மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிறுமியும் காண்டாவிலங்கும்

சு.பாரதிதாசன், அருளகம், கோயமுத்தூர்

Nov 21, 2015

rhinoceros3அப்போது நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். எங்கள் வீடு கிராமத்தில் இருந்தது. பக்கத்து வீட்டுக்கு நகரத்திலிருந்து தனது அம்மாவைப் பார்க்க அவரது மகன் வருவார். வரும்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கும் அவர் வருவார். என்மேல் தனது அக்கறையைக் காட்டுவதற்காக என் அப்பா முன்னிலையில் எதையாவது ஒன்றைச் சொல்லி அதற்கு இங்கிலீஸில் என்ன? இதற்கு இங்கிலீஸில் என்ன? என்று கேட்பார். வாட் இஸ் யுவர் நேம்? என்ற கேள்வியைத் தவிர பெரும்பாலான கேள்விகளுக்கு எனக்குப் பதில் தெரியாது.

ஒருநாள் நகரத்தில் படித்துக்கொண்டிருந்த தனது இரு புதல்விகளையும் அழைத்துக்கொண்டு எங்களது வீட்டுக்கு வந்தார். வழக்கம் போல அன்றும் நான் மாட்டிக்கொண்டேன். அவரது புதல்வி முன்னிலையில் ‘காண்டாமிருகத்திற்கு’ இங்கிலீஸில் பெயர் என்ன? என்று கேட்டார். நான் திருதிருவென விழித்தேன். உடனே, நீர்யானைக்கு இங்கிலீஸில் என்ன? என்று அடுத்து கேட்டார். அதற்கும் நான் விழித்தேன். அதே கேள்வியைத் தனது மகளிடம் கேட்டார். அவர் மகள் உடனே அதற்கு பதில் சொன்னாள். இவனை இதுக்குத்தான் இங்கிலீஸ் டியூசன் அனுப்புங்கிறேன் என்றால் கேட்க மாட்டிங்கிறீங்களே அண்ணே’ என்று படிக்காத என் தந்தையிடம் அலுத்துக் கொண்டார். என் வயதுடைய பெண்பிள்ளை முன் அவமானப்பட நேர்ந்ததை எண்ணி நான் கூனிக் குறுகி அழுதே விட்டேன். அவர் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.

இதற்கு முன் காண்டாமிருகத்திற்கு ரைனோசரஸ் என்பதும் நீர் யானைக்கு ஹிப்போபொடமஸ் என்பதும் எனக்குத் தெரியாது. அந்த வார்த்தையையே நான் கேட்டதில்லை. இன்னும் சொல்லப்போனால் காண்டாமிருகம் என்ற சொல் கூட எனக்குப் புதிது தான். இந்த சம்பவம் நடந்து முப்பது வருடத்திற்கும் மேலாகி விட்டது. சரி. அதை எதற்கு உங்களுக்கு இப்பொழுது சொல்கிறேன்? என்று கேட்கிறீர்களா?

அண்மையில் தாவரங்கள் தொடர்பான களப்பணிக்கு அசாம் மாநிலத்திற்குச் செல்ல நேர்ந்தது. அங்கு காண்டாமிருகத்தை முதன் முதலாக நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைப்பற்றி எழுதலாம் என்று ஆரம்பித்தபோது இந்த சம்பவம் என் நினைவில் வந்துபோனது. இப்போது அந்தப் பெண் எங்கிருக்கிறாளோ? என்ன செய்து கொண்டிருக்கிறாளோ? சரி அதை விடுவோம். சொல்ல நினைத்ததை முதலில் சொல்லிவிடுவோம்.

காலப்போக்கில் எனது ஆர்வம் இயற்கையியல் பக்கம் திரும்பியதால், அசாம் மாநிலம் என்றாலே காசிரங்கா மற்றும் மனாஸ் சரணாலயங்களும் காண்டாமிருகமும்தான் உடனே என் நினைவுக்கு வருகின்றன. அசாம் செல்வதாக முடிவெடுத்தபோதே காண்டாமிருகத்தைப் பார்ப்பதற்கும் தோதாக எனது பயணத்தைத் திட்டமிட்டுக் கொண்டேன். ரயில் பயணத்தின் போது என்னுடன் பயணம் செய்த  சக பயணியிடம் காசிரங்கா குறித்தும், காண்டா மிருகம் குறித்தும் பேசியபோது கூடுதலாக ஒரு செய்தி கிடைத்தது. காசிரங்கா மற்றும் மனாஸ் சரணாலயங்களைத் தவிர பாபிதோரா மற்றும் ஒராங் ஆகிய சரணாலயங்களிலும் காண்டாமிருகத்தைப் பார்க்கலாம் என்றார். அதுவும் கவுகாத்தியிலிருந்து 50 கி.மீ தொலைவில் பாபிதோரா இருப்பதாகச் சொன்னது என் ஆர்வத்தைத் தூண்டியது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்லாத பகுதி என்பதாலும், காசிரங்கா செல்வதை விட இது சிக்கனமானதாக இருந்ததாலும் அங்கு செல்ல முடிவு செய்தேன்.

பாபிதோரா செல்வதற்கு கௌகாத்தியிலிருந்து மேகாலயா செல்லும் சாலையில் குறிப்பிட்ட தூரம் பயணித்த பின் இடப் பக்கம் திரும்பி கிராமத்து சாலையில் செல்லவேண்டும். நெடுஞ்சாலை வரையில் எந்த சிக்கலும் இல்லை. கிராமத்து சாலையில் சுமார் 8 கி.மீ பயணிக்கவேண்டும். அந்த சாலையில் பயணப்பட எந்த ஓட்டுநரும் முன்வரவில்லை. காரணம் கேட்டபோது அங்கு பாலம் அமைக்கும் பணி நடைபெறுவதால் அந்த வழியில் எந்த வாகனமும் செல்லாது என்றும் அப் பகுதி போடோலேந்த் கிளர்ச்சியாளர்கள் இருக்கும் பகுதி எனவும் கூடுதலாக ஒரு பதிலும் கிடைத்தது.

என்ன செய்வது என்று யோசித்தேன். ‘’துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு’’ என்ற திருக்குறளும் ‘’மடியில் கனமில்லை வழியில் பயமில்லை’’ என்ற பழமொழியும் என் உதவிக்கு வந்தது. பாபிதோரா என்ற அம்புக் குறி இடப்பட்ட திசையை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். மண் சாலையும், பனைமரங்களும், நெல் வயல்வெளிகளும், சிற்றாறுகளும் காட்சிக்கு விருந்தாகின. கதிர் முற்றிய நெல்மணிகளின் வாசம் மூக்கை அடைந்தது.   எருமையைத் தாம்பு பூட்டி நெல்மணிகளை உதிர்த்துக்கொண்டும்,  தூற்றிக்கொண்டும் இருந்த காட்சி அறுவடைக் காலம் தொடங்கியதைத் தெரிவித்தது. சிற்றாறுகளில் சிறுவர்கள் குளித்துக்கொண்டும் மீன்பிடித்துக்கொண்டும் இருந்தனர். நடந்து சென்ற களைப்போ நேரமானதோ தெரியவில்லை.

ஆற்றில் புதிதாக பாலம் கட்டிக்கொண்டிருந்தார்கள். பாலம் கட்டத் தோதாக தண்ணீரின் போக்கைத் தடுத்து திருப்பியிருந்தார்கள். அங்கு தேங்கிய நீரில் நாரைகளும் கொக்குகளும் இரை தேடிக்கொண்டிருந்தன. மீன்கொத்திப் பறவை ஒன்று, ‘’கிச்சிலி’’, ‘’கிச்சிலி’’ எனப் பாடியபடி அருகில் இருந்த மூங்கில் கிளையில் அமர்ந்தது. அதைப் பார்த்துக் கொண்டே தற்காலிகமாக அமைத்திருந்த பாதைவழியே கீழே இறங்கியபோது கால் வழுக்கியது. கவனமாக அதைக் கடந்து சிறிது தூரம் சென்றபோது மேள சத்தம் காதில் கேட்டது. புதிதாக கல்யாணமான ஜோடியை ஊர்வலமாக அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

அவர்களைக் கடந்து இரண்டு மணி நேர நடைக்குப் பின் பாபிதோரா சரணாலயத்தை அடைந்தேன். அங்கு சரணாலயம் என்ற பெயர்ப் பலகையுடன் ஒரு சிறு அலுவலகம் மட்டுமே இருந்தது. முறையாக அனுமதி வாங்கிச் செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் அலுவலகத்தை நெருங்கியபோது ஆள் அரவமின்றி இருந்தது. கூப்பிட்டுப் பார்த்தேன். யாரும் இல்லை. சற்றுத் தொலைவில் மின் கம்பத்தில் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பேசியபோது இந்த அலுவலகத்தை ஒரு முறை போடோலேந்த் கிளர்ச்சிக்காரர்கள் அடித்து நொறுக்கி விட்டனர் என்றும் அதனால் யாரும் அலுவலகத்திற்கு வருவதில்லை எனவும் பாதுகாப்பு இருந்தால் மட்டுமே அலுவலகத்திற்கு வருவதாகவும் சொன்னார்.

அலுவலகத்திற்க்கு அருகிலேயே தடாகம் ஒன்று இருந்தது. அதில் நிறைய பறவைகள் இரை தேடிக் கொண்டிருந்தன. சரி பறவைகளையாவது பார்க்கலாம் என்று தொலைநோக்கியை எடுத்துப் பார்த்தபோது வாத்துகளும் உள்ளான்களும் இரை தேடிக்கொண்டிருந்தன. நான்கைந்து எருமைகளும் ஆங்காங்கே மேய்ந்து கொண்டிருந்தன. தொலைநோக்கி வழியாக உற்று நோக்கியபோது எருமைகளுடன் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகமும் மேய்ந்துகொண்டிருந்ததைப் பார்த்து மனம் பரவசமானேன்.

rhinoceros fiஇவ்வளவு விரைவில் காண்டாமிருகம் காட்சி தரும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் அருகில் சென்று பார்க்கலாம் என்ற ஆவலில் தடாகத்தை நோக்கிச் சென்றேன். தடாகத்தில் ஆங்காங்கே சிறு சிறு தீவுகளுக்கிடையே தண்ணீர் தேங்கி நின்றது. ஒரு கரையிலிருந்துகொண்டு மறு கரையில் 60 அடி தொலைவிலுள்ள காண்டாமிருகத்தை ஆசை தீரப் பார்த்துக் கொண்டிருந்தேன். தடாகத்தில் நீர்வாழ் தாவரங்களும் இடையிடையே இருந்த திட்டுகள் முழுக்கவும்  பசும் புல்லும் நாணல் செடியும் வியாபித்திருந்தன. அவற்றை எருமைகளும் காண்டாமிருகங்களும் மேய்ந்து கொண்டிருந்தன.

காண்டாமிருகத்தைப் பார்க்கும் போது கவச உடை அணிந்த போர்வீரன் சகதியை அள்ளிப்பூசியதுபோல் தோற்றம் தந்தது. நீர்நிலைகளில் பூச்சிகளும் வண்டுகளும் அதிகமிருக்கும். அவற்றின் கடியிலிருந்து தப்புவதற்காக இந்த தகவமைப்பைப் பெற்றுள்ளதா? அல்லது வேறு ஏதும் காரணமா என்று நினைத்தபடி இதன் உருவத்தையும் அதன் பெயர்க் காரணத்தையும் சற்று பொருத்திப் பார்த்தேன். நம் ஊர்களில் காண்டா என்ற சொல்லை வசைச் சொல்லாக பயன்படுத்தக் கேட்டிருக்கிறேன். ஒரு பொருளைப் பெறத் தீயாக அலைபவரைப் பார்த்துக் ‘காண்டாக அலைகிறார்’, ‘காண்டெடுத்து திரிகிறார்’ என்று குறிப்பிடுவதைக் கேட்டிருக்கிறேன். இந்த விலங்கு தமிழ் நாட்டில் இல்லாததால் இதற்கு பெயர் இல்லாமல் இருந்திருக்கலாம். இதன் அறிவியல் பெயரான ரைனோசரஸ் என்ற பெயரிலேயே ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது. (கிரேக்க மொழியில் ரைனோ என்றால் மூக்கு என்றும் செரொஸ் என்றால் கொம்பு என்றும் பொருள்).

rhinoceros8பெயர் ஆராய்ச்சியை மூளையின் ஒரு ஒரத்தில் வைத்து விட்டு மெல்ல பார்வையைச் சுழற்றியபோது ஐந்து காண்டாமிருகங்கள் வெவ்வேறு தொலைவில் மேய்ந்து கொண்டிருந்தது தெரிந்தது. அருகில் இருந்த காண்டாமிருகத்தை நோக்கி தொலைநோக்கியை திருகி உற்றுப் பார்த்தபோது அதன் தோலிலும் ஒரு உண்ணிப் பூச்சி அமர்ந்து இரத்தத்தை குடித்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அந்த உண்ணிப் பூச்சியை இரையாக்கிக் கொள்ள மைனாவும், கரிச்சானும், கொக்கும் காண்டா மிருகத்தைச் சுற்றிச் சுற்றிப் பறந்ததைப் பார்த்தபோது உயிரினங்களின் தகவமைப்பும் விந்தையான உலகமும் என்னை வழக்கம்போல் வியப்பில் ஆழ்த்தின.

rhinoceros2அதன் முகத்தை நோட்டம் விட்டேன். மூக்கில் மேல் துருத்திக்கொண்டிருந்த கொம்பு தூக்கலாகத் தெரிந்தது. அது பார்ப்பதற்கு சற்றே கருமை நிறத்தில் இருந்தது.  உயிர் வாழவும் ஆபத்தில் இருந்து தப்பிக்கவும் வேறு சில காரணங்களுக்காகவும் உருவான இந்த கொம்புதான் அதன் அழிவிற்குப் பெரிதும் காரணமாய் இருக்கிறது என்று நினைக்கும்போது வருத்தம் மேலிட்டது. சரி அப்படி என்ன அந்த கொம்பில் இருக்கிறது என்று பார்த்தால். வெறும் ரோமம் தான். ஆம் மயிர்க் கற்றைகள்தான் கெட்டியாக உருமாறி கொம்பாக பரிணமித்துள்ளது. அதில் வேறு என்ன மருத்துவக் குணம் இருக்கிறது என்று பார்த்தால் அப்படியும் ஒன்றுமில்லை. நம் நகத்திலும் முடியிலும் உள்ள அதே பொருள்தான் அதன் கொம்பிலும் உள்ளது. வேறு எதற்காக இது பயன்படுகிறது என்று கேட்கிறீர்களா? எல்லாம் அதற்காகத்தான்.

ஆம். மனிதனின் காம இச்சை எப்போதும் ஒன்று போல இருப்பதுமில்லை. நிறைவேறுவதுமில்லை. இது நம் அனைவருக்கும் தெரியும். ஒரு பொருள் காம இச்சையை தூண்டும் என்றும் குழந்தைப் பேறு உண்டாக்கும் என்றால் அப் பொருள் எளிதில் விலைபோய்விடுகிறது. இதை ஏமாற்றுக்காரர்களும், வியாபாரிகளும் நன்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். மனதளவில் பலவீனமானவர்களும் பணம் படைத்தவர்களும் அந்தப் பொருளுக்கு எந்த விலையும் கொடுக்க முன்வருகின்றனர்.  இதில் ஆச்சரியம் என்னவென்றால் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவிலும் இந்தியாவிலும்தான் இந்த வணிகமும் கொடிகட்டிப் பறக்கிறது. அந்தக் கொம்பில் உள்ள வெறும் மயிருக்காக அது காமத்தை தூண்டும் என்ற மூடநம்பிக்கைக்காகச் சகட்டுமேனிக்கு இவ் விலங்குகள் வேட்டையாடப்பட்டு அவற்றின் கொம்பு வெட்டி எடுக்கப்படுகிறது. இதனால் அவை அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டுவிட்டன.

rhinoceros4இவை குறித்து 2015-இல் மேற்கொண்ட கணக்கெடுப்பு இவ்விலங்கு 3000க்கும் சற்றே அதிகமான எண்ணிக்கையில் உள்ளதாகத் தெரிவிக்கிறது. வட இந்தியா முழுமையும், பாகிஸ்தான் முதல் மியான்மர் வரையிலும் கங்கைச் சமவெளியிலும் பிரம்மபுத்திரா நதிக் கரை நெடுகிலும் வியாபித்திருந்த அவற்றின் வாழிடங்களும் மனிதர்களால் பிடுங்கப்பட்டு மேய்ச்சல் நிலங்களாகவும் தோப்புத் துரவுகளாகவும் மாற்றப்பட்டுவிட்டதால் வாழிடம் சிதறுண்டு அவை ஒடுங்கி விட்டன. போதாக்குறைக்கு தீவனத்திற்காக வளர்ப்பு கால்நடைகளுடனும் இவை போட்டியிட நேரிடுகின்றன. அந்த தடாகத்தைச் சுற்றிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நான் பார்த்தபோது 30க்கும் அதிகமான எருமைகளும் அதில் மேய்ந்து கொண்டிருந்தன.

அதைப் பார்த்துக் கொண்டிருந்த போது பின்னாலிருந்து யாரோ என்னைக் கூப்பிடுவது போல இருந்தது. என்னை யார் இந்த ஊரில் அழைக்கப் போகிறார்கள்? என்று அசட்டையாக இருந்தேன். சரணாலய அலுவலகம் இருந்த திசையிலிருந்து தொடர்ந்து குரல் கேட்கவும் திரும்பிப் பார்த்தேன். என்னைத்தான் அழைத்தனர். அவர்கள் வனத் துறையைச் சேர்ந்தவர்கள் என்பது நெருங்கிச்சென்றபோது தெரிந்தது. அனுமதி இல்லாமல் எப்படி வந்தீர்? என்று கேட்டனர். என்னுடைய நடவடிக்கையை அவர்கள் நீண்டநேரம் கவனித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். அதனால் நான் கூறியபதிலில் திருப்தி அடைந்து அதோடு என்னை விட்டதோடு திரும்பிச்செல்ல உதவியாக தூரம் குறைவான வேறு வழியையும் காட்டினர்.

அப்போது அந்தி சாயும் நேரமும் வந்துவிட்டது. இதமான வெயிலும் மேற்கு வானில் மறைந்து கொண்டிருந்த கதிரவனும் மஞ்சள் வண்ண  வான்வெளியும், வாடைக் காற்றும் சூழலை மேலும் அழகூட்டின.

மேய்ந்து கொண்டிருந்த எருமைகள் எல்லாம் தொழுவத்தை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தன. வராத எருமைகளை பல் வேறு குரலில் உசுப்பியும் சாட்டையை வைத்து மிரட்டியும் ஒருவர் ஒட்டிச்சென்றார். அவர் ஓட்டிச் சென்ற வழியிலேயே காண்டாமிருகம் ஒன்றும் மேய்ந்து கொண்டிருந்தது. குறுக்கே வந்த எருமைகளைப் பக்கத்தில் வராதீர் சற்றே தள்ளிச் செல் என்பது போல காண்டாமிருகம் தனது கொம்பை முட்ட வருவது போல தாழ்த்தியும் முன்னங்காலை தரையில் பிராண்டியும் எச்சரித்தது. அதை உணர்ந்து எருமைகளும் விலகிச்சென்றன.

அதே வழியிலேயே எருமை மேய்ப்பவரும் சென்றார். அவருக்கும் அந்த காண்டாமிருகத்திற்கும் இடையே இருபது அடி இடைவெளி மட்டுமே இருந்தது. அவர் கையில் வைத்திருந்த குச்சியை வைத்து எருமையை மிரட்டுவது போல காண்டாமிருகத்தை நோக்கி குச்சியைக் காட்டி மிரட்டினார். நான் போகிறேன். என் வழியில் குறுக்கிடாதே என்பதுபோல அவரது செய்கை இருந்தது. அவரிடம் எந்த ஆயுதமும் இல்லை. இந்த இடத்தில் மனிதனுக்கும் காண்டாமிருகத்திற்கும் மோதல் நேர்ந்தால் அதில் காண்டாமிருகம் தான் வெற்றிபெறும் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும் எந்தவொரு பிணக்கோ மோதலோ எதிர்கொள்ளலோ இல்லை. இவை எல்லாவற்றிலும் ஒரு ஓத்திசைவைக் காண நேர்ந்தது.

இதே போன்ற காட்சியை நான் சத்தியமங்கலம் காட்டிலும் கண்டிருக்கிறேன்.  ஒரே இடத்தில் யானைகளும் மேய்ந்து கொண்டிருக்கும். சற்றே தொலைவில் மாடுகளும் மேய்ந்து கொண்டிருக்கும். மாடு மேய்ப்பவரும் யானை இருக்கும் திசையை கவனமாக அவதானித்து மாடுகளை ஓட்டிச் செல்வார். இவை எல்லாவற்றுக்குமிடையே, ‘வாழு’, ‘வாழவிடு’ என்ற எழுதப்படாத இயற்கை விதி யும் வரையப்படாத எல்லைக் கோடும் இருக்கும்..

இதே காட்சி ஒவ்வொருவரின் பார்வைக்கு ஏற்பவும் மாறுபடுகிறது. அதுவும் காண்டாமிருகம், யானை போன்ற விலங்குகளைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தாலே அவைகள் வாலைச் சுழற்றியபடி, ‘முட்ட வந்தன’, ‘குத்த வந்தன’, ‘மயிரிழையில் தப்பித்தேன்’, ‘எந்தச் சாமி புண்ணியமோ. தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று’ என்று மயிர்க்கூச்செரியும் விடயங்களைப் பற்றி மட்டுமே அதிகம் பேசுவதை நான் இயற்கையாளர்களிடமும் கூட கேட்டிருக்கிறேன்.

என்ன மயிர் மயிர் என்று பேசுகிறேன். என்கிறீர்களா? அந்த மயிர்தானே காண்டாமிருகத்திற்கும் பிரச்சனை.


சு.பாரதிதாசன், அருளகம், கோயமுத்தூர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிறுமியும் காண்டாவிலங்கும்”

அதிகம் படித்தது