மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

பெண்ணின் பெயர் அவள் அடையாளமில்லை

பிரத்யுக்ஷா பிரஜோத்

May 7, 2016

pennin peyar2பெயர்சூட்டும் சம்பிரதாயம் குழந்தை பிறந்த சில நாட்களில் நடைபெறுகிறது. இந்த நிமிடம் பெயர் சூட்டப்படாமலே வளரும் மனிதர்களின் எண்ணிக்கையை விடுத்து, மீதமிருப்பவர்களை கவனத்தில் கொள்வோம். புனைப் பெயர், நட்சத்திர அந்தஸ்துக்காக பெயர் மாற்றம் செய்துக் கொள்வது போன்ற விதிவிலக்குகளையும் விட்டுவிடலாம்.

கருப்பு, உயரம், சுருட்டை முடி போன்ற நீண்ட வர்ணனைகளைத் தவிர்த்து, ஒரு மனிதனை சுருங்க அடையாளப்படுத்திக் கொள்ள அவனுடைய/ அவளுடைய பெயர் உதவுகிறது.

அவரவர் குடும்ப வழக்கப்படியோ, தங்கள் சொந்த விருப்பப்படியோ பெயரை மட்டும் அல்லது தங்கள் ஊர் பெயருடன் சேர்த்து அல்லது தங்கள் குடும்பப் பெயரை சேர்த்து அல்லது தங்கள் சாதியின் பெயரை சேர்த்து எழுதும் வழக்கம் இருந்து வருகிறது. பொதுவாக தந்தையின் பெயரோ தந்தை வழி குடும்பப் பெயரோ சேர்க்கப்படுகிறது. பெரும்பான்மையான நாடுகளில் தாய் வழிப் பெயர்களை இணைத்துக் கொள்ளும் வழக்கம் இல்லை.

ஆணுக்கும் பெண்ணுக்கும் இவ்வனைத்தும் பொருந்தும். திருமணம் ஆகும் வரை.

ஒரு பெண்ணின் வாழ்வியல் மாற்றங்களில் ஒன்றாக இப்பெயர்மாற்றம் இடம் பெறுகிறது. தன்னுடைய அடையாள அட்டைகளில், பள்ளி, கல்லூரியில், தான் படித்துப் பெற்ற பட்டங்களில் என்று எல்லா இடங்களிலும், தன்னுடைய தாய் இருந்த பெயரை மாற்றி எழுதத் தேவைப்படும் மனத்திடம் ஆணிடம் இருக்குமா என்பது சந்தேகமே.

கணவரின் பெயரை தன் பெயருக்குப் பின்னால் சேர்த்துக் கொள்ளாத பெண்களும் இருக்கிறார்கள். விருப்பமின்மை, இதை செயலாற்ற மேற்கொள்ள வேண்டிய சட்டநடைமுறைகளில் உள்ள சிக்கல்கள், சில நேரங்களில் அவசியமில்லாத சடங்காக கணவருக்குத் தோன்றும் எண்ணம்- இப்படி நிறைய காரணங்களால் இந்த வழக்கம் நூறு சதவிகிதம் கடைபிடிக்கப்படுவதில்லை.

தற்போதைய கால கட்டத்திலிருந்து பின்னோக்கிச் சென்று இதன் அடித்தளத்தை ஆராய முற்படலாம். முதன்முதலில் திருமணத்திற்குப் பின் தன் பெயரை மாற்றிக் கொண்ட பெண் யார் என்று நமக்கு தெரியாது என்பது தான் உண்மை. இதன் பின்னணியை துள்ளியமாக கணித்துவிட முடியாதென்றே தோன்றுகிறது. ஒருவேளை சில நடைமுறைகளின் ஆதியைக் கண்டறிய முடியாமல் போக வாய்ப்பிருக்கிறது.

எழுத்து வடிவில் பதிவு செய்து வைக்கப்பட்டவை, ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டவையே வரலாறாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட நிகழ்வுகளை வரலாறு இல்லையென்று ஒதுக்கிவிட முடியாது.

pennin peyar1இரு பெயர்களையும் இணைத்துக் கொள்ள முடிவு செய்த பெண், தன் கணவர் மீது கொண்ட காதல் எத்தைகையதாய் இருந்திருக்கும்?. என்னை அழைக்கும்பொழுது, உன்னையும் சேர்த்தே நினைவுகூற வேண்டும் என்ற விருப்பம் எத்தைகையதாய் இருந்திருக்கும்? அந்தக் கணவர் தன்னை எப்பேர்பட்ட பாக்கியசாலியாய் உணர்ந்திருப்பார்?

பெயர் மாற்றம் என்பது இப்படி விருப்பத்தின் அடிப்படையில், காதலின் பொருட்டு, அன்பை வெளிப்படுத்த செய்த செயலாகவும் இருந்திருக்கக் கூடும். காதல் எப்போது கட்டாயமாக்கப்பட்டது?

இந்த வழக்கத்தை வெறுக்கும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். இதை ஆணாதிக்க செயலாய் பார்க்கும் அவர்கள் சற்றே மாற்றி சிந்தித்தால்? ஒருவேளை ஆண்கள் ஏன் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ளக் கூடாதென்ற தர்க்கம் எழலாம்.

திருமணத்திற்குப் பிறகு ஆண்கள் பெயர் மாற்றம் செய்து கொள்ளும் வழக்கமும் சில நாடுகளில் உண்டு.


பிரத்யுக்ஷா பிரஜோத்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பெண்ணின் பெயர் அவள் அடையாளமில்லை”

அதிகம் படித்தது