மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எட்கர் தர்ஸ்டனின் மானுடவியல் பார்வையில் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்

தேமொழி

Nov 13, 2021

siragu Edgar_Thurston

எட்கர் தர்ஸ்டன் -1885 இல் சென்னை அருங்காட்சியகக் கண்காணிப்பாளராகப் பணியேற்று கால் நூற்றாண்டுக் காலம் அப்பணியை செவ்வனே மேற்கொண்டவர். இப்பொறுப்புடன் 1901-இல் தென்னிந்திய இனவியல் (Ethnology) ஆய்வுப் பொறுப்பும் ஆங்கில அரசால் இவரிடம் கொடுக்கப்பட்டது. வங்காளத்தில் உள்ள ஆசியக் கழகத்தினரிடம் இருந்து மனித உடற்கூற்றினை அளக்க உதவும் கருவிகளைப் பெற்று அவர் இந்த ஆய்வினை முன்னெடுத்தார்.

தர்ஸ்டன் தனது ஆய்வை ‘Castes and Tribes of South India’ என்ற தலைப்பில் 7 தொகுதிகளாக 1909 இல் வெளியிட்டார். மத்திய இந்தியாவின் கோண்ட் பழங்குடியினர் உட்பட 300க்கும் மேற்பட்ட குலங்களையும் குடிகளையும் கொண்ட தகவல் களஞ்சியம் இந்த நூல்கள். இவை வரலாற்றியல், சமூகவியல், இனவியல் நோக்கில் குடிகளையும் குலங்களையும் அறிய உதவும் தகவல்கள் நிரம்பியவை. ந.சி.கந்தையா பிள்ளை இவற்றின் சில பகுதிகளைச் சுருக்கி முன்னர் தமிழில் வெளியிட்டுள்ளார்.

மானிடவியல் ஆய்வாளர்களுக்கு மிக இன்றியமையாததும், அடிப்படையுமான ஆய்வு நூல் என்பதால் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் 7 தொகுதிகள் கொண்ட இந்த ஆய்வு நூல் தொகுப்பை முனைவர் க. ரத்னம் அவர்களின் மொழி பெயர்ப்பில் 1986 முதல் 2005 வரை வெளியிட்டுள்ளது. தனி ஒரு மனிதராக மொழிபெயர்ப்பைக் கையாண்டு எளிதில் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் 7 தொகுதிகளையும் தமிழாக்கம் செய்தது க. ரத்னம் அவர்களின் பாராட்டிற்குரிய செயல் என்று சொல்வது மிகையல்ல. படிப்பவருக்கு அவரது பணியின் சிறப்பு விளங்கும்.

நூலின் துவக்கத்தில் ஆய்வு நடந்தவிதம் குறித்து ஒரு விரிவான முன்னுரையிலும், மனிதவியல் நோக்கில் மனிதகுலத்தின் தோற்றமும் பரவலும் குறித்த ஆய்வுகளாக 18ஆம் நூற்றாண்டின் இறுதிவரை ஆய்வுலகம் அறிந்தவற்றையும் (Literature Review) தர்ஸ்டன் இணைத்துள்ளார். தொடர்ந்து இவரது ஆய்வுத் தரவுகளும் விளக்கங்களும் சுமார் 75 பக்கங்களுக்கு நீண்டு ஓர் ஆய்வுநூலுக்கு இணையாக அமைந்துள்ளது. அதன் பிறகு தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் பற்றிய விவரங்கள் தொடங்கிப் பின் வரும் வகையில் 7 தொகுதிகளாகத் தொடர்கின்றது.

siragu thennindia-kulangalum-kudigalum

தொகுதி – 1. அபிசேகர் முதல் பயகர வரை

தொகுதி – 2. கஞ்சி முதல் ஜுங்கு வரை

தொகுதி – 3. கப்பேரர் முதல் குறவர் வரை

தொகுதி – 4. கோரி முதல் மரக்காலு வரை

தொகுதி – 5.மரக்காயர் முதல் பள்ளெ வரை

தொகுதி – 6. பள்ளி முதல் சிரியன் கிறிஸ்துவர் வரை

தொகுதி – 7. தாபேலு முதல் சொன்னல வரை

தரவுகளுக்குச் சான்றாக மக்கட்தொகை கணக்கெடுப்பு அறிக்கைகளில் மக்களே தங்களைப் பற்றிக் குறிப்பிட்டவை, மாவட்டக் குறிப்புக்களாக தொகுக்கப்பட்ட கையேடுகளில் இருந்து பெறப்பட்டவை, சட்ட நூல்களில் கிடைத்த குறிப்புக்கள், ஆய்வு நூல்களில் இருந்தும் ஆய்வு இதழ்களில் இருந்தும் பெறப்பட்ட குறிப்புகள் என்று தர்ஸ்டன் ஆவணப்படுத்தியுள்ளார். சற்றொப்ப ஒன்றரை லட்சம் சதுர மைல்கள் பரப்பளவில், சுமார் நான்கு கோடி மக்கட் தொகை வாழ்ந்த தென்னிந்தியப் பகுதியில் ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் இருந்த மிகப்பெரிய சென்னை மாகாணமும், புதுக்கோட்டை, திருவாங்கூர், கொச்சின், பங்கனப்பள்ளி போன்று ஆங்கில அரசைச் சார்ந்த சிற்றரசுகளின் பகுதிகளும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

உடற்கூற்றினை அளவிடும் இந்த அளவீடு பகுதியைப் பிழைகளைக் குறைக்கும் நோக்கில் இவர்மட்டுமே மேற்கொண்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு பிரிவு மக்களின் உடல்வாகு, உயரம், மூக்களவு, தலையின் நீள அகலம் போன்றவற்றை அடிப்படை அளவுகளாக அளந்து பதிவு செய்து கொண்டுள்ளார். ஒவ்வொரு சாதியிலும் 30-60 பேர் இவ்வாறு அளவெடுக்கப் பட்டார்கள். இவர் ஓர் அரசு அலுவலர் என்பதால் அந்தப் பணியில் இவர் குறித்து மக்கள் தவறான கருத்துகள் கொண்டு, உயிருக்குப் பயந்தோ அல்லது கூலி வேலைக்கு நாடு கடத்தப் படுவோம் என்றெண்ணியோ அல்லது தடுப்பூசி போட வருகிறார்கள் என்றோ அஞ்சி ஊரையே விட்டு ஓடும் அளவிற்கு மக்கள் அறியாமையில் இருந்ததைப் பதிவு செய்துள்ளார் தர்ஸ்டன். அது போல, ஒரே அளக்கும் கருவியைச் சாதி வேறுபாடு இன்றி அனைவருக்கும் பயன்படுத்திய முறையும் மக்களுக்கு உவப்பாக இருக்கவில்லை. பாட்டு, கூத்து போன்றவற்றை நிகழ்த்தியும், நாணயங்கள் சுருட்டுகள் வழங்கியும் மக்களைக் கவர்ந்து ஆய்வுக்காக அணுகியுள்ளார். தனது தரவுகளின் அடிப்படையில் தமிழர் மலையாளர் ஆகிய இரு பிரிவினரின் மண்டையோட்டு அளவுகளில் பிற திராவிடக் குலத்தினருடன் ஒப்பிடுகையில், அளவில் சீர்மை இருப்பதாகவும் குறிப்பிடுகிறார் தர்ஸ்டன் (தொகுதி-1, பக்கம் XLI).

மக்களைப் பலி கொடுக்கும் மெரியாச் (Meriah) சடங்கு போன்றவை ஆடுகள், எருமைகளைக் கொடுக்கும் பலியாக மாறி வருவதைச் சுட்டிக் காட்டி, நாகரீக வளர்ச்சியால் (1901-1910க்கும் இடைப்பட்ட காலத்துப் பதிவு இது) பலர் தங்கள் தொன்ம வாழ்க்கைமுறைகளைக் கைவிட்டு மாறி வருதலைக் கவனித்த தர்ஸ்டன், இனவியல் ஆய்வு நோக்கில் பண்டைய செய்திகளை ஆவணப் படுத்த விரும்பினால் விரைந்து செயல்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

“திராவிடக் குடும்பத்திற்குரிய பண்டைய பெயர் ‘தமிழ்’ என்பதனை மனதிற் கொள்ளவேண்டும். திராவிடம் என்ற சொல்லாட்சியினைக் கால்டுவெல் பயன்படுத்தியதற்குக் காரணம் தமிழ் என்ற சொல்லாட்சி தமிழ் மொழிக்கு உரியவர்களின் மொழிக்காகத் தனித்து ஒதுக்கப்பட வேண்டும் என்ற கருத்தினாலேயே ஆம்” என்பது தர்ஸ்டன் தரும் விளக்கம்.

மனிதவியல் ஆய்வு வரலாற்றினை அறிமுகப்படுத்தும் நோக்கில் தர்ஸ்டன் அக்காலத்தில் அறியப்பட்ட மனிதப் பிரிவுகள் அதன் பரவல்கள் குறித்து ஆய்வுலகில் நிலவும் சில கருத்துகளைச் சொல்லிச் செல்கிறார். இன்று தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் என்ற அளவில் குறுகிவிட்ட திராவிட இனம், முன்னர் இந்தியா முழுவதிலும் அதற்கு அப்பாலும் கூடப் பரவியிருந்ததாகத் தெரிகிறது. அக்காலத்தில் பலரும் அறிந்திருந்த லெமூரியா கோட்பாட்டையும், இறுதிப்பனியுறை காலத்திற்குப் பிறகு பனியுருகி நீர்மட்ட உயர்வால் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஹயேக்கெல் (Haeckel) விளக்குவதாக தர்ஸ்டன் சுட்டுகிறார்.

ஹயேக்கெல் மூன்று பிரிவு மக்களைப் பல வகைப்பட்டவர்களாகப் பிரிக்கிறார்.

- திராவிடர்கள் (தக்காணர்(அ)தக்காணப் பகுதியினர், சிங்களவர்)

- நுபியன்கள்

- மத்தியதரைக்கடற் பகுதியினர் (காக்கசியன்கள், பாங்குகள், செனமட்ஸ், இந்தோ-ஜெர்மானியப் பழங்குடிகள்)

ஒவ்வொரு பிரிவு மக்களிலும் அவரவர் வகைகளுக்குள் உள்ள ஒற்றுமை அவர்கள் நெருங்கிய உறவைக் காட்டும். அத்துடன் அவர்கள் உடற்கூறுகள் மற்ற பிரிவினரிடம் இருந்து வேறுபடுத்தியும் காட்ட வல்லது.

எடுத்துக்காட்டாக, மற்ற பிரிவினரிடம் அடர்த்தியற்றும் அல்லது இல்லாமலும் உள்ள தாடி திராவிடர்களிடம் நன்கு வளர்ச்சியுற்று இருப்பதைக் காணலாகும். இவர்களின் தோல் நிறம் பழுப்பாகவும் கரும்பழுப்பு நிறமாகவும் இருக்கும். மேலும் இவர்களது கருத்த முடி ‘லியோட்ரிச்சி’ வகை. மத்தியத் தரைக் கடற் பகுதி வாழ் ‘யூத்திகோமி’ (ஐரோப்பிய) இனத்தவர் போன்று மென்மையாகவோ, அல்லது ‘உலோட்ரிச்சி’ (ஆப்பிரிக்க) இனத்தவர் முடி போன்று கம்பளி தோற்றத்திலும் இருப்பதில்லை. பொதுவாக இவர்களுக்கு முன்தலை உயர்ந்தும், மூக்கு நீண்டு பருத்துமுள்ளது. இவ்வாறு தடயவியல் மானுடவியல் (Forensic anthropology) முறையில் மனித இனத்தை வகைப்படுத்துதலை ஹக்ஸ்லியும் செய்துள்ளார். மேலும் ஹக்ஸ்லி ஆஸ்திரேலியப் பழங்குடிகளும் தக்காணப் பீடபூமிப் பழங்குடிகளும் ஒத்தமைந்தவர்கள் என்ற கருத்தும் கொண்டவர்.

போர்னியா நாட்டின் மரம் ஏறும் டையக்ஸ் மக்கள் குறித்து வாலஸ் விவரிப்பது ஆனை மலைப்பகுதி காடர் மக்களுக்கும் பொருந்தும் என்கிறார் தர்ஸ்டன். அவ்வாறே, மலாய் ஜாகுன் மக்களின் பற்களைக் கூர்மையாக்கிக் கொள்ளும் வழக்கமாக கிராபோர்ட் குறிக்கும் வழக்கம் திருவாங்கூர் மலைவேடர்களிடமும் இருப்பதாகக் கூறுகிறார்.

அறிவியல் வளர்ச்சியுற்று இன்று இன்றியமையாது விளங்கும் மரபணு ஆய்வுகள் மூலம் மனித இனங்களின் தொடர்பு ஒற்றுமை வேற்றுமை அறியும் வழக்கம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர், சென்ற நூற்றாண்டுகளில் மானிடவியல் ஆய்வாளர்கள் தொல்லியல் ஆய்வில் கிடைக்கும் மண்டையோடு, மனித எலும்புகள், மூக்கின் அளவு, தாடையின் அளவு கொண்டு மக்களிடையே காணும் ஒற்றுமை வேற்றுமைகளைப் புரிந்து கொள்ளும் அளவிற்கே வாய்ப்பு இருந்தது. அத்துடன் மனிதர்களின் பிறப்பு, வளர்ப்பு, திருமணம், இறப்பு ஆகியவற்றில் அவர்களின் பழக்க வழக்கங்கள் சடங்குகளாக வெளிப்படுகையில் அவற்றை ஒப்பிட்டு பண்பாட்டு ஒற்றுமைகளையும் அறிய முயன்றனர். தர்ஸ்டன் அவர்களின் ஆய்வும் அந்த வகையைச் சார்ந்ததே. ஆதிச்சநல்லூர் புதைபொருள் ஆய்வுகளில் கிடைத்த மண்டையோடுகள் குறித்தும், ஆய்வாளர்கள் அ.ரியா, எம். எல். லாபிக்யூ ஆய்வுகளின் தரவுகள் குறித்தும் மீள்பார்வை செய்கிறார்.

ஆரியர்களின் சமூகத் தாக்கம் இந்தியவாழ் மக்களிடம் நாகரீகத்தை ஏற்படுத்தியது, நிலையை உயர்த்தியது. ஆனால் வழக்கத்தை மாற்றிக் கொள்ளாதவர் பழங்குடியினராகப் பின்தங்கிவிட்டனர் என்று டபிள்யூ. க்ரூக்கெ கருத்தினை ஒட்டி விளக்கம் அளிக்கிறார் தர்ஸ்டன்(தொகுதி-1, பக்கம் XXVII). ஆனால், இவர் ஆய்வு நூல் வெளியான 1909ஆம் ஆண்டின் காலகட்டத்தில் இந்தியாவின் சிந்துசமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை (சிந்து சமவெளி நாகரிகம் முதலில் 1921 இல் பஞ்சாப் பகுதியில் உள்ள ஹரப்பாவிலும் பின்னர் 1922 இல் சிந்து நதிக்கு அருகிலுள்ள மொகஞ்சதாரோவிலும் அடையாளம் காணப்பட்டது). ஆகவே, இந்திய மண்ணில் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் மேம்பட்டிருந்த மொகஞ்சதாரோ-ஹரப்பா மக்கள் குறித்து அன்றைய உலகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று புரிந்து கொண்டு இக்கருத்தைப் பொருட்படுத்தாமல் நாம் கடந்துவிடலாம். என்றும் வளர்ந்து வரும் அறிவியல் கண்டுபிடிப்புகளும், தொல்லியல் ஆய்வுகளும் மனித வரலாற்றைத் தரவுகள் அடிப்படையில் மாற்றி எழுத வைப்பவை என்பதை இன்றைய உலகம் ஐயமின்றி அறிந்துள்ளது.

நூல் குறிப்பு:

தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்: எட்கர் தர்ஸ்டன்

Castes and Tribes of South India: Edgar Thurston

(தமிழாக்கம்: முனைவர் க. ரத்னம்)

பிரிவு: மானிடவியல்

வெளியீடு: தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்

_____________________________________


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எட்கர் தர்ஸ்டனின் மானுடவியல் பார்வையில் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்”

அதிகம் படித்தது