மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழர் பண்பாட்டில் கோலங்கள்

பேரா. ருக்மணி

Jan 16, 2016

thamilar panpaattil kolangal2தமிழர்களின் வீட்டு வாசலை அலங்கரித்துக் கொண்டிருக்கும் ஒற்றை இழையில் இழைந்தோடும் கம்பிக் கோலங்கள், அழகினை மையமாகக் கொண்டது மட்டும்தானா? எந்தக் காலத்தில் இருந்து இவ்வரை கோலத்தை நாம் வாசலில் இடத் தொடங்கினோம் என்ற கேள்விகளெல்லாம் என் நெஞ்சில் நிழலாடத் தொடங்கிய காலத்தில் எனக்குக் கிடைத்த விடைகளே இக்கட்டுரையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கோலக்கலையின் தோற்றம்:

இன்று நாம் குறிப்பிடும் கோலமிடுதல், பல்வேறு பரிணாம வளர்ச்சியினைப் பெற்று வந்திருக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களிலிருந்து பெறமுடிகிறது.

தமிழர்களின் குறியீடுகளாகப் பயன்படுத்திய ஓவியங்களில் புள்ளியிட்டுக் கொள்ளுதல் என்பது கற்கால மனிதன் தொட்டு காணப்படும் முறையெனலாம்(இராசு. பவுன்துரை, 2004,ப.57) என்று கூறுவதிலிருந்து புள்ளியிட்டு வரைந்த முறை நம்மிடையே மிகப் பழங்காலந்தொட்டே இருந்துவந்துள்ளமையினை அறிய முடிகின்றது.

புள்ளியிட்டு வரையப்படும் ஓவியங்கள் அதிகமாகச் சுற்று வரைகோட்டு முறையுடைய ஓவியங்களில் இடம்பெறுவன எனலாம். சுற்றுவரைக் கோட்டின் மையப்பகுதியில் இப்புள்ளிகள் இடம்பெறும்.(மேலது,2004, ப.57) என்ற கருத்தினை ஒட்டிப் பார்க்கின்றபோது நம் கம்பிக் கோலங்களும் மையத்தில் புள்ளியும் சுற்றிலும் வரைதலும் காணப்படுகின்ற முறையிலே அமைந்துள்ளது. இந்தக் குறியீடுகளின் வளர்ச்சியின் பங்களிப்பு எழுந்துருவாக்கமும் மொழியாக்கமும் ஆகும் (மேலது,2004, ப.257) என்ற நிலையில் நோக்கினும் நம் தமிழ் எழுத்துக்களின் மையம், வட்டமும் புள்ளியும் ஆகும். ன்,ண்.

thamilar panpaattil kolangal3தமிழகக் குறியீடுகள் பற்றிக் கூறும்போது சில குறியீடுகள் சதுரம், வட்டம், செவ்வகம், முட்டைவடிவம், அறுங்கோணம், முக்கோணம் என அளவீட்டு வரைவு வடிவங்களாக (Geometric Designs), இடம்பெறுகின்றன. சில குறியீடுகள் புள்ளி, கோடு என்ற நிலையில் அமைந்துள்ளன. (மேலது,2004, ப.257)என்ற ஆய்வாளரின் கருத்திற்கு அரண் செய்வது போல இன்றும் கம்பிக் கோலங்கள் அளவீட்டு வரைவு வடிவங்களாகப் போடப்படுவதை நாம் உணரலாம்.

தொடக்ககாலத் தமிழனின் குறியீடுகள், வளர்ச்சி பெற்று எழுத்துக்களாகவும் ஓவியங்களாகவும் உருவெடுத்தன. அதுவே நம் கம்பிக் கோலங்கள் உருப்பெறுவதற்கு அடித்தளமாகவும் அமைந்தன எனலாம்.

சிந்து சமவெளிக் குறியீடுகளும் கோலங்களும்:

குறியீடுகளின் காலம் கி.மு.2000 முதல் கி.மு 200 வரை என்பதால் அவ்வடிவங்களை வரலாற்றுக்கு முந்தைய கால மனித இனத்தின் வெளிப்பாடுகள் எனக் கருதலாம்.(மேலது,2004, ப.225) என்ற கருத்தை நோக்கின், நாம் குறியீடுகளைப் பயன்படுத்தத் தொடங்கியதின் தேவையும் அதன் பழமையும் புலனாகிறது. உலகம் தழுவிய நிலையிலும்“குறியீடுகள் எந்தப் பண்பாட்டில் தோன்றியிருக்க வேண்டும் என்ற ஆய்விலும் அவை சிந்து சமவெளியில் வாழ்ந்த பழந்தமிழர்களின் அல்லது பழந்திராவிடர்களின் குறியீடுகளே என்றும் அதன் பரவல்களைத் தென்னிந்தியப் பகுதிகளிலும் காணமுடிகின்றது என்றும் அறியலாம்“.(மேலது,2004, ப.225) என்ற கருத்திற்கு வலிமை சேர்ப்பதுபோல இன்றும் தமிழர்களின் இல்லத்தை அழகுபடுத்தும் வண்ணம் கோலங்கள் அமைந்துள்ளன.

thamilar panpaattil kolangal1

சிந்து சமவெளிக் கட்டுமான வடிவங்கள் அட்டவணை(மேலது,2004, ப.226):

சிந்து சமவெளி வரிவடிவங்களில் கட்டுமான வடிவங்களாகக் குறிக்கப்பட்டிருக்கின்ற குறியீடுகளில் இடம், மனை ஆகியவற்றைக் குறிக்க எழுந்த குறியீடுகளே, இன்று நம்முடன் கோலங்களாக வாழ்ந்து வருகின்றமையினை மேலேயுள்ள குறியீடுகளை வைத்தே தெளியலாம். இன்றும் நம் வீட்டு முற்றத்தின் மையத்தில் கோலத்தை இடுவதற்கு முன் வாசலின் இரண்டு ஓரங்களிலும் இரண்டு கோடுகளை அல்லது நான்கு கோடுகளை இடுவது நம் வழக்கமாக இருந்து வருகிறது. இத்தனை நூற்றாண்டுகள் இதனை நம்மோடு எடுத்து வந்திருக்கிறோம் என்பதே பெருமைக்குரிய ஒன்றாகும்.

வரிவடிவங்களாய் கோலங்கள்:

thamilar panpaattil kolangal4பண்டைக் காலத்து இடம்பெற்ற வரைவுகளைக் குறியீடுகள் என்றும் வரைவு வரிவடிவங்கள் என்றும் பொதுநிலையில் கூறலாம். .(மேலது,2004, ப.198)என்ற ஆய்வாளரின் கருத்துக்குச் சான்று பகர்வதுபோல கோலங்களாகிய குறியீடுகளும் இலக்கியத்தில் வரி என்ற சொல்லாட்சியுடன் குறிக்கப்படுவதைக் காணமுடிகிறது.

உரையாய் வாழி தோழி இருங்கழி

இரையார் குருகின் நிரைப்பறைத் தொழுதி

வாங்குமடற் குடம்பைத் தூங்கிருள் துவன்றும்

பெண்ணை ஓங்கிய வெண்மணல் படப்பைக்

கானல் ஆயமொடு காலைக் குற்ற

கட்கமழ் அலர தண்ணறுங் காவி

அம்பகை நெறித்தழை அணிபெறத் தைஇ

வரிபுனைச் சிற்றில் பரி சிறந்து ஓடிப்

புலவுத்திரை உதைத்த கொடுந்தாள் கண்டல்

செம்பேர் இரணை அலவிற் பார்க்குஞ்

சிறுவிளை யாடலும் அழுங்க

நினைக்குப் பெருந்துயரம் ஆகிய நோயே(நற்றிணை.123)

யாமமும் நெடிய கழியும் காமமும்

கண்படல் ஈயாது பெருகும் தெண்கடல்

முழங்குதிரை முழவின் பாணியின் பைபய

பழம்புண் உறுநரின் பரவையின் ஆலும்

ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும்

இரவு இறந்து எல்லை தோன்றலது அலர்வாய்

அயல்இற் பெண்டிர் பசலை பாட

ஈங்கு ஆகின்றால் தேழி ஓங்குமணல்

வரிஆர் சிறுமனை சிதைஇ வந்து

பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பிப்

பாடுஇமிழ் பனிநீர்ச் சேர்ப்பனோடு

நாடாது இயைந்த நண்பினது இயல்பே(நற்றிணை.378)

thamilar panpaattil kolangal5என்ற இரண்டு பாடல்களிலும் குறிக்கப் பெற்ற வரி என்ற சொல்லாட்சி, கோலத்தைக் குறிப்பதாகவே அமைந்துள்ளது. கோலம் வரையப்பட்ட சிறிய மனை என்ற பொருளிலே வந்துள்ளது. தென் மாவட்டங்களில் பெண் குழந்தைகள் மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் கோலமிட்டு அதில் பூசணிப் பூவையோ அல்லது பீர்க்கம் பூவையோ வைத்து அலங்கரிப்பார்கள். பின் மாலையில் அந்தச் சாண உருண்டையை வரட்டியாகத் தட்டி அதன்மேல் பூவையும் ஒட்டி வைப்பார்கள். இந்த நிகழ்வு தை மாதத்திலும் தொடரும். பொங்கலுக்குப் பின் நல்ல நாள் பார்த்து சிறுமியர் சிறிய வீடுகட்டி( வீடு என்பதும் இரட்டைக் கம்பிக் கோடுகளால் வாசல் வைத்து வரைவது) அந்த வீட்டு வாசலில் கோலமிட்டு பொங்கல் வைப்பார்கள். அன்றோடு வீட்டு வாசலில் போடப்படும் கோலத்தில் பூ வைக்கின்ற நிகழ்வு நிறைவு பெறும். சிறிய வீடு என்பதைக்கூட கோடுகளால் காட்டுகின்றமையிலும், சிந்து சமவெளிக் குறியீடுகளின் தாக்கத்தையே காணமுடிகிறது எனலாம். நற்றிணைப் பாடலில் குறிப்பிடப்படும் வரிபுனை சிற்றில், வரிஆர் சிறுமனை என்பன, வரைவு வரி வடிவங்களால் (கோலங்களால்) அமையும் தென் மாவட்ட சிறு வீடுகட்டும் நடைமுறையை நினைவுபடுத்துவதாகவே அமைந்துள்ளது.

கோலம் என்ற சொல்லாட்சி:

வரைவுவரி வடிவங்களாக இருந்த குறியீடுகளை, அழகு, வடிவம், ஒப்பனை செய்தல் என்ற பொருளில் கோலம் என்று வழங்கியிருக்கவேண்டும் என்ற எண்ணத்தைச் சங்கப்பாடல்கள் ஊட்டுகின்றன.

கோல் அமை விழுத்தொடி விளங்க கைவீசி(அகநானூறு.162 1)

என்ற அடியில் அழகு என்ற பொருளில் கோல் என்ற சொல்லாட்சி கையாளப்பட்டிருக்கிறது.

ஆய்கோல் அவிர்தொடி(மதுரைக் காஞ்சி.563)

திருந்துகோல் எல்வளை(குறிஞ்சிப்பாட்டு.167)

சில்கோல் எல்வளை (அகநானூறு. 140. 5-8)

கோல்வளை செறிந்த (அகநானூறு. 142.16)

நுண்கோல் எல்வளை (அகநானூறு.257.10)

வான்கோல் எல்வளை (அகநானூறு.261.4)

திருந்துகோல் ஆய்தொடி(அகநானூறு.271.16)

வார்கோல் செறிதொடி(அகநானூறு.300.6,7)

நுண்கோல் அவிர்தொடி(அகநானூறு.338.9)

இப்படி சங்க இலக்கியத்தில் கையாளப்பட்ட கோல் என்ற சொல்லாட்சியே, கோலம் (கோல்+அம்) என்ற சொல்லாட்சியை நாம் பழக்கத்தில் கொண்டு வருவதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். வளைந்திருக்கும் வளையலுக்கு அடைமொழியாக வந்த ‘கோல்’ என்ற சொல்லாட்சி, பின் வளைந்து நெளிந்து வட்ட வடிவமாக வரையும் கோலத்திற்கும் ஆகியிருக்கலாம்

பிற்கால சங்க இலக்கிய நூலான பரிபாடலில் ‘கோலம்’ என்ற சொல் அழகிற்கும் வடிவத்திற்கும் ஒப்பனை செய்தலுக்கும் பயின்று வந்துள்ளது.

அழகு (பரிபாடல் 10:92,93 & 11: 97,98)

ஒப்பனை செய்தல் (பரிபாடல் 2:5-10)

வடிவம் (பரிபாடல் 2:5-17 & 11: 97-100)

thamilar panpaattil kolangal7அழகும் வடிவமும் ஒப்பனையும் இணைந்திருந்ததால் வீட்டு வாசலில் வரைந்த வரி வடிவங்கள் கோலமாகியிருக்கலாம். கோலம் என்ற சொல்லுக்கு பீர்க்கு என்ற பொருளும் உள்ளமை கவனிக்கத்தக்கது. முல்லையில் பூத்துக்கிடக்கும் பீர்க்கம் பூக்களும் வரைவுவரி வடிவங்களில் வைக்கப்பட்ட காலத்தில் ‘கோலம்’ என்றானதா? முல்லைநிலம்தான் கோலத்தை அழகுபார்த்த முதல்நிலமா? ஆய்வுக்கு உரியதே.

குமரகுருபரர் தன்னுடைய மீனாட்சியம்மை குறத்தில் ‘தரை மெழுகி கோலமிட்டு’(25) என்கிறார். அதுவே நம் இன்றைய வழக்காற்றை பிரதிபலிக்கும் இலக்கியச் சான்றெனலாம்.

காட்சித் தொடர்பியலாக (VISUAL COMMUNICATION) கோலங்கள்:

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் சமூகத்திற்குத் தான் கூற வந்த கருத்தைக் குறியீடுகள் வாயிலாக வெளிப்படுத்தினர். அந்த வகையில், தமிழர் கோலங்களையும் சமூகத்தோடு தொடர்பு கொள்வதற்குப் பயன்படுத்திய ஓர் ஊடகமென்றே கொள்ளலாம்.

தமிழ்மொழியின் வளர்ச்சியில் குறியீடுகளின் பங்களிப்பு தனிச் சிறப்பிற்குரியதாகவும் எழுத்துச் சான்றுகளாக மாற்றம் பெறுவதற்கு முன்னர் வலுவான வரைவுடன் கூடிய தகவல்தொடர்புச் சாதனமாகவும் குறியீடுகள் திகழ்ந்தன எனக் கருதலாம் (மேலது.2004.ப. 263) என்ற வகையில் இது மனை, இது இடம் என்பதைக் குறிப்பதற்காக எழுந்த குறியீடுகளே தொடர்ச்சியாக வீட்டின் வாசலில் இடப்பட்டு வந்திருக்க வேண்டும். அவ்வாறு வரையப்பட்ட குறியீடுகளே வரியாகி, கோலமாகி(வடிவம்) நம் வீட்டு வாசல்களில் இடம்பெற்று வருகிறது. தமிழர் ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும் வீட்டு வாசலில் கோலமிடுவது என்பதை முக்கிய கடமையாக வைத்திருக்கின்றனர். இது, தொன்மை மரபுகளைத் தொடர்ந்து பேணிக்காத்து வரும் தமிழர்களின் பண்பைத்தான் காட்டுகிறது எனலாம். இந்நடைமுறை சமூகத்திற்கும் தனக்குமான தொடர்பினை உறுதிப்படுத்துவதாகவும் உள்ளது.

கொடுவில் ஆடவர் படுபகை வெரீஇ

ஊரெழுந்து உலறிய பீரெழு முதுபாழ்

முருங்கை மேய்ந்த பெருங்கை யானை

வெரிந்ஓங்கு சிறுபுறம் உறிஞ் ஒல்கி

இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென

மணிப்புறாத் துறந்து மரஞ்சோர் மாடத்து

எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று

ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்திணைப்

பால்நாய் துன்னிய பறைக்கண் சிற்றில்

குயில்காழ் சிதைய மண்டி அயில்வாய்க்

கூர்முகச் சிதலை வேய்ந்த

போர்மடி நல்லிறைப் பொதியி லானே.(அகநானூறு.167)

என்ற இந்தப் பாடலில் உள்ள அடிகளில் மனிதர்களில்லாத சிற்றிலின் காட்சியும் அங்கே மெழுகாத திண்ணையும் பொலிவற்றிருக்கும் நிலையும் காட்டப்பட்டுள்ளது. இவை இந்த இடத்தின் வளமிழந்த அல்லது அவ்இடம் மனிதர்கள் நடமாடாத இடமாகிப் போனதைச் சுட்டிக்காட்டச் சொல்லப்பட்டிருக்கிற காட்சி. இங்கே மெழுகாத திண்ணை, பொலிவற்றுக்கிடப்பது கோலம் இல்லாமையாலா? வெளியிலிருந்து வருகின்றவர்களுக்குச் சிறிய வீட்டில் மனிதர்கள் வாழுகின்றார்களா? என்பதை அறிவதற்குக் காட்சித் தொடர்பியலாகவும் வரைகோடுகள் பயன்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வீட்டினையும் அடையாளப்படுத்தத்தான் அன்றிலிருந்து இன்றுவரை கோலமிட்டு வருகிறோம் என்பதும் தெளிவாகிறது. இன்றும் ஒரு வீட்டில் துக்க நிகழ்வு நடந்திருக்கிறது என்ற செய்தியினை வீட்டு வாசலில் இடப்படாத கோலங்கள்தான் அறிவிக்கின்றன.

வீட்டில் பெண் குழந்தைகள் பருவமடைந்திருந்தாலோ, வீட்டிலுள்ளோர் அம்மைநோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ இரவில் வீட்டு வாசலில் கரியால் சிறு கோலம் வரைவது இன்றும் கிராமங்களில் வழக்கமாக இருந்து வருகிறது. பேய், பிசாசு அண்டக்கூடாது என்பதற்காகச் செய்வதாக அவர்கள் கூறினாலும்கூட வீட்டிற்கு வெளியிலிருந்து வருபவர்களால் நோய்க் கிருமிகள் வீட்டிற்குள் வந்துவிடக்கூடாது என்பதற்கான அறிவிப்பாகவெ இதனை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

தமிழகக்கலை வரலாற்றின் தொடக்கமும் சைகை என்னும் போலச் செய்தல் நிகழ்வு முதல் அவற்றைக் காட்சிப்படுத்தல் என்பதாகிய வரைவுகள் வரை நிகழ்ந்தவற்றைக் குறியீடுகளின் பதிவுகளாகவே கருதவேண்டும் (மேலது.2004.பக்.259-260) எனில் காட்சிப்படுத்தலுக்காக வரையப்பட்ட குறியீடுகளே கோலங்களாக உருப்பெற்றமை தெளியலாம்.

கோலமிடுவதில் பண்பாட்டுப் பதிவுகள்:

thamilar panpaattil kolangal6காட்சித் தொடர்பியலாகத் தொடங்கிய இவ்வரைவுகள், காலவோட்டத்தில் சமுதாயத்தின் பண்பாட்டுப் பதிவுகளையும் தன்னுள் இணைத்துக் கொண்டமையினை அறிகிறோம். இன்றும் தென் மாவட்டங்களில் மார்கழி மாதத்தில் (கார் காலத்தில்) கோலத்தின் நடுவில் சாணத்தினை உருண்டையாக வைத்து அதன்மேல் பீர்க்கம் பூவையோ பூசணிப் பூவையோ வைப்பது வழக்கம். பின் மாலையில் அந்தச் சாணி உருண்டையைச் சிறு சிறு வரட்டிகளாகத் தட்டி பூசணிப்பூவையும் அதன்மேல் ஒட்டிக் காய வைப்பார்கள். அந்த வரட்டிகளையே பொங்கலன்று தீமூட்டுவதற்கு பயன்படுத்துவார்கள். சாணமும் பீர்க்கம்பூவும் கிடைக்கக்கூடிய இடம் முல்லைநிலம். தமிழினத்தின் வளர்ச்சியில் பண்பாடு முகிழ்த்த இடம் என்ற பெருமையினைப் பெற்றது முல்லைநிலம். இந்நிலத்திலிருந்து கிடைத்த மாட்டின் சாணமும், அங்கு மலர்ந்திருந்த பீர்க்க மலரும் கோலத்தை அலங்கரிப்பது என்பது இந்நிலத்தில்தான் புள்ளிகளும் கோடுகளுமாகிய வரைவுகள் கோலங்களாக உருப்பெற்றிருக்கவேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றன எனலாம். இன்றுவரை அந்நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றமையும் கவனிக்கத்தக்கது.

கோலங்கள் குறித்த இன்றைய நடைமுறைகள்:

இன்று நிலம் சார்ந்து இனம் சார்ந்து கோலமிடுதலில் பல நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இதில் பொதுவான நடைமுறைகள் சில:

காலையில் சூரியன் உதிப்பதற்கு முன் கோலமிட வேண்டும் என்பதும் மாலையில் சூரியன் மறைவதற்கு முன் கோலமிட வேண்டும் என்பதும் வழக்கமாக இருந்துவருகிறது. அரிசி மாவினால் மட்டுமே கோலமிடுவது சிறப்பு. அது நுண்ணுயிர்களுக்கு உணவாகவும் அமையும் என்பர். ஆனால் இந்த நடைமுறை மாறி அரிசி மாவுப் பொடியினைக் கோல மாவோடு(வெள்ளைக்கல்லைப் பொடியாக்கித் தயாரிக்கின்ற மாவு) சேர்த்துக் கலந்தும், வெறும் கோலமாவு மட்டுமே கொண்டும் கோலங்கள் இடுவது வழக்கமாக இருந்து வருகிறது. கோலங்களைக் காலால் மிதிக்காமல் இருப்பது நல்லது. பெரிய கோலங்கள் போடும்போது துணைக்கு ஒரு சிறிய கோலத்தைப் போடவேண்டும் என்றும் வாசலில் கோலமிடும் போது கண்டிப்பாக வாசல் படியிலும் கோலமிடவேண்டும் என்றும் கூறுவர். கோலம் போட்ட பிறகே அடுப்பைப் பற்றவைக்கவேண்டும். அடுப்புக்குக் கோலமிடுவதும் நம் மரபாக இருந்து வந்துள்ளது. இந்த நடைமுறை மெல்ல மெல்ல நகரங்களில் அழிந்துவிட்டாலும் கிராமங்களில் இன்றும் தொடர்வதைக் காணமுடிகிறது. தெற்குப் பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம் போடக்கூடாது. பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட வேண்டும். உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும். (பெண்களின் உடல்நலன் பேணுவதில் கோலம் ஆற்றிய பங்கினையே இது காட்டுகிறது.) கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிடவேண்டும். சுபகாரியங்களுக்கு ஒரு கோடு போடக்கூடாது. அசுப காரியங்களுக்கு இரட்டைக் கோடு கூடாது. வேலைக்காரர்களைக் கொண்டு கோலமிடக்கூடாது.

வீட்டில் இறப்பு நிகழ்ந்திருந்தால் 16 நாட்களுக்குக் கோலமிடுவதில்லை. இறப்பு நிகழ்ந்த வீட்டில் மட்டும் இந்த நடைமுறை பின்பற்றுவது இல்லை. அவர்களோடு சம்பந்தப்பட்ட அனைவருடைய வீடுகளிலும் இந்த முறையே பின்பற்றப்படுகிறது. அதையே வருடம் கழிவது வரைகூட கோலமிடாமல் இருக்கின்ற பழக்கமும் உண்டு. அமாவாசையன்று கோலமிடுவதில்லை. அன்று முன்னோர்கள் வீட்டுக்கு வருகின்றபோது அவர்களை உள்ளே வரவிடாமல் தடுக்கின்ற சக்தி கோலத்திற்கு உண்டு என்ற நம்பிக்கையும் நிலவி வருகிறது. அதேபோல் ஒவ்வொரு வருடமும் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கின்ற நாட்களிலும்( இறந்துபோன உறவுகளை நினைத்து நடத்துகின்ற சடங்கு முறைகள்) கோலமிடுவதில்லை. இறப்பு நிகழ்ந்த ஐந்தாம் நாளன்று ஒற்றை இழையால் கோலமிடுகின்ற பழக்கமும் இருந்துவருகிறது.

இப்படி தமிழ்ச் சமுதாயத்தில் மக்கள் வாழ்வோடு ஒன்றிய கோலங்கள் இன்று வட இந்தியத் தொடர்பினால் இரங்கோலிக் கோலங்களின் வரவினால், புள்ளிகள் வரைந்து பூக்கோலம் இடுவதும் புள்ளியின்றி வரைகின்ற கோலங்களையும் நகரங்களில் அதிகமாக காணமுடிகின்றது. உணவு, உடை போன்றவற்றில் கலாச்சார மாற்றம் ஏற்படுவதுபோல் நம் தொன்மை தமிழ்க் கோலங்களும் மாற்றத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும் என்றும் மாறாநிலையில் நம் கிராமங்களில் இக்கம்பிக் கோலங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதே இந்த மண்ணின் மகத்தான உயர்வு எனலாம். பல்வேறு சூழ்நிலைகளைத் தமிழகம் சந்தித்தபோதிலும் இத்தனை நூற்றாண்டுகளாக இதனை நம்மோடு எடுத்து வந்திருக்கிறோம் என்பதே நம் பெருமைக்கு முதல் சான்றாகும்.

தற்போது கோலங்கள் குறித்த நம்முடைய பார்வைகள் மாறத் தொடங்கியுள்ளன. கோலத்தைத் தெய்வத்தோடு சேர்த்துச் சொல்லுகின்ற மரபும் நிலவுகிறது. வீட்டு வாசலில் மகாலட்சுமி உறைவதாகவும; அதற்காகவே கோலமிடுவது போன்ற தோற்றமும் ஏற்பட்டுள்ளது. இந்த நடைமுறை மாற்றங்கள் காலத்தின் மாற்றங்களே என்று கருத வேண்டியுள்ளது.

சங்ககாலத்தில் குறிஞ்சிநில வழிபாடாக இருந்த முருக வழிபாட்டினைப் பெருந்தெய்வநிலைக்கு எடுத்துச் சென்ற நம் சமூகத்தில் வரைவு வரி வடிவங்களாக, காட்சித் தொடர்பியலாக, குறியீடாக இருந்த கோலங்கள் ஒரு கட்டத்தில் தெய்வம் குடியிருக்கும் இடமாகச் சொல்லப்பட்டதற்கும் காரணம் உண்டு. தமிழினம் தாழ்ந்தது என்றும் அதனினும் மேம்பட்ட இனம் என்று மூவேந்தர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இனத்தின் முடிவுகள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டதும்தான் காரணமாக அமைந்தது எனலாம். இதன் காரணமாகக் கோலத்திற்குத் தெய்வீக உயர்நிலை அளிக்கப்பட்டது எனலாம். இன்றும் தமிழினம் தமிழினமாக வாழ்கின்ற கிராமங்களில் கோலங்கள் தெய்வ நிலைக்கு உயர்த்தப்படாமல் ஆனால் கோலமிடுவதைச் செய்யாமல் எந்த வீடும் இல்லை; விடியலும் இல்லை என்ற அளவுக்கு நடைமுறையில் உள்ளது.

நம் கோலங்கள் தமிழினத்தின் பழமையினைப் பகரும்; பண்பாட்டைச் சொல்லும்; வளமையைத் தெரிவிக்கும்; வருத்தத்தைக் குறிக்கும்; வாழ்வியலைக் கூறும்; விழாக்களை உரைக்கும்; மகிழ்ச்சியினைப் பரிமாறும்; மரணத்தை அறிவிக்கும்; உடற்பயிற்சியினை நல்கும்; உயிரினங்களுக்கு உணவளிக்கும்.

இன்றும் புலர் காலைப் பொழுதில் நம் வீட்டு வாசல்களில், கம்பீரமாய் சிரித்து நிற்கின்ற கோலங்கள் தமிழ் மண்ணில் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளானாலும் நிலைத்து நிற்கும், நம் தமிழைப் போல! ஆம்… நம் இல்லங்களுக்கு அழகைத் தரும் கோலங்களுக்கு அழிவேது?

பார்வை நூல்கள்

1. பவுன்துரை.இராசு., பண்டைத் தமிழக வரைவுகளும் குறியீடுகளும்

2. நற்றிணை மூலமும் உரையும், கழக வெளியீடு, சென்னை.1952

3. அகநானூறு(மணிமிடை பவளம்), கழக வெளியீடு, சென்னை.2007


பேரா. ருக்மணி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழர் பண்பாட்டில் கோலங்கள்”

அதிகம் படித்தது