மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 21: ஒரு பார்வை !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Apr 9, 2016

law book and gavelஇந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 21 என்ன சொல்கின்றது என்றால், “No person shall be deprived of his life or personal liberty except according to procedure established by law”

எந்த மனிதனின் வாழ்வுரிமையும்  அல்லது தனி மனிதஉரிமையும் சட்டப்படியானவழிமுறை தவிர்த்து வேறு எதன் மூலமும்  பிடுங்கிக்கொள்ளப்படமாட்டாது. சுருங்கச்சொல்ல வேண்டும் எனின் குற்ற விசாரணை மற்றும் தண்டனைக்கு தகுந்த விசாரணை இன்றி ஒரு நபரின் தனிப்பட்ட உரிமைகளையும், உயிரையும் எடுக்கக் கூடாது.

அதன்படி இந்திய உச்சநீதி மன்றங்கள் இந்த சரத்து 21-ஐ கொண்டு தீர்ப்பு வழங்கும் நிலையில்  பரந்தகன்ற பொருள்விளக்கம் கொண்டே கையாள்கின்றன.

Maneka Gandhi எதிர்  Union of India 1978 SC 597, என்ற வழக்கில் உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு  சரத்து 21-ஐ அரசு தனி மனிதருக்கு எதிராகக்கையாளும் போது தன்னிச்சையான, நியாயமற்ற அல்லது பொய்யான நடவடிக்கைகளை  எடுக்கக்கூடாது என்று அரசிற்கு விதிமுறைகள் கூறியது. மேலும் சரத்து 14, 19, 21 ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று நீதிமன்றம் நிறுவியது. ஒரு நபரின் தனி மனித உரிமையைப் பறிக்கும் பட்சத்தில் சரத்து 14 மற்றும் 19-ல்கூறியுள்ளவற்றையும் மனதில் கொள்ள வேண்டும் என்று கூறியது. மேலும் சரத்து 21 ஒரு நபர் சுரண்டப்படாது மனித தகுதியோடு, மரியாதையாக வாழ வழிவகுக்கின்றது. அதன் படி,  தனி நபரின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது ஒரு அரசின் அரசமைப்பு கடமையாகும். குறிப்பாக சமூகத்தில் நலிவடைந்த மக்கள் மீது அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தது.

devaneyan2அதே போல Mohini Jain எதிர் UOI 1992, என்ற வழக்கில் உச்சநீதி மன்றம் கல்வி என்பது ஒரு நபரின் அடிப்படை உரிமை என்பதை தெளிவாக்கியது. சரத் 21 கூறும் தனிமனித மரியாதை வாழ்வு என்பது ஒரு மனிதனுக்கு கல்வி இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். எனவே கல்வி என்பது அடிப்படை உரிமை என்று நிறுவியது.

J P Unnikrishnan எதிர். State of Andhra Pradesh, 1993 என்ற வழக்கில் மீண்டும் கல்வி அடிப்படை உரிமை என்று வலியுறுத்தியது. அதன் அடிப்படையில் தான் 2002 ஆம்ஆண்டு, 86-வது சட்டத் திருத்தத்தின் படி, சரத்து 21-A ஏற்படுத்தப்பட்டது. அதன் மூலம் கல்வி அடிப்படை உரிமை ஆக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு இந்த சட்டம்நடைமுறைக்கு வந்தது.

S.S. Ahuwalia எதிர்  Union of India 2001, உச்சநீதி மன்றம் சரத்து 21-ன் பொருளை மேலும் விரிவுபடுத்தியது. அதன்படி, சமூகத்தில் பலதரப்பட்ட நம்பிக்கை, ஜாதி, சமயம் சார்ந்த மக்கள் வாழும் நிலையில் அவர்கள் ஒற்றுமையுடன் வாழவும் அவர்களின் உயிரையும், தனிமனித உரிமையையும், மரியாதையையும் பாதுகாப்பது ஒருஅரசின் கடமை. அந்த கடமையில் இருந்து அரசு தவறும் பட்சத்தில் உரிய நட்டஈடு, கொல்லப்பட்ட அந்த நபரின் குடும்பத்திற்கு அரசு வழங்க வேண்டும் என்று நிறுவியது.

Javed and others எதிர்  State of Haryana, AIR 2003 SC 3057, என்ற வழக்கில் உச்ச நீதி மன்றம் மிகத்தெளிவாக ஒன்றைக் கூறியது. அதாவது, தனிமனித உரிமை என்ற அடிப்படையில் சமூகமற்றும் பொருளாதார நீதிக்கு எதிராக செயல்பட முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்தது.

அதே போன்று Bodhisattwa Gautam எதிர். Subhra Chakraborty, 1995 என்னும் வழக்கில் உச்ச நீதிமன்றம் பாலியல் வன்புணர்வு என்பது பெண்களை மரியாதையோடு வாழும் நிலையிலிருந்து சிதைக்கும் காரணத்தால் அது ஒரு பெண்ணின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று நிறுவியது.

இந்த அடிப்படையில் தான்  Vishakha எதிர் State of Rajasthan 1997, உச்ச நீதி மன்றம் வேலைபார்க்கும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள், ஒரு பெண்மரியாதையோடு வாழ தடை செய்கின்ற நிலையில் அது சரத்து 14, 15, 21 க்கு எதிரானது, கடுமையான தண்டனைக்குரியது என்று நிறுவியது.

Smt. Kiran Bedi எதிர்  Committee of Inquiry, 1988 என்னும் வழக்கில் ஒரு நபரின்புகழுக்கு களங்கம் விளைவிப்பது கூட அந்த நபரின் மரியாதையான வாழ்விற்கு எதிரானது. அந்த அடிப்படையில் அது தனி மனித அடிப்படை உரிமை மீறல் தான். அரசோ அல்லது ஒரு நிறுவனம் ஒரு நற்குணமிக்க நபருக்கு களங்கம் விளைவித்தால் அதுசரத் 21-க்கு எதிரானது என்று நிறுவியது.

Surjit Kumar எதிர். State of U.P.2002 , என்ற வழக்கில் கௌரவக் கொலைகள் என்று சொல்லப்படும் ஆணவக் கொலைகள் இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 21 வழங்கும் வாழ்வுரிமைக்கும், தனிமனித உரிமைக்கும் எதிரானது. அதன் படி ஒரு வயது வந்தநபர் தான் விரும்பும் எந்த பெண்ணையோ அல்லது ஆணையோ ஜாதி, மதம், மொழி கடந்து திருமணம் செய்ய உரிமை உள்ள பட்சத்தில், இப்படி செய்யப்படும் கொலைகள் மனித உரிமை மீறல் என்று நிறுவியது.

ஆக, இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 21-ஐ பொருத்தவரையில் முதலில் நீதிமன்றங்கள் குறுகிய பார்வை கொண்டிருந்தாலும் படிப்படியாக பல்வேறு தீர்ப்புகள் மூலம்பரந்த நிலையைக் கொண்டு தீர்ப்புகள் வழங்கி தனி மனித உரிமையை, உயிரைப்பாதுகாத்து வருகின்றன என்பது இந்தியா போன்ற பெரிய மக்களாட்சி நாட்டில் சிறப்பான ஒன்று.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 21: ஒரு பார்வை !!”

அதிகம் படித்தது