மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மாதவிலக்கு

செல்வக்குமார் சங்கரநாராயணன்

Apr 23, 2016

maadhavidaai2

தலைப்பைப் பார்த்தவுடன் நீங்கள் என்ன யூகிக்கிறீர்கள்? அதைப் பற்றியா? ஆம் அதைப் பற்றியேதான்.

இதற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தேன். ஏனென்றால் பட்டென்று உடைத்தாற் போல் எதையும் எழுதி ஏன் தூற்றலை வாங்குவானேன் என்று நினைத்து,  “அந்த 3 நாட்கள்” என்று நாசுக்காக தலைப்பைத் தேர்வு செய்து வைத்திருந்தேன். பிறகு தான் ஞானோதயம் ஓங்கி உச்சந்தலையில் கொட்டியது. உள்ளதைஉள்ளபடியே காட்டும் மாயக்கண்ணாடியாய் மாறி அதையே தலைப்புமாக வைக்க தீர்மானித்தேன்.

ஏன் தலைப்பிற்கே இவ்வளவு தடுமாற்றம்? அப்படி எதைத்தான் உள்ளே கூறப்போகிறேன்? என்று முகச்சுளிப்போடு அருவருப்பாய் தலைப்பையே வெறித்துக்கொண்டு இருக்காதீர்கள். சற்றே பொறுமையாகி நில்லுங்கள், சக வாழினியைப் படிக்கச் சொல்லலாம்.

maadhavidaai3யார் அந்த சகவாழினி? ஆஹா! கண்டுபிடித்துவிட்டீர்கள். அவள் தான் பெண்!!. பெண்ணென்றால் என்ன தோன்றுகிறது உங்களுக்கு? நிலவு தோன்றுகிறதா?, மலர்கள்?, வானவில்?, போதை ஏறுகிறதா?.. பொறுத்தருளவும். நான் ஏன் போதை ஏறுகிறதா என்ற வார்த்தையைக் கூறினேன் என்றால் பெண்ணை பெரும்பாலும் போதை பொருளாகத்தான் பார்க்கின்றார்கள். அதற்குக் காரணமென அந்த உடலுறவு ஒன்றை மட்டும் சொல்லித் திரிகின்றனர் சிலர்.

சமைக்க, வீட்டைப் பராமரிக்க, இரவில்(அவள் கடமையென்று) இச்சைகளைத் தீர்த்துக்கொள்ள இன்னும் சில இத்யாதி இத்யாதிகள் என்று பெண்கள் ஒரு வட்டத்துக்குள் பழக்கப்படுத்தி வளர்க்கப்பட்டுவிட்டார்கள். சரி, இதெல்லாம் குடும்பப் பெண்களுக்கு உரிய இலட்சணமான குணங்கள் என்று கூறினாலும் நான் எற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். ஆனால் எப்படி ஒரு ஆண் தன் மன எண்ணங்களை பிடித்த விதத்தில் வெளிப்படுத்துகிறானோ அதே போலத்தான் பெண்களுக்கும் ஆசையும் எண்ணங்களும்.

சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களுக்குத்தான் அதிக ஆசையும் எண்ணங்களும் தோன்றும். இது அவர்களுடைய இயல்பு, மேலும் இதை ஆராய்ந்து தக்கவைகளை ஆணே நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் பெண் என்பவள் செவ்வாயிலோ, நெப்டியூனிலோ பிடித்துவரப்பட்ட ஒரு வேற்றுகிரகவாசி கிடையாது. எப்படி பூமியில் ஆண் என்பது மனிதனில் ஒரு அங்கமோ அதே போல பெண் என்பதும் ஒரு அங்கம். ஆனால் அவள் அங்கங்களைப் பார்க்கும் அளவில் நூறில் ஒரு சதவீதம் அவள் அகத்தைப் பார்த்தால் போதும். சமூகத்தில் இருக்கும் சக இணையை இணைப்பிற்கு மட்டும் பிணைத்துக் கொள்வதுதான் குடும்ப வாழ்க்கை என்றில்லை. அதற்கும் மேல் நிறைய இருக்கிறது.

அதெல்லாம் சரி இப்பொழுது சொன்னதற்கும் தலைப்பிற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்டால், நான் சொல்லும் பதில் “இரத்த சம்பந்தம்”. இரத்தத்திற்கு சம்பந்தப்பட்ட தலைப்பு அதுமட்டும் இல்லாமல் தாய், சகோதரி, மனைவி, மகள் என்ற இரத்தபந்தம் சம்பந்தப்பட்டது.

அந்த 3 நாட்களில் அப்படி என்னதான் நடக்கும் என்றால் ஒரு கருமுட்டை உருவாகி, செயல்படமுடியாமல் செயலிழந்து அழிந்து வெளியேறும் நிகழ்விற்குப் பெயர்தான் மாதவிலக்கு எனப்படும் இரத்தப் போக்கு. இது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த 3 நாட்களில் அவர்கள் எப்படி உணர்வார்கள் என்று எப்பொழுதேனும் நினைத்ததுண்டா?
சொல்கிறேன் கேளுங்கள்.

” ஒரு ஆயிரம் ஊசி ஒரு சேர வயிற்றில் குத்தும் பொழுது உண்டாகும் வலி”

“வலி என்பது அவரவர் உடல் நிலையைப் பொறுத்தது, குறைவாகவோ அதிகமாகவோ வலி என்பது இருக்கும்”.

“அந்த 3 நாட்களில், உடலளவில் சோர்வு ஏற்பட்டிருக்கும் ,வேலையெல்லாம் செய்யமுடியாது பலம் குறைந்த உணர்வு இருக்கும். கோபம் எரிச்சலும் கூட அதிகம் எழக்கூடும்”.

எழுதவே கைகள் பதைபதைக்கிறது. நான் மேலே மேற்கோளிட்ட அனைத்தும் பெண்கள் கூறியவைதான். பாருங்கள் அந்த 3 நாட்களில் அவர்கள் படும் அவஸ்தைகளை.. “வலிகளின் ஆழம் வரிகளில் தெரிவதில்லை” இது என்றோ படித்த வரி என்றாலும் இதற்கு நன்றாகப் பொருந்தும்.

வீட்டில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டியவள். ஆணுக்கு ஒரு அசதி என்றால் பணிவிடை செய்ய வீட்டில் ஒருத்தி இருக்கிறாள். அந்த ஒருத்திக்கு எதாவது என்றாலும் அவள் தான் தன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டும். அப்பொழுது அந்த அவன் பணிவிடை செய்யாமலிருந்தாலும் ஆறுதலாக அருகிலிருந்தாலே போதும், அதிலேயே அவள் பலமடைவாள்.

இனி அந்த 3 நாட்களில் அவர்களை அதிகம் வேலை வாங்காதீர்கள். மனதளவில் மட்டும் மகிழ்ச்சியை ஊட்டுங்கள். உணர்வுகளைப் புரிந்து மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் அந்த நாட்களிலும் எப்பொழுதும் போல செயல்படுவதாகத்தான் நம் பார்வைக்குத் தெரியும். அந்த மாயத்திரையை அகற்றி அவர்களை அன்புடனும், அக்கறையுடனும், குறைந்த வேலைப்பளுவுடன்  பார்த்துக் கொள்வது ஒவ்வொரு ஆணின்  கடமை. ஏனென்றால் தாயாக/சகோதரியாக/ மகளாகவோ  ஒரு பெண்ணாகவாவது உங்களுடன் இப்பொழுது இருப்பாள். அவளுக்காக…


செல்வக்குமார் சங்கரநாராயணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மாதவிலக்கு”

அதிகம் படித்தது