவில்லை. மீண்டும் தடியைக் கொண்டு பழுதாகிப் போன மோட்டாரை அடித்து நொறுக்கினார், வேலை செய்யாத ஜிபிஎஸ் கருவியையும், ரேடியோவையும் சீற்றத்துடன் கடலில் விட்டெறிந்தார்.

சூரியன் மறைந்தது, புயல் தொடர்ந்தது, ஆல்வரெங்காவையும் கோர்டபாவையும் குளிர் வாட்டியது. பெரிய குளிர்ப்பதனப்பெட்டி அளவில் இருந்த, பனிக்கட்டியை உருகாமல் வைக்கும் பனிப்பெட்டியைப் புரட்டிப் போட்டு அதற்குள் இருவரும் சென்று முடங்கிக் கொண்டனர். நனைந்து சொட்டும் ஈரத்துடன், குளிரில் விரைத்துப் போன கைகளை அவர்களால் மடக்க முடியவில்லை. ஒருவரை ஒருவர் தழுவி கொண்டு, தங்கள் கால்களால் மற்றவர் உடலை அரவணைத்துக் கொண்டு தங்களைச் சுருட்டிக் கொண்டனர். ஆனால் புயல் மேலும் நீரைப் படகில் கொட்டவே படகு மேலும் மூழ்கும் நிலைக்குப் போனது. இருவரும் ஒருவர் மாற்றி ஒருவர் 10 அல்லது 15 நிமிடங்களுக்கு ஒருமுறை பனிப்பெட்டியில் இருந்து வெளிவந்து வேக வேகமாக நீரை வாரி வெளியேற்றினார்கள். முன்னேற்றம் கொஞ்சமாக இருந்தாலும், மெதுவாக அவர்கள் காலடியில் குளம் போல் நிரம்பியிருந்த நீரின் அளவு குறையத் தொடங்கியது.

இருள் சூழ்ந்ததால் அவர்கள் உலகம் சுருங்கியது, சக்தி வாய்ந்த புயல் கரையைக் கடக்கும் பொழுது, மீனவர்கள் இருவரையும் மேலும் கடலின் உட்புறமாகத் தொலைவுக்குத் தள்ளிவிட்டது. அவர்கள் ஒருவேளை முதல்நாள் மீன்பிடித்த பழைய இடத்திற்கே வந்துவிட்டனரோ? அவர்கள் வடக்கே ‘அகபுல்கோ’ (Acapulco) நோக்கிப் போகிறார்களா அல்லது தெற்கே ‘பனாமா’ (Panama) நோக்கிப் போகிறார்களா? நட்சத்திரங்கள் மட்டுமே வழிகாட்டியாக இருக்க, வழக்கமாகச் செய்வது போலத் தொலைவைக் கணக்கிட இயலாது போனார்கள்.

—————————————————————-

குறிப்பு:

“438 நாட்கள்: கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் உண்மைக் கதை”  என்ற இக்கட்டுரை வெளியாகவிருக்கும்,  ’438 Days: An Incredible True Story of Survival at Seas’ என்ற நூலின் சுருக்கம்.  நூலின் ஆசிரியரும், கார்டியன் செய்தித்தாளின் செய்தியாளருமான திரு. ஜானதன் ஃபிராங்க்ளின் அவர்கள் எழுதி கார்டியனில் வெளியான அவரது ஆங்கிலக் கட்டுரை, கட்டுரை ஆசிரியரின் அனுமதி பெற்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

கட்டுரைக்கு உதவிய பதிவு:

Lost at sea: the man who vanished for 14 months

http://www.theguardian.com/world/2015/nov/07/fisherman-lost-at-sea-436-days-book-extract?

Jonathan Franklin, Saturday 7, November 2015

 

நூல்:

Title: 438 Days: An Incredible True Story of Survival at Sea

Author:  Jonathan Franklin

Publisher:Pan Macmillan, 2015

ISBN:       1509800166, 9781509800162


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “438 நாட்கள்: கடலில் தனித்துவிடப்பட்ட திரைமீளரின் கதை”

அதிகம் படித்தது