மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

யாதும் ஊரே எல்லா உயிரினங்களும் கேளிர் ; ஜார்ஜ் ஷாலர்

சு.பாரதிதாசன், அருளகம், கோயமுத்தூர்

Jan 9, 2016

yaadhum oore6அப்பொழுது அவருக்கு 26 வயதுதான் ஆகி இருந்தது. தனது முனைவர் பட்டப்படிப்பை விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் முடித்த கையோடு முதுகுப்பையை மாட்டிக்கொண்டு தெளிவான சிந்தனையுடன் ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் கால்பதித்தார். கொரில்லா எனும் மனிதக் குரங்கை அதன் வாழிடத்திலேயே தங்கிப் படிப்பது தான் அவர் நோக்கம். 1960கள் வரை பெரிதாக எந்தவொரு ஆய்வும் கொரில்லா குறித்து மேற்கொள்ளப்படவில்லை.. ஏற்கனவே கொரில்லாக்கள் பற்றி வந்த செய்திகள் பலவும் வேட்டை இலக்கியமாகவே இருந்தன. வேட்டைக்காரர்கள் தாய் கொரில்லாவைக் கொன்று குட்டி கொரில்லாவை பலவந்தமாகப் பிடித்துச் சென்றனர். குட்டியிலிருந்து பழக்கினால் தான் பழக்குவதற்கு எளிதாய் இருக்குமாம். இதனால் அந்த விலங்கினமே அற்றுப்போகும் நிலைக்குத் தள்ளப்பட்டன.

வேட்டைக்காரர்கள் இப்படி இருந்தால் காட்டு விலங்குகளைப்பற்றி படிப்பவர்களோ ஆய்வுக் கூடத்திலும் வகுப்பறையிலும் விலங்குக் காட்சி சாலையிலும் மட்டுமே விலங்குகளைப் பற்றி படித்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் ஆய்வுக் கூடத்தில் விலங்குகளை அறுத்து படம் வரைந்து பாகங்களைக் குறித்துக் கொண்டிருந்தனர்.

yaadhum oore4அறுபதுகளில் காட்டுயிர் தொடர்பான சட்டங்களும் பெரிதாக வகுக்கப்படாத காலமாய் இருந்ததாலும், யார் ஏன் என்று கேட்க நாதி இல்லாததால் காட்டு விலங்குகளைத் துப்பாக்கி குண்டுக்கு இரையாக்கி அதை மிகப்பெரிய வீரச்செயலாகக் கொண்டாடியும், விருந்து சமைத்தும் மகிழ்ந்து கொண்டிருந்தது ஒரு கூட்டம். இதில் எல்லா நாட்டவர்களும் அடக்கம்.

அவர்கள் கொரில்லாக்களையும் விட்டுவைக்கவில்லை. அவைகள் நூற்றுக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டு வந்தன. போதாக்குறைக்கு கொரில்லாக்களைப் பற்றிய மர்மக்கதைகளும் புனை கதைகளும் அவைகளை மிகவும் கொடூரமான அருவருக்கத்தக்க விலங்காக காட்டிவந்தன.

இவை எல்லாவற்றையும் அவரது கள ஆய்வு புரட்டிப் போட்டது என்றே சொல்ல வேண்டும். ஆய்வைத் தொடங்கிய சில காலத்திலேயே, கொரில்லாக்களுடன் இயல்பாக நெருங்க ஆரம்பித்தார். ஆயுதமோ, காவலோ எதுவும் இல்லாமல்அதன் அருகாமையில் சென்றதைப் பார்த்து வியப்பினால் புருவம் உயர்த்தினர். இதை அவர் சாகசத்திற்காகச் செய்யவில்லை. உண்மையான ஈடுபாட்டோடு செய்தார். நம்முடைய சிந்தனைக்கு நேர்மாறாக, கொரில்லாக்கள் அளவு கடந்த பாசம் மிக்க விலங்குகள் என்பதையும்,  மனிதர்களைப் போல அனைத்து உணர்ச்சிகளும் கொண்டவை என்பதையும், அவை ஆபத்தில்லாத பிரமிக்கத்தக்க விலங்குகள் என்பதையும்உலகிற்கு உணர்த்த அவரது ஆய்வு பெரிதும் பயன்பட்டது என்பது உண்மை.

yaadhum oore2எல்லோரையும் போல டாக்டர் பட்டம் வாங்கி தன் பெயருக்குப் பின்னால் வெறும் எழுத்தை மட்டும் சேர்ப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், கொரில்லாக்களை பாதுகாக்க வேண்டிய திட்டங்களையும் முன்னிறுத்தினார். ஷாலரின் ஆய்வு ஒரு மிகச் சிறந்த புத்தகப்படைப்பாக 1963ல் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்புத்தகத்தின் தாக்கம் காரணமாகவும் கள ஆய்வுகள் மூலமாகவும் கொரில்லாக்களின் மேல் உள்ள தேவையற்ற அச்சம் நீங்கின. அவற்றைப் பார்வையிடமக்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் ருவாண்டாவுக்குக் குவிந்த வண்ணம் இருந்தனர். கொரில்லாவைக் காண வரும் சுற்றுலாப் பயணிகள் மூலம் நாட்டின் வருமானமும் பெருகியது. மக்களின் வாழ்வாதாரத்திற்கும் இந்தச் செய்கை மறைமுகமாக உதவியது. கொரில்லாவைப் பற்றிய ஷாலரின் கள ஆய்வு சில ஆண்டுகள் மட்டுமே இருந்தாலும், அவர் ஏற்படுத்திய தாக்கம், பலரை ஈர்த்தது. ஷாலரைத் தொடர்ந்து டயன் பாசி என்ற பெண் ஆராய்ச்சியாளரும்கொரில்லா பற்றிய ஆய்விலும் பாதுகாப்பிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கொரில்லாவை பாதுகாக்கும் பணியில் உள்ளூர் மக்களும் அரசும் கை கோர்த்தன. இந்த நிகழ்வு பெரும் வெற்றிச் சரித்திரமாய் அமைந்தது.

அதே கையோடு ஆப்ரிக்க நாடான டான்சானியாவை நோக்கி கிளம்பினார். இப்போது அவர் ஆய்வு மேற்கொள்ள முடிவெடுத்தது சிங்கங்கள் பற்றி. அவரோடு துணைக்கு அவர் மனைவியும், இரண்டு பச்சிளங் குழந்தைகளும் சேர்ந்து கொண்டனர். இந்த பயணத்திற்கு பெரும்பாலான மனைவிமார்கள் என்ன சொல்லியிருப்பார்கள் என்று சற்று கற்பனை செய்து பாருங்கள்.

yaadhum oore1சிங்கங்கள், யானைகள், போன்ற விலங்குகள் நிறைந்த அந்த பரந்த கானகச்சூழலில், குடும்பத்தாருடன் காட்டிலேயே வாழ்ந்தார். காட்டில் அனாதையாக்கப்பட்ட ஒரு சிங்கக் குட்டியும் ஷாலரின் குழந்தைகளோடு சேர்ந்து வளர்ந்தது. சிங்கங்கள் குறித்த அவரது கள ஆய்வு இன்று வரை எல்லோராலும் போற்றப்படுகிறது. அது 1973ல் புத்தகமாக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் தொடங்கிய சிங்கங்கள் குறித்தான ஆய்வு கிரைக் பாக்கர் என்ற காட்டுயிர் வல்லுனரால் இன்று வரைதொடர்ந்து வருகிறது.

நமது நாட்டிலும் காட்டுயிர் ஆய்வு மற்றும் பாதுகாப்பில் அவரின் தாக்கம் ஏராளம்என்றே சொல்ல வேண்டும். 1960களில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள கான்ஹா தேசியப் பூங்காவில் இந்தியப் புலிகளைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டபோது அவருக்கு வனத்தில் வாழ்ந்து வந்த அனுபவமிக்க பழங்குடியினர் உதவி செய்தனர். அவர்களோடு நடந்தே சென்று புலிகளைப் பற்றிய பல அரிய தகவல்களைத் திரட்டினார்.

புலிகளின் முகத்தில் உள்ள வரிகளைக் கொண்டு, அவற்றைத் தனித்தனியே அடையாளம் கண்டுகொண்டார். புலிகளின் வாழ்க்கை முறை, சமூகவியல், இனப்பெருக்கம், உணவுப் பழக்கம், மற்ற காட்டுயிர்களின் பரிணாமத்தில் புலிகளின் பங்கு போன்றவை குறித்து அவர் திரட்டிய தகவல்கள்தான்  இந்திய அரசாங்கம் 1973ல் வடிவமைத்த புலிகள் பாதுகாப்புத் திட்டத்திற்குஅடித்தளமாக அமைந்தது.

அவர் தொடங்கிய புலிகள் பற்றிய ஆய்வு, இந்தியாவில் உள்ள பல காட்டுயிர் ஆர்வலர்களையும், இயற்கை விரும்பிகளையும், மாணவர்களையும், கள ஆய்வுக்கும், காட்டுயிர் பாதுகாப்புக்கும், தேன் சொரியும் மலர்கள் வண்டுகளை ஈர்ப்பது போல் ஈர்த்தது. அவரை வழிகாட்டியாகக் கொண்ட பல காட்டு உயிரியலாளர்கள் புலிகள் பாதுகாப்பில் இன்றளவும் திறம்பட பங்காற்றி வருகிறார்கள்.

ஷாலர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக, உலகின் பல நாடுகளில் பல அரிய காட்டுயிர்களின் பாதுகாப்புத் திட்டத்திற்கு வித்திட்டார். சீனாவில் பாண்டாக் கரடிகள், மங்கோலியாவில் பனிச்சிறுத்தைகள், திபெத்தில் மலை ஆடுகள், கிழக்கு ஆசியாவில் புலிகள், காட்டு மாடுகள், தென் அமெரிக்காவில் ஜாகுவார் புலிகள், வட அமெரிக்காவில் பைசன் மாடுகள் என ஷாலர் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்புத் திட்டம் வகுத்துக் கொடுத்த காட்டுயிர் இனங்களின் வரிசை நீண்டு கொண்டே போகும்.

yaadhum oore5பனி படர்ந்த கடுங்குளிர் கொண்ட மலைகளானாலும், வெப்பம் மிகுந்த பாலைவனமானாலும், கொட்டித்தீர்க்கும் மழைக்காடானாலும், மலேரியாக் கொசுக்கள் நிறைந்த தென் அமெரிக்க சதுப்பு நிலங்களிலும் அச்சமின்றி, சோர்வின்றி, உத்வேகத்துடன் பணியாற்றும் உடல் வலிமையும், மனோதிடமும் பெற்றிருப்பதில், ஷாலருக்கு நிகர் அவரே. உலகின் பல நாடுகளில் பணி புரியும் போதும், இயற்கை இடர்பாடுகளையும், மாறுபட்ட தட்ப வெட்ப நிலைகளை மட்டும் ஷாலர் தனது பணியில் எதிர்கொள்ளவில்லை. பல நாடுகளில் அவர் பணிபுரிந்த காலகட்டங்களில், அரசியல் கிளர்ச்சி, உள்நட்டுப் போர், கலகம், போன்ற இன்னல்களும், அச்சுறுத்தல்களும் மிகுதியாக இருந்து வந்தது. ஆனால் அவற்றைக் கண்டு அவர் சிறிதும் துவண்டது இல்லை என்பது அவரின் மனோதிடத்தையும், இலட்சியப் போக்கையும் எடுத்துக் காட்டுகிறது. உதாரணத்துக்கு, 2007ல், போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளில் உள்ள இந்துகுஷ் மற்றும் பாமிர் மலைத் தொடர்களில் வாழும், அற்றுப் போகும் நிலையில் உள்ள மார்க்கோபோலோ ஷீப் எனும் மலை ஆடுகளின் பாதுகாப்புக்காக ஷாலர் கள ஆய்வுகளை மேற்கொண்டு, அங்கு பன்னாட்டு கூட்டமைப்பில், காட்டுயிர் பாதுகாப்புத் திட்டத்தை வழி வகுக்க உதவினார்என்ற செய்தியை அறியும்போது அவருக்கு செவ்வணக்கம் செலுத்த வேண்டும் போல் தோன்றுகிறது அல்லவா.

யாதும் ஊரே எல்லா உயிரினங்களும் கேளீர் என்பதற்கேற்ப நாடு, மக்கள், மொழி, நாகரீகம் என்ற எந்த வேறுபாடும் பார்க்காமல், இயற்கை அன்னையின் அரும்படைப்புகளைக் காக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுக்காக ஷாலர் வாழ்ந்து வருகிறார். தனது 83வது வயதிலும், மனதளவிலும்உடலளவிலும்துவண்டு விடாமல், தன் மனைவி கேயுடன் காட்டுயிர் மேம்பாட்டுக்காக உலகின் மூலைமுடுக்கெங்கும் தொடர்ந்து சென்று வருகிறார். தனது எழுத்துப் படைப்பு மூலமாகவும், வசீகரிக்கும் பேச்சின் மூலமாகவும், இளந்தலைமுறையினரை உத்வேகப்படுத்தி வருகிறார். பல அரசாங்கங்களையும் சிந்திக்கச் செய்கிறார். (ரிடயர்மெண்ட் ஆன மக்கள் சிந்திக்கவும்).

அவரின் இடைவிடா இலட்சியப் பணியை கவுரவிக்கும் விதமாக, பல நாட்டு அரசுகளும், நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளும் பல அங்கீகாரங்களை ஷாலருக்கு வழங்கியுள்ளது. இவை எல்லாம் அந்த விருதுகளுக்கே பெருமை.

உலகின் ஏதொ ஒரு மூலையில் இயற்கையின் சிறந்த படைப்பான இந்த விலங்கினங்களும், அவை வாழும் சூழல் மண்டலங்களும் கவனிப்புடன் இருந்து வருவதற்கு அவரின் பங்களிப்பு மிக முக்கியமானது. இன்னும் சொல்லப்போனால் ஒரு அரிய உயிரினம் இப்பூலகை விட்டு அற்றுப்போகாமல் இருக்க அவர் ஆற்றிய களப்பணிக்கும் பெரும்பங்குண்டு.

yaadhum oore3ஷாலரின் பல ஆண்டு கால முயற்சியின் பலனாக 25க்கும் மேற்பட்டகாட்டுயிர் பாதுகாப்பு பகுதிகள்பல இலட்சம் சதுர மைல்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவை காட்டுயிர் பாதுகாப்புக்கு மட்டும் இல்லாமல் ஏழை மக்களின் வாழ்வுக்கும், நேரடியாகவும், மறைமுகமாகவும், ஒளி ஏற்றியுள்ளது. அவரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட காட்டுயிர் பகுதிகள் இன்று மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஆதாரமாக விளங்கும் நீர்பிடிப்புப் பகுதிகளாகவும், நாகரீக வளர்ச்சி என்ற பேரில் நம் வாகனங்களும், தொழிற்சாலைகளும் உமிழும் கார்பன் புகையை விழுங்கும் களஞ்சியமாகவும் விளங்குகிறது. மேலும் இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள் காட்டுயிர் சுற்றுலா மூலம் புதிய, நிரந்தர வாழ்வாதாரமும் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த முறை பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதிக்குள் நீங்கள் நுழையும்போது ஷாலரையும் நினைவில் கொள்ளுங்கள்.


சு.பாரதிதாசன், அருளகம், கோயமுத்தூர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “யாதும் ஊரே எல்லா உயிரினங்களும் கேளிர் ; ஜார்ஜ் ஷாலர்”

அதிகம் படித்தது