மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கோகினூர் வைரத்தைப் பறி (பரிசாகக்) கொடுத்த பஞ்சாப் மன்னரின் கதை

தேமொழி

Apr 23, 2016

kohinoor2இங்கிலாந்து அரசியின் மணிமுடியில் பதிக்கப்பட்டுள்ள  கோகினூர் வைரம் இந்தியாவிற்குச் சொந்தமானது அது மீட்கப்பட வேண்டும் என்று அகில இந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான முன்னணி ஆகியவை இணைந்து, உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்கில் இந்திய அரசின் நிலைப்பாடு ஒவ்வொருமுறையும் முரணான  தகவல்கள் வழங்கி வருவதாக அமைந்துள்ளது. கோகினூர் வைரம் பரிசாகக் கொடுக்கப்பட்டதால் அன்பளிப்பைத் திரும்பக் கேட்பது முறையல்ல என்ற வகையில்  கருத்துக்களை நீதிமன்றத்தில் முன் வைத்த அரசு, இப்பொழுது கோகினூர் வைரத்தை மீட்பது குறித்த தனது முடிவை அரசு விரைவில் அறிவிக்கும் என்று பின்வாங்கியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் கோகினூர் வைரத்தை பரிசாகக் கொடுக்க நேர்ந்த மன்னரின் நிலைமையையும் நாம் பரிசீலனை செய்வது இங்கிலாந்து வைரத்தைப் பெற்றது நேர்மையான முறையில்தானா  என்பதைத் தெளிவுபடுத்தும்.

Duleep_Singh2ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள – என்றொரு பழைய பாடல் உண்டு. அதில் கூறப்பட்ட பரிதாபத்திற்குரிய நிலையில் சில மன்னர்கள் வாழ்ந்த வரலாறுகளும் உண்டு. பெயரளவில் மன்னர் என்ற  பட்டம் இருக்கும், ஆனால் உரிமையுடன் ஆள்வதற்கோ நாடிருக்காது. அவர்களுள் ஒருவரென வாழ்ந்தவர் நமது இந்திய மன்னர் துலிப் சிங் (Maharaja Duleep Singh). இவர் சீக்கியப் பேரரசை உருவாக்கிய, “பஞ்சாப் சிங்கம்” என்று புகழப்பட்ட பேரரசர் ரஞ்சித் சிங் (Maharaja Ranjit Singh, the Lion of Punjab) அவர்களின் கடைசி மகன். பிற்காலத்தில் நாடில்லாது வாழ்ந்த மன்னர் துலிப் சிங் ஆட்சிக்கு வந்ததென்னவோ அவரது ஐந்தாவது வயதில். அவரது பிரதிநிதியாக அவரது தாயாரான பேரரசியும், பேரரசியின் சகோதரரும்,  அதாவது மன்னரின் தாய்மாமனும் பொறுப்பேற்று நாட்டை ஆண்டார்கள்.  ஆனால், துலிப் சிங்கின் பத்து வயதிலேயே நாடு ஆங்கிலேயர் வசமானது, அவரும் நாடுகடத்தப்பட்டார். மன்னர் துலிப் சிங்கின் இரங்கத்தக்க வாழ்க்கை வரலாறுதான் நாம் பார்க்கப்போவது.

kohinoor7பஞ்சாபின் சீக்கிய சிற்றரசுகளை ஒருங்கிணைத்த வீரர், அரசர் ரஞ்சித் சிங்,  ஆப்கானில் இருந்து படையெடுத்து வந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த ஆப்கானியர்களை விரட்டியடிக்கும் வகையில் அதனை ஒரு பேரரசாக விரிவுபடுத்திச் சிறப்புற ஆட்சி செய்தார். ஆப்கானிய அரசின் ‘ஷா சுஜா துரானி’ (Shah Shujah Durrani) என்பவரிடம் இருந்துதான் இவருக்கு கோகினூர் வைரம் கிடைத்தது. அதை அவர் தனது கையணியில் பதித்து அணிந்திருந்தார். பேரரசர் ரஞ்சித் சிங் சீக்கிய குல மரபுகள் எனப் போற்றப்படும் நீதிக்கும் நேர்மைக்காகவும் போராடுவது, வலுவற்றவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஆதரவாகவும், உறுதுணையாகவும் இருப்பது போன்ற பண்புகளின் இருப்பிடமாக இருந்தவர். இவரது சமயச்சார்பற்ற மனப்பான்மை மக்களிடம் இவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத் தந்திருந்தது.  இவரது அரசவையிலும், படையிலும் பல சமயங்களையும், இனத்தையும் சார்ந்தவர்கள் இடம் பெற்றதுடன் அவர்கள் உயர்பதவிகளும் அடையும் வாய்ப்பும் பெற்றிருந்தனர். ரஞ்சித் சிங் சீக்கிய மாமன்னர் என்றாலும் இந்து, முஸ்லிம், சீக்கியர், மற்றும் ஐரோப்பியர் சிலரும் இவரது பேரரசில் முக்கியப் பதவிகள் வகித்தனர். சீக்கியக் கோவிலை மறுசீரமைத்து அதனைப் பொற்கோவிலாக மாற்றினார். இவரது ஆட்சிக்காலம் மிகவும் சிறப்புற்று விளங்கியது. இவரது கடைசி மனைவி ‘ராணி ஜிந்தன்’ என அழைக்கப்படும்  ‘ஜிந்த் கார்’ (Jind Kaur), இவருக்கு இக்கால பாகிஸ்தானின் லாகூர் நகரில் செப்டெம்பர் 6, 1838 அன்று பிறந்தவர் துலிப் சிங். இவர் பிறந்த ஓராண்டுக்குள் பேரரசர் ரஞ்சித் சிங் மறைந்துவிட்டார்.

maharaja_ranjit_singhபேராற்றல் கொண்ட பஞ்சாப் சிங்கம் ரஞ்சித் சிங் மறைவின் போது  இளவரசனாக இருந்த துலிப் சிங் பத்து மாதக் குழந்தை. ரஞ்சித் சிங்கின் கடைசி மனைவியான இவரது தாயார் இவரை அழைத்துச் சென்று ஜம்முவில் அமைதியான வாழ்க்கையை வாழத் தொடங்கினார். மன்னரின் மூத்த மகன் ‘ஹரக் சிங்’ (Kharak Singh) நாட்டை ஆளத் தொடங்கினார். ஆனால் அரசியல் சச்சரவுகளில் இவரும், இவருக்குப் பின்னர் அரசரான, பஞ்சாப் சிங்கத்தின் மற்றொரு மனைவியின் மகனான மன்னர் ‘ஷெர் சிங்’ (Maharaja Sher Singh) என்பவரும், ‘தியன் சிங்’ (Dhian Singh), என்பவரும் அடுத்தடுத்து ஐந்தாண்டுகளுக்குள் கொலை செய்யப்பட்டு இறந்தனர். இவ்வாறு  அடுத்தடுத்து ரஞ்சித் சிங்கின் அரசவாரிசுகள் அனைவரும் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட, ஆளும் பொறுப்பை ஏற்க 1843 ஆம் ஆண்டு துலிப் சிங் வரவழைக்கப்பட்டார். அப்பொழுது பஞ்சாபின் மன்னராக முடி சூட்டப்பட்டபொழுது  அவருக்கு வயது  ஐந்து. அவரது தாயார் இவர் சார்பாக ஆட்சி செலுத்தினார். அரசியின்  சகோதரரும் உதவினார். சிறுவனான துலிப் சிங்கை அரசனாக்கி, கைப்பொம்மையாக இருக்க வைத்து அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தவர்களுடன் போராடி தனது மகனில் உரிமையை நிலைநாட்டி  திறமையாக ஆண்டார் இருபத்தி ஐந்தே வயதான அரசி ஜிந்தன். அரசியின் தனிப்பட்ட வாழ்க்கையில் அரசு அதிகாரிகளுடன் முறைதவறிய உறவுகள் என்ற புரளி தோன்றி, இராணுவம் கட்டுப்பாடிழந்து கலகத்தில் இறங்கியது. அரசி மிகத் திறமையுடன் எதிர்க்கத் துணிந்த பகைவர்களையும், புரட்சி செய்த படையையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததுடன், அரசுக்கு எதிராக உருவான சதிகளையும் முறியடிக்கத் தொடங்கினார். ஆறு ஆண்டுகள் தாயார் மற்றும் மாமன் உதவியுடன் ஆட்சி செய்தார் துலிப் சிங்.

இந்தச் சூழ்நிலையில், குழப்பங்களைத் தக்க வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள விரும்பியது இங்கிலாந்தின் கிழக்கிந்திய நிறுவனம். அரசி நாட்டின் எல்லையான சட்லஜ் நதியோரம், தெற்கு தென்கிழக்குப் பகுதிகளில் ஆங்கிலேயரை எதிர்கொண்டு போரிட படையை அனுப்பினார். படைத்தளபதிகளில் சிலர் ஆங்கிலேயர்களின் ஆசைவார்த்தைக்கு மயங்கி அவர்கள் கைக்கூலியாக மாறி நாட்டுக்கு இரண்டகம் விளைவித்தனர். அதன் விளைவாக, ஆங்கிலேயர் தொடங்கிய முதற்போரில் நாட்டைக் கைப்பற்றினர். ஆங்கில அரசு, சீக்கிய அரசுப் பொறுப்பை அரசரிடம் விட்டு வைத்தாலும், திட்டமிட்டு முதலில் இளவரசரின் சார்பாக  பின்னணியில்  அரசாட்சி செய்த இவரது தாயார் அரசி ஜிந்தனை பதவி நீக்கி அந்த இடத்தில் தங்களுக்கு ஆதரவான மற்றொருவரை நியமித்தது. பின்னர் அரசியைச் சிறையில் அடைத்துத் துன்புறுத்தியது. இரண்டாவது ஆங்கில சீக்கியப் போரின் முடிவில் சீக்கியப் பேரரசு, ஆங்கில அரசின் பகுதியாக மார்ச் 29, 1849ஆம் ஆண்டு இணைத்துக் கொள்ளப்பட்டது. அந்த ஆவணத்தில் கையெழுத்திட்ட இளவரசர் துலிப் சிங்கிற்கு அப்பொழுது வயது பத்து. அவரது தந்தை பஞ்சாப் சிங்கம் ரஞ்சித் சிங் சீக்கியப் பேரரசை உருவாக்கிய முதல் மன்னர், ஆனால் அவரது மகன் துலிப் சிங்கோ சீக்கியப்பேரரசின் கடைசி மன்னர் என்ற நிலை ஏற்பட்டது. துலிப் சிங்கிற்கு ஆதரவாகப் புரட்சிகள் தோன்றி, சீக்கியப் பேரரசு  மீண்டும் துலிப் சிங்கினால் தழைத்து விடாது இருப்பதற்காக, துலிப் சிங்கை அவரது தாய் இருக்கும் இடத்திலிருந்தே பிரித்து ஆங்கிலேய மருத்துவரான ஜான் லாகின், அவரது மனைவி லீனா லாகின் (Dr John Login & Lady Lena Login) என்பவர்களின் குடும்பத்தின் பொறுப்பில் அவர் 1850 இல் ஒப்படைக்கப்பட்டார், பஞ்சாபில் இருந்து 140 மைல்களுக்குத் தொலைவில் ஆங்கிலேயர் குடியிருப்புப் பகுதிக்கு மன்னர் துலிப் சிங் அனுப்பப்பட்டார்.

kohinoor9தாயையும் மகனையும் ஒருவரை ஒருவர் சந்திக்க அனுமதியளிக்காது பிரித்து வைத்ததுடன், துலிப் சிங்கிற்குத் தனது பின்னணி தெரியாது இருக்குமாறு அவர் இந்தியர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, ஆங்கிலேயர் மேற்பார்வையில் கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்பட்டார். ஆங்கிலேயர் கொள்கைப்படி ஆங்கிலமும், கிறித்துவ மதமும் அவருக்குப் போதிக்கப்பட்டது. பின்னர் துலிப் சிங் கிறித்துவராக அவரது 14 ஆம் வயதில் (8/3/1853 அன்று) சமய மாற்றம் செய்யப்பட்டார். ஆங்கிலேய வாழ்க்கைமுறையைப் பின்பற்றத் துவங்கிய துலிப் சிங்கை  இந்தியாவிலிருந்தே இங்கிலாந்திற்குச் சூழ்ச்சியாக அவரது 15 ஆவது வயதில் (19/4/1854 அன்று) நாடுகடத்தியது கிழக்கிந்திய நிறுவனம். சூழ்ச்சியின் உச்சமாக, நாட்டைக் கையகப்படுத்திய உடன்படிக்கையின் அடிப்படையில், தோல்வியுற்ற நாட்டின் மன்னர் தனது மதிப்புமிக்க செல்வங்களை இங்கிலாந்தின் பேரரசியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பஞ்சாப் சிங்கம் தனது கையில் அணிந்திருந்த உலகப் புகழ்பெற்ற கோகினூர் வைரம் பதித்த அணிகலனை அரசியிடம் சேர்ப்பிக்க ஏற்பாடும் செய்தது.

இவ்வாறு பஞ்சாபை இங்கிலாந்தின் கிழக்கிந்திய நிறுவனத்தின் பகுதியாக இணைக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அதனுடன் கோகினூர் வைரத்தையும் வெற்றிபெற்ற இங்கிலாந்திற்குப் பரிசாக வழங்க வேண்டும் என்ற குறிப்பையும் இணைத்து, சூழ்ச்சியால் கோகினூர் வைரத்தைக் கைப்பற்றும் திட்டத்தில் தனி அக்கறை எடுத்துக் கொண்டு செயல்படுத்தியவர் டல்ஹௌசி பிரபு. கிழக்கிந்திய நிறுவனத்திற்குச் சிக்கல் ஏற்படாமல் இருக்க இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு, இங்கிலாந்திற்கு நாடுகடத்தப்பட்ட  துலிப் சிங், இங்கிலாந்தின் பேரரசி விக்டோரியாவிடம் கோகினூர் வைரத்தைக் கொண்டு சேர்த்த பொழுது அவருக்கு அகவை 15. சுருக்கமாக, இங்கிலாந்து அரசின் அரசியல் சதுரங்கத்தில் மன்னரும் ஒரு காயாக நகர்த்தப்பட்டார். வரலாற்றில் இங்கிலாந்தில் குடியேறிய முதல் சீக்கியரான  பஞ்சாப் மன்னர்  துலிப் சிங் பெற்றோர், குடும்பம், கலாச்சாரம், சமயம், நாடு, மொழி என அனைத்துத் தொடர்பும் துண்டிக்கப்பட்டு இளமையிலேயே தனிமையில் முற்றிலும் புதிய வேறோரிடத்தில் வாழ நேர்ந்தது.  இதற்கிடையில், ஆங்கில அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டு, மகனிடம் இருந்து பிரிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட அரசி ஜிந்தன் பணிப்பெண் போன்ற மாறுவேடத்தில் சிறையில் இருந்து தப்பி, பத்து நாட்கள் தலைமறைவாக ஆங்கிலேயர் கண்ணில் மண்ணைத்தூவி பயணம் செய்து, நேபாளத்தில் காத்மண்டு அரச குடும்பத்தில் அடைக்கலம் புகுந்தார்.

kohinoor4மிக வஞ்சகமாக சீக்கியப் பேரரசை சிறுவனான துலிப் சிங்கிடம் இருந்து  பிடுங்கிக் கொண்ட ஆங்கில அரசு, அதற்கு ஈடாக துலிப் சிங் வசதியாக வாழ அரச மானியம் வழங்கி, இங்கிலாந்தில் இருப்பிடம் கொடுத்து ஆதரித்து, பக்கிங்ஹாம் அரண்மனையின் அரச விருந்தினர் தகுதியையும் அவருக்கு அளித்தது.  துலிப் சிங் அரசகுடும்பத்துக் குழந்தைகளின் நண்பராகவும், அவர்களுடன் விடுமுறையைக் கழிப்பது, கேளிக்கை விழாக்களில் பங்கேற்பது, வேட்டைக்குப் போவது என வாழத் தொடங்கினார். இளவரசரின் அழகிய தோற்றம் அரசியைக் கவர, அரசி அவரைத் தனது செல்லப்பிள்ளையாகவும் மதித்து, துலிப் சிங்கின் வண்ண ஓவியத்தையும் தானே வரைந்தும் உள்ளார்.  ஆங்கிலேய பிரபு போன்ற வாழ்க்கையை துலிப் சிங் வாழ்ந்தாலும், அரச விழாக்களில் இந்திய மன்னர் உடையுடன் மட்டுமே பங்கேற்க ஏற்பாடானது.  துலிப் சிங்கைப் போலவே, பேரரசி விக்டோரியா தனது ஆட்சியின் கீழ் வந்த பிற நாடுகளின் அரச வாரிசுகளை இவ்வாறு தனது கவனிப்பில் வளர்த்து வந்ததும், அவர்களை அந்நாட்டு உடைகளுடன் காட்சிப்படுத்தியது பலநாடுகளை தன் கட்டுப்பாட்டிற்குள்  கொண்டுவந்த தனது பெருமையைப் பறைசாற்றும் நோக்கமாகவும், அரச வாரிசுகளைத் தனது அன்பிற்குரியவர்களாக அவர் வளர்ப்பதாக அவரது இரக்கக் குணத்தை பிறருக்கு அறிவிக்கும் நோக்கமாகவும் இருந்திருக்கவே வாய்ப்பிருக்கிறது.

தங்களது ஆட்சியின் கீழ் வந்த பிற நாடுகளின் கலைப்பொருட்களை கொணர்ந்து தங்கள் நாட்டில் காட்சிப்படுத்தி தங்களது வீரத்தை, பெருமையைப் பறைசாற்றுவது வெற்றிபெற்றோரின் மனப்பான்மை. சாதாரண வேட்டைக்குச் செல்பவர்களும்கூட தான் கொன்ற புலி, மான் இவற்றின் தலையைப் பாடம் செய்து வீட்டின் சுவரில் மாட்டிக் காட்சிப்படுத்தி தன் வெற்றியை அறிவித்துக் கொள்ளும் மனப்பான்மை (“YES, I did it!” – proud attitude) யாவருமறிந்த ஒரு நடைமுறையே. துலிப் சிங் போலவே மற்றொரு நாடிழந்த இந்திய இளவரசி கவுரம்மா என்பவரும், மற்றொரு ஆப்பிரிக்க இளவரசியும் கூட பேரரசியின் வளர்ப்புப் பிள்ளைகளாக வெளியுலகத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளார்கள். இங்கிலாந்தின் பேரரசியார் அவர் வளர்த்த இந்திய இளவரசி கவுரம்மா, மன்னர் துலிப் சிங்கை மணந்து கொள்ள வேண்டும் என்றும் விரும்பினார், ஆனால் அவர்களுக்கு அதில் விருப்பமிருக்கவில்லை. இவ்வாறாக, தனது மதிப்பை அறிய வழியின்றி, அதை அறிவுறுத்துபவர் தொடர்புகள் யாவும்  துண்டிக்கப்பட்ட நிலையில் அந்நிய  நாட்டில் ஒரு ஆங்கிலேயப் பிரபு வாழும் வாழ்க்கையை இங்கிலாந்து தந்த அரசு மானியத்தில் வாழ்ந்து  கொண்டிருந்தார்  நாடிழந்த இளைஞரான மன்னர்  துலிப் சிங். ஆனால்,  தனது தாயை சந்திக்கும் ஆசையை அவர் கைவிடவில்லை.

maharani-jindanதாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு தனது 15 ஆவது வயதில் இங்கிலாந்திற்கு நாடு கடத்தப்பட்டு அங்கு உல்லாச வாழ்க்கை வாழ்ந்தாலும், தனிமைப்படுத்தப்பட்ட மன்னர் துலிப் சிங் அடுத்த 7 ஆண்டுகள் தனது தாயின் நினைவிலேயே, தனது தாயை சந்திக்கும் ஆசையை மனதில் கொண்டு காலம் கழித்தார். வளர்ந்து விவரம் தெரிந்ததும் அவரது  அன்னையைச் சந்திக்கும் முயற்சிகளை எடுத்தார். அவர் அரசி ஜிந்தனுக்கு எழுதிய கடிதங்கள் இங்கிலாந்து அரசால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.  தனது கடிதங்கள் தடை செய்யப்படுவதைப் புரிந்துகொண்ட துலிப் சிங், ஒரு நூலின் இடையில் தனது கடிதத்தை மறைத்து வைத்து அரசியின் கைக்குக் கிடைக்குமாறு ஏற்பாடு செய்தார். அவருக்கு உதவிய ஆங்கிலேய நண்பர் ராம்சே(Col Ramsay) என்பவர், அரசி கண்பார்வை மங்கி முதுமை அடைந்துவிட்டதாகவும், முன்னர் இருந்த நிலையில் இப்பொழுது அவரது உடல் நிலை இல்லை என்றும் தகவல் அனுப்பினார். துலிப் சிங் இங்கிலாந்து அரசிடம் தனது தாயைச் சந்திக்க, தனது பிறந்த நாட்டிற்கு முதன்முறையாகத் திரும்ப அனுமதி கோரினார். முதுமையடைந்துவிட்ட அரசியினால் இனி தொல்லையில்லை என்று எண்ணிய ஆங்கிலேய அரசு துலிப் சிங் இந்தியா செல்ல அனுமதி அளித்தது. அரசியிடம் இருந்து அபகரிக்கப்பட்ட அரச நகைகளை திரும்பப் பெற ஏற்பாடு செய்து கொண்ட துலிப் சிங் அவற்றுடன் கல்கத்தாவில் தனது தாயை 13 ஆண்டுகள் கழித்து, அவரது 22 ஆவது வயதில் (16/1/1861 அன்று) சந்தித்தார். தனது தாயை வணங்கிய துலிப் சிங்கின் தலையைத் தடவி ஆசீர்வதித்த அரசி சீக்கிய முறைப்படி முடி வளர்க்காது முடியை வெட்டிவிட்டு கிறித்துவராக மாறிவிட்டிருந்த மகனைக் கண்டு வேதனை அடைந்து கண்ணீர் வடித்தார். துலிப் சிங் சீக்கிய மதத்தைக் கைவிட்டதை தான் விரும்பவில்லை என வெளிப்படையாகச் சொன்னார் அரசி ஜிந்தன்.

தனது தாயை அழைத்துக் கொண்டு இங்கிலாந்து திரும்பினார் துலிப் சிங். அங்குத் தனது மகன் ஒரு ஆங்கிலேயப் பிரபு போன்ற உல்லாச வாழ்வில் காலத்தைச் செலவிடுவதைக் கண்டு வருந்திய அரசி ஜிந்தன், மன்னர் துலிப் சிங் யார் என்றும், எப்பேர்ப்பட்ட வீரத் தந்தைக்கு, பண்பு நிறைந்த ஒரு பேரரசருக்குப் பிறந்தவர் என்றும், எதையெதை எல்லாம் இழந்துவிட்டு, அந்த இழப்பின் அருமை கூடத் தெரியாமல் வருத்தமின்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை எல்லாம் மகனுக்கு எடுத்துச் சொன்னார். தனது மகனுடன் வாழ்ந்து அவருக்குத் தெளிவேற்படுத்திய அந்த அன்னை அரசி ஜிந்தன் இரண்டாண்டுகள் கழித்து (1/8/1863 இல்) மறைந்துவிட்டார். அவர் இறந்த மறு ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக இந்தியா திரும்பி தனது தாயின் உடலுக்கு நாசிக், மும்பை பஞ்சவடி பகுதியில் எரியூட்டி இறுதிச் சடங்குகளைச் செய்த துலிப் சிங், தாய்க்கு ஒரு நினைவுமண்டபமும்  அங்கே எழுப்பினார். அவரது நாடான பஞ்சாப் பகுதியில் எரியூட்டவோ இறுதிச் சடங்குகளைச் செய்யவோ ஆங்கில அரசு அவருக்கு ஒப்புதல் தரவில்லை.

இங்கிலாந்து திரும்பும் வழியில்  கெய்ரோவில் ஆசிரியையாகப் பணிபுரிந்த  ‘பம்பா முல்லர்’ (Bamba Muller) என்ற பெண்ணை  (7/6/1864 அன்று) எகிப்தில் மணந்து, தனது மனைவியுடன் இங்கிலாந்தில் தனது ‘எல்விடன் ஹவுஸ்’ (Elveden House) இல் வாழத் தொடங்கினார் துலிப் சிங். தனது இளமைக்கால அரசவாழ்க்கையை நினைவூட்டும் வகையில் மாளிகையை அலங்கரித்து, அரசவாழ்க்கை வாழ முயன்றார். அவருக்கு மூன்று மகன்களும், மூன்று மகள்களும் பிறந்தனர். அவரது ஆடம்பரவாழ்வு வாழும் முறைக்குச்  செலவு கட்டுப்படியாகாமல் அரசு மானியத்தை அதிகரிக்க அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். அவரது குடும்பத்துடன் நெருக்கமான உறவில் இருந்த இங்கிலாந்து அரசி இதற்கு ஒப்புக் கொள்ள விரும்பினாலும், இங்கிலாந்து அரசு ஒப்புக் கொள்ளவில்லை. தனது சீக்கிய அரசின் மதிப்பையும், அவரது இழப்பின் அளவையும் உணர்ந்திருந்த துலிப் சிங்கிற்கு இங்கிலாந்தின் இந்த முடிவு சினம் ஏற்படுத்தியது. பல ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்து தனது பஞ்சாப் அரசை மீட்க உதவி கோரினார். ‘சூரியன் மறையாத அரசு’ என்ற பெயர் பெற்று வல்லரசு நிலையில் இருக்கும் இங்கிலாந்தை பகைத்துக் கொண்டு உதவ யாரும் முன்வராததால் அவரது சந்திப்புகள் தோல்வியில் முடிந்தன. இந்தியாவிற்குக் குடும்பத்துடன் திரும்பிவிட எண்ணி, தான் பிறந்த மண்ணுக்குத் திரும்பும் முயற்சிகளை மேற்கொண்டார். இதனை விரும்பாத இங்கிலாந்து அரசு, அவரது பயணத்தை இடையிலேயே தடை செய்தது,  அவரை ஏடனில் (21/4/1886 அன்று) வீட்டுச் சிறையில் அடைத்தது.  இதற்கிடையில் மீண்டும் சீக்கிய மதத்திற்குத் திரும்பிய மன்னர் துலிப் சிங் இங்கிலாந்து திரும்புவதை வெறுத்தார். குடும்பத்தை இங்கிலாந்திற்கு அனுப்பிவிட்டுத் தான் மட்டும் பாரிசில் தங்கினார். கணவரின்றி, பிள்ளைகளுடனும், உடைந்த மனதுடனும் இங்கிலாந்து திரும்பி, அரசு மானியத்தில் வாழ்வைத் தொடர்ந்த அரசி பம்பா மதுவுக்கு அடிமையானார்.  பிறகு சில நாட்களில் நோய் வாய்ப்பட்டிருந்த தனது மகளின் படுக்கைக்கு அருகில் இரவு முழுவதும் பணிவிடை செய்த அவர் கோமாவில் விழுந்து இறந்தார்.

kohinoor8தனது மனைவியின் மரணத்திற்கும் துலிப் சிங் இங்கிலாந்து வரவில்லை.  அவரது பிள்ளைகளை இங்கிலாந்தின் பேரரசி தனது பொறுப்பில் ஏற்றுக் கொண்டு வளர்க்கச் செய்தார். பாரிசில் மற்றொரு பெண்ணை மணந்த துலிப் சிங்கிற்கு அத்திருமணத்தின் மூலம் மேலும் இரண்டு பெண்கள் பிறந்தனர்.  தனது இழப்புகளின் துயரில் இருந்து இறுதிவரை மீளாது தவித்த மன்னர்  துலிப் சிங் பாரிஸ் விடுதி ஒன்றில் தனித்து வறுமையில் தனது 55 ஆவது வயதில் (22/10/1893 அன்று) இறந்தார்.  அவரது உடல் இங்கிலாந்திற்கு எடுத்து வரப்பட்டு அவரது மனைவி, இறந்த மகன் ஆகியோரின் சமாதிகளுக்கு அருகிலேயே புதைக்கப்பட்டது. அவர் சீக்கியராக மாறியிருந்தாலும் அவரது இறுதிச் சடங்குகள் கிறித்துவ முறையிலேயே நிறைவேற்றப்பட்டது.  இந்திய மன்னர்களில் கிறித்துவ மதத்தைத் தழுவிய முதல் மன்னராக துலிப் சிங் கருதப்படுகிறார். அவரது வாரிசுகள் ஒருவருக்கமே சந்ததியைத் தொடரும் வகையில் குழந்தைகள் கிடையாது. மகள்களில் ஒருவரான  ‘சோஃபியா’ (Sophia) பெண்ணியம் விரும்பும் புரட்சி மங்கையாக மாறி இங்கிலாந்தில் பெண்களின் வாக்குரிமைப் போராட்டத்தில் பங்கு பெற்றார்.

கோகினூர் வைரம் இங்கிலாந்து சென்றடைய நேர்ந்தது, நாடிழந்து நாடு கடத்தப்பட்ட பஞ்சாப் மன்னர் துலிப் சிங்கால் என்பது ஒரு வரலாற்று உண்மை. அளவில் மிகப் பெரிய, 105 காரட் (21.6 கிராம்) எடையுடன் உலகிலேயே மிகப் பெரிய ஒளிவீசும் கோகினூர் வைரம் இந்தியாவின்  ஆந்திராவின் குண்டூர் பகுதியில் வெட்டிஎடுக்கப்பட்டது என்பதும் அனைவரும் அறிந்த ஓர் உண்மைதான். விலைமதிப்பற்ற அதனை அடையக்கூடியத் தகுதியும் மன்னர்களைத் தவிர வேறு எவருக்கும் இருக்கவும்  வாய்ப்பில்லை என்பதால் அரசக்குடும்பங்களில் மட்டுமே தங்கியது அந்தக் கோகினூர் வைரம். அரசுகளுக்கிடையே போர் நிகழ்வதும் மிகவும் இயல்பான ஒன்று. ஒவ்வோர் முறையும் வெற்றி பெற்ற மன்னர்கள் அதைக் கைப்பற்ற பற்பல இந்திய அரச குடும்பங்களிலும், ஆப்கானிய அரச குடும்பங்களிடமும் கோகினூர் வைரம் மாறி மாறிச் சென்றடைந்து இறுதியில் பஞ்சாப் சிங்கம் ரஞ்சித் சிங்கிடம் சென்று சேர்ந்தது.

ஆனால், சில பத்திரிக்கைச் செய்திகள் குறிப்பிடுவது போல பஞ்சாப் சிங்கம் ரஞ்சித் சிங் அதனை இங்கிலாந்தின் பேரரசிக்குப் பரிசாக வழங்கவில்லை.  மன்னர் ரஞ்சித் சிங் இறந்த பின்னர், சீக்கியப் பேரரசில் ஏற்பட்ட பதவிப் போட்டியால் அரச குடும்பத்தில் ஏற்பட்ட தகராறுகளும், அதன் தொடர்ச்சியாக நாடு பிடிக்க விரும்பிய ஆங்கில அரசின் ஆசைகாட்டுதலுக்கு மயங்கிய பஞ்சாப் அரச அதிகாரிகள் செய்த இரண்டகத்தாலும் சீக்கியப் பேரரசு ஆங்கிலேயர் வசமானது. ஆட்சியில் இருந்த பத்து வயது சிறுவனின் ஆதரவாளரான அரசியைச் சிறைப்படுத்தி, மற்றவரைச் செயலிழக்கச்செய்து வஞ்சகமாக ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி பஞ்சாபை தனது பகுதியாக இணைத்துக் கொண்ட கிழக்கிந்திய நிறுவனம், கோகினூர் வைரமும் வெற்றிபெற்றவருக்கு பரிசாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றப்பகுதியையும்  இணைத்து பத்து வயது சிறுவனிடம் ஓர் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது.  இவ்வாறு பத்து வயது சிறுவனுடன் போட்ட ஒரு ஒப்பந்தம், அல்லது அவரது ஆதரவாளர்களைச் சிறையில் அடைத்துவிட்டு, தங்களது ஆதரவாளர்களின் கண்காணிப்பில் உள்ள சிறுவனுடன் போட்ட ஒப்பந்தத்தை, தங்களது ஆதரவாளர்கள் உதவியுடன் ஆங்கில அரசு செயல்படுத்திக் கொண்டாலும் அந்த ஒப்பந்தம் ஒரு முறையான செயலாகுமா?  அறியாச் சிறுவனாக இருந்த துலிப் சிங்கை மதமாற்றம் செய்ய வைத்ததே முறையல்ல என்றக் கருத்தும் இன்றுவரை உலவி வருகிறது.

பத்து வயது சிறுவன் தனித்து ஆட்சி செய்யவில்லை. அவன் சார்பாக அவனது பிரதிநிதிகள் நாட்டை ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் இடத்தில் நியமிக்கப்பட்டவர்கள் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆதரவாளர்கள் என்ற நிலையில் ஒரு நாடுபிடிக்கும் நாடகம் அரங்கேற்றப்பட்டது தெளிவாக விளங்குகிறது. கோகினூர் வைரமும் அந்த வஞ்சகமான முறையிலேயே   ‘பரிசு’ என்ற பெயரிலும் கைமாற்றப்பட்டுள்ளது என்பதும் தெளிவாக விளங்குகிறது. அதனைத் தானே இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்று ஒப்படைத்த 15 வயது சிறுவனுக்கு இழந்த தனது நாட்டின் அருமையும் தெரியாது, தான் ஒப்படைக்கும் கோகினூர் வைரத்தின் மதிப்பும் தெரியாது.  தனக்களிக்கப்பட்ட வைரத்தைத் தனது மணிமகுடத்தில் பதிக்கும் அளவிற்கு வெட்டி அதில் பதித்து அணிந்து கொண்டார் இங்கிலாந்து அரசி.  பிற்காலத்தில் தனது நாட்டையே இழந்ததை உணர்ந்து மனமுடைந்த  மன்னர் துலிப் சிங்கிற்கு, பறிபோன கோகினூர் வைரமெல்லாம் ஒரு பொருட்டாக இருந்திருக்கவும் வாய்ப்பில்லை.

kohinoor6இந்தியாவின் மதிப்புமிக்க, பெருமைமிக்க கருவூலம் கோகினூர் வைரம் என்றாலும், அதை இங்கிலாந்திடம் இருந்து  மீட்பதில் சிக்கல்களும் உள்ளன. இந்த வைரத்தை திருப்பிக் கேட்பதில் ‘பரிசாகக் கொடுத்ததை கேட்க முடியாது’ ( …. அது ஏமாற்று வேலையாக இருந்தாலுமே) என்ற சிக்கலும் உள்ளது. இங்கிலாந்து அரசின் மணிமகுடத்தில் பதிக்கப்பட்டுவிட்ட வைரத்தைப் பெயர்த்தெடுத்துக் கொடுக்கச் சொல்வதும் நடக்கக் கூடியச் செயலாகவும் தெரியவில்லை. இந்த வைரத்தினை மீட்க நினைக்கும் செயல்,  பொதுவாக அயல்நாட்டின் அருங்காட்சியகத்தில் இருக்கும் மதிப்புமிக்க  ஒரு இந்தியக் கலைச்சிற்பத்தை மீட்க நினைப்பது போன்ற சாதாரண செயல் அல்ல. மாறாக, ஒரு அரசியின் மணிமுடியுடன், ஒரு நாட்டின் இறையாண்மையுடன் தொடர்பு கொண்ட பொருளைக் கேட்பதற்கு ஒப்பாக அமைந்துள்ளது. போதாக்குறைக்கு, இந்தச் சச்சரவில் பாகிஸ்தானும் இடையில் நுழைந்து உரிமை கொண்டாடுவது மேலும் நிலைமையைச் சிக்கலாக்குகிறது. கோகினூர் வைரம் பாகிஸ்தானுக்கே சொந்தம், அதை இங்கிலாந்தில் இருந்து மீட்க வேண்டும் என்று கோரி லாகூர் நீதிமன்றத்திலும் ஒரு வழக்கு போடப்பட்டுள்ளது. இதற்கும் மேலாக,  ஆப்கானிஸ்தான், வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட மேலும் சில நாடுகளும் கோகினூர் வைரத்திற்கு உரிமை கொண்டாடியுள்ளன.

இங்கிலாந்து கோகினூர் வைரத்தைத் திருப்பித் தர நினைத்தாலும் அது   இந்தியாவிற்கு மட்டுமே கிடைப்பதுதான் முறை. வைரத்தை அரசியிடம் ஒப்படைத்த துலிப் சிங் பிறந்தது இக்கால பாகிஸ்தானில் உள்ள லாகூரில், அது அவரது கைநழுவிப் போன சீக்கியப் பேரரசின் பகுதி. இருப்பினும் அப்பகுதி சுதந்திரத்திற்கு முன்னர் இருந்த இந்தியாவின் பகுதிதான்.  கிழக்கிந்திய நிறுவனம், பிரிட்டிஷ் ராஜ், என்று கூறப்பட்டதும், இங்கிலாந்து அரசி தன்னை அரசியாக முடி சூட்டிக் கொண்டதும் இந்தியாவிற்குத்தான்.  பாகிஸ்தானுக்கு அல்ல. அது பின்னர் பிரிவினையால் தோன்றிய ஒரு  நாடு.  நேரு அவர் பிரதமராக இருந்த காலத்தில் கோகினூர் வைரத்தை மீட்க முயற்சிகள் செய்தாலும், இதுநாள் வரை இந்திய அரசு கோகினூர் வைரத்தை மீட்பதில்  ஆர்வம் காட்டாதிருந்தது. இப்பொழுது உச்ச நீதிமன்றத்திலிருக்கும்  வழக்கின் அடிப்படையில் இந்திய அரசு அமைதிகாக்க விரும்பும் தனது முடிவை மாற்றிக் கொண்டு கோகினூர் வைரத்தை  இங்கிலாந்திடம் இருந்து மீட்க விண்ணப்பம் வைத்தாலும், (ஒரு பேச்சுக்காகவே வைத்துக் கொண்டாலும்…) இங்கிலாந்தும் அதை இந்தியாவிற்குத் திருப்பியே தந்துவிட்டாலும் வரலாற்றின் அடிப்படையில் அது என்ன மாற்றத்தைத்தான் இந்தியாவிற்குக் கொண்டுவரும் என்பதும் புரியவில்லை.  இந்தியா ஒரு காலத்தில் இங்கிலாந்திற்கு அடிமைநாடாக இருந்தது என்ற பழி இதனால்  நீங்கிவிடுமா?

______________________________

தகவல் பெற்ற தளங்கள்:

http://www.thehindu.com/news/national/kohinoor-was-gifted-to-britain/article8489902.ece

https://en.wikipedia.org/wiki/Koh-i-Noor

https://en.wikipedia.org/wiki/Ranjit_Singh

http://www.duleepsingh.com/

https://en.wikipedia.org/wiki/Jind_Kaur

Britains Maharajah : Anglo Sikh documentary on Maharaja Duleep Singh

https://youtu.be/FuoCUbR5RgE


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கோகினூர் வைரத்தைப் பறி (பரிசாகக்) கொடுத்த பஞ்சாப் மன்னரின் கதை”

அதிகம் படித்தது